Pages

Monday, October 21, 2013

பார்வை!


 
நேற்று என் அக்கா சொன்ன குட்டிக்கதை.
ஒரு ஆசிரமம் இருந்தது. ஒரு நாள் அங்கே இருந்த இரண்டு சீடர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். ஒருவன் குருவிடம் போய் புகார் செய்தான்: இவன் என்னை எருமை என்கிறான்.
குரு: எவ்வளவு தரம் அப்படி சொன்னான்?
சீடன்: ஒரு தரம். அதனால் என்ன? நான் என்ன எருமை போல மந்தமாகவா இருக்கிறேன்? இல்லை குண்டாக இருக்கிறேனா? கருப்பாக இருக்கிறேனா?
குரு: ஏம்பா, இவன் உன்னை ஒரு தரம் எருமைன்னு சொன்னதுக்கே உன்னை எருமையா பாவிச்சு கோபப்படறயே? நான் எவ்வளோ நாளா நீ பிரம்மம், நீ பிரம்மம் ந்னு சொல்லறேன்? அதை கொஞ்சமாவது பாவிச்சுப் பார்க்கக்கூடாதா?

இதுக்கு ஒரு குழுவில் நண்பர் திவாகர் போட்ட கமெண்ட்:
ஒரு பழைய சினிமா வசனம் உண்டு.

நாகேஷ் ஒரு காலண்டரைத் திருப்பி போட்டு தன் பேனாவை எடுத்து ஒரு புள்ளி வைத்து ‘இது என்ன‘ என்று கேட்பார், உடனே அதைப் பார்த்த அந்த அப்பாக் காரர் ‘அது கரும்புள்ளி’ என்பார்,

ஏன்பா.. இதொ இந்தச் சின்ன கரும்புள்ளியைச் சுத்தி எவ்வளோ பெரிய வெள்ளைப் பகுதி இருக்கு, இது கண்ணுக்குப் படலியா’ ந்னு கேட்பார்.
பிரம்மம் வெள்ளைப் பகுதி, அதில் கட்டுண்ட எருமை கரும்புள்ளி.. எருமைதான் தெரியும்..
 
உண்மைதான். பார்வைதான் வித்தியாசம். நாம் பலரும் இந்த அவசர உலகத்துல பல விஷயங்களை பார்க்கத்தவறுகிறோம். நடக்கிற அநியாயங்களில சிலதை பிடிச்சுகிட்டு உலகமே கெட்டுப்போச்சு என்று புலம்புகிறோம். நல்ல விஷயங்கள் கண்ணில் படுவதில்லை; அல்லது பார்த்தாலும் கவனத்தில் வருவதில்லை.

கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு உலகத்தை கவனித்து பாருங்கள். மரம் செடி கொடு வானம்... எல்லாவற்றையும்! ஈஶ்வர ச்ருஷ்டி எத்தனை அற்புதமானது என்று தெரிய வரும்!

Monday, October 14, 2013

விஜய தசமிஎல்லாருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துகள்!

கடந்த ஒன்பது நாளும் சக்தி உபாசனையில் மனம் போயிருக்கும்!
அதோட லாஜிக்கல் முடிவு என்ன? வெற்றிதானே? இந்த பத்தாவது நாள் வெற்றியை குறிக்கிற நாள்தான். ஒரு விஜய தசமியில்தான் தேவியும் மகிஷாசுரனை வெற்றி கொண்டாள். கல்கத்தா போன்ற இடங்களில் இந்த கருத்தே முக்கியமாக இருக்கிறது.

இந்த நாளை ராமன் ராவணனை வெற்றி கொண்ட நாள் என்கிறார்கள். தத்வார்த்தமாக தசரா என்பது தச ஹரா= பத்து விஷயங்களை அடக்குவது என்று சொல்லி அந்த பத்து விஷயங்களாக  காமம், க்ரோதம், மோகம், லோபம் (பேராசை), மதம் (அளவு மீறிய பெருமை),மாத்சர்யம் (பொறாமை), ஸ்வார்த்தம் (சுயநலம்), அந்நியாயம், அமனவ்தா (கொடுமை இழைத்தல்), அஹங்காரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். 

ஒரு விஜயதசமியில்தான் பாண்டவர்களும் தம் ஆயுதங்களை மீட்டுக்கொண்டு அஞ்ஞாதவாசத்தில் இருந்து வெளி வந்தனர்.

ஸ்காந்த புராணத்தில் ஒரு சுவையான கதை இருக்கிறது.
இப்போதைய ஔரங்காபாத் அருகே ப்ரதிஷ்டபுரம் என்று ஒரு நகரம் முன் காலத்தில் இருந்தது. அங்கே இருந்த தேவதத்தன் என்பவர் மகன் கௌத்ஸன் ரிஷி வரதாந்து என்பவரை அணுகி வித்யை கற்றான். பதிநான்கு வித்யைகளை கற்று திரும்பும்போது "குருதக்ஷிணையாக என்ன தர வேண்டும்?" என்று கேட்டான். குரு "அப்பா வித்யை கற்று கொடுத்ததுக்கு எல்லாம் மாற்று பெறுவது சரியில்லை. அதனால் ஒன்றும் வேண்டாம்” என்றார். விடாமல் கேட்டுக்கொண்டு இருந்த மாணவன் மீது கோபம் கொண்டு, “சரி. பதிநான்கு  வித்யைகளுக்கு 14 கோடி பொன் கொடு” என்றார்! சொன்ன பிறகு பச்சாதாபம் ஏற்பட்டாலும் என்ன செய்ய முடியும்? கௌத்ஸன் ”சீக்கிரத்தில் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி விடை பெற்றான்.
அந்த தேசத்தை ஆண்டுக்கொண்டு இருந்தவர் ராமருடைய முன்னோர்களில் ஒருவரான ரகு. ரகு குல திலகா என்று ராமனை அழைக்கிறோம் இல்லையா. அந்த ரகு. ரகு வள்ளல் என்று பெயர் பெற்று இருந்தாலும் அப்போதுதான் விஶ்வஜித் யாகத்தை முடித்து இருந்தார். கஜானாவில் இருந்த பொருள் எல்லாம் இதற்கே செலவாகிவிட்ட்து. மூன்று நாட்களில் தருவதாகச்சொல்லி ரகு கௌத்ஸனை அனுப்பினார். பின் இந்திரனை சந்தித்து பொருள் கேட்கப்புறப்பட்டார். வேண்டுகோளை ஏற்ற இந்திரன் குபேரனை அழைத்து பொன் மாரி பெய்யச்சொன்னார். அவன் ஷனு, அபதி மரங்களில் பொற்காசுகளை பெய்ய வைத்தானாம். (பணம் மரத்திலா காய்க்கிறது என்ற சொலவடை இதுக்கு அப்புறம் வந்து இருக்கலாம்:)காசுகளை எடுத்துக்கொள்ளும்படி ரகு கைத்ஸனுக்கு சொன்னார். கௌத்ஸன் அவற்றை சேர்த்துக்கொண்டு தன் குருவிடம் கொடுத்தான். ஆச்சரியமடைந்த குரு அவற்றை எண்ணிப்பார்க்க 14 கோடிக்கும் அதிகமாகவே நிறைய இருந்ததாம். அவர் 14 கோடியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி உன்னுடையது என்றார். கௌத்ஸன் பணம் பெரிதல்ல, மானமே பெரிது, குரு தக்‌ஷிணை கொடுக்க முடிந்ததே சந்தோஷம் என்றான். "அது சரிப்பா, ஆனா நான் கேட்டதுக்கு மேலே கொடுத்து இருக்கிறாயே, அது வேண்டாம்" என்றார். கௌத்ஸன் ராஜாவிடம் அதிகப்படி பொன்னை எடுத்துக்கொள்ளச்சொன்னான். அவரோ ”தானம் கொடுத்ததை திருப்பிப்பெறுவதில்லை; சாஸ்த்ர விரோதம்” என்றார். கடைசியில் மீதி பொன்னை அயோத்யாவாசிகளுக்கு தானம் செய்தானாம் கௌத்ஸன்! இது நடந்தது ஒரு விஜயதசமி அன்று!
ஆகவே இன்றும் வட, மேற்கு பாரதத்தில் ஆஸ்வின சுக்ல தசமி (விஜயதசமி அன்று ) அபதி மர இலைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்கிறார்கள். அதை தங்கமாக கருதுகிறார்கள்.
இந்த கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.
முன் காலத்தில் அரசர்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்கள். விஜயதசமி அன்று பக்கத்து நாட்டுக்குள் கொஞ்ச தூரமாவது ஆக்கிரமித்துவிட்டு திரும்புவார்களாம். சாதாரணமாக முடியாததை சாதிக்க வேண்டும் என்ற பழக்கம் விட்டுப்போகக்கூடாது என்று கோட்பாடு!
நம்மில் பலரும் கூட ஆன்மீகம் எல்லாம் பெரிய விஷயம். நமக்கெல்லாம் சரிப்படாது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. ஆன்மா இருக்கும் அனைவருக்கும் ஆன்மீகம் அவசியம்தானே! இன்றைக்கு அதை கொஞ்சமாவது புரிந்துக்கொள்ள ஒரு முயற்சியை செய்யலாம்!