Pages

Wednesday, September 30, 2009

மீதி 3 அஞ்ஞான பூமிகள்148.
உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொப் பனமெனும்பே ருடையதாகும்
பண்டுகனாக் கண்டுமறந் ததைமீண்டு நினைப்பதுசொ ப்பனநனாவா
மண்டுமிருண் மூடுவது சுழுத்தியா மஞ்ஞான வகைகள் சொன்னோம்
விண்டு நிறை முத்திதரு ஞானபூ மிகளேழும் விளம்பக்கேளாய்

உண்டு உறங்கி மனோராச்சியம் செயல் (அனுபவித்ததை அனுபவிக்காததை உறக்கத்தில் நினைப்பது) 5.சொப்பனம் எனும் பேர் உடையதாகும்.
பண்டு (பழைய காலத்தில்) கனாக் கண்டு மறந்ததை மீண்டும் நினைப்பது சொப்பன நனாவாம். [6.ஸ்வப்ன ஜாக்ரம்] மண்டும் (பிரபஞ்சம் அடங்கி இருக்கும் அஞ்ஞான) இருள் மூடுவது (ஏழாம் பூமியாகிய) 7. சுழுத்தியாம். அஞ்ஞான வகைகள் சொன்னோம். விண்டு (நீங்கி) நிறை (பரி பூரணமான) முத்தி தரும் ஞான பூமிகள் ஏழும் விளம்பக்கேளாய்.
--
5.சொப்பனம்: சாக்கிரத்தில் அனுபவித்தவை, அனுபவிக்காதவை ஆகியவற்றை தூக்கத்தில காண்பது. கனவு காணும்போது நம்ம வாழ்க்கையில முன்னே நடந்ததே வரலாம்; அதே நபர்கள், இடங்கள் இப்ப இல்லைன்னா கூட வரலாம்; புது நபர்கள் இடங்கள் .. நனவில நம்மால செய்ய முடியாதது - பறக்கிறது போல - வரலாம்.

6. சொப்பன சாக்கிரம்: முன்பு கண்ட சொப்பனத்தை மீண்டும் சாக்கிரத்தில் காண்பது. அதாவது நாம் கண்ட கனவை நடந்தபடியே திருப்பி நினைவுக்கு கொண்டு வரது. நம்ம ஜீவா வெங்கட்ராமன் இப்படி செஞ்சு சுவையான பதிவுகள் எழுதி இருக்கார்.

7. சுழுத்தி: மேற்கண்ட 6 அவஸ்தைகளும் இல்லாது கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி அஞ்ஞான இருள் மூடி இருக்கும் நிலை.

நாம் தூங்கப்போகு முன் இந்த நிலைகளை கடந்தே போகிறோம். அதே போல இவற்றை கடந்தே விழிப்புக்கு வருகிறோம். அவை தானியங்கியாக நடப்பதால் நமக்கு புலப்படவில்லை.


Tuesday, September 29, 2009

முதல் 4 அஞ்ஞான பூமிகள்147.
முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திரமதுதான் முதல்வித்தாகு
மிந்தவறி விற்பண்டில் லாவகந்தை முளை போலா மிதுந னாவாம்
வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாந னாவாம்
நந்துமகங் கொடுநனவின் மனோராச்சி யஞ்செயலே நனாக்க னாவே.

முந்த (முன்பு) அகண்டத்து (பிரமத்திலிருந்து) எழும் ஓரறிவு மாத்திரம் அதுதான் முதல் வித்தாகும். [1.பீஜ ஜாக்ரம்=வித்து சாக்கிரம்]. இந்த அறிவில் பண்டில்லா (முன்பில்லாத) அகந்தை முளை போலாம். [2.ஜாக்ரம்=சாக்கிரம்] இது நனாவாம். (ஜாக்ரத்).வந்து வந்து பிறவிதொறும் அகம் மமதை (நான் எனது எனும் நினைப்பு) வளரும். அது மகா நனாவாம். [3.மஹா ஜாக்ரத்]
நந்தும் அகங் கொடு (எழுகின்ற மனத்தினால்) நனவில் மனோ ராச்சியஞ் செயலே நனாக்கனாவே. [4.ஜாக்ரத் ஸ்வப்னம்]
--
நாம தூங்கப்போகும் போது படிப்படியா கருவி கரணம் எல்லாம் கழண்டே தூங்கப்போகிறோம். படுத்தோம் பட்டுன்னு தூங்கிட்டோம் அப்படின்னு இல்லை. அதே போல தூக்கத்திலிருந்து வெளியே வரப்ப திடுதிப்புன்னு வரதில்லை. படிப்படியாதான் வெளியே வரோம். அது சில கணங்களா இருந்தாக்கூட தனித்தனியா பிரிக்கலாம்.

1.தனி வித்துச் சாக்கிரம் (பீஜ சாக்கிரம்): தூக்கத்தில் இருந்து விழிப்புக்கு வரும்முன் மாயையோடு சம்பந்தப்பட்டு இருந்த ஆத்ம சைதன்யம்; அதில் இருந்து எழும் சித் ஆபாசத்துடன் கூடிய அறிவு மட்டும் உள்ள நிலை.
இதில இன்னும் நான் என்கிற நினைப்பு வரலை. சுசுப்தில சுத்த அறிவா இருந்தது இப்ப கொஞ்சம் நிலை குலைஞ்சு ஆபாசமானது. அவ்வளவே.

2.சாக்கிரம்: மேற் கண்ட அறிவில் முன்பு இல்லாத நான் என்னுடையது என்றவை சூக்ஷ்மமாக உண்டாவது. இது நம்ம உடம்பு இடம் நேரம் போன்ற விஷயங்கள் மட்டும் தெரியும். நாங்க மயக்கம் கொடுத்த நோயாளி இந்த நிலைக்கு வந்ததும் கூட இருக்கிறவங்க உஷார் வந்திடுச்சும்பாங்க!

3. மகா சாக்கிரம்: நான் எனது என்பவை திடமாகவும் விரிவாகவும் உதிப்பது. இது சாதாரணமா நாம இருக்கிற நிலை.

4. சாக்கிர சொப்பனம்: சாக்கிரத்தில் இருந்து கொண்டு நாம் அறிந்தவை அறியாதவைகளை கொண்டு "மனக்கோட்டை" கட்டுதல். நிறைய பணம் சம்பாதிப்பேன். வீடு கட்டுவேன். கார் வாங்குவேன். பிசினஸ் பண்ணி பணத்தை பெருக்கி ஊர்லேயே பெரிய பணக்காரன் ஆகிடுவேன். இப்படி எல்லாத்தையும் கற்பனை செய்கிறதே சாக்கிர கனவு. இதை பின்னால வர கனவு சாக்கிரத்தோட குழப்பிக்கக்கூடாது.


Monday, September 28, 2009

துரியாதீதம், ஏழாம் பூமி இதெல்லாம் என்ன?
145.
துரியாதீத ஏழாம் பூமி முக்கியமென்றது ஏன் எனவும் அதில் இன்ன வகை எனவும் கூற வேண்டுமென்றது.

இதயமொத்த சற்குருவே நமக்கிதுவே வினோதமன்றி யினிவே றுண்டோ
அதையுரைத்து மதைநினைத்து மிருப்பதன்றோ ஞானிகளுக் கானநீதி
முதலுரைத்த துரியாதீ தமுமேழாம் பூமியுமுக் கியமாமென்ற
பதமுமதன் வகையுமெனக் கெளிதாகத் தெளியும்வண்ணம் பணித்தி டீரே

இதயம் ஒத்த சற்குருவே! நமக்கு இதுவே வினோதம் அன்றி இனி வேறுண்டோ? அதை உரைத்தும், அதை நினைத்தும் இருப்பது அன்றோ ஞானிகளுக்கான நீதி? [ஆகவே] தாங்கள் முதல் (முன்பு) உரைத்த துரியாதீதமும் ஏழாம் பூமியும் முக்கியமாம் என்ற பதமும் அதன் வகையும் எனக்கு எளிதாகத் தெளியும் வண்ணம் பணித்திடீரே.

சமாதியிலிருந்து வெளி வந்த சீடர் மேலே கேள்வி கேட்கிறார்.

சீவன் முத்தருக்கு என்ன வேலை? மனமில்லாத போது பிரம்மத்தில திளைக்கிறதும் மனம் இருக்கும் போது பிரம்மத்தைப்பத்தி யோசிக்கிறதும்தானே. நமக்கு இத்தானே வேலைங்கிறார் சீடர். கவனிங்க. நமக்கு.

முன்ன துரியாதீதம் ஏழாம் பூமி இதெல்லாம் முக்கியம் ன்னு சொன்னீங்களே அது என்ன? முன்ன மாதிரி சுலபமா புரிய வையுங்க.

146.
வினவுமிடத் தஞ்ஞான பூமிகளேழ் ஞானபூமிகளே ழென்பார்
இனியவற்று ளஞ்ஞான பூமிகளே ழையுமுந்தி யியம்பக் கேளாய்
தனிவித்துச் சாக்கிரஞ்சாக்கிரமகா சாக்கிரஞ்சாக் கிரத்தைச் சார்ந்த
கனவுகனாக் கனவுசாக் கிரஞ்சுழுத்தி யென்றெழுபேர் கணித்தார் மேலோர்

வினவுமிடத்து அஞ்ஞான பூமிகள் ஏழ், ஞானபூமிகள் ஏழ் என்பார். இனி அவற்றுள் அஞ்ஞான பூமிகள் ஏழையும் முந்தி இயம்பக் கேளாய். தனி, வித்துச் சாக்கிரம், சாக்கிரம், மகா சாக்கிரம், சாக்கிரத்தைச் சார்ந்த கனவு, கனாக் கனவு, சாக்கிரஞ் சுழுத்தி என்று ஏழு பேர் (பெயர்கள்) கணித்தார் மேலோர்.

பூமின்னா ஏதோ நிலப்பரப்புன்னு இல்லை. அது ஒரு நிலை. அவ்வளோதான். கொஞ்சம் சுலபமா விஷயங்களை புரிஞ்சுக்க ஒரு பாகுபாடு செய்கிறாங்க. ஞான பூமிகள் ஏழு அஞ்ஞான பூமிகள் ஏழுன்னு பிரிக்கிறாங்க.

Friday, September 25, 2009

சீவன்முத்தரின் அனுபவ நிலை.144.
பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமநு பவம் விடாமல்
பலமலரின் மதுப்போல சச்சிதா நந்த மொன்றாம் பரமார்த் தத்தைப்
பலபொழுதுங் கண்மூடிச் சமாதியிருந் தான்விழித்துப் பார்த்தபோது
பலவடிவாஞ் சராசரசித் திரங்களெலாந் தோன்றுமொரு படமா னானே

பலகலையும் உணர்ந்த குரு மொழிந்தபடி இவனும் அநுபவம் விடாமல், பல மலரின் மதுப்போல (பல மலர்களிலிருந்தும் வந்த மது ஒருமித்தது போல) சச்சிதாநந்தம் ஒன்றாம் பரமார்த்தத்தைப் பல பொழுதும் கண்மூடி [ஸ்வரூப] சமாதியிருந்தான். [ஞான விழியால்] விழித்துப் பார்த்தபோது, பல வடிவாம் சராசர சித்திரங்கள் எல்லாம் தோன்றும் ஒரு படமானானே.
--
சீடன் குரு சொன்னபடி சச்சிதானந்த நிலையில நீண்ட நேரம் சமாதியில இருக்கிறார்.
கடலில் அலை, திவலை நுரைகள் தோன்றுவது போல இந்த சராசர பிரபஞ்சம் பிரம்மத்தில ஆரோபமா இருக்கு. ப்ரபஞ்சத்தை சித்திரத்தில இருக்கிற பல பொருட்களாகவும் பிரமத்தை படம் (படசீலை) ஆகவும் கூறியுள்ளது. அதுவே அகண்டாகார (இரண்டற்ற) நிலை. சீவன்முத்தரின் அனுபவ நிலை.

சுழுத்தியில் அறிவு அவித்தையாகிய அஞ்ஞான இருளை எதிர் கொண்டு அறிகிறது. தூக்கத்தில் இல்லாமல் ஜாக்ரத் நிலையில் அதே போல மனம் ஒடுக்கி அறிவு மயமாக விளங்குவதே சீவன் முத்தி நிலை. இது நினைவில் சுழுத்தி எனவும் சொல்லப்படும். இந்த அனுபவ நிலையில் எல்லாம் அகண்ட பிரம சொரூபமாக விளங்கும்.

கண்ட அறிவுதனைக் கொண்டுன்னைக் கண்மறைத்த
பண்டை யிருளைநீ பார்த்துக்கா ணென்றானோ
- தத்துவராயர் தாலாட்டு.
இதை நினைவில் சுழுத்தி என்பாங்க.

தன் மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
நின்மயமா யாவும் நிகழும் பராபரமே
தாயுமானவர்
மேனியிற் புறத்தி னுள்ளின் மேலொடு கீழிறக்கில்
வானில்வை யகத்தி லெங்கும் யானன்றி மற்றொன் றில்லை
யானிலா விடமு மில்லை யெனதிடத் திலாது மில்லை
தானிகழ் பொருள்வே றில்லை சச்சிதா நந்த மென்றான்
வாசிட்டம் - கசன் கதை

உயிர் அசைவதுதான் மனதை அசைக்கிறது. மனம் ஜடம். ஆன்மா இல்லாம மனம் அசைய முடியாது. ஆன்மா உற்று பாத்தால் அந்த உண்மை வெளிப்படும். ஆன்மா தன்னை மறக்காமல் தன் நிலையில் நின்று மனம் எங்கேன்னு பார்த்தால் மனதுக்கு தன்னைத்தவிர வேறு இருப்பிடம் இல்லைன்னும், இதையே மாயை என்கிறது உண்மைன்னும் தெரியவரும். இந்த மனதின் அசைவை வளர விடாம அடக்கி சுழுத்தியில் அது எப்படி சாட்டை இல்லாத பம்பரம் போலவும் காற்றில்லாத காற்றாடி போலவும் அடங்கிக்கிடந்ததோ அப்படி சுழுத்தி இல்லாத ஜாக்கிரத்திலேயே அதை இருக்கச் செய்தா ஆன்ம பிரகாசம் தோன்றும்.

உண்டாகி யெவ்விடத்து முற்ற போத
முயிரசைவா லுணர்வுறுமப் போதந் தன்னை
மண்டாமற் றடுக்கைபெரு நன்மை யாகும்
வளர்போதங் காண்பவற்றை மருவு மாலாற்
றண்டாத காண்பவையே மனதிற் கென்றுந்
தவிராத துயராமத் தனிப்போ தந்தான்
மிண்டாத சுழுத்தியிற்போ தம்போ னிற்கில்
வீடதுபே றதுவிமல பதம்வே றில்லை
வாசிட்டம்
உண்டாகி எவ்விடத்தும் உற்ற போதம் உயிர் அசைவால் உணர்வுறும். அப்போதந் தன்னை மண்டாமல் தடுக்கை பெரு நன்மையாகும். வளர் போதம் காண்பவற்றை மருவுமாலால் அண்டாத காண்பவையே மனதிற்கு என்றுந் தவிராத துயராம். அத் தனிப்போதம்தான் மிண்டாத சுழுத்தியில் போதம் போய் நிற்கில் வீடது பேறது விமல பதம் வேறில்லை.


Thursday, September 24, 2009

சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா!142
வீயாத சத்துமுன்னம் விளங்குவது தன்னாலோ வேறொன்றாலோ
வாயால்வே றெனிலதுவு மசத்தோசத் தோவசத்தேன் மலடி மைந்தன்
பேயாகா ரியஞ்செயுமோ சத்தெனவிப் படியதையும் பிரித்துச்சொன்னால்
ஓயாத வவத்தையாங் குதர்க்கவிகற் பங்களைவிட் டொழித்திடாயே.

வீயாத (மூன்று காலங்களிலும் நசியாத) சத்து முன்னம் (ஆதியில்) விளங்குவது (பிரகாசிப்பது) தன்னாலோ? வேறொன்றாலோ?
வாயால் வேறு எனில் அதுவும் அசத்தோ? சத்தோ? அசத்தேல் (அசத்து எனில்) மலடி மைந்தன் பேயா(க) காரியஞ் செயுமோ? சத்தென இப்படி அதையும் பிரித்து (வேறொன்றாக) சொன்னால், ஓயாத வவத்தையாம் (அனவஸ்தா தோஷம் உண்டாகும். ஒரு தீபம் மற்றொரு தீபத்தினால் பிரகாசிக்கிறது எனில் அந்த வேறொரு தீபம் எப்படி பிரகாசிபிக்கிறது? அது மற்றொரு தீபத்தினால் பிரகாசம் பெற்று பிரகாசிபிக்கிறது என வரிசையாக முடிவில்லாமல் போகும்) குதர்க்க விகற்பங்களை (வேறுபாடுகளை) விட்டொழித்திடாயே.
--
சத் எப்போதுமே இருந்து விளங்குகிறது. அதை விளக்க வேற ஒண்ணம் வேண்டாம். தேவை ன்னுஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டால் அதை விளங்கச்செய்வது எது? இன்னொரு சத்தா? அசத்தா?
அசத்து சத்தை விளங்கச் செய்ய முடியாது. அதாவது இல்லாத ஒண்ணு இருக்கிறதை சுட்டிக்காட்ட முடியாது.
சத்தா இருந்தால் அந்த சத்தை எது விளங்கச்செய்வது? இன்னொரு சத்து. அதை விளங்கச்செய்வது? இப்படி முடிவில்லாத கேள்விகள் எழும். அதனால அது தவறு.

143.
சுருதியுத்தி யொத்ததுபோல நுபவமுங் கேள்சுழுத்திச் சுகவாநந்தம்
மிருதிவடி வாதலிலவ் வாநந்த மேயறிவாம் வேறங் கில்லை
கருதுபிர ளயஞ்சுழுத்தி யிரண்டிலுநீ யிருந்திருளைக் காண்கிறாயே
இருதயத்திப் படிநோக்கி யேக பரிபூரணமா யிருந்தி டாயே

சுருதி யுத்தி ஒத்தது போல் அநுபவமும் (அநுபவ பிரமாணமும்) கேள். சுழுத்தி சுகவாநந்தம் (ஆனது) ஸ்மிருதி (நினைப்பு) வடிவு. (நித்திரையில் அஞ்ஞானத்தை அறிந்து ஒன்றையும் அறியாதிருந்தேன் என்ற நினைப்பு வெளிப்படுமாதலால்) ஆதலில் அவ்வாநந்தமே அறிவாம். வேறு அங்கில்லை. கருது[கின்ற] பிரளயம் சுழுத்தி இரண்டிலும் (2 அவஸ்தையிலும்) நீ [சத்தாக] இருந்து இருளைக் காண்கிறாயே. [ஆகவே சித்தான ஆநந்தமே சத்து] இருதயத்து இப்படி நோக்கி ஏக பரிபூரணமாய் இருந்திடாயே.
--
சுழுத்தியிலும் பிரலயத்திலும் ஆநந்தமே அஞ்ஞானத்தை அறிகிறது. அறிவது அதுவே ஆகையால் அதுவே சித்து. இருந்தே அறிய வேண்டுமாதலால் அதுவே சத்து.

அனுபவத்தால அறிந்து கொள்ள வழி சொல்கிறார்.
நல்லா தூங்கி சுழுத்தில ஆனந்தம் அனுபவிக்கிறோம். தூங்கி எழுந்ததும் ஆனந்தமா தூங்கினதா நினைக்கிறோம். இப்படியா ஆனந்தம் அறிவா ஆயிடுத்து. அதெப்படி ன்னா சுழுத்தில ஆனந்தத்தைத்தவிர விளக்கி வைக்க ஒண்ணும் இல்லையே.
அப்படி உணர்ந்ததும் நாமே. பின்னால் அதை நினைப்பதும் நாமே. அப்படின்னா இருப்பு அப்பவும் இருந்தது. இப்பவும் இருக்கு. ஆக சத் இருக்கு. ஆக நாம் சத் சித் ஆனந்தம். இந்த சத் சித் ஆனந்தமே பிரம்மம் என்பதால நாம் பிரம்மம்.
ஜாக்ரத்திலேயும் இதே போல சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா என்கிறார்.
அதாவது விழிப்பிலேயும் சுழுத்தில இருக்கிறாப்போல அகண்ட பரிபூரணமாக இருப்பாயாக என்கிறார்.


Wednesday, September 23, 2009

இருப்பே அறிவு, அறிவே இருப்பு, இரண்டும் ஒன்றானதே ஆநந்தம்.140.
மோகவிருள் கெடக்கோடி யருணனென வருகுருவே மொழியக் கேளீர்
ஏகபரி பூரணமா மென்சொரூப மென்னுளத்தி லிறுகும் வண்ண
மாகமங்கள் சொன்னபடி யென்னையகண் டார்த்தமா வறிந்தே னையா
ஊகமுமொத் திடவுரைத்தாற் பசுமரத்தி லாணிபோ லுறைக்கு நெஞ்சே

மோக (அஞ்ஞான) இருள் கெட (நீங்க) கோடி அருணன் என வரு குருவே, மொழியக் கேளீர். ஏக பரி பூரணமாம் என் சொரூபம் என் உளத்தில் இறுகும் (நிலைக்கும்) வண்ணம் ஆகமங்கள் (வேதங்கள்) சொன்னபடி என்னை அகண்ட (ஒரே) அர்த்தமாய் அறிந்தேன் ஐயா. ஊகமும் (உத்தியும்) ஒத்திட (சம்மதமாகும்படி) உரைத்தால் பசுமரத்தில் ஆணி போல் உறைக்கும் நெஞ்சே.
சீடன் இன்னும் கொஞ்சம் புத்திக்கு எட்டுறாப்பல லாஜிகலா இதை விளக்கச்சொல்லி கேட்கிறார்.

141.
சத்தேசித் தாகுமய லெனிலசத்தா மசத்தானாற் சாட்சி யெங்கே
சித்தேசத் தாகுமய லெனிற்சடமாஞ் சடங்களுக்கு திதியுமில்லை
ஒத்தேதோன் றியசததுஞ் சித்து நல்ல சுகமாகு மூகத் துக்கோர்
வித்தேயன் னியமாகிற் சடமசத்தாஞ் சுகாநுபவம் விளைந்திடாதே


சத்தே (இருப்பதே) சித்தாகும் (அறிகின்றதாகும்). அயல் (வேறு) எனில் அசத்தாம் (இல்லாததாகும்). அசத்தானால் (அப்படி இல்லாததானால், இல்லாத சித்துக்கு) சாட்சி [தன்மை] எங்கே? (எவ்விடத்தில் இருக்கும்?)

சித்தே சத்தாகும். அயல் எனில் சடமாம் (மூடமாம்). (மூடமான) சடங்களுக்கு [ஸ்]திதியுமில்லை. (இருப்பில்லை)

சத்தும் சித்தும் ஒத்தே (பொருந்தியது எதுவோ அதுவே) தோன்றிய நல்ல சுகமாகும். (நிரதிசிய ஆநந்தம்). அன்னியமாகில் (சித்துக்கு ஆநந்தம் வேறு எனில்) சடம் அசத்தாம். (மூடமும் இருப்பில்லாததுமாகும்) [அதற்கு] சுகாநுபவம் விளைந்திடாதே. ஊகத்துக்கு (இப்படி கூறிய யுத்தியே மற்ற நாமங்களை உணர) ஓர் வித்தே.

குழப்பறா மாதிரி இருக்கா?!
கொஞ்சம் கவனமா பாக்கலாம். சத் - முக்காலத்திலும் இருப்பது. சித் என்பது அறிவு.
எது இருக்கோ அதைத்தானே அறிய முடியும்? இல்லாத விஷயத்தை எப்படி அறிய முடியும்? ஆகவே சத்தே சித்து. ஒரு விஷயம் இருக்கிறதா தெரியறப்பவே அதைப்பத்திய அறிவு கொஞ்சமாவது வந்துடும் இல்லியா? இருப்பே அறிவு.

எதை அறிகிறோமோ அதுக்கு இருப்பு இருக்கும். இருப்பில் இல்லாததை அறிய முடியாது. கணினில இருக்கறதா நினைச்சு ஒரு கோப்பை தேடறோம். தமிழ் இடைமுகம் இருந்தா அது தேடிட்டு சொல்கிறப்ப "நீங்கள் தேடும் கோப்பு இருப்பில் இல்லை" ன்னு சொல்லும். இல்லாத இதை அறிய முடியாது. ஆகவே சித்தே சத்து. (அறிவே இருப்பு)

தேடின கோப்பு கிடைக்கும் போது "அப்பாடா! கிடைச்சுடுத்து"ன்னு சந்தோஷப்படறோம். இருந்து அறிவதே ஆநந்தமாகும். ஆகவே சத்தும் சித்தும் ஒன்றானதே ஆநந்தமாகும்.

Tuesday, September 22, 2009

ஒரு பொருளை சொல்லுஞ் சொற்கள். வெவ்வேறு சப்தங்களாம்.


138.
இன்னவகை விதிவிலக்குக் குணங்கணன்றாய்ச் சேந்தொருமித் தெல்லாம்கூடிச்
சொன்னபொரு ளொன்றன்றி யிரண்டில்லை யொருபொருளைச் சொல்லுஞ் சொற்கள்
பின்னபத மாமதனால் சத்தாதி குணப்பொருளாம் பிரம மேகம்
அன்னபொரு ளொருமையறிந் தகண்டபரி பூரணமா யாவாய் நீயே

இன்னவகை விதி, விலக்குக் குணங்கள் நன்றாய்ச் சேர்ந்து ஒருமித்து எல்லாம் கூடிச் சொன்ன பொருள் ஒன்று அன்றி இரண்டில்லை. ஒரு பொருளை சொல்லுஞ் சொற்கள். பின்ன பதமாம். (வெவ்வேறு சப்தங்களாம்.) அதனால் சத்தாதி குணப் பொருளாம் பிரமம் ஏகம் (ஒன்றே). அன்ன பொருள் ஒருமை அறிந்து அகண்ட பரி பூரணமா யாவாய் நீயே.

139.
நிற்குணவத் துவின்குணங்க ளுரைப்பது தாய் மலடியென னிகரென்னாதே
சற்குணனே வத்துநிலை யுரையாம லறியவல்ல சதுரருண்டோ
நற்குணவே தங்களிந்தச் சீவன்முத்தி பெறப்பிரம ஞானந் தோன்றச்
சொற்குணங்கள் பிரமத்தின் குணங்களன்று பிரமமாஞ் சொரூபந்தானே

நிற்குண வத்துவின் குணங்கள் உரைப்பது தாய் மலடியென நிகர் என்னாதே. சற்குணனே, [ஆசிரியர்] வத்து நிலை உரையாமல் அறியவல்ல சதுரர் (திறமைசாலி) உண்டோ? [யாருமில்லை] நற்குண வேதங்கள் இந்தச் சீவன் முத்தி பெற பிரம ஞானம் தோன்ற சொன்ன குணங்கள் பிரமத்தின் குணங்கள் அன்று. பிரமமாஞ் சொரூபந்தானே.(பிரமத்தின் ஸ்வ ரூபமே ஆகும்)
--
குணமற்றது என்று சொல்லி பின் குணங்களை சொல்லுவது ஏன்? இது "என் தாய் மலடி" என்று முன்னுக்கு பின் விரோதமாக சொல்லுவது அல்ல. பிரமத்தின் குணங்களை கற்பனை செய்து கூறாமல் அதன் உண்மை தன்மையை அறிபவர்கள் யாருமில்லை. ஆக இப்படி சொல்லிய குணங்கள் அனைத்தும் பிரமத்தின் குணங்கள் அல்ல. அதன் சொரூபமே.
வார்த்தைகளுக்கு அகப்படாதது பிரம்மம். ஆனா எதையாவது சொல்லி நமக்கு புரிய வைக்க வேண்டி இருக்கு. ஆக நாம பாக்கிறது பிரமத்தை இல்லை. அதைப்பத்திய நம்மோட சில பார்வைகளே.Monday, September 21, 2009

பிரமம் இது, இது அல்ல!136.
நித்தியம்பூ ரணமேகம் பரமார்த்தம் பரப்பிரம நிதானஞ் சாந்தஞ்
சத்தியங்கே வலந்துரியஞ் சமந்திருக்குக் கூடஸ்தன் சாட்சி போதம்
சுத்தமிலக் கியஞ்சநா தனஞ் சீவன் றத்துவம்விண் சோதி யான்மா
முத்தம்விபு சூக்கும மென்றிவ்வண்ணம் விதிகுணங்கண் மொழியும் வேதம்

நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானம் சாந்தம் சத்தியம் கேவலம் துரியம் சமம் திருக்கு கூடஸ்தன் சாட்சி போதம் சுத்தம் இலக்கியம் சநாதனம் சீவன் தத்துவம் விண் சோதி ஆன்மா முத்தம் விபு சூக்குமம் என்று இவ்வண்ணம் விதிகுணங்கள் மொழியும் வேதம்.

137.
அசலநிரஞ் சனமமிர்த மப்பிரமே யம்விமல மநுபா தேயம்
அசடமநா மயமசங்க மதுலநிரந் தரமகோ சரம கண்டம்
அசமநந்த மவிநாசி நிர்குணநிட் களநிரவ யவம நாதி
அசரீர மவிகார மத்துவித மெனவிலக்கா மநேக முண்டே

அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் அநுபாதேயம் அசடம் அநாமயம் அசங்கம் அதுல நிரந்தரம் அகோசரம் அகண்டம் அசமநந்தம் அவிநாசி நிர்குண நிட் கள நிரவயவம் அநாதி அசரீரம் அவிகாரம் அத்துவிதம் என விலக்காம் அநேகம் உண்டே.
--
குறிப்பு - ஒரே பொருள் கொண்டதாக இங்கே கூறப்படும் சொற்கள் நூற்களில் சேர்ந்து வரலாம் - நித்தியம், ஸநாதநம் என்பது போல. அங்கே அவ்விரு சொற்களுக்கிடையே உள்ள சூக்குமமான பொருள் வேறுபாட்டை வியாக்கியானங்களிலிருந்து அறிந்து கொள்ளவேண்டும். பொதுவான பொருள் மட்டுமே இங்கே கொடுக்கப்படுகிறது.

நித்தியம், ஸநாதனம் - எப்போதும் இருப்பது
பூரணம் - முழுமையானது
ஏகம் - தன்னிகரில்லாமல் தானொன்றாக மட்டும் இருப்பது
பரமார்த்தம் - உண்மை
ப்ரஹ்மம் (பிரமம்) - பரந்து இருப்பது
நிதானம் - (nidaanam, not nidhaanam) முதற்காரணம்
சாந்தம் - ஆசாபாசங்கள் அடங்கி அவையின்றி இருப்பது
சத்தியம் - மூன்று காலங்களிலும் அழியாமல் மாறாமல் இருப்பது
கேவலம் - வேறொன்றுடன் தொடர்பு இல்லாதது
துரியம் - விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் இம்மூன்றையும் கடந்த நான்காவது
சமம் - வேறுபாடற்றது
திருக்கு - அறிவுமயமானது
கூடஸ்த(ம்/ன்), அசங்கம் - பற்றுதலற்றது
சாட்சி - ஒரு காரியத்தில் இறங்காமல் அதைப் பார்க்கமட்டும் செய்வது
போதம், அசடம் - தன்னைத்தான் அறிந்தது
சுத்தம், நிரஞ்சனம், விமலம் - ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலமற்றது
இலக்கியம் - ???
ஆன்மா - அறிபவன், (பரம்பொருளைக் குறிக்கையில்) அநித்தியமான வெளித்தோற்றங்களைக் கடந்தது
சீவன் - ஸம்ஸாரபந்தமுள்ள ஆன்மா
தத்துவம் - சாத்திர சித்தாந்தத்தில் உலகிலிருக்கும் ஒரு முக்கியபொருளாகக் கணிக்கப் பட்டது (எ-கா- அக்னி தத்துவமே சிவனின் நெற்றிக்கண்ணாம்), (பரம்பொருளைக் குறிக்கையில் ஆன்மா என்பதன் பொருளையே கொள்க)
விண் - ???
சோதி - ப்ரகாசிப்பது
முக்தம் - தளைகளற்றது
விபு - வியாபித்திருப்பது
சூக்குமம் - மேலோட்டமாய்ப் பார்க்கையில் தெரியாதது.
அசலம் - செயல்கள் அடங்கிய நிலையிலிருப்பது
அமிர்தம் - அழிவு இல்லாதது
அப்பிரமேயம், அகோசரம் - சாமானிய அறிவிற்கு எட்டாதது
அநுபாதேயம் - தானே அடையத்தக்க பரம லட்சியமாக இருப்பதால் வேறு லட்சியத்தை அடைவதற்கு உபயோகிக்கவியலாதது
அநாமயம் - சம்சாரம் என்ற வியாதியற்றது
அதுல - ஒப்பில்லாதது
நிரந்தரம் - இடைவெளியில்லாதது
அகண்டம், நிஷ்கலம் (நிட்களம்), நிரவயவம் - பகுதிகளாகப் பிரிக்கவியலாதது
அசமநந்தம் - ??
அவிநாசி - அழிவற்றது
நிர்குணம் - ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களும் அவற்றிலிருந்து பிறந்த வெப்பம், தண்மை முதலிய குணங்களும் இல்லாதது
அநாதி - பிறப்பில்லாதது
அசரீரம் - உடல் இல்லாதது
அவிகாரம் - எப்பொழுதும் மாறுபாடற்றது
அத்துவிதம் அத்விதீயம் - தன்னைக்காட்டிலும் வேறு (இரண்டாவது) பொருளில்லாதது

Friday, September 18, 2009

சத் சித் ஆநந்தம் ஒண்ணுதான்!135.
குளிரிளகல் வெண்மையென்ற பதங்களினா னீர்மூன்று கூறா யிற்றோ
வொளிதவனஞ் செம்மையென்ற பதங்களா லக்கினியு மொருமூன் றாமோ
வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிட ரெனப்பிரித்து விலக்கி வேதம்
எளிதறிய முரண் மொழிந்த சத்தாதி யெனும்பிரம மேகந்தானே.

குளிர், இளகல், வெண்மை என்ற பதங்களினால் நீர் மூன்று கூறாயிற்றோ? ஒளி, தவனம் (சூடு) செம்மை (சிவப்பு) என்ற பதங்களால் அக்கினியும் ஒரு மூன்றாமோ? [ஆகாய] வெளி முதலாம் (முதலான) சகம், அசத்து (unreal) மூடம் (ஜடம்) இடர் (துக்கம்) எனப்பிரித்து விலக்கி வேதம், [பக்குவிகள்] எளிது அறிய முரண் மொழிந்த (எதிராக கூறிய) சத்தாதி (சத் முதலான [சத் சித் ஆநந்தம்]) எனும் பிரமம் ஏகந்தானே.
--
"தண்ணி சில்லுன்னு இருக்கும் உருவமில்லாம, இளகி ஓடும் (fluid), நிறமில்லாம இருக்கும்"ன்னு சொன்னா அது மூணு பொருளா ஆயிடுமா?இல்லை. சூடு, ஒளி, சிவப்பு நிறம் உடையதுன்னு சொன்னா நெருப்பு மூன்றாகுமா? இந்த பிரபஞ்சமானது அசத்து, சடம், துக்கம் ன்னு தெரிஞ்சுக்க பிரமத்தில அவற்றுக்கு மாறா சத், சித், ஆனந்தம் ன்னு 3 குணங்கள் உள்ளதாக வேதம் கூறியதே ஒழிய அக்குணங்கள் உள்ள பிரமம் ஒண்ணுதான்.Thursday, September 17, 2009

சச்சிதாநந்தின் ஒற்றுமையை சொல்ல விண்ணப்பம்.
133.
இந்தவா றைந்துசுகஞ் சொல்லினோம் வித்தைசுக மினிமேற் சொல்வோம்
முந்தமா யையுஞ்சச்சி தாநந்தப் பொருளுமே மொழியும் போதில்
அந்தமா மத்துவித சுகமான்ம சுகமிரண்டு மங்கே சொன்னோம்
தொந்தமாற் றியமகனே யின்னமுனக் கையமுண்டேற் சொல்லு வாயே.

இந்தவாறு ஐந்து சுகஞ் சொல்லினோம்.(செய்யுள் 123-விஷயாநந்தம்; 124-127 பிரமாநந்தம்; 128-வாசநாநந்தம்; 129- நிசானந்தம்; 130-முக்கியானந்தம்) வித்தை சுகம் இனிமேல் (நூலின் கடைசியில்) சொல்வோம். முந்த (முன்பு) மாயையும் சச்சிதாநந்தப் பொருளுமே மொழியும் போதில், அந்தமாம் அத்துவித சுகம் (95-108) ஆன்ம சுகம் (114-120) இரண்டும் அங்கே சொன்னோம். தொந்த மாற்றிய (துவந்தங்களை கெடுத்த) மகனே இன்னமும் உனக்கு ஐயமுண்டேல் சொல்லுவாயே.
லிஸ்டில இன்னும் ஒண்ணதான் பாக்கி. வித்தியானந்தம். இதைப்பத்தி அப்புறம் வரும்.

134.
ஆத்மா சச்சிதாநந்த சொரூபமெனத் தெரிந்திருந்தும் அதன் உண்மையான சுவானுபூதி வெளிப்பட சுருதி யுக்தி அநுபவங்களுக்கு ஒத்திருக்கும் அவற்றின் ஒருமையை தெரிய வினா:
குகன்றனையு மெனையுமுல கினையுமீன் றளித்தருளுங் குருவே கேளீர்
புகன்றசச் சிதாநந்தப் பதங்கடனித் தனியாகிப் பொருள்வே றானால்
உகண்டமன முறைப்பதெங்ஙன் பரியாய பதங்களைப்போ லுறவு காணேன்
அகண்டமா யொருசுவையாய்த் தெனீக்கூட்டியமதுவா வறிவிப்பீரே

குகன் தனையும் எனையும் உலகினையும் ஈன்று அளித்து அருளுங் குருவே கேளீர்!
புகன்ற சச்சிதாநந்தப் பதங்கள் தனித் தனியாகிப் பொருள் வேறானால் உகண்டமனம் (விஷயங்களில் பாயும் மனம்) உறைப்பது எங்ஙன்? (எப்படி) பரியாய பதங்களை (பல்சொல் ஒரு மொழி) போல் உறவு காணேன். அகண்டமாய் ஒரு சுவையாய் தேனீ கூட்டிய மதுவாய் அறிவிப்பீரே.
--
சந்தேகமிருந்தா கேட்கச்சொன்ன குருகிட்ட சீடன் ஒரு சந்தேகம் கேட்கிறான்.

அத்வைதம்ன்னா எல்லாமே ஒண்ணுதானே. ஆனா அந்த நிலையை எப்படி சொல்லறோம்? சத், சித், ஆனந்தம். கை, பாணி, ஹஸ்தம் ன்கிறா மாதிரி ஒரே விஷயத்தை குறிக்கிற ஒரு பொருட் பன் மொழியாவும் இது இல்லை. இப்படி இருக்க சச்சிதாநந்த பதங்களுக்கு ஒரே அர்த்தம் தோன்றலைன்னா எப்படி மனசு நிலை பெறும்? தேனீக்கள் பலதா இருந்தும் பல பூக்களிலிருந்து தேன் கொண்டு வந்தாலும் தேன் சுவை ஒரே மாதிரி இருக்காப்போல ஒரே மாதிரி அத்வைத நிலையை சொல்லக்கூடாதா?

Wednesday, September 16, 2009

செவன்த் ஹெவன்...
132.
இப்பிரமாநந்தம் அடைந்ததற்கு திருஷ்டாந்தம்.
எவனா கிலுமிந்தத் துரியா தீதத்தி லேழாம் பூமியி லிருந்தானேல்
அவனா ரதன்சுகன் சிவன்மா லயன்முத லறிவோ ரநுபவ சுகபோதம்
விவகா ரதிர்சய மிதுவே யநுபவ மெனமுன் சொல்லிய விவகாரி
உவமா னமுமறி மகனே யவனடி யுதிரும் பொடிகளென் முடிமேலே.

எவனாகிலும் இந்தத் துரியாதீதத்தில் ஏழாம் பூமியில் இருந்தானேல், அவன் (அவனுக்கு) போதம் (தத்வ ஞானம்) விவகார (பிரபஞ்ச) அதிரிசயம் (அத்ருஷ்யம் =பார்வையின்மை) [ஆகிய] இதுவே [ஸ்வ]அநுபவம் எனவும், நாரதன் சுகன் சிவன் மால் அயன் முதல் அறிவோர் (அறிவோருக்குமுள்ள) அநுபவ சுகமும் (ஆநந்தம்) என முன் சொல்லிய (துரீயாதீதனின்) விவகாரி உவமானமும் அறி மகனே, அவனடி உதிரும் பொடிகள் என் முடிமேலே [தரிக்கத்தக்கன].
--
இரண்டற்றதாயும் சுழுத்தி அல்லாததுமா இருக்கிற முக்கிய நிஜ ஆனந்தத்தோட அனுபவமே துரியாதீதம் என்கிற ஏழாம் பூமியாம்.
[ஆங்கில வழக்கிலேயும் செவன்த் ஹெவன் என்கிறாங்க]

எவன் இந்த நிலையில இருக்கானோ அவன் நாரதன், சுகன், சிவன், விஷ்ணு, பிரமன் ஆகியவருடைய அனுபவ ஆனந்த நிலையில் இருக்கிறான். அத்தகைய மகா புருஷனின் பாத தூசிகள் என் தலையில் தாங்கத்தக்கன என்கிறார் நமக்கு இவ்வளவு தூரம் சமாசாரம் சொன்ன தாண்டவராய ஸ்வாமிகள்.

Tuesday, September 15, 2009

த்வைத லோகத்தில சில ஆனந்த வகைகள்131.
மனுடன் மனுடகந் தருவன் றேவநன் மாகந் தருவனொண் பிதிரோடே
பனுமா ஜானர்கள் கருமத் தேவர்கள் பகர்முக் கியரிந் திரனாசான்
கனமார் பிரஜா பதியென் விராட்டுபொன் கர்ப்பப் பிரமனென் றின்னோர்கள்
பினவாநந்தங்க ணுரையாம் பிரளய வெள்ளக் கடல்பிர மாநந்தம்.

மனுடன் (சார்வ பௌமன்), மனுட கந்தருவன் (மனிதனாயிருந்து புண்ணியம் செய்து கந்தருவன் ஆனவன்), தேவ நன்மா கந்தருவன் (பூர்வ கல்ப புண்ணியத்தால் இந்த கல்ப ஆதியிலேயே கந்தருவனானவன்) ஒண்பிதிரோடே (சிறந்த தம் உலகில் வாசம் செய்யும் அக்னிஷ்வாத்தா முதலான பிதிரர்) பனும் ஆஜானர்கள், (கல்ப ஆதியிலேயே தேவரானவர்) கருமத் தேவர்கள், (இந்த கல்பத்தில் கருமம் செய்து மகத் பதம் அடைந்து ஆஜான தேவர்களால் பூஜிக்கப்பட்ட தேவர் ஆனவர்) பகர் முக்கியர் (மேலான அஷ்ட வசு துவாதச ஆதித்யர் ஏகாதச ருத்திரர் ஆகிய 31 முக்கிய தேவர்கள்) இந்திரன், ஆசான் (ப்ருஹஸ்பதி), கனமார் (கனம் பொருந்திய) பிரஜாபதி என்னும் விராட்டு, பொன் கர்ப்பப் பிரமன் (ஹிரண்யகர்ப்பன்) என்று 11 இன்னோர்கள் பின (அநுபவிக்கும் ஒன்றுக்கொன்று நூறு மடங்கு அதிகமான) ஆநந்தங்கள் நுரையாம். பிரளய வெள்ளக் கடல் பிரமாநந்தம்.
--
மனிதரில் சிறந்தவன் சார்வ பௌமன் எனப்படுவான். இவன் அனுபவிக்கும் சுகத்தைவிட 100 மடங்கானது மனுட கந்தர்வனின் ஆனந்தம். "அட! இது யாருப்பா?"ன்னா இந்த கல்பத்தில மனுஷனா இருந்து செஞ்ச புண்ணியத்தால கந்தருவனா ஆனவர்.

இப்படியே அடுத்து அடுத்து வருபவர் ஆனந்தம் 100 மடங்கு அதிகம்ன்னு கணக்கு வெச்சுக்கங்க.
தேவ நன்மா கந்தருவன் என்பவர் பூர்வ கல்பத்தில செஞ்ச புண்ணியத்தால இந்த கல்பம் ஆரம்பிக்கிறப்பவே கந்தருவனா ஆனவர்.

சிறந்த தம் உலகத்தில வாசம் செய்கிற அக்னிஷ்வாத்தா முதலானவர்கள் பித்ருக்கள்.

தாம் செஞ்ச புண்ணிய காரியங்களால இந்த கல்ப ஆதியிலேயே தேவரானவர் ஆஜான தேவர்கள்.

கருமத் தேவர்கள் என்பவர் இந்த கல்பத்தில 40 சம்ஸ்காரங்களையும் சரியா செய்து பல யாகங்கள் செய்து உயர்ந்த நிலை அடைஞ்சு ஆஜான தேவர்களால பூஜிக்கப்பட்ட தேவரா ஆனவர்.

பகர் முக்கியர் ன்னு சொல்கிறது மேலான அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர், ஏகாதச ருத்திரர் ஆகிய 31 முக்கிய தேவர்கள்.

அடுத்து இந்த தேவர்களுக்கு எல்லாம் தலைவனா இருக்கிற இந்திரன்.

அதுக்கும் மேல இந்திரனோட ஆசான் ப்ருஹஸ்பதி.

அதுக்கும் மேல கனம் பொருந்திய பிரஜாபதி என்னும் விராட்டு.

கடைசியா ஹிரண்ய கர்ப்பன் என்கிற பிரமன்.

இப்படி த்வைத உலகத்தவங்களை பட்டியல் போட்டாச்சு.
அப்ப மனுஷர்களோட ஆனந்தத்தை விட பிரம்மனோட ஆனந்தம் 100 பவர் 10.

ஆனாலும் இவர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் நுரை போலவாம், அத்வைத நிலையிலே இருக்கிற பிரமானந்தம் ப்ரலய காலத்து பெரும் கடல் போலவாம்.


Monday, September 14, 2009

முக்கியானந்தம்130.
நிசமா னதுமுக் கியமோ குடத்துள நீரன் றேவெளி யீரந்தான்
வசமாவ கங்கர மறைந்தா னிசமது படிந்தான் முக்கிய வகையாகும்
திசையார் திரிசய மரியா தேதுயில் செறியா தேயுட றறிபோலே
அசையா தேமதி சமமா கியநிலை யதுதான் முக்கிய வாநந்தம்

வசமாய் அகங்கரம் (சாமானிய அகங்கார வசமாக பிரமாநந்தம்) மறைந்தால் நிசம். அந்த நிசமானது முக்கியமோ (முக்கிய ஆநந்தம் ஆகுமா? இல்லை). குடத்துள நீரன்று; வெளி ஈரந்தான். அது படிந்தால் (அந்த சாமானிய அகங்காரம் சமாதி அப்பியாசத்தால் நீங்கினால்) முக்கிய வகையாகும். திசையார் திரிசயம் (திக்குகளில் காணப்படும் விஷயங்கள்) அரியாதே, (அறியப்படாது) துயில் செறியாதே, (உறங்காது) உடல் தறி போலே அசையாதே, மதி (மனம்) சமமாகிய நிலை அதுதான் முக்கியவாநந்தம்.
--
நித்திரையில் உள்ள பிரம்மானந்தம் "நான்" என்ற அகங்கார எண்ணம் தோன்றியதுமே மறைஞ்சு போயிடும். அப்படி மறைஞ்சும் அதோட நினைவிருக்கிறது வாசனானந்தம்ன்னு பாத்தோம். யோக பயிற்சியால இந்த சாமான்ய அகங்காரமும் மறைந்து, தூக்கமும் இல்லாம, பெயர் உருவம் எல்லாம் மறைஞ்சு, உடல் தூண் போல அசைவில்லாமல் நிக்க, ஆன்மா சூக்ஷ்மமான தன்மை அடைந்துள்ள நிலையே முக்கியானந்தம்.


Friday, September 11, 2009

நிஜ ஆநந்தம்129.
அந்தக் கணமுட லகமென் றிடர்களி லலைந்தே சுகந்தனை மறந்தேபோம்
முந்தைச் செயும்வினை சுகதுக் கந்தரு மோனந் தருநடு வடிவே காண்
எந்தப் புருடனு மொருசிந் தையுமற விருந்தே னெனலநு பவமாகும்
இந்தப் படிதனுதாசீ னச்சுக மிதுவே நிசமெனு மாநந்தம்.

[வாசனாநந்தம் போன] அந்தக் கணம் உடல் அகம் என்று இடர்களில் அலைந்தே [பிரமாநந்த] சுகந்தனை மறந்தே போம். முந்தைச் செயும் வினை சுக துக்கம் தரும்.
{அடுத்ததாக} மோனந் தரும் (தருவது) நடு (சுக துக்கமில்லாத) வடிவே காண். எந்தப் புருடனும் ஒரு சிந்தையும் அற இருந்தேன் எனல் அநுபவமாகும். இந்தப்படி தன் உதாசீன சுகம் இதுவே நிசம் எனும் ஆநந்தம்.
--
தூக்கம் கலைஞ்ச பின்னே, பழையபடி உடல்தான் நாம் என்கிற நினைப்பு வந்து, உலக விஷயங்களிலே வேலைகளில ஈடு பட்டு தினப்படி அவஸ்தை ஆரம்பிச்சுடும். அப்ப அந்த பிரம்மானந்த சுகம் மறந்தே போகும்.
சாதாரணமா மனசை நிறுத்தறது நடக்காத காரியம். ஆனா கொடுப்பினையாலோ பயிற்சியாலோ அப்படி செய்ய முடியும். (நெரூர் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில அப்படி செய்ய முடிஞ்சதுன்னு முன்னே எழுதி இருக்கேன்.) நல்லது, கெட்டது; சுகம், துக்கம் ன்னு ஒரு ஜட்ஜ்மெண்ட் பண்ணாம நடப்பதை சும்மா பார்த்துக்கிட்டு உதாசீனப்படுத்த முடியும். அப்படி இருக்க முடிஞ்சா அதுவே உண்மையான சுகம்.
அதாவது ஜாக்ரத் அவஸ்தையில் சுக துக்கம் இல்லாது இருக்கும் சுபாவ ஆநந்தம் நிஜ ஆநந்தமாகும்.


Thursday, September 10, 2009

பிரம்மானந்தத்தில முழுகி இருக்கிற நாம அப்படியே இருந்துடலாமே?128.
ஒன்றா கியபிர மாநந் தச்சுக மொழிவா னேன்வெளி வருவானேன்
என்றான் முன்செய்த கருமம் வெளியினி லிழுக்குஞ் சுழுத்திவிட் டெழுந்தோனும்
நன்றா யினசுக மகலாம் வெளியிலு நடவான் மறதியும் பெறமாட்டான்
அன்றா மெனவிருந் துறங்குஞ் சிலகண மதுவே வாதனை யாநந்தம்

ஒன்றாகிய பிரமாநந்த சுகம் ஒழிவானேன்? வெளி வருவானேன்? என்றால் முன் செய்த கருமம் வெளியினில் இழுக்கும். சுழுத்தி விட்டு எழுந்தோனும் நன்றாயின (அநுபவித்த) சுகம் அகலான். வெளியிலும் நடவான். மறதியும் பெறமாட்டான். அன்றாம் (ஜாக்ரத்தும் அல்ல, சுசுப்தியும் அல்ல) என இருந்து உறங்கும் சில கணம் அதுவே வாதனையாநந்தம். (வாசனாநந்தம்)
--
சுழுத்தி விட்டு வெளி வந்தாலும் கொஞ்ச நேரம் ஜாக்ரத்துக்கு வராமலே சுகத்தை விடாது இருப்பது வாசனை ஆனந்தம்.
பிரம்மானந்தத்தில முழுகி இருக்கிற நாம அப்படியே இருந்துடலாமே? ஆனா நாம இந்த ஜன்மத்தில அனுபவிக்க வேண்டிய சுக துக்கம் இன்னும் நிறைய இருக்கே? அதனால் தூக்கத்தை விட்டு வெளியே வரோம். சிலர் அனுபவம் தூங்கி வெளியே முழுக்க உடனே வராம ஒரு அரைத்தூக்கம்- சொகமா இருக்கும். அது சொல்லித்தெரியாது. அனுபவிக்கணும். இப்படி தூக்கத்தை விட்டு வெளி வந்தாலும் கொஞ்ச நேரம் ஜாக்ரத்துக்கு வராமலே சுகத்தை விடாது இருக்கிறது வாசனை ஆனந்தம்.

Wednesday, September 9, 2009

அடிப்படையில ஒன்றே..127.
நெய்யும் வெண்ணையு மிருபேர் களுமறி நினைவிற் பிறிவறி வினில்லை
செய்யுந் நனவினி லிறுகும் மனதொடு சேருஞ் சின்மய விஞ்ஞானன்
நையுந் துயர்மன நழுவும் பொழுதுணர் ஞானச்சுக முணுமாநந்தன்
பெய்யுந் துளிகளு நீருங் குளமொடு பாகும் போலிவர் பிறிவன்றே

நெய்யும் வெண்ணையும் இரு பேர்களும் அறிநினைவில் பிறிவு. அறிவினில் இல்லை. செய்யும் நனவினில் (ஜாக்ரத்தில்) இறுகும் (ஸ்தூலமான) மனதொடு சேரும் சின்மய விஞ்ஞானன் (விச்வன்), நையும் (வருத்தும்) துயர்மனம் நழுவும் பொழுது உணர் ஞானச் சுகம் உணும் ஆநந்தன்[இருவரும் ஒருவரே]. பெய்யும் துளிகளும் நீரும், குளமொடு (வெல்லத்துடன்) பாகும் போல் இவர் பிறிவன்றே.
--
வெண்ணை, நெய்ன்னு பெயர்கள் இரண்டானாலும் அவை அடிப்படையில ஒன்றேதான்.

விஞ்ஞானமயனும் ஆனந்த மயனும் அந்தக்கரண விருத்தி, அவித்தை ஆகியவற்றால பிரிவானாலும் இயக்கத்தால் வேறல்ல.

ஜாக்கிரத்தில் மனதுடன் கூடிய ஆன்மாவே மனம் ஒடுங்கிய போது ஆனந்தமயனாகிறான். மழை பெய்யுது. அதில இருக்கிற நீரும் குளத்தில இருக்கிற நீருக்கும் என்ன வித்தியாசம்? வெல்லத்துடன் பாகும் வேறாகாதது போல.


Tuesday, September 8, 2009

ஒத்தர் அனுபவம் வேறு ஒத்தர் மனசில உதிக்கிறதில்லை...
126.
உதவும் புவியினி லொருவன் னநுபவ மொருவன் மனதினி லுதியாதே
மதியுங் கெடுகிற துயில்கொண் டாநந்த மயனன் றோசுக முறுகின்றான்
இதுவிஞ் ஞான மயனாஞ் சிந்தையி னினைவாய் வந்திட லழகன்றே
சுதைவிண் ணோர்புகழ் குருவே நீரிது சொல்வீர் சகலமும் வல்லீரே

(எல்லா விருப்பங்களையும் அடைய கருமம், உபாசனை, ஞானத்தை அனுஷ்டிக்க) உதவும் புவியினில் ஒருவன் அநுபவம் [வேறு] ஒருவன் மனதினில் உதியாதே. மதியும் கெடுகிற (மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் நசிந்த) துயில் கொண்டு ஆநந்த மயன் அன்றோ சுகமுறுகின்றான். இது விஞ்ஞான மயனாம் சிந்தையில் நினைவாய் வந்திடல் அழகு அன்றே. சுதை (அமிர்த பானம் செய்யும்) விண்ணோர் புகழ் குருவே, நீரிது சொல்வீர், சகலமும் வல்லீரே.
--
சீடனுக்கு சந்தேகம். உலகில ஒத்தர் அனுபவம் வேறு ஒத்தர் மனசில உதிக்கிறதில்லை. ஆழ் தூக்கமான சுசுப்தில மனமும் புத்தியும் இல்லை. ஆகையால ஆனந்த மய கோசமே சுகம் அனுபவிக்கிறது. தூங்கி எழுந்த பின்னே இந்த சுகத்தை மனம், புத்தியோட சம்பந்தப்பட்ட விஞ்ஞானமய கோசம் எப்படி அனுபவிக்கும்?

Monday, September 7, 2009

தூங்கறதா பிரம்ம சுகம்?125.
தூங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப் பொருள் விழி துயில்வோர்கள்
தாங்கும் மலரணை நன்றா கச்சிலர் சம்பாதிப்பது தானூகம்
தீங்குந் நன்மையு மாண்பெண் முறைமையுந் தெரியா தமளிசெய் பொழுதேபோல்
ஆங்குள் வெளிகளு மறியா வநுபவ மதனா லதுபிர மாநந்தம்.

தூங்குஞ் சுகமது பிரமச் சுகம் எனல் சுருதிப் பொருள் (வேதம் ஒப்புக்கொள்வது). விழி துயில்வோர்கள் தாங்கும் மலரணை நன்றாகச் சிலர் சம்பாதிப்பது தான் ஊகம். தீங்கும் நன்மையும் ஆண் பெண் முறைமையும் தெரியாது அமளி (ஆலிங்கனம்) செய் பொழுதே போல், ஆங்கு உள் வெளிகளும் (ஸ்வப்ன ஜாக்ரத்) அறியா அநுபவம். அதனாலது பிரமாநந்தம்.
--
என்னங்க இது? போயும் போயும் தூங்கறதையா பிரம்ம சுகம்ன்னு சொல்லறீங்கன்னா ஆமாம். சுழுத்தியில் பிரம்மானந்த நிலை எட்டுகிறது என்கிறது வேதம் ஒப்புக்கொண்ட விஷயம். அங்க அவ்வளவு ஆனந்தம் இருப்பதாலதான் அந்த தூக்கத்துக்கு பங்கம் வராம இருக்க மிருதுவான மெத்தை தலையணை முதலியன முயன்று சம்பாதிக்கிறான். அனுபவத்தில அந்த சுழுத்தியில் விருப்பு வெறுப்புகள், காலம், இடம் முதலான வித்தியாசங்கள் இல்லாது, இரண்டு இல்லா ஆனந்தத்தையே அனுபவிக்கிறான்.
ஆனா, இது ஆன்மா பிரம்மத்துடன் ஐக்கியமடையும் போது உண்டாகிற ஆனந்தம் இல்லை. அதுக்கு சமமான ஆனந்தம் என்கலாம்.
ப்ரம்ம ஐக்கியம் அடைந்த ஆன்மா மறுபடி அஞ்ஞானத்தில் அழுந்தாது. பிறவியும் அதற்கு இல்லை. இங்க அப்படி இல்லை. கருவி கரணங்கள் எல்லாம் கழன்று ஆன்மா அவித்தையில மூழ்கி இருக்கு. அதாவது மாயையுடன் சம்பந்தப்பட்டே இருக்கு. கர்ம பலன் தூண்ட அது மீண்டும் ஜாக்கிரத்துக்கு வந்து அஞ்ஞானத்தில பொருந்தி உழண்டுகிட்டு இருக்கு.
அந்த பிரம்மத்தோட ஐக்கியம் அடைஞ்சு இருந்தா அப்படி அது அஞ்ஞானத்தில் பொருந்தாம வெளி வரும் போது ஜீவன் முத்த நிலையில இருக்கும்.

ஆக நித்திரை ஆனந்தத்தில் மாயா சம்பந்தம் உள்ளது. பிரம்ம ஐக்கிய ஆனந்தத்தில் மாயா சம்பந்தம் இல்லை.
(உடல் உறவு கொள்ளும் போது ஏற்படும் ஆனந்த நிலை சுசுப்திக்கு சமமாக சொல்கிறார்கள்)


Saturday, September 5, 2009

பெண்களோட தினசர்யைம்ம்ம்ம்ம்ம்...பெண்களோட தினசர்யை பத்தி எழுதலையேன்னு கேட்கிறாங்க. அது இன்னும் நீளமா போகுமேன்னு தயக்கம். சுருக்கமா எழுதப்பாக்கலாம். வீட்டுல காலையில யாரும் எழும் முன்னே எழுந்து பல் தேச்சு, காப்பிக்கு வென்னீர் வெச்சுட்டு, வாசல் தெளிச்சு, திரும்பி வந்து ட்யூஷன் போகிற பையனை எழுப்பிவிட்டு, காபி பொடி மேல வென்னீரை விட்டு மூடி, வாசல்ல கோலம் போட்டுட்டு, பால் வாங்கி வந்து காய்ச்ச அடுப்பில ஏத்திட்டு, புருஷனுக்கு எழுந்திருக்க முதல் எச்சரிக்கை கொடுத்து, குளிக்கப்போய் , பால் பொங்கிடுமோன்னு அவசர அவசரமா நாலு சொம்பு விட்டுகிட்டு, ஈரத்தை துடைச்சுக்கக்கூட நேரமில்லாம பாலை இறக்கி, உடை மாத்தி வந்து, பாலை ஆத்தி ஸ்வாமிக்கு கை காட்டிட்டு, நேரமாச்சுமாங்கிற பையனுக்கு ஹார்லிக்ஸ் கலந்து ஆத்தி கொடுத்து, மணக்க மணக்க போட்ட காப்பியை ருசிச்சு குடிக்கக்கூட நேமில்லாம, பள்ளிக்கு போக வேண்டிய சின்னவளை எழுப்ப முதல் எச்சரிக்கை கொடுத்து, இன்னும் தூங்கற கணவனை "என்னங்க! பொண்ணு கூட எழுந்துடுவா போல இருக்கு. நீங்க இன்னும் தூங்கறீங்க"ன்னு உசுப்பிவிட்டு, எவ்வளோ நேரமா கதவ தட்டறதுமான்னு சலிச்சுக்கிற வேலைக்காரிக்கு கதவு திறந்து, துண்டு எங்கேடின்னு சத்தம் போடற கணவனுக்கு "குளிக்கப்போறப்ப எடுத்துகிட்டு போக மாட்டீங்களா?"ன்னு கடிச்சுகிட்டே துண்டு எடுத்துப்போய் கொடுத்து, பொண்ணை வலுக்கட்டாயமாய் எழுப்பி, டாய்லெட்டுக்கு கொண்டுவிட்டு, டிபன் என்ன செய்யலாம்ன்னு மண்டையை குடைஞ்சுகிட்டு , ஸ்கூல் பசங்களுக்கு மதிய உணவும் கணவனுக்கு சாப்பாடும் தயாராகிற போதே சின்னவளை "ஆச்சா! தேச்சுக்குளிச்சியா?"ன்னு அதட்டி, டிபன் பாக்ஸ் எல்லாம் பாக் பண்ணி, இதுக்குள்ள திரும்பி வந்து குளிச்சு ரெடியா இருக்கிற பையனை "ஏண்டா? நேத்து ஜுவாலஜி ஹோம் வொர்க்க பண்ண சொன்னேனே பண்ணியா?"ன்னு விசாரிச்சு, ரெண்டு படம் போட்டுக்கொடுத்து, சின்னவளுக்கு டிபன் பறிமாறி, சாப்பிட வெச்சு, கிளப்ப,ி" திருப்பி பென்சிலை தொலைச்சா வாங்கித்தர மாட்டேன்"னு எச்சரிக்கையோட உள்ளேந்து புதுசா எடுத்து கொடுத்து, டை காணோம்ன்னு அழறவளுக்கு அதையும் தேடி எடுத்துக்கொடுத்து, ஆட்டோக்காரன் பொறுமையில்லாம ஹார்ன் அடிக்க, சமாதானம் சொல்லிக்கிட்டே குழந்தையை கொண்டுவிட்டு, சைக்கிள்ள வேகமா கிளம்புற பையனை "பாத்து போடா!" ன்னு எச்சரிச்சு இத்தனை அமர்களத்திலேயும் உதாசீனமா பேப்பர் பாத்துகிட்டு, டிபன் சாப்பிடற கணவனைப்பாத்து கோபப்படாம கேட்டு இன்னும் கொஞ்சம் பறிமாறி, காப்பி கலந்து நகத்திட்டு, காரியர்ல சாப்பாடு நிரப்பறப்ப, "ஏண்டி எவ்வளோ தரம் சொல்லறது? காப்பில சக்கரையை கலந்து வை!" ன்னு என்று சத்தம் போடுகிறவனுக்கு "கலந்தா அது ஆறிடாதா?"ன்னு லாஜிக் பேசி காரியரோட பஸ்ஸுக்கு சில்லரையும் எடுத்து கொடுத்து...

என்னங்க அதுக்குள்ள நான் வரேன்னு கிளம்பினா எப்படி? இன்னும் அவங்க டிபன் சாப்பிட்டு, சோப்ல ஊறுகிற துணியெல்லாம் தோச்சு அலசி, உலத்தி, வேலைக்காரி கழுவி வெச்ச பாத்திரம் எல்லாம் உள்ளே கொண்டு வந்து, சமையல் அறையை சுத்தம் பண்ணி, அப்புறம் இன்னும் வெளி வேலை - போஸ்ட் ஆபீஸ், பாங்க், எலக்ட்ரிசிடி பில், மளிகை காய்கறிக்கடை, தையற்கடை .... இன்னும் முற்பகல் கூட முடியலைங்க.
இப்படி மகா பொறுமையோட குடும்ப நிர்வாகம் பண்ணுகிற பெண்களுக்கு நமஸ்காரமே பண்ணணும்.


Friday, September 4, 2009

பிரம்மானந்தம்124.
பிரமானந்த இலக்கணம்
ஈனந் தருசுக விடயம் திரிபுடி யிடரா மெனமன மசையாமல்
சேனந் தனதுகு லாயந் தனில்விழு செயல்போ னித்திரை செறிசீவன்
தானந்தமில்பர னுடனென் றுவனொரு தனையல் லதுபிற நினையாமல்
ஆனந் தமயனுமாவன் சுகமிகு மதுதா னுயர்பிர மாநந்தம்


ஈனம் (குறைவை) தரு சுக விடயம் திரிபுடி இடராம் (துன்பமாம்) என மனம் அசையாமல், சேனம் (பருந்து) தனது குலாயந்தனில் (கூண்டில்) விழு (அடங்கும்) செயல் போல் நித்திரை செறி(செய்யும்) சீவன், தான் அந்தமில் பரனுடன் ஒன்றுவன் ஒரு தனை அல்லது பிற நினையாமல் ஆனந்த மயனுமாவன். சுகமிகும் அதுதான் உயர் பிரமாநந்தம்.

கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நித்திரையில அனுபவிக்கிற சுகம்.

ஆகாயத்தில் பறந்து அலைந்த கருடன் களைப்பாகி சுகம் அனுபவிக்க கூட்டில போய் விழுவது போல,

அநித்தியமான விஷயங்களில் மனம் நாடுது. எப்ப சுகம்ன்னு ஒண்ணு வருதோ பின்னாலேயே துக்கம்ன்னு ஒண்ணு வந்துகிட்டே இருக்கு. எப்பவுமே சுகமா இருக்கிறவங்களை பாக்கிறது அரிது. (அதே போல எப்பவுமே துக்கமா இருக்கிறவங்களை பாக்கிறதும் அரிது.) அனுபவிக்கிறவன், அனுபவித்தல், அனுபவிக்கப்படுவது என்கிற மூன்றும் (ஞாபகம் இருக்கா அதான் திரிபுடி) இருக்கிற நிலை துக்கம் தருவதால களைப்பு வருது. அதனால அந்த மூணும் நீங்க மனசை ஒடுக்கி தூங்கி ஒரு அவஸ்தையும் இல்லாம தானே தானாக இருந்து ஆனந்த மயனா இருக்கிறான். இதுவே பிரம்மானந்தம்.Thursday, September 3, 2009

விஷயானந்தம்


123
விடயாநந்த இலக்கணம்
இவ்வா றுரைசெயுஞ் சுகபே தங்களி னியல்பா மவை சொல மகனேகேள்
ஒவ்வா நனவினி லுழல்வா னிடர் கெட வுறங்குஞ் சயனம துறுநேரம்
செவ்வா மனமக முகமா மதிலொளிர் சித்தின் சுகநிழல் சேருங்காண்
அவ்வா றிவனுள மகிழ்வா மநுபவ மதுதான் விடயசு காநந்தம்

இவ்வாறு உரை செயும் சுகபேதங்களின் இயல்பாம். அவை சொல மகனே கேள். ஒவ்வா (இன்பம் பொருந்தாத) நனவினில் (ஜாக்ரத்தில்) உழல்வான் இடர் (துன்பம்) கெட (நீங்க) உறங்கும் சயனம், அது உறு நேரம் செவ்வா (செவ்விதான) மனம் அமுகமாம் (அந்தர் முகமாகும்). அதில் ஒளிர் சித்தின் சுகநிழல் சேருங்காண். அவ்வாறு இவன் உள மகிழ்வாம் அநுபவம் -அதுதான் விடய சுகாநந்தம்.
--
சாக்கிரத்தில் உழலுகிற சீவன் எதிர் பட்ட விஷயங்களில நாட்டம் போய் அவற்றை அனுபவிக்கிறான். பிறகு அவற்றில களைப்பு உண்டாகிறது. அந்த துன்பம் நீங்க தூங்கப்போகிறான்.
காலை எழுந்ததிலிருந்து எத்தனை வேலைகள்!! காலை கடன்களை முடிச்சு, ஆபீஸுக்கு பறக்க பறக்க கிளம்பி, பஸ்ஸை தப்பவிட்டு, தாமதமா போய் திட்டு வாங்கி, கீழே வேலை செய்கிறவங்க வேலையை முடிக்காம லொள்ளு பண்ண, அதுக்கு மேல் அதிகாரிகிட்ட திட்டு வாங்கி, வேலை மேல வேலை வர எல்லாத்தையும் கவனிச்சு, தாமதமா கொண்டு வந்த சாப்பாட்டை வேண்டா வெறுப்பா சாப்பிட்டு, தூக்கம் அழுத்த வேலையும் கவனிச்சு, அவஸ்தைப்பட்டு கிளம்புற நேரம். "இத கொஞ்சம் பாத்துடுப்பா!"ன்னு வர வேலையை "முடியாது"ன்னு மனசில சொல்லிக்கிட்டே "பரவாயில்லை சார்! முடிச்சுடறேன்"னு சொல்லி, செய்து முடிச்சு, வழக்கமான பஸ் எப்பவோ போயிட்டதால ரெண்டு கிலோ மீட்டர் நடந்து வேற பஸ்ஸை பிடிச்சு, ஒரு வழியா வீட்டுக்குப்போனா, மனைவி வாங்கி வர சொன்ன பொருளை மறந்து போனது நினைவுக்கு வந்து, மனைவிகிட்டே மானேஜரை திட்டி சமாதானம் சொல்லி, பிள்ளை குட்டிங்களுக்கு கதை சொல்லி, களைச்சு போய் படுக்கையில விழுந்து...."அப்பாடா! இனிமே நிம்மதியா தூங்கலாம்!"ன்னு நினைக்கும்போது மனசு உள்முகமாகும். அதில சித்தோட சுகமான நிழல் சேரும். அப்ப உள்ளம் மகிழுது. இதுவே விஷயானந்தம்.


Wednesday, September 2, 2009

கேசரி ஆனந்தம், எண்ணை ஆனந்தம் :-) -ஆனந்தம் எத்தனை வகை?121.
ஆனந்தம் எத்தனை வகை
மானஞ்சி றந்தகுரு நாதனே யாநந்த வகைகளெத் தனையென்னிலோ
ஞானத்தி கழ்ந்தபிர மாநந்தம் வாசனா நந்தம்விட யாநந்தமென்
றாநந்த மூன்றுவித மெட்டுவகை யென்பர்சில ரவ்வைந்து மிதிலடக்கம்
யானந்த வகைசொலக் கேண்மைந்த னேயெட்டு மிஃதின்ன தின்னதெனவே

மானஞ் சிறந்த குரு நாதனே ஆநந்த வகைகள் எத்தனை என்னிலோ, ஞானம் திகழ்ந்த பிரமாநந்தம், வாசனாநந்தம், விடயாநந்தம் என்று ஆநந்தம் மூன்றுவிதம். எட்டு வகை என்பர் சிலர். அவ்வைந்தும் இதில் அடக்கம். ஆனந்த வகை சொலக் கேள், மைந்தனே எட்டும் இஃது இன்னது இன்னது எனவே.
ஆநந்தம் மூன்றுவிதம். பிரமாநந்தம், வாசனாநந்தம், விடயாநந்தம். எட்டு வகைன்னு சிலர் சொல்வாங்க. அஞ்சும் இதிலேயே அடக்கம். ஆனந்த வகை என்னன்னு பாக்கலாமா?

122.
எட்டு வித ஆநந்தம்.
போகத்தில் வருசுகம் விடயசுக நித்திரைப் போதுளது பிரமசுகமாம்
மோகத்த னந்தலிற் சுகம்வாச னைச்சுகமு ழுப்பிரிய மான்மசுகமாம்
யோகத்தி லுளதுமுக் கியசுகமுதாசீன முற்றசுக நிசசுகமதாம்
ஏகத்தை நோக்கலத் துவிதசுகம் வாக்கியமெ ழுந்தசுக ஞானசுகமே

போகத்தில் வரு சுகம் விடய சுகம்.[1. விடயானந்தம்] (சுசுப்தி) நித்திரைப் போது உளது பிரம சுகமாம் [2.பிரமானந்தம்]. மோகத்து அனந்தலில் (நித்திரை கலைந்து எழும் போது உள்ள) சுகம் வாசனைச் சுகம் [3.வாசனானந்தம்]. முழுப் பிரியம் ஆன்ம சுகமாம். [4.ஆன்மானந்தம்] யோகத்தில் உளது முக்கிய சுகம் [5. முக்கியானந்தம்]. உதாசீனமுற்ற சுகம் [6. நிஜானந்தம்] நிசசுகம் அதாம். ஏகத்தை நோக்கல் அத்துவித சுகம் [7.அத்வைதானந்தம்]. வாக்கியம் எழுந்த சுகம் ஞானசுகமே. [8.வித்தியாநந்தம்]

1. விடயானந்தம்: உலக விஷயங்களை அனுபவிக்கிறதுல வருகிற சுகம் விடய சுகம்.
2.பிரமானந்தம்: ஆழ்ந்த தூக்கத்தில (சுசுப்தி) உள்ளது பிரம சுகமாம்.
3.வாசனானந்தம்: நல்ல காப்பி கிடைக்குது. குடிச்சிட்டு சந்தோஷமா இருக்கோம். அரை மணி ஆகி அந்த சுவை போயிட்டாக்கூட அந்த சந்தோஷம் போகாது. அதப்போல நல்ல தூக்கம் தூங்கி அது கலைஞ்சு முழிச்சுகிட்டு படுக்கையிலேயே கிடந்துகிட்டு ஒரு பிரச்சினையான நினைப்பும் இல்லாம சுசுப்தியை அனுபவிச்ச வாசனை இருக்கே அந்த சுகமே வாசனைச் சுகம்.
4.ஆன்மானந்தம்: எல்லாத்துலேயும் நாமே நமக்கு முழுப் பிரியம்நு நினைக்கிறது ஆன்ம சுகமாம்.
5. முக்கியானந்தம்: யோகத்தில் சமாதில உள்ளது முக்கிய சுகம்.
6. நிஜானந்தம்: மனசில ஒரு சிந்தனையும் இல்லாம உதாசீனமா இருக்க முடிஞ்சா அந்த சுகம் நிசசுகம்.
7.அத்வைதானந்தம்: பிரபஞ்சத்தை அன்னியமா பாக்காம ஏகத்தை -ஒன்றையே- பாக்கிறது அத்துவித சுகம்
8.வித்தியாநந்தம்: மகா வாக்கியத்தோட அனுபவம் -பரமான்ம ஐக்கியத்தில எழுந்த சுகம் ஞானசுகமே.


Tuesday, September 1, 2009

எது பிரியம்?


119.
கெடலான பொழுதிவன் காணிக்கு மகனான கெவுணவான் மாமுக்கியம்
விடலாத வுடம்ப ரிக்குநா ளுடலான மித்தையான் மாமுக்கியம்
திடமான நன்மைகதி வேண்டினாற் கர்த்தனாஞ் சீவவான் மாமுக்கியம்
சடமாயு முத்தியின் ஞானவான் மாவான தானேம காமுக்கியம்

கெடலான பொழுது (மரண காலத்தில்) இவன் காணிக்கு (ஆதீனத்துக்கு வேண்டிய) மகனான கெவுண [secondary] ஆன்மா (அந்த சமயம்) முக்கியம். விடலாத உடலம் பரிக்கும் (பேணும்) நாள் உடலான மித்தை ஆன்மா முக்கியம். திடமான நன்மை கதி வேண்டினால் கர்த்தனாம் சீவ ஆன்மா முக்கியம். சடம் மாயும் முத்தியின் ஞான ஆன்மாவான தானே மகா முக்கியம்.
--
மரண காலத்தில் தன் மகன் அருகில் இருக்க மனிதன் விரும்புகிறான். அப்போது அது முக்கியமாக தோன்றுகிறது. ஆனால் அவன் வாழும் காலத்தில் தன் உடலை மட்டுமே அதிகம் விரும்புகிறான், மகனை அல்ல. ஆக ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பொருள் விரும்பப்படுகிறது, பின் அதுவே மற்றொன்று வர கைவிடப்படுகிறது. திடமான நன்மையை கருதி யார் மோட்சத்தின் மீது பற்று கொள்கிறார்களோ அவர் தன் உடலையும் விட்டு தன் சுய சொரூபமான ஆன்மா மீது பற்று கொள்கிறார்.

120.
புலியுமநு கூலமெனி லிட்டமாம் பகைசெயிற் புதல்வனெனினும் வெறுப்பாம்
உலகிலிரு வகையுமல் லாதபுல் லாதியிலு தாசீன மாமாதலான்
மலினமறு சின்மயன் பலவகையு மிப்படி மகிழ்ச்சியில் விருப்பமிகழான்
அலகிலா னந்தவடி வாகுமுன் சொரூபத்தை யாராய்ந்துபார் மகனே

புலியும் அநுகூலம் எனில் இட்டமாம். (இஷ்டமாம்) பகை செயின் புதல்வன் எனினும் வெறுப்பாம். உலகில் இரு வகையும் (பிரியம் துவேஷம்) அல்லாத புல் ஆதியில் (முதலானவற்றில்) உதாசீனமாம். ஆதலான் மலினமறு (அஞ்ஞானம் முதலான குற்றமற்ற) சின்மயன் பலவகையும் இப்படி மகிழ்ச்சியில் விருப்பம் இகழான். அலகில் [வாக், மனதுக்கு எட்டாத] ஆனந்த வடி வாகும் உன் சொரூபத்தை ஆராய்ந்து பார் மகனே.
--
ஒருவர் புலியை பழக்கி பிழைப்பு நடத்துகிறார். அவருக்கு அஞ்சத்தக்க புலி கூட விருப்பமாகிறது.
தன் மகன் தனக்கு சாதாரணமா ரொம்ப ப்ரியமானவன். ஆனா பல சமயம் பாக்கிறோமே! குடும்பத்தில சண்டை வந்து அடி தடியாக்கூட போய், அப்புறம் பேச்சு வார்த்தை இல்லாம எல்லாம் இருந்து, "என்பாகத்தை பிரிச்சு கொடு! நான் போறேன்", "எல்லாம் சுய ஆர்ஜிதம்! உனக்கு ஏது பங்கு?” இப்படி எல்லாம் வளந்து கிடக்கிற சமயம் பிள்ளையானாலும் வெறுப்புதான். மகன் பகையான காரியம் செய்வானே ஆனால் அவன் வெறுக்கப்படுகிறான்.

சாதாரணமா தோட்டத்தில புதர் இருக்கும். அத கண்டுக்காம விடுவோம். அத வெட்டிப்போட்டு அடுப்பெரிச்சு வென்னீர் கிடைச்சா சந்தோஷம் வருது. அதுவே பாம்பு பதுங்கி இருந்து அப்பப்ப நம்ம பயமுறுத்தினா புதரெல்லாம் நமக்கு வெறுக்கற விஷயமாச்சு.
உதாசீனப்படுத்தும் புல், பூண்டு ஆகியவை கூட நெருப்பு உண்டாக்க என்று பயன்படும்போது அவை பிரியமாகும். அவையே பாதையில் நடந்து செல்லும் போது இடையூறு செய்தால் அவற்றின் மீது வெறுப்பு வரும்.
ஆனால் பரிசுத்த சின்மய சொரூபமான ஆன்மா தன் ஆனந்தத்தில் மாறுதல் இல்லாத விருப்பம் உடையவனாக இருக்கிறான்.
ஆகவே நீங்காத ஆனந்த சொரூபியான உன் ஆன்மாவை ஆராய்ந்து பார்த்து அறிவாயாக.