Pages

Thursday, July 31, 2008

உபநயனம் - 2


காயத்ரி ஜபத்தால் மனது ஒருமை படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது. ஞான ஒளியை தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன.

காமம் உள்புகுந்தபின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதை செய்து கொள்ள சொல்கிறார்கள். எண்ணை பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதை காமம் அதிகம் பாதிக்காது.

பத்து வயதில் க்ஷத்திரியனும் 11 இல் வைச்யனும் உபநயனம் செய்ய காலம். மற்ற மதத்தவர் கூட இதே வயதில் இது போன்ற கர்மா செய்கின்றனர். பார்சிகள் குழந்தையின் 6 வயது 3 மாதங்களில் நவ்ஜோத் என்று செய்கிறார்கள்.
மனிதனுக்கு இதற்கு முன்னால் செய்யப்பட்ட கர்மாக்கள் அனைத்துமே இதற்கு தகுதியை உண்டாக்கத்தான்.

உடல் சுத்திக்காக முதலில் வபனம் (முடி திருத்தம்); நீண்ட ஆயுளுக்காவும், தன் பிள்ளைபோல மாணவனை காப்பாற்றவும் அக்னியை வேண்டுகிறார்கள். முன் சொன்னபடி கருங்கல் மீது ஏறி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வாதம் செய்த பின் ஆடை, மேகலை, மான்தோல், தண்டம் முதலியன பல தேவதைகளின் அருளை வேண்டிக்கொண்டு மாணவனுக்கு தரப்படும்.

வாமன அவதாரத்தின் போது அவருக்கு நடந்த உபநயனம் விரிவாக பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தம் 18 வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. சூரியன் அவருக்கு நேரில் காயத்திரியை உபதேசம் செய்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமி தேவதையும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இவை பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தை தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிக்ஷை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையும் அளித்ததாக சொல்லி இருக்கிறது.

இந்த தேவதைகளின் அருளினால் வாமனர் பிரகாசித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹோமங்கள் செய்வதில் பயனாகும் மந்திரங்கள் மாணவனின் நீண்ட ஆயுள், செல்வம், ஐச்வர்யம், மேதாவிலாசம், புகழ் இவற்றை வேண்டி அக்னியை பிரார்த்திப்பதாக உள்ளது. பின் ஸமித்துக்களை மாணவன் ஹோமம் செய்கிறான். இந்த ஸமிதாதானம் ப்ரம்மசாரியால் தினமும் செய்யப்பட வேண்டியது.

முப்புரி நூலை எப்போதும் தரித்து இருக்க வேண்டும். அந்தணர் அல்லாத பலர் இதை சில விசேஷங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டு (திருமணம், அந்திம காரியம்) மற்ற நேரங்களில் அணிவது இல்லாமல் போய் விட்டது. பூணூல் மூன்று இழைகள் கொண்டதாக செய்து அதை கட்டைவிரல் அல்லாத மற்ற 4 விரல்களில் 96 முறை சுற்றி துணித்து; இந்த நூலை நனைத்து மீண்டும் மூன்றாக முறுக்கி (இப்போது 9 இழை ஆகிவிட்டது) மூன்றாக சுற்றி முடி போட வேண்டும். இது பிரம்ம கிரந்தி. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளனர். பூணூலின் நீளம் தொப்புள் வரை இருக்க வேண்டும்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு கார்யங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின் பற்றுவதில்லை.


Wednesday, July 30, 2008

உபநயனம் 1உபநயனம்:

வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்கிர சம்ஸ்காரம் இது।

உபநயனம் ன்னா கிட்டே கொண்டு போகிறது ன்னு பொருள்। எந்த கர்மாவால வேத வித்தைக்காக மாணவன் குருகிட்டே அழைத்துக்கொள்ள படுவானோ அதுக்கு உபநயனம் ன்னு பெயர். அந்தண க்ஷத்திரிய வைச்யர்களுக்கு தாயால முதல் பிறப்பும் உபநயனத்தால இரண்டாவது பிறப்பும் ஏற்படுகின்றன. இதனால இவர்களுக்கு த்விஜர் (இரு பிறப்பாளர்) என்று பெயர்.

இந்த கர்மா ஆண் பிள்ளைகளுக்குத்தான். பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க.

உண்மையில இதை செய்து வைக்க வேண்டியவர் வேதம் சொல்லித்தரப்போற குரு.

இப்ப இது பெரும்பாலும் வெத்து சடங்கா போயிட்டதால பையனோட அப்பாவே செய்கிறார். செய்து வைக்க அப்பா இல்லைனா அப்பப்பா; அவர் இல்லைனா செய்து வைக்க தகுதி உள்ளவங்க இந்த வரிசைல : அண்ணா, தாயாதி, அதே கோத்திரத்தை சேர்ந்தவங்க இப்படின்னு பட்டியலே இருக்கு. சன்யாசிகள் செய்து வைக்கக்கூடாது. மனைவி இல்லாதவர் செய்து வைக்கிறதும் அதமம்.

கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவர் செய்து வைக்கிறதும் உபநயனத்தால கொஞ்சம் கூட ஞானத்தை நாடாததும் இருட்டிலிருந்து இருட்டுக்கு போகிறது போலவாம். ஏழு வயதில் அந்தண சிறுவனுக்கும் அவன் நல்ல புத்தி கூர்மை இருந்தா ஐந்து வயசிலேயும் உபநயனம் செய்விக்கலாம். சக்தியை அனுசரித்து பதினாறு வயது வரை தள்ளிப்போடலாம்.

மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கத்துக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தராங்க. வாழ்கைக்கு தேவையான ஞானத்தை தரவர் ஆச்சாரியர்தான். அதனால அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கறதோ அபசாரம் செய்கிறதோ கூடாது.

உபநயன காலத்தில் குருவானவர் மாணவனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச்சொல்லி ஆசீர்வதிக்கிறார். “ இந்த கல்லைப்போல வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சமும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப்போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்வாயாக. அறியாமையில் இருந்து விழித்து எழு. உறங்காதே.!"

உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக சொல்கிறங்க. அதனாலேயே இதுக்கு பிரம்மோபதேசம் ன்னு பேர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் சொல்றார்: இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது.

Tuesday, July 29, 2008

குடுமி வைத்தல் -சௌளம்சௌளம்

இது குடுமி வைப்பது. ஆண் குழந்தைகளுக்கு மட்டுமேன்னு சொல்ல வேண்டியது இல்லை.
பிறந்த வருஷத்திலேயோ அல்லது மூன்றாவது வருஷமோ செய்யலாம்.

லௌகிக அக்னியில் ஹோமங்கள்.
அக்னிக்கு மேற்கே கிழக்கு பார்த்து குமாரனை உட்கார வைத்து, மந்திரம் சொல்லி தலையை வென்னீர் கலந்த நீரால் நனைத்து,

மூன்று மூன்று தர்பங்களை இடையில் வைத்து, நான்கு மந்திரங்களால், ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையிலும் முடியை வெட்ட  வேண்டும். வலது புறம் தாயாரோ அல்லது ஒரு பிரம்ம சாரியோ நின்று கொண்டு வெட்டியதை வாங்கிக்கொள்ள வேண்டும். அடுத்து காளையின் சாணியில் அவற்றையும் நெல்லையும் சேர்த்து அத்தி மரத்தின் அடியிலோ அல்லது நாணல் (பாத்து இருக்கீங்களாப்பா? ;-)) புதரின் அடியிலோ வைக்கணும். இதனால் முன்னேயே வாங்கிக்கொள்ளும் போதே ஒரு மடக்கில் நெல்லும் சாணமும் சேர்த்து அதிலேயே வாங்கிக்கொள்வதுண்டு.

குடுமி வைத்துக்கொள்வது இப்போது மிகவே அரிதாகி வருகிறது. நம் ஆத்ம சக்தியை விரயமாகாமல் இது கட்டிப்போடுகிறது. யாருக்கு கேசம் பிரிந்து இருக்கிறதோ அவர்களை தீய சக்திகள் எளிதில் அண்டுகின்றன. ஆண்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். பெண்களும் இப்போதெல்லாம் தலையை விரித்துப்போட்டுக்கொள்வது "நாகரீகம்" ஆகிவிட்டது. கேசத்தின் நுனி வெளியே தெரிவதாக இருந்தால் அது மேல் நோக்கி இருக்க வேண்டும். மடித்து உள்ளே போட்டுவிட்டால் (கொண்டை போல) பிரச்சினை இல்லை. இன்னும் கிராமத்து பெண்கள் தலை வாரி நுனியை மேல் நோக்கி மடித்து கட்டுவதை பார்த்து இருக்கிறேன். வெளியே தெரியாமல் இருக்கத்தான் ரிப்பன் வந்தது. இப்போது வழக்கொழிந்து போய்விட்டது. பிரச்சினைகளும் அதிகமாகி விட்டதல்லவா?

குடுமி வைத்தபின் அதை நீக்கிக்கொள்வது ஆத்ம ஹத்தியாக கருதப்படுகிறது (தற்கொலை). பாரத போரின் முடிவில் அச்வத்தாமாவை என்ன செய்வது, குரு புத்திரனாயிற்றே என்று யோசித்து அவன் சிகையை மட்டும் வெட்டிவிட்டதாக மஹாபாரதத்தில் வருகிறது அல்லவா?

யாருக்கு எப்படி இருக்கிறதோ எனக்கு ஒவ்வொரு பக்ஷமும் வபனம் செய்து கொள்ளாவிட்டால் உடம்பு உபாதையால் கஷ்டப்படுகிறேன். இது அனுபவம்.

Monday, July 28, 2008

புராணங்கள்


இது ஒரு அவசர கால பதிவு.
திருப்பி வாய்க்காலுக்கு தோண்டறாங்க.
அதனால எதுக்கும் இருக்கட்டும்ன்னு இப்ப இதை பதியறேன்.

சில நாட்கள் முன் ஒரு பதிவில் ஒரு கேள்வியை படிக்க நேரிட்டது. புராணங்கள் பற்றி சில கேள்விகள் எழுப்பபட்டு இருந்தது. கேட்கப்பட்டவர் அப்புறமாக பதில் சொல்லுவார், அதற்கு திறமை இருக்கு என்றாலும் -. இதே போல நான் பங்கு கொள்கிற குழுவிலும் கேள்விகள் விமர்சனங்கள் இருந்தன. அதனால் இதை எழுத ஒரு உந்துதல் இருந்தது.

மனிதன் தன் வாழ்கையை எப்படி அமைத்துக்கொண்டால் சுகமாக இருக்கலாம் என்பது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்கள் எல்லாருக்கும் போய் சேர வேண்டி புராணங்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இவை மொத்தம் 18 அனேகமாக எல்லாமே கதை ரூபத்தில் இருக்கும்.

நாத்திகர் பலருக்கும் கை கொடுப்பது இவைதான். "இங்கே அப்படி, அங்கே இப்படி இருக்கு. கீழ் தரமா இருக்கு இல்லையா?" என்று இவர்கள் கேட்கும் பல கேள்விகள் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள பலருக்கும் தர்ம சங்கடம் விளைவிக்கின்றன. ஈடுபாடு அதிகம் இல்லாதவரும் "அட! சரிதானே!" என்று நினைக்கறது இயல்புதானே. ஆத்திகர் புராணங்களை நம்பறாங்களோ இல்லையோ நாத்திகர் நம்பறாங்க. அப்பதானே அதுல ஓட்டை, உடசல், ஆபாசம்ன்னு கண்டுபிடிக்கலாம்? போகட்டும்.

சரி. எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு என்ன பதில்?

தேவ லோகம் என்கிற பரிமாணத்தில இருக்கிறது என்ன என்று நம்மால புரிந்து கொள்ள முடியாது. அதற்கான உபகரணங்கள் நம்மகிட்ட இல்லை. பிறந்ததிலிருந்து பார்வை இல்லாதவர் எப்படி ஒளி என்கிற ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவே முடியாதோ, அது போல அவர்களுக்கு இருக்கிற தன்மையையோ இயல்பையோ விதிகளையோ நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆக நம் மனித உலக விதிகளை அவங்களுக்கு பொருத்தி பார்க்க இயலாது. அது சரியில்லை.

இருந்தாலும் நாம் ஏதோ ஒரு விதத்திலே இவங்களை புரிந்து கொள்ள அவசியம் இருக்கிறது. ஏன் என்றால் இவர்களால நமக்கு நல்லது நடக்க முடியும். தீமையும் நடக்க முடியும். அதனால நம் குறை பட்ட அறிவால கொஞ்சமாவது புரிந்து கொள்ளணும்.

உதாரணமாக அக்னியின் ரூபத்தை வேதம் சொல்கிறது - இரண்டு தலை நான்கு கொம்பு மூன்று கால்கள் ஏழு கைகள் - நம்மால இதையல்லாம் எப்படி பகுத்தறிவுக்கு பொருத்தி பார்க்க முடியும்? "இந்த மாதிரி எல்லாம் உடம்பு இருக்குமா?" என்றால் அக்னிக்கு மனிதனுக்கு இருப்பது போன்ற உடம்பு இல்லையே? கை போல செயல்படுவது கை என்று சொல்கிறாங்க. இதெல்லாத்தையும் ஒரு உவமையாதான் சொல்ல முடியும். ஒரு பிறப்பு தரும் இடத்தை யோனி என்பார்கள். மனித பிறவிக்கு இருக்கிறது போல இல்லை இது.

இரண்டு இயற்கை சக்திகள் இணைந்து மூன்றாவது சக்தி தோன்றுகிறது. அப்போதும் அந்த இரண்டு சக்திகளும் இருக்கும். அவை தனித்தும் இயங்கும். இன்னொன்றுடன் சேர்ந்தும் இயங்கும். மூன்றாவது சக்தியை தோற்றுவித்து அதுவும் இயங்கும்.

இதையெல்லாம் எப்படி புரிய வைக்கிறது. அப்படியே சொன்னால் குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியுமா? சுலபமா புரிய வைக்க வழி நம்ம வாழ்கையில நடக்கிறதா பாவிச்சு சொல்வதுதான். ஒரு அப்பாவும் அம்மாவும் குழந்தை பெற்றுக்கிறதை விட இயல்பா என்ன இருக்க முடியும்? இப்படி கதை சொல்கிறதுல சில சிக்கல்கள் வரும்போது சிலர் வாய்க்கு அவல் கிடைச்சிடும்.

ஒவ்வொரு புராண கதையும் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது. புத்திசாலிகள் சாரத்தை எடுத்துகிட்டு சக்கையை விட்டுவிடனும். சொல்ல வந்த விஷயத்தை எடுத்துகிட்டு மேலோட்டமா தெரிகிற - நம் மனசால மலினமா ஆக்கப்பட்டதை உதாசீனம் செய்யணும். புராணங்கள் புத்திசாலிகள் இல்லாதவங்களுக்குன்னுதானே சொன்னீங்கன்னு கேட்டா, ஆமாம். ஆனா அவங்க பல விஷயங்களை இயல்பா எடுத்துகிட்டு போயிடுவாங்க. இடக்கு மடக்கா கேள்விகள் கேட்கிறது "அறிவு ஜீவிகள்" தான். எல்லாம் பார்வையிலே இருக்கிறது. விஷ்ணு என்கிற சக்தி சிவன் எங்கிற சக்தியோட சேர்ந்து ஐயப்பன்னு ஒரு சக்தி உருவாகிறது, அவங்களுக்கு ஒன்றும் ஆச்சரியமோ அருவருப்போ தராது. குழம்புகிறது தான்தான் புத்திசாலின்னு நினைக்கிறவங்கதான்.

இந்த நாத்திகவாதிகள்தான் இப்படின்னா சில ஆத்திகர்களும் சரியான புரிதல் இல்லாம கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்துவது உண்டு. இப்ப அது குறைஞ்சுகிட்டு வருகிறது.

இப்ப சிவ புராணத்தை எடுத்துகிட்டா சிவன்தான் முழுமுதற் கடவுள். அவர் நெருப்பு தூணாக நிற்க பிரம்மாவும் விஷ்ணுவும் முடியையும் அடியையும் தேடுகிறாங்க.
இதே விஷ்ணு புராணத்தை எடுத்துகிட்டா விஷ்ணுதான் முழுமுதற் கடவுள். சிவன் ஏதாவது வரத்தை கொடுத்திட்டு அவருக்கே அது பிரச்சினை ஆகி விஷ்ணுதான் காப்பாத்துவார்.
அது போலதான் விநாயக புராணத்திலேயும். பிள்ளையார்தான் எல்லாத்துலேயும் முதல்.

இப்படி எந்த புராணத்தை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு தெய்வத்தை கொண்டாடி மத்ததை கொஞ்சம் இறக்கும். அந்த அந்த கடவுள் மேல ஒரு மதிப்பு சிரத்தை வரணும்னு இப்படி கொஞ்சம் தூக்கி மற்றதை குறைத்து சொல்கிறாங்க. எல்லாத்தையும் எழுதினது வியாஸர்தானே.

அதனால "என் கடவுள்தான் உயர்ந்தவர், உன் கடவுள் மட்டம்" என்கிற பேச்சிலே பொருள் இல்லை. யார் யாருக்கு எப்படி இறைவனை பார்க்க ஈடுபாடு இருக்கிறதோ அப்படித்தான் இறைவனும் காட்சி தருவார்.

எல்லாம் சரி புராண கதைகள் உண்மையா பொய்யா என்றால் பதில் சொல்வது கடினமே. கதைகள் உண்மை நிகழ்ச்சிகளாகவும் வெறும் கதையாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதை நம்புவதில் லாபம் இருக்கிறது. நம்பிக்கை ஒரு ஈடுபாட்டை தருகிறது. அதனால் சொல்லப்பட்டது கடைபிடிக்கப்படும் சாத்தியக்கூறு அதிகமாகிறது. அது நல்லது. அதற்காகதானே கதையே. அதனால நாம் புராணங்களை படிக்கும் போது சக்கையை விட்டு சாரத்தை பார்க்க ஆரம்பிக்கலாம்.


Friday, July 25, 2008

நாம கரணம்


நாம கரணம்:

குழந்தைக்கு பெயரிடுதல். எளிய கர்மா. இரட்டைபடை எழுத்துக்கள் இருக்கணும் என்கிறாங்க பெரியவங்க. (க்,ச் மாதிரி புள்ளி எழுத்து கணக்கில்லே) பெண் குழந்தைகளுக்கு அல்லது யில் முடிவதாக வைப்பாங்க.

வைக்கிற பேரு கேட்க இனிமையா இருக்கணும். மாடர்ன்னா வைக்கிறேன்னு பலரும் அர்த்தமே இல்லாத சொற்களை பேராக்கறங்க. நல்ல அர்த்தம் இருக்கணும். தாத்தா பாட்டி பேர்களும் இறைவன் பேர்களும் எப்பவுமே நல்லது. எந்த நக்ஷத்திரத்துக்கு எந்த எழுத்திலே பேர் ஆரம்பிக்கணும்ன்னு கூட நியதிகள் இருக்கு. பஞ்சாங்கத்திலே போட்டு இருக்கும்.
பலருக்கும் அந்த காலத்திலே இரண்டு மூணு பேர் வைப்பாங்க. அபிசியலா ஒண்ணு. கூப்பிடற பேர் இன்னொன்னு. வைக்காத பேரான அம்பின்னும் கூப்பிடறதுண்டு. வழக்கமா மூத்த பிள்ளையை இப்படி "அம்பி"ன்னு கூப்பிடுவாங்க.! :-))
கடவுள் பேரை வைக்கிறதாலே ஒரு லாபம். அடிக்கடி கடவுளை
கூப்பிட்டுகிட்டே இருக்கலாம். அஜாமிளன் கதை தெரியுமில்லையா?

வழக்கமா 11 ஆம் நாள் பெயரிடறாங்க. பிரசவம் முடிந்து சுத்தி செய்து அப்புறம் தகப்பன் குழந்தை காதிலே "உன் பெயர் ........” அப்படின்னு சொல்லுவார். மத்த பெரியங்களும் அதேபோல சொல்லி ஆசீர்வாதம் செய்வாங்க.


Thursday, July 24, 2008

ஜாத கர்மாஜாத கர்மா:

முன் காலத்திலே குழந்தை பிறப்பதாக அறியப்படும் நாளுக்கு ஒரு மாசம் முன்னாலேயே எங்கே குழந்தை பிறப்பு இருக்கலாம்ன்னு தீர்மானம் செய்து முடிவு பண்ணுவாங்க. அனேகமா அது நிர்ருதி திசைல இருக்கும் (தென் மேற்கு).பிரவசத்துக்கு சில நாட்கள் முன்னே பெரியவங்களை, தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு பாட்டு மணிசத்தத்தோட நுழைவாங்க. என்ன லேகியங்கள், மருந்துகள், உணவு சாப்பிடிடலாங்கிறதுல நிறைய கட்டு பாடுகள். அறை புதுசா பிறக்கிற குழந்தைக்கு இதமா கொஞ்சம் இருட்டாவே இருக்கும்.

குழந்தை பிறக்க கஷ்டமானாலோ இல்லை வலி சரியா எடுக்கலைனாலோ சில வேத மந்திரங்கள் ஓதப்படும்.

குழந்தை பிறந்த சேதி கேட்ட உடன் தகப்பன் அப்படியே ஓடிப்போய் ஒரு குளத்திலேயோ நதியிலேயோ குதிக்கனும். (இல்லைங்க, தற்கொலை முயற்சி இல்லே!) அப்ப தண்ணி பனை மர உயரத்துக்கு எழும்பனும். (ஒபெலிஸ்க் குதிச்சாதான் இது சாத்தியம் என்கிறார் நண்பர்) இதனால பித்ருக்கள் சந்தோஷமாகிறாங்க.

சூதிக அக்னின்னு ஒரு அக்னி பிரசவ ரூமிலே மூட்டி கடுகு, நெல் தானியங்கள் ஹோமம் செய்வாங்க. இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; நிறைய பலன் தரக்கூடியது.

மந்திரம் சொல்லி தேனை குழந்தை வாயிலே ஒரு தங்க காசால் ஒரு சொட்டு விடுவாங்க. இதனால் குழந்தை புத்திசாலியா இருக்கும். குழந்தை காதிலே நீண்ட ஆயுசை வேண்டி தகப்பனால் சில மந்திரங்கள் ஓதப்படும்.
இதுக்கு பிறகுதான் தொப்புள் கொடியை துணிப்பாங்க.

இப்ப இதெல்லாம் சரியா செய்கிறது குறைஞ்சு போச்சு. இந்த கர்மாவை பெண்ணுக்கு கல்யாணம் போதும் பையனுக்கு உபநயனம் போதும் செய்கிறாங்க. என்ன பிரயோசனம்? கர்மாக்களை அததற்கு உரிய காலத்திலே செய்தால்தான் பலன் கிட்டும்.

Wednesday, July 23, 2008

சீமந்தம்சீமந்தம் என்கிற சீமந்தோநயனம்:

இது சம்ஸ்காரங்களில் மூன்றாவது.

சீமந்தோநயனம் அப்படினா வகிடு பிளக்கிறதுன்னு அர்த்தம்.
முதல் கர்ப்பத்தின் ஐந்தாம் மாசம் முதல் எட்டாம் மாசம் வரை செய்யலாம்.
இதுல முக்கியமா வெள்ளை நிறம் இருக்கிற முள்ளம் பன்றி முள், நெற்கதிர், அத்தி (ஔதும்பர) மரத்தோட சிறு கிளை இவைகளால பெண்ணோட வகிடு பிரிக்கிறாங்க. (அதாவது நெற்றியில் ஆரம்பித்து மேல் நோக்கி இழுக்கணும்) இப்படி செய்கிறதால் பெண்ணின் மனதிலே இருக்கிற கிலேசங்கள் அகலும். சந்தோஷமா இருப்பாங்க. குழந்தையும் நல்லா இருக்கும்.

இதில கூப்பிடுகிற தேவதை ராகா. இந்த தேவதை பௌர்ணமி சந்திரனுக்கு தேவதை. அப்ப கர்ப்பம் பயனுள்ளதா இருக்கும்; முள்ளம்பன்ரி முள் போல கூர்மையா புத்தி இருக்கும்; பூர்ண சந்திரம் போல குழந்தை அழகா இருக்கும்.

மந்திர அர்த்த சுருக்கம்:

ராகா தேவதையை வேண்டுகிறேன். இந்த கர்மா பழுதில்லாமல் இருக்கட்டும். என் மகன் கூர்மையான புத்தியுடன் இருக்கட்டும். ராகா நமக்கு நிறைய செல்வங்களையும் ஆயிரம் வகையில் அபிவிருத்திகளும் கொடுத்து வளர்க்க வேணும்.

இந்த கர்மா போது வாத்தியங்கள் குறிப்பா வீணை வாசிக்க சொல்கிறங்க. தான் வசிக்கும் இடத்தில் இருக்கிற நதியின் பெயரை சொல்லி ஒருமந்திரத்தை வீணை வாசிக்க தெரிந்தவர்களை கொண்டு வாசிக்க சொல்ல வேண்டும். இது மன அமைதி தரதோட பால் தரும் திறனை அதிகப்படுத்துகிறதாம். பெண்களும் வீரனான குழந்தையை பெற்று எடுப்பாய் ன்னு பாடுவாங்களாம்.

பெண்ணின் தலையில் நெற்கதிரை வைக்கணும். எஜமானனும் கர்ப்பிணி மனைவியும் அன்னைக்கு நக்ஷத்திர உதயம் வரை மௌனமா உபவாசம் இருக்கணும். முடிவில ஒரு காளை கன்னுகுட்டியை தொடணும்.

இனி குழந்தை பிறந்த பிறகு செய்கிற கர்மாக்கள்.

Tuesday, July 22, 2008

பும்ஸவனம்பும்ஸவனம்

இது கர்ப்பம் தெரிந்த உடனே செய்யப்படவேண்டியது. ஒரு ஆண் குழந்தையை பெறுவதற்கான கர்மா. புஷ்ய நக்ஷத்திரத்துல செய்ய வேண்டியது. (அதாங்க பூசம்). எப்படியானாலும் ஆண் நக்ஷத்திரத்துல செய்யணுமாம்.
ஒவ்வொரு கர்ப்பத்துக்கு முன்னேயும் செய்யணுமா என்கிறதுல ரிஷிகளுக்கு கொஞ்சம் அபிப்பிராய பேதம் இருக்கு. அவரவர் குடும்ப பழக்கமும் க்ருஹ்ய சூத்திரமும்தான் இதை முடிவு செய்யணும்.

ஔபாசன அக்னில ஹோமம் உண்டு .

முக்கிய காரியமா இந்த கர்மாவில மரத்தின் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ உள்ள இரு காய்களுடன் கூடிய ஆலங்கொழுந்தை எடுத்துவந்து மந்திரத்தோட மூக்கில வலது பக்கம் பிழிகிறாங்க. அது தொண்டைக்கு வரும்போது அவள் அதை விழுங்கணும். ஆண் குழந்தையோ அல்லது நல்ல பிரஜையோ பிறக்க வேண்டிக்கிறாங்க.
ஏன் ஆல மொக்கு? சுஷ்ருதர் கர்ப்பிணிகளுக்கு இது பல பிரச்சினைகளை சரி பண்ணும் என்கிறாராம்.

கூடவே வலது கையிலே ஒரு மந்திரிச்ச கயிறும் கட்டுவாங்க.

மந்திரங்களோட பொதுவான அர்த்தம்:

ஈசான தேவதை நம் வேண்டுதல்களை நிறைவேற்றட்டும். தாதா உலகை குழந்தைகளாலும் மற்ற செல்வங்களாலும் வாழ்த்தட்டும். அவர் இந்த வீட்டையும் குழந்தைகள் தந்து வாழ்த்தட்டும்.யமனை வென்றவர்கள் இந்த வீட்டில் வசிக்கட்டும். அக்னி எனக்கு குழந்தைகள் கொடுத்து அருளட்டும். இந்திரன் அதே போல் அருளட்டும். அழகான குழந்தைகள் எனக்கு பிறக்கட்டும்.

Monday, July 21, 2008

கர்ப்பாதானம்அடுத்து ஒருவர் வாழ்நாளில் வரும் கர்மாக்களை பாக்கலாம்.
இவற்றுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். சம்ஸ்காரம் என்றால் "பண்படுத்துதல்" என்பதுதான் பொருள். மனிதனின் வாழ்க்கையை இவை பண்படுத்துவதால அப்படி பெயர் கொடுத்து இருக்காங்க.
மனித வாழ்க்கைக்கான சம்ஸ்காரம் பிறக்கிற முன்னேயே ஆரம்பிக்குது.
அதனால முதல்ல...
--
கர்ப்பாதானம்

இது குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பட்ட கர்மா. இதுக்கெல்லாம் ஒரு கர்மாவான்னு கேட்டா, ஆமாம். நல்ல குழந்தை பெற்றுக்கொள்வது முக்கியமானதாலே அதுக்குன்னு பல சட்ட திட்டங்கள் உண்டு. கர்ப்பம் உண்டாகக்கூடிய காலம் ருதுக்காலம் ன்னு பேர். இந்த காலத்தில கர்ப்பம் தரிக்க நல்ல நாள் குறிப்பாங்க.

இதுக்கெல்லாம் நல்ல நாளா?

ஆமாம். பராசரர் நல்ல குழந்தை உண்டாவதற்கான நாளை கண்டு கொண்டதால தன் மனைவியுடன் கூட அவசரமா போகும் போது மழையால தடை வந்தது. நேரம் தப்பி விடுமோன்னு மச்சகந்தியை பரிமளகந்தியாக்கி, அவளோட கூட, வியாசர் பிறந்தார். அதனால நேரம் முக்கியம்தான்.

இதுல சொல்கிற மந்திரங்கள் நல்ல ஆண் குழந்தை பிறப்பை வேண்டிதான் இருக்கு. ஏன் ஆண் குழந்தைனா தனக்கு பின் ஆண் சந்ததி இருப்பதால பித்ரு காரியங்கள் தடங்காம நடக்கும் என்பதாலதான்.

பொதுவா இந்த நேரத்தில சொல்கிற மந்திரங்களோட அர்த்தம் இப்படி இருக்கு. "அரணியில் கட்டையை கடைவதால் ஏற்படக்கூடிய அக்னி போல, நீண்ட ஆயுளும் பலமும் கூடிய ஆண் குழந்தைகள் பிறக்கட்டும். நான் கடவுளின் ஒரு பகுதி. என் பித்ருக்களின் கட்டுகளை நீக்குவதற்காக நல்ல மகன்களை பெறுவேன். தேஜஸும் செல்வமும் கொண்ட புத்திரர்கள் உண்டாகட்டும். அவர்கள் தகுந்தவர்களுக்கு தேவையான தான தருமங்களை செய்து நீண்ட காலம் வாழட்டும். மோட்சத்தை அடையட்டும். இறைவன் உன்னை கர்ப்பம் தரிக்க தகுதி உள்ளவளாக செய்யட்டும். கெட்ட சக்திகள் உன்னை விட்டு அகலட்டும். உன் குழந்தைகள் ஊனம் ஏதும் இல்லாது இருக்கட்டும். நீ தெய்வீக காமதேனு போல இருப்பாயாக.


Friday, July 18, 2008

நித்திய கர்மா தொடர்ச்சி -வருட நோக்கில்குருவே நம:

தடுத்து எம்மை ஆட்கொண்ட குருவுக்கு நமஸ்காரம்.
எடுத்து நல்வழி காட்டிய குருவுக்கு நமஸ்காரம்.
உள்ளிருந்து இயக்கும் குருவுக்கு நமஸ்காரம்.
கேள்வி ஞானம் அளித்த குருவுக்கு நமஸ்காரம்.

இந்த பதிவுகளில் ஏதோ நல்லது எழுதுவது அவர் அனுகிரகம்.
தவறுகள் இருப்பின் அடியேன் புரியாமை.

குருவே நம:
____________


நீத்தார் கடன்கள் குறித்து எழுதிகிட்டே போலாம். அது நிறையவே இருக்கு. சிரத்தையோட செய்கிறதுதானே சிராத்தம்.அதனால சிரத்தை இருக்கிறவங்க மேலே தேடிப்பிடிச்சுக்கலாம்.
இது மிகவும் முக்கியமான விஷயமா இருப்பதாலும்; நாங்கள் பார்த்த அளவில் இந்த விஷயத்தில் பலர் கோட்டை விட்டு விட்டு அவஸ்தை படுகிறதாலும்; உண்மையான கேள்விகள் வந்ததாலும் கொஞ்சம் இங்கேயே தாமதிச்சோம். நாம இதுக்கு இப்ப ஒரு கமா போட்டுட்டு அடுத்ததை பாக்கப்போறோம்.

நித்திய கர்மான்னா தினசரி கர்மா இல்லைங்கிறது ஏற்கெனவே பாத்தாச்சு. தினசரி கர்மா இல்லாத நித்திய கர்மாவை பாக்கலாம். வருஷம் முழுக்க அப்பப்ப வருகிற கர்மாக்கள் இருக்கு இல்லையா?

தினசரி பூஜை ஒரு பக்கம் இருக்க அப்பப்ப வருகிற பூஜைகள் இருக்கே! அதுவும் ஒரு பெரிய லிஸ்ட்தான். விரத பூஜா விதானம்ன்னு ஒரு புத்தகமே போட்டு இருக்காங்க. அதுல செய்முறைகள் முழுக்கவே போட்டு இருக்காங்க. ஒவ்வொரு திதி சம்பந்தமாகவும் போட்டு அப்புறம் வருஷதுக்குள்ள வரதை ஒவ்வொண்ணா போட்டு இருக்காங்க. இதெல்லாம் அனேகமா எல்லாருக்குமே தெரியும் இல்லையா? எந்த எந்த பூஜைக்கு என்ன என்ன நைவேத்தியம்ன்னு யோசனை பண்ணா பட்டியல் முழுதும் கிடைச்சுடும்!

அப்புறம் வருடா வருடம் 3-4 தரம் வருகிற கிரகணங்கள், அதை ஒட்டிய ஜப, ஹோம, தர்ப்பண, தானங்கள் எல்லாம் நித்தியம்தான். சாதாரணமா செய்கிற கர்மாக்களை விட கிரகண காலத்தில் செய்கிற கர்மாக்களுக்கு அதிக பலன் சொல்லி இருக்காங்க. .

அதனால

இந்த காலங்களை பயன்படுத்திக்கணும்.(வருகிற பௌர்ணமி கிரகண புண்ணிய காலம் வருது.) குறைந்தது நம்முடைய ஜபத்தை இந்த நேரங்களிலே செய்யலாம்.

Thursday, July 17, 2008

கோவில் காளைகோவில் காளைன்னு கேள்வி பட்டு இருக்கோமில்லியா?
கிராமத்திலே யாருக்கும் அடங்காம - யாரும் அடக்க நினைக்காம – பொறுப்பில்லாம, எங்கே வேண்டுமாலும் போய் என்ன வேண்டுமானாலும் செய்கிற இளைஞர் ஒத்தர் இருப்பார். அவரை "என்னடா, கோவில் காளைமாதிரி சுத்தி திறியறியே" என்பாங்க.

அந்த கோவில் காளை இந்த விஷயம்தான்.

அந்தணர்கள் மட்டும் செய்கிற கர்மா இல்லை வ்ருஷோற்சர்கம். எல்லாருமே செய்வது. நல்ல காளை கன்னுக்குட்டி லட்சணமா பிறந்தா "நேர்ந்து கொண்டு" அது கொஞ்சம் வளர்ந்த பிறகு பூஜை செய்து வலது பக்கம் பின்னால் சூலம் மாதிரி சூடு போட்டு விரட்டி விடுவார்கள். அது சும்மா ஜாலியா எங்கே வேண்டுமானாலும் சுத்தி திரியும். எங்கே வேண்டுமானாலும் போய் மேயும். யாரும் அதை விரட்ட மாட்டாங்க. காரணம்?

மந்தையா மேய்கிற பசு மாடுகளை கர்ப்பம் ஆக்குவது இதுதான். இது நல்லா இருந்தாதானே பிறக்கிற கன்றுகளும் நல்லா இருக்கும்? அதனால யாரும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க.

முன்னே எல்லாம் எல்லாரும் மாட்டுக்கொட்டில், பசுக்கள் எல்லாம் வைத்து இருந்தாங்க. நிறைய பசுக்கள் இருப்பது பெரிய செல்வமா கருதினாங்க.
இப்ப நிறைய சமுதாய "முன்னேற்றம்" வந்து விட்டது. மாடு மேய்க்கவோ பராமரிக்கவோ யாரும் தயார் இல்லை. அப்படியும் சில பேர் பால் வியாபாரத்துக்காக வைத்து இருப்பவங்க யாரும் காளை கன்னுக்குட்டி பிறந்தா வைத்துக்கொள்வதில்லே. கசாப்பு கடைக்கு வித்துடறாங்க. இப்பதான் பசுக்கள் கர்ப்பம் அடையறது ஊசி மூலமாதானே?
அதனாலே இப்ப இந்த கர்மாவை செய்கிற அந்தணர்கள் கூட ப்ரத்யக்ஷமா செய்கிறதில்லை. தேங்காயை வைத்து மந்திரங்களை சொல்லி உருட்டி விடராங்க.

கொஞ்ச நாள் முன் வரை கோவிலுக்கு காளை கன்னு விட்டுகிட்டு இருந்தாங்க. அவங்களும் வாங்கிக்கொண்டு பராமரிச்சாங்க. பிறகு கோவிலேயும் வைத்து பராமரிக்காம ஏலத்துல விட ஆரம்பிச்சாங்க. இதைப்பத்தி சில கசமுசா எழ இப்பெல்லாம் வாங்கிறதில்லைன்னு கேள்வி. இல்லை நிறைய சட்ட திட்டங்கள் போடராங்களாம்.
சொல்ல வந்தது என்னன்னா கொஞ்சம் சிரம சாத்தியமாவே இருக்கிற இப்பவே முடிஞ்சா செய்துடுவோம்.

செய்யக்கூடிய இடங்கள் யாருக்கும் தெரிய வந்தா தயை செய்து சொல்லுங்க.
இன்னும் கொஞ்சம் நாள் போனா இதுவும் கஷ்டமாயிடும்.

Wednesday, July 16, 2008

புத்திரனில்லாதவர்.. தொடர்ச்சிகோதானம் செய்பவன் நல்ல பசு மாட்டை கன்றோடு, நல்ல நாளில், நல்ல க்ஷேத்திரத்தில், நல்ல பாத்திரத்துக்கு தானஞ்செய்ய வேண்டும். தானம் வாங்குபவர் நல்ல பாத்திரமாக இல்லாவிட்டால் கொடுத்தவன் வாங்கியவன் அனைவருமே நரகத்தை அடைவர். வாங்கியவன் அதை சரியாக பராமரிக்க வேண்டும். அதை விற்று பலர் அதை பங்கு போட்டுக்கொள்ள கூடாது. ...

புண்ணியமில்லாத காலம், இடம்; நல்ல பாத்திரம் அமையாதது போன்ற குறைகள் இருந்தாலும், விருஷோற்சர்கம் என்கிற கர்மா, அதன் மகிமையால், உத்தமமான க்ஷேத்திரத்தில், உத்தம காலத்தில், உத்தமமான பாத்திரத்துக்கு கொடுத்ததற்கு என்ன பலன் உண்டோ அதே பலன் நிச்சயமாக கைகூடும்....இன்று இருப்போர் நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகையால் நல்ல காரியங்களையும் நற்கருமங்களையும் நாளை செய்வோம் என்று நினைக்காமல், எண்ணிய அன்றே செய்வது நல்லது.

புத்திர பாக்கியம் உடையவன் தன் கையால் எந்த ஒரு நற்கருமத்தையும் செய்யாமல் இறப்பனேயாகில் அவன் நற்கதியை அடையமாட்டான்.
புத்திரனே இல்லாதவன் நல் வினைகளை செய்து மரிப்பனாகில் அவன் நற்கதியை அடைவான். யாகங்கள், கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வதைவிட விருஷோற்சர்கம் செய்வது நல்லது.சி

கார்த்திகை பௌர்ணமியிலாவது, வேறு ஒரு எந்த நல்ல தினத்திலாவது உத்தராயணத்திலாவது, த்வாதசியிலாவது தூய மனதோடு, உத்தமமான திருத்தலத்தில், நல்ல திதி, யோக, நக்ஷத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்திரம் நன்கு கற்ற அந்தணர்களை கொண்டு சுபம் , ஹோமம் முதலியவற்றை செய்வித்து தன்னை தூய்மையக்கிக்கொண்டு நவ கிரகங்களை பூசித்து, மாதுர் தேவதைகளை பூசித்து பூர்ணாஹுதி கொடுத்து, மஹா விஷ்ணுவை குறித்து சிராத்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக்கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால் நன்கு அலங்கரித்து, மேலும் 4 கன்று களோடு அந்த காளைக்கன்றினை அக்னியை வலம் வரச்செய்து வட திசை நோக்கி நின்று அந்த ரிஷபக்கன்றை நோக்கி "தருமமே, நீயே ரிஷபமானாய். பிரமனாலே ஆதியிலே படைக்கப்பட்டய்!” என்று சொல்லி, இறந்தவனுக்காக தானஞ்செய்தால் அவனைக்குறித்தும், செய்பவன் தனக்குத்தானே செய்வனானால் தன்னை குறித்தும் அதன் வாலில் மந்திர நீர் விட்டு அந்த நீரை தன் கரத்தால் ஏந்தி தன் சிரசின் மீது ப்ரோஷித்துக்கொண்டு கன்றுகளை விட்டு விட வேண்டும்.

இப்படியாக ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறாங்க. மேலும் கூடுதலாக பொது பயன்பாட்டுக்காக நீர் நிலைகள் அமைக்கிறது; பசுக்கள் மேய புல்வெளிகள் அமைக்கிறது; சத்திரம் கோவில் கட்டுவது; வைத்திய சாலை, பள்ளிக்கூடம் அமைக்கிறது இது போன்றவை எல்லாமுமே நல்ல கதியை தரும்.

புத்திரன் இல்லாதவருக்கு நீத்தார் கடன்...அம்பி கயாவில் தனக்குத்தானே கர்மம் செய்வது பற்றி கேட்டார்.

புத்திரன் அல்லது வேற தாயாதி இல்லாதவர் கதி என்ன என்பது அடிப்படையான கேள்வி. கயாவில் ஆத்ம பிண்டம் தனக்குத்தானே போடுவது சரிதான். அத்தோட வேற என்ன செய்யலாம் என்பதுதான் இன்றைய பதிவு. பெரிசா இருக்கிறதால ரெண்டா கூட வரலாம். இப்ப சந்தோஷம்தான அம்பி?
:-))

இது சரி என்கிறதால எங்க அப்பாவுக்கு கயாவில பிண்டம் போட்டாச்சு, இனி சிராத்தம் செய்ய வேண்டாம்ன்னு நினைக்கிறது தப்பு. கீதா அக்கா சரியாவே இதை சொல்லிட்டாங்க.

காலம் மாறிகிட்டு இருக்கு. பலர் வெளி நாட்டில இருக்காங்க. அது எல்லாம் கர்ம பூமியா பெரியோர்கள் ஒத்துக்கிறது இல்லை. இப்ப இருக்கிற நவீன சிந்தனைகள் தாக்கம் இருக்கிறவங்க நாளை கர்ம சிரத்தையோட நீத்தார் கடன்களை செய்வாங்களான்னும் தெரியாது. அதனால சிரத்தை இருக்கறவங்க தங்களுக்கு என்ன செய்து கொள்கிறதுன்னு யோசனை செய்ய வேண்டியதுதான்.

விடை கருட புராணத்தில இருக்கு.
--
பெரிய திருவடியான கருடாழ்வான், ஸ்ரீமந் நாராயண பகவானை தொழுது "வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடிதான பிரேத ஜன்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயை செய்துக்கூறி அருள வேண்டும் " என்று விண்ணப்பித்தான். சர்வாந்தர்யாமியான பகவான் கருடனை நோக்கி கூறலானார்:
“ ஓ கருடா மனிதர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய கருமங்களைப் பற்றி கூறுகிறேன். கேட்பாயாக.

பிரேத ஜென்மத்தை தவிர்க்க விரும்பிய யாவரும் தான் இறப்பதற்கு முன்னதாகவே தமது கையாலேயே வ்ருஷோற்சர்கம் செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட யார் இறந்தாலும், அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவருக்கு பிரேத ஜன்மம் எற்படாமல் இருக்க வ்ருஷோற்சர்கம் செய்தல் அவசியம்.(இதை வ்ருஷப உத்சர்ஜனம் என்றும் சொல்கிறாங்க) பிரேத ஜன்மம் வராமல் இருக்க இதை தவிர வேறு ஒரு கர்ம வழியும் இல்லை. உயிரோடு இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ யாருக்கு வ்ருஷோற்சர்கம் செய்யப்பட்டதோ அவருக்கு பிரேத ஜன்மம் வருவதில்லை. இதை செய்யாமல் வேறு எந்த தான தர்மம் செய்தாலும் விரதங்களை அனுஷ்டித்தாலும், வேள்விகளை செய்தாலும் பிரேத ஜன்மம் பீடிக்காமல் ஒழியாது"

கருடன்: "பகவானே! இதை ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பானால் எப்போது செய்ய வேண்டும்? இறந்த பிறகானால் எப்போது செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பயன் யாது? அதை சொல்லி அருள வேண்டும்.”

பகவான்: கழுலனே, இறந்தவரை குறித்து இதை செய்யாமல் சிராத்தம் முதலிய எதை செய்தாலும் அவற்றால் அவனுக்கு பலன் ஏதும் ஏற்படாது. எவனுக்கு இறந்த 11ஆம் நாள் விருஷோற்சர்கம் செய்யப்படவில்லையோ அவனுக்கு பிரேத ஜன்மம் நிச்சயமாக ஏற்பட்டே தீரும். அது உறுதி. செய்யப்பட்டால் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான்...... எமனால் பீடிக்கப்படாமல் அவன் நல்ல உலகை அடைவான். புத்திரனாவது, மனைவியாவது, பெண் வயிற்று பிள்ளையாவது விருஷோற்சர்கம் செய்யலாம். புத்திரன் இருப்பின் அவன் மட்டுமே அதை செய்ய வேண்டும். வேறு யாரும் செய்யலாகாது....

கழுலனே , அயலூருக்கு பயணம் செய்பவன் கட்டு சோற்றை கையிலே கொண்டு செல்வானாகில் எப்படி பசியைப்பற்றிய கவலையே இல்லாமல் செல்வானோ, அதுபோல ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அன்னதானம், கோதானம் முதலியவற்றை செய்து விடுவானாகில் மரணமடைந்து செல்லும்போது பசி, தாகம் ஏதும் அடையாமல் நல்லுலகை சேர்ந்து சுகிப்பான்.
(தொடரும்...)

Friday, July 11, 2008

மேலும் விளக்கங்கள்விளக்கங்களை பின்னூட்டத்திலே வைக்கதான் நினச்சேன்.
ஆனா இது கொஞ்சம் பெரிசா போனதாலே பதிவாக்கிட்டேன்.

கீதா அக்கா கேட்டாங்க:

//மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12//

யுகாதி:

வைகாசி, வளர்பிறை மூன்றாம் நாள் (த்ருதீயை), - கிருத யுகம் ஆரம்பித்தது.
கார்த்திகை- வளர்பிறை ஒன்பதாம் நாள் (நவமீ) -த்ரேதா யுகம் ஆரம்பித்தது.
பாத்ரபத (புரட்டாசி ) தேய்பிறை பதிமூன்றாம் நாள் (த்ரயோதசீ) - த்வாபர யுகம் ஆரம்பித்தது.
மாக (மாசி) பௌர்ணமி - கலி யுகம் ஆரம்பித்தது.

{சரியா சொல்ல போனா சந்திரனை அடிப்படையா கொண்ட மாதங்களில் கணக்கு. அதாவது தெலுங்கு வருஷ மாத கணக்கு}

இவை யுகாதி.

மன்வாதி = மந்வந்தரங்கள் ஆரம்பித்த தினங்கள்.

[சுக்ல -வளர்பிறை; க்ருஷ்ண – தேய் பிறை. தெரியும்தானே?]
ஆச்வயுஜ (ஐப்பசி) சுக்ல 9
கார்த்திக சுக்ல 12
சைத்ர (சித்திரை) சுக்ல 3
பாத்ரபத (புரட்டாசி) சுக்ல 3
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
புஷ்ய (தை) சுக்ல 11
ஆஷாட (ஆடி) சுக்ல 10
மாக (மாசி) சுக்ல 7
சிராவண (ஆவணி) க்ருஷ்ண 8
ஆஷாட (ஆடி) பௌர்ணமீ
கார்த்திக பௌர்ணமீ
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
சைத்ர (சித்திரை) பௌர்ணமீ
ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமீ

இதெல்லாம் மன்வாதிகள்.

இந்த யுகாதி மன்வாதிகளில் செய்கிற சிராத்தங்கள் 2000 வருஷங்கள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் தருமாம்.

//பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12. இது கொஞ்சம் இல்லை, நல்லாவே புரியலை, ஆனால் தேய் பிறை அஷ்டமி, முன் திதி, பின் திதியில் செய்யறவங்களைப் பார்த்ததுண்டு. காரணம் தெரியாது. அப்போ ரொம்பச் சின்ன வயசுங்கறதாலே இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. //

அதுவேதான்.

<<( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )>>

இப்படி சொல்லி இருக்கேன்.
ஆ, புரியுது.
க்ருஷ்ணபக்ஷம்ன்னு சொல்கிறதுக்கு பதில் தேய்பிறைன்னு சொல்லி இருக்கலாம். இதுதானே சொல்ல வந்தீங்க? அப்புறம் மாசங்களும் மார்கழி, தை, மாசி, பங்குனி ன்னு சொல்லி இருக்கலாம். ரைட்!

//மஹாலய பக்ஷம் 15//
இது ஓகே, நல்லாவே தெரியும்,

:-)

//வ்யதீபாதம் 12
வைத்ருதி 12//

இது புரியலை! //

இதை விளக்குவது கொஞ்சம் கஷ்டம். (ஏன்னா தெரியாதுன்னு அர்த்தம்! :-)
பஞ்சாங்கத்தை பாத்தால் இதை குறிச்சு இருப்பாங்க.
7-7-2008 அன்னிக்கு வ்யதீ. சிரா ன்னு போட்டு இருக்கும். அது வ்யதீபாத சிராத்தம்.17-7-2008 வை.சிரா. இது வைத்ருதி சிராத்த நாள். திருப்பி 2-8-2008 வ்யதீபாதம்.ள்
--
சேர்ப்பு:
சூரிய கதி (நகர்வு) சந்திர கதி இரண்டையும் ஸ்பிரிங்க் ஈக்வினாக்ஸ் லேந்து கணக்கிட்டு இரண்டின் லாங்ஜிட்யூடையும் கூட்டி கூட்டுத்தொகை 180 டிகிரியா இல்லை 360 டிகிரியா என்பதை பொருத்து வ்யதீபாதம், வைத்ருதி இரண்டும் கணக்கு போடறாங்க.
அப்பாடா! ரொம்பவே தெளிவாயிடுச்சு!
:-)))))))


Thursday, July 10, 2008

தினசரி கர்மா அல்லாத நித்திய கர்மா


நித்திய கர்மா குறித்து கொஞ்சம் குழப்பம் இருந்தது. அதனால் பதிவு ஒரு நாள் தள்ளி போட்டேன்.
நித்திய கர்மா என்கிறது தினசரி கர்மா என்று சாதாரணமா அர்த்தம் பண்ணிகிட்டாலும் எப்போதுமே வரும் கர்மா என்பதே சரியான அர்த்தம்.
தினசரி கர்மாவா இல்லாம நித்திய கர்மாவா வருகிறவை பலதும் இருக்கு. நீத்தார் சடங்குகளை தவிர்த்த மற்றது எல்லாம் சிலரே செய்யறாங்க. அதெல்லாம் 40 சம்ஸ்காரங்களை பாக்கிறப்ப வந்துடும்.

நீத்தார் சடங்குகள்ல அமாவாசை தர்ப்பணம் முக்கிய எல்லாருக்கும் தெரிஞ்சது. இது சேத்து ஷண்ணவதி தர்ப்பணம் ன்னு வருஷத்துக்கு 96 நாட்கள் தர்ப்பணங்கள் இருக்கு. செய்கிறவங்க ரொம்பவே கம்மிதான். அமாவாசை தர்ப்பணமே சிராத்தம் செய்கிறதுக்கு பதிலா செய்கிறதுதான். 96 நாட்கள் தர்ப்பணமே அரிதா இருக்கிறப்ப மிகவும் அரிதாதான் 96 சிராத்தம் இருக்கு.

பட்டியல் போடுவோமா?
வருட பிறப்பு -1
அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2
ஸௌர மாத பிறப்பு -12
அமாவாசை -12
மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12
( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )
மஹாலய பக்ஷம் 15
வ்யதீபாதம் 12
வைத்ருதி 12

இல்லீங்க, இதெல்லாம் நம்ம பார்லிமெண்ட் கட்சி நிலவரம் இல்ல.
:-))
எப்படி 96 சிராத்தம் வந்தது? என்கிறதுக்கு கணக்கு.


கூடவே வருடா வருடம் வருகிற திதிகளில (ஆப்திக) சிராத்தம் - இப்படி 96 இருக்காம்.

நிறைய பேர் இந்த காலத்தில கஷ்டப்படுகிறது நீத்தார் என்கிற பித்ருக்கள் கடனை சரியா செய்யாத்தாலன்னு சில பெரியவங்க சொல்றாங்க.
இந்த சிராத்தங்கள்ல குழந்தை இல்லாதவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறை கூட இருக்கு. இது பலருக்கும் தெரியாம போச்சு.

குறிப்பிட்டதெல்லாம் நித்திய கர்மா. அப்படி இல்லாம காம்ய சிராத்தம் கூட உண்டு. அதாவது சில விஷயங்கள் வேண்டும்ன்னு பித்ருக்கள் ஆசிகளை வேண்டியும் பலன் கிடைக்கவும் செய்கிறது.ஸ்வர்க்கம், பிள்ளை, பெண்கள், ஓஜஸ், சௌர்யம், பூமி, பலம், புத்திரர்கள், சிறப்பு, சௌபாக்கியம், ஸம்ருத்தி, ரோகமின்மை. கீர்த்தி ... இப்படி பல விஷயங்களை வேண்டி இதை செய்யலாம்ன்னு யாக்ஞவல்கியர் சொல்றார். இந்த இந்த கிழமைகள், இந்த இந்த நக்ஷத்திரங்கள், யோகம், கரணம் இப்படி எல்லாம் சொல்லி அந்த அந்த நேரத்துல எந்த விஷயம் வேண்டி சிராத்தம் செய்யலாம்ன்னு பட்டியல் இருக்கு. தேவையானவங்க தேடி கண்டு பிடிச்சுக்கலாம்.

பாத்தீங்களா, திடீர்ன்னு நித்தியத்துலேந்து காம்யத்துக்கு போயிட்டோம்? ஏன்னா அதுதான் அடுத்த டாபிக். சிராத்தம் பத்தி பேசறப்பவே சொல்லிடலாமேன்னுதான்...

நடுல நைமித்திகம்ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஒரு நிமித்தத்தை முன்னிட்டு வருகிறது. அது எப்பவுமே வரதில்லை. ஏதாவது ஒரு அசாதாரண சந்தர்பத்தில வரது. உதாரணமா அக்னிஹோத்ரியோட அக்னிஹோத்திர சாலை எரிஞ்சு போச்சுனா இந்த தேவதைய உத்தேசிச்சு ஒரு இஷ்டி செய்யணும்ன்னு இருக்கு. இது போல இருக்கிற சிலது நைமித்திகம்.

அடுத்து காம்ய கர்மாக்களுக்கு போவோம்.


Tuesday, July 8, 2008

மன்னிக்க...


வடிநீர் வாய்க்கால் அமைக்கிறோம்ன்னு சொல்லி கேபிள் எல்லாத்தையும் தோண்டி போட்டுட்டாங்க. அடுத்த பதிவு வரும்வரை மன்னித்து பொறுக்க வேண்டும்.


Friday, July 4, 2008

மாலைநாளைக்கு போட வேண்டியது சேமிக்கும் முன்னால போஸ்ட் ஆயிடிச்சி. அத எப்படி நீக்கறதுன்னு தெரியலை.
சரி, வேலை மிச்சம்.
கீழே இருக்கறதை முதல்ல படிங்க. அப்புறமா இது.
நாளை போஸ்ட் இல்லை.
---------------------------------------
அப்புறமா குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் கவனிக்கணும்.

மாலை சூரிய உபாசனை முடித்து, அக்னி உபாசனையும் முடித்து, வைச்வதேவம் செய்து இரவு சாப்பாடு முடித்து உறங்கச்சொல்றார் வ்யாசர்.

மாலை ஔபாசன அக்னியில் ஹோமம் செய்கிறவன் அடைகிற பலன் மேரு மலை அளவு தங்கம் தானம் செய்வது; பல நூறு வாஜபேய யாகங்கள் செய்வது; கோடி கன்யாதானம் செய்வது இதுக்கெல்லாம் சமம் என்கிறார்.

இரவு பூஜை சிலர் செய்வர்.

கை, கால்களை கழுவி சுத்தம் செய்து துடைத்துக்கொண்டு, படுக்கையில் இடது பக்கமாக படுக்கணும். வடக்கு பக்கம் தவிர எந்த திசையும் பரவாயில்லை. தண்ணீர் சொம்பை தலை பக்கமா வைத்துக்கொள்ளணும். கருட மந்திரங்கள்/ வேத மந்திரங்கள் இதால ரக்ஷை செய்து கொண்டு படுக்கலாம்.

சுகமா தூங்குகிறவங்க அகத்தியர், மாதவர், முசுகுந்தர், கபிலர், அஸ்தீகர் இந்த 5 பேர். இவங்களை நினைச்சுகிட்டு தூங்கினா நல்லா தூங்கலாமாம்!

ருது காலத்தில் பத்னியை அடைய வேண்டும். மற்ற காலங்கள்ல காமம் இருந்தால் அடையலாம். (இது இந்திரன்கிட்டே அவங்க வாங்கின வரத்தால). சில நாட்கள் கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த கூடாத நாட்கள் எல்லாம் பாத்தா குடும்ப கட்டுப்பாடு தானே வந்துடும்! இரவோட பின் பாகத்தைதான் இதுக்கு பரிந்துரைக்கிறாங்க!

இப்படி எல்லாம் நித்திய கர்மா என்கிற தினசரி கர்மாக்களை கடை பிடிக்கிறவங்க எல்லா புருஷார்த்தங்களையும் (மனிதன் அடைய வேண்டியன எல்லாம்) அடைகிறாங்களாம்.


Thursday, July 3, 2008

சாப்பிட்டு முடிச்சாச்சாசாப்பிட்டு முடிச்சாச்சா?

கொஞ்சம் தண்ணீர் குடிச்சு நகர்ந்து போய் 18 முறை வாய் கொப்பளிக்கணும். (ரொம்ப நாள் முன்னே பல் வைத்தியர்கிட்டே போக வேண்டி இருந்தது. என் விஸ்டம் பல் தொந்திரவு செய்யுதுன்னு அதை பிடுங்கிட்டார். அப்புறம் நாலு நாள் பல் தேய்க்காதே. அதுக்கு பதிலா 18 தரம் கொப்பளிச்சுடுன்னார்!) தண்ணியை இடது பக்கமா துப்பணும்.

சர்யாதி என்கிற அரசனையும் சுகன்யா என்கிற அவரோட பெண்ணையும் ச்யவனர் என்கிற ரிஷியையும் (அதே ச்யவன ப்ராஷ் ரிஷிதான்!) இந்திரன், அச்வினி குமாரர்களையும் நினைத்துக்கொண்டு கண்களை நனைக்கணும். ஈரமான கட்டை விரல்களால கண்களை தேய்க்கனுமாம். அப்ப கண் நோய்கள் வராதாம். கௌதமர் சொல்கிறார்.

நல்ல வெத்திலை, நல்ல சுண்ணாம்பு, நல்ல பாக்கு இதெல்லாம் சேத்து தாம்பூலம் எடுத்துக்கலாம். இது ஜீரணத்துக்கு உதவும். வெள்ளிக்கிழமை கட்டாயம் செய்யணும் என்கிறார்கள் சிலர். லக்ஷ்மி காடாக்ஷம் கிடைக்குமாம்.

எப்போதுமே வெத்திலை பாக்கு சாப்பிட்டால் ஆயுஸ், புத்தி, பலம், ப்ரக்ஞை, வீரியம், இதெல்லாம் நசிக்கப்படும். நாக்குக்கு ருசியே தெரியாம போகும்.

200 அடிகள் நடக்கணுமாம். பிறகு உட்கார்ந்து வேலை செய்யலாம். வேதம்/ இதிகாஸ புராணம், சாஸ்திரம் இதெல்லாம் படிக்கலாம்.

அப்புறமா குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் கவனிக்கணும் - லௌகிக சமாசாரங்கள்.

Wednesday, July 2, 2008

சாப்பிடக்கூடியவை கூடாதவை:


சாப்பிடக்கூடியவை கூடாதவை:
இதைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கோம்.
http://anmikam4dumbme.blogspot.com/2008/04/blog-post_17.html

ஜாதியினால் சில உணவு வகைகள் நல்லது இல்லை. சில அவை செய்யும் காரியத்தால் நல்லது இல்லை. சிலது காலத்தினால்; சிலது சேர்க்கையினால்; சிலது சஹ்ருல்லேகம்; சில சுபாவத்தால்; இப்படி பலதும் உண்ண தகுதியை இழக்கின்றன.

வெங்காயம், சிவப்பு முருங்கை, உள்ளிப்பூண்டு, பலாண்டு, நாய்க்குடை, தாமரை தண்டு, சுரைக்காய் இவை ஜாதியால் உண்ண தகுந்தவை இல்லை. அதாவது allium cepa family முழுக்க உண்ண தகுந்தது இல்லை. இப்படி.

கெட்ட எண்ணங்களோட ஒருவர் உணவை பார்த்தாலே அது காரியத்தால கெடுகிறதாம்.
நெய், எண்ணை முதலியனவால செய்த பலகாரங்கள் ரொம்ப நாள் வைத்திருந்தா கெட்டு போகும். பழைய சோறும் அப்படிதான். தயிர், தேன், பக்ஷணங்கள் இதெல்லாம் காலத்தால கெட்டு போகா.

கள்ளு, வெங்காயம் இதெல்லாம் சேர்த்தவை; சீமப்பால் கலந்தது (அதாவது கன்று போட்டு 10 நாளுக்குள்ள கறக்கிற பால்) இதெல்லாம் சேர்க்கையால் கெட்டவை.
எப்பவாவது இதை சாப்பிடலாமா கூடாதான்னு சந்தேகம் வந்தா அது ஸஹ்ருல்லேகம் என்கிறாங்க. இந்த "சந்தேக பிரியாணி" எல்லாம் சாப்பிடக்கூடாது.

பராசரர் இந்த பட்டியல்ல வெளுப்பு கத்தரி, மரத்தின் பிசின், (இதுல பெருங்காயம் வந்துடும்) கோவில் சொத்து, ஒட்டக/ ஆட்டு பால் இதெல்லாம் சேத்து, தெரியாத்தனமா இதெல்லாம் சாப்பிட்டாக்கூட பிராயசித்தம் செய்யணும் என்கிறார்.

தேவலர் மரப்பிசின்ல பெருங்காயத்துக்கு எக்ஸெப்ஷன் தரார்.

யவை/ கோதுமையால செஞ்சதுக்கு காலம் கடந்தது என்கிற குற்றம் இல்லையாம். ( அப்ப சப்பாத்தி ரொட்டி எல்லாம் பரவாயில்லை.)

தயிர் தவிர புளிச்சது எதுவும் சாப்பிடக்கூடாது. (யப்பாடா எவ்ளோ தரம் இதை தட்டறது? பரவாயில்லைன்னு சா.கூ வே எழுதறேன்.!) ஆபத் தர்மமா வேற சோறு கிடைக்காத போது புளிச்சதை தண்ணீரால அலம்பி சாப்பிடலாம்.
புளிப்பு இஞ்சி, தயிர், கஞ்சி, எள்ளு, சாதம்(!), நெல்லிக்காய் இதெல்லாம் ராத்திரியில் சா.கூ.

சில விஷயங்கள் ஒண்ணா சேந்தா கெட்டு போகும். வெண்கல பாத்திரம் + இளநீர்/ கருப்பஞ்சாறு; தாமிர பாத்திரம்+ தயிர்,பால்; உப்பு + பால்/நெய் இதெல்லாம் கெட்டு போகிற சேர்க்கைகள். (பல கோவில்களிலேயும் தெரியாத்தனமா காப்பர் சொம்பில பால் எடுத்து அபிஷேகம் நடக்குது)

என்னயா இது? கூடாது கூடாதுன்னு எல்லாம் சொன்னா எப்படி? கூடும்ன்னு சொல்லுங்கிறீங்க. சரி சரி.

அகத்தி, துளசி, நெல்லி, சுண்டைக்காய் அவை யாரோட வயத்தில இருக்கோ அவனுக்கு ஹரி பக்கத்தில இருக்காராம். யார் சாப்பாடு, பக்ஷணம், லேஹ்யம் எல்லாத்தையும் நமோ நாரயணான்னு சொல்லி தொட்டு சாப்பிடரானோ அவன் நல்ல லோகத்த அடைகிறானாம்.
நாராயண!

இந்த பட்டியல்ல பலதும் நமக்கு பிடிச்சவையா இருக்கலாம். அதனால அதுக்கெல்லாம் "அதுக்கு மருத்துவ குணம் இருக்கு" என்பது போல வக்காலத்து வாங்க வேண்டாம். சாப்பிடலாமா வேண்டாமான்னு அவரவர் முடிவு செஞ்சுக்கலாம்.- இந்த பதிவுகள்ல வர மத்த விஷயங்கள் போலவே!

ரெண்டு வருஷம் முன்னால வேத வகுப்புகள் எடுக்கிறப்ப வகுப்புல தர்ம சாஸ்திரமும் பாத்துகிட்டே போவோம். இதே விஷயம் வந்தது. சா.கூ பட்டியலை படிச்சுகிட்டே போனோம். ஒருத்தர் "சரிதான் சரிதான்"னு எல்லாத்துக்கும் தலையாட்டிகிட்டே வந்தார். வெங்காயம்ன்னு சொன்னவுடனே சுரு சுருன்னு கோபம் வந்துட்டது. அதெப்படி சொல்லலாம், அதுக்கு மருத்துவ குணம் இருக்குன்னு சண்டைக்கு வந்துட்டார்!
ஏன்? முன்ன சொன்னதெல்லாம் அவர் சாப்பிறதில்லை. வெங்காயம் ரொம்ப பிடிக்கும்! அவ்ளோதான். :-))


Tuesday, July 1, 2008

மேலும் நியமங்கள்


மேலும் நியமங்கள்:

நின்று கொண்டு, நடந்து கொண்டு, தலையில் துணி கட்டிக்கொண்டு, தெற்கு முகமாக உட்கார்ந்து சாப்பிட்டால் அவன் உணவை ராக்ஷசர்கள் சாப்பிடுகிறர்கள்.

சாப்பிடும்போது கால்களை தொடக்கூடாது. கட்டிலிலோ கையில் வைத்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. பாதுகை போட்டுக்கொண்டு சா.கூ. வண்டிகளில் இருந்து கொண்டு சா.கூ.
காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு - இதெல்லாம் பற்களால கடிச்சு சா.கூ. (துண்டாக்கி பரிமாறினால் பிரச்சினையே இல்லை.)

தவறி வெளியே விழுந்ததும் சாப்பிட தக்கதல்ல.

அசுத்தனாக எதையுமே சா.கூ. படுத்துக்கொண்டு; கால்களை நீட்டுக்கொண்டு; மனசை (ஏதேனும் படிக்கிறது போல) வேறு எங்கேயோ வைத்துக்கொண்டு; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

சந்தியா காலம், பிரதோஷ காலம், இருட்டில் விளக்கு இல்லாமல், இரவு பத்து மணிக்கு மேல்; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

அன்னத்தில் கேசம், எறும்பு, அசுத்தத்தில் வாழும் புழு இப்படி ஏதேனும் இருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட அன்னத்தை எடுத்துவிட வேண்டும். மீதியை பிறகு நீரால் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். கையில் எடுத்ததில் அசுத்தம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். ஒரு வேளை அவை வாய்க்குள் போய் விட்டால் துப்பி விட்டு, தண்ணீரால் கொப்பளித்துவிட்டு, நெய் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக பசிக்கு தகுந்தபடி உணவு.

சன்னியாசி 8 கவளங்கள். வான பிரஸ்தன் (இப்ப ரிடயர்ட் ஆசாமி ) 16. க்ருஹஸ்தன் 32.
ப்ரஹ்மசாரி, அக்னிஹோத்திரம் செய்பவர், காளை மாடு இவர்களுக்கு இப்படி சட்ட திட்டமில்லை. ரெண்டு வேளை மட்டும் என்கிற சட்டம் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏன்னா அப்படி தேவையான அளவு சாப்பிட்டாதான் அவங்க அவங்க வேலையை திறமையோட செய்ய முடியுமாம்.

ஏன் இப்படி சாப்பாட்டை பத்தி இவ்வளவு எழுதுகிறேன் என்று தோணலாம்.
பல கர்மாக்களை செய்யாமல் இருக்கிறோம். சாப்பிடுவதை மட்டும் எப்படியும் செய்தே தீர வேண்டும் இல்லையா? அதனால செய்கிற இந்த கர்மாவை சரியாக செய்யலாமே என்னுதான். புத்தகங்களை படித்து அத்தனையும் எழுதினால் பதிவுகள் மிக நீளமாக போகும்.

அதனால அடுத்த பதிவுல எதெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாதுன்னு பாத்துட்டு மேலே போகலாம்.