Pages

Showing posts with label பாரத ஸாவித்ரீ. Show all posts
Showing posts with label பாரத ஸாவித்ரீ. Show all posts

Wednesday, July 7, 2010

தர்மம் உற்பத்தி ஸ்தானம் ன்னா புரியலை. ....




// இப்படியாக தர்மமானது அர்த்தம் காமம் ஆகியவற்றுக்கு உற்பத்தி ஸ்தானம் ஆகும்.//

அதான் புரியலை. தர்மத்தைக் கடைப்பிடிக்கிறதுன்னா நாம காமத்தை விட்டு விலகித் தானே ஆகணும்? மனதில் ஆசைகளே இருக்கக் கூடாது இல்லையா? எதிர்பார்ப்பும், பற்றும், அனைத்திலும் ஆசைகளும், சம்பாதிக்கிறதில் ஆசை, அநுபவிப்பதில் ஆசை, கணவன், மனைவியின் காதல், குழந்தைகளிடம் பாசம், னு இருப்பது தானே காமம்?? அதைத் தானே விலக்கணும்? தர்மம் அதுக்கு உற்பத்தின்னா இன்னும் எனக்குச் சரியாப் புரியலை.

இப்படி ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. இதே கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால் பதிவாகவே இடுகிறேன்.

நாம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்திரங்கள் ப்ராக்டிகலானவை. மனிதன் வாழ நான்கு புருஷார்த்தங்களை அடையச்சொல்லுகிறது. அவையே தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பவை. அறம் பொருள் இன்பம் வீடு என்றும் சொல்லலாம்.

தர்மம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்னவென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது. அர்த்தம் சம்பந்தப்பட்டது பொருள் ஈட்டுவதில். காமம் இயற்கையான உண்டாகும் உணர்வுகள். மோக்ஷம் இவ்வுலக வாழ்வையே நினைத்துக்கொண்டு இராமல் இறைவனைப்பற்றியும் இந்த பிறப்பு இறப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் விசாரிப்பது.

சாதாரணமாக மக்கள் வாழும் வாழ்க்கையில் கட்டுப்படுத்த வேண்டியது அர்த்தமும் காமமும். அவற்றின் ப்ரவாகத்தை தர்மமும் மோக்ஷமும் நதியின் கரைகள் போல இருந்து கட்டுப்படுத்தி திசை செலுத்துகின்றன. ஆசைகள் அற்று இருப்பது சாதாரணமான மனிதனின் இயல்பு அல்ல. ஆனால் ஆசையை ஒரு கட்டுக்குள் வைக்க தர்மம் உதவும். ஒரு பெண்ணை அடைய இச்சை உண்டாவது இயற்கை. ஆனால் அதை ஒரு திருமண பந்தம் என்ற கட்டுக்குள் செய் என்கிறது தர்மம். பொருள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதை நியாயமாக செய் என்கிறது தர்மம்.

தர்மம் எல்லோரையும் சன்னியாச வாழ்கை வாழ சொல்லவே இல்லை. மக்களை நான்கு விதமாக பிரித்து மாணவன், இல்லறத்தான், வானப்ரஸ்தன், சன்னியாசி என்று அவரவருக்கு கடமை விதித்து இருக்கிறது. இல்லறத்தானுக்கு காலை எழுந்தது முதல் குளியலில் ஆரம்பித்து நித்ய கர்மாக்களை சொல்லி பூஜை முடித்த பின் சம்பாதிக்கப்போ என்று தெளிவாகவே சொல்கிறது. ஏன்? அவனுக்கு அதற்கு அவசியம் இருக்கிறது. அவனுக்கு மட்டுமில்லாமல் பிக்ஷை கேட்டு வரும் மாணவன், சன்யாசி இவர்களுக்கும் உணவிட வேண்டும். அதிதிகளுக்கு உணவிட வேண்டும். சம்பாதித்தால்தானே இதெல்லாம் முடியும்?

உலகம் தொடர்ந்து செயல்பட ப்ரஜைகள் உற்பத்தி ஆக வேண்டுமே? அதனால் காமம் அவசியமாகிறது. ஸ்ரீமத் பாகவதத்தை பார்த்தால் முதலில் படைக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஞானிகளாகி ப்ரஜைகளை உற்பத்தி செய்யாமல் போய் விடுகிறார்கள். பிரஜையை உற்பத்தி செய்வது க்ருஹஸ்தனின் தர்மமாக சொல்லப்படுகிறது. தர்மப்படி யாகங்கள் செய்யப்படலாம். அதிலும் இது வேண்டும் அது வேண்டும் என்ற காமமும் இருக்கிறது. ஸ்வர்க்கம் வேண்டுமென்ற காமத்தால் யாகங்கள் அனுஷ்டிக்கப்படும் அதே நேரம் அதனால் உலகத்துக்கும் நன்மை ஏற்படும். மேலும் மேலும் பொருள் சேர்த்தாலும் இவ்வளவு பாகம் தர்மத்துக்கு எனும் போது அது நன்மையே செய்யும்.

இப்படியாக தர்மம் அர்த்தத்தையும் காமத்தையும் தூண்டுவதுடன், உற்பத்தி ஸ்தானமாக இருப்பதுடன் அவற்றை கட்டுக்குள் வைத்து இருக்கவும் உதவுகிறது.


Tuesday, July 6, 2010

பாரத ஸாவித்ரீ-2



நம் பெரியோர்கள் எந்த விஷயங்களை முக்கிய நோக்கங்களாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கருதினார்களோ, அவற்றை ஒருவன் காலையில் எழுந்ததும் ஸ்மரிப்பது அவன் கடமை என நூல்களில் சொல்லுவது வழக்கம். அந்த ஸ்லோகங்களை பிரதி தினம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றபடியால் இவற்றில் அடங்கியுள்ள கருத்துக்கள் நம் தேசத்தில் உள்ள எல்லா மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படைத் தேவை என்பதில் ஐயமில்லை. இந்த நான்கு ஸ்லோகங்களின் கருத்துக்களைத்தான் வியாஸ பகவான் உலகத்தாருக்குச் செய்யும் முக்கிய உபதேசமாகத் தீர்மானித்திருக்கிறார். அவையாவன:

1. மாதாபித்ரு ஸஹஸ்ராணி புத்ர தா3ர ஸ2தாநி ச |
ஸம்ஸாரேஷ்வநு பூ4தாநி யாந்தி யாஸ்யந்தி சாபரே ||

இவ்வுலகில் ஒரு ஜீவன் எண்ணிறந்த பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கிற படியால் இந்த அனாதியான ஸம்ஸார வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான தாய் தந்தையர்களையும் பிள்ளை பெண்டிர்களையும் பார்த்து பழகி இருக்கிறான். இனி வரும் பல பிறப்புக்களிலும் இவர்களிடம் பழகப்போகிறான். ஆதலால் உலகம் அநித்யம்.

2. ஹர்ஷ ஸ்தா2ன ஸஹஸ்ராணி ப4ய ஸ்தா2ந ஸ2தாநிச |
தி3வஸே தி3வஸே மூட4மா விஸ2ந்தி ந பண்டிதம் ||

இந்த ஜீவனுக்கு ஸந்தோஷத்திற்கும் பயத்திற்கும் பல இடங்களில் பல காரணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் ஆட்கொள்ளுமே தவிர விவேகமுள்ளவனை அணுகா.

3.ஊர்த்வ பாஹுர் விரௌம்யேஷ ந ச க: சிச் ச்2ருணோதி மே |
த4ர்மாத3ர்த2 : ச காம: ஸ கிமர்த்2ம் ந ஸேவ்யதே ||

இரு கைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு நான் இதைக்கத்துகிறேன். ஆனால் ஒருவனும் கேட்கிறான் இல்லை. அதாவது: - தர்மத்தில் இருந்துதான் அர்த்தமும் காமமும் உண்டாகின்றன. அப்படி இருக்க ஏன் தர்மம் அனுஷ்டிக்கப்படவில்லை?

4. ந ஜாது காமாந் ந ப4யாந் ந லோபா4த் த4ர்மம் த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ: |
நித்யோ த4ர்மஸ் ஸுக2 து3: கே2த்வ நித்யே ஜீவோ நித்யோ ஹேதுரஸ்யத்வ நித்ய: ||

ஒரு பொழுதும் காமத்தினாலாவது பயத்தினாலாவது, உலோபத்தினாலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தர்மத்தை விடக்கூடாது. தர்மம் எப்போதும் நிலையாக உள்ளது. சுகமும் துக்கமும் நிலையில்லாதவை. ஜீவன் நித்தியமாக உள்ளவன். ஆனால் உடல் நித்தியமில்லை.
இக்கருத்துக்களை பின்பற்றி மனிதன் தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வர வேண்டுமென்பது நம் பாரத தர்மத்தின் அடிப்படியான நோக்கமாகும்.

Sunday, July 4, 2010

பாரத ஸாவித்ரீ-1


பாரத ஸாவித்ரீ

இதென்ன ஸாவித்ரீ, புதிதாக இருக்கிறதே என்று பலர் கேட்கலாம். பிரசித்தி பெற்ற பதிவிரதா சிரோமணிக்கு ஸாவித்ரீ என்று பெயர் உண்டு. காயத்ரீ மந்திரத்துக்கும் அப்பெயர் உண்டு. [பிரணவமும் வ்யாஹ்ருதிகளும் நீங்கிய காயத்ரீ] ஆனால் இதென்ன பாரத ஸாவித்ரீ, புதிதாக இருக்கிறதே என்று ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட நினைக்கலாம். பண்டை இதிகாஸமான மஹாபாரதத்தில் சுவர்காரோஹண பர்வத்தின் இறுதியில் இந்த பாரத ஸாவித்ரீ என்ற சொல் காணப்படுகிறது. அப்பர்வத்தில் 64 வது ஸ்லோகத்தில் இந்த “பாரத ஸாவித்ரீ” என்பதை காலையில் எழுந்து எவன் படிக்கிறானோ அவன் பாரத படனத்தின் பலனை அடைந்து பர ப்ருஹ்மத்தையும் அடைகிறான் என்று புகழ்ந்து சொல்லப்பட்டு இருக்கிறது.

சாதாரணமாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தில் உள்ள ஸவித்ரு தேவதையை உத்தேசித்த முக்கியமான காயத்ரீ மஹாமந்திரத்தைக் குறிக்கிறது. அந்த மந்திரமில்லாமல் ஸந்த்யோபாஸனமே கிடையாதாகையால் லக்ஷணையாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தையே குறிக்கலாம். காலையில் எழுந்திருந்து இந்த ஸ்லோகங்களை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறபடியால் இது ஸந்த்யோபாஸனத்திற்கு சமமாக ஆகின்றது. இந்த ஸ்லோகங்கள் பாரதத்தில் உள்ளபடியால் இதற்கு "பாரத ஸாவித்ரீ" என்று பொருத்தமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என நாம் கருதலாம்.

பாரதத்திற்கு உரையாசிரியரான நீலகண்டரும் "காலை சந்த்யையில் பாரதம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரதி தினம் படிப்பதற்கு தகுதியானவையும் பாரத ஸார ஸங்கிரமாகவும் உள்ள இந்த நான்கு ஸ்லோகங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார். அந்த ஸ்லோகங்களை இனி வரிசையாக பார்க்கலாம்.