நேற்று மதிய நேரம் என் என்னுடைய பாண்டிச்சேரி நண்பர் வந்திருந்தார், "என்னப்பா ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து! என்ன அதிசயம்! என்ன இந்த பக்கம் ?" என்று கேட்டேன்.
அவர் "டாக்டர் நீங்க ஶ்ராத்தம் பத்தி எழுதி இருந்தீங்க. அதுல ஒரு
சந்தேகம்" என்றார்.
"என்ன சந்தேகம் சொல்லு. தெரிஞ்சா சொல்றேன்" என்று
சொன்னேன்.
"அவர் டாக்டர் இப்பொழுது எல்லாம் பல இடங்களிலும் பார்க்கிறேன்
அண்ணன் தம்பிகள் ஒன்றாக சேர்ந்து ஶ்ராத்தம் செய்கிறார்கள். அண்ணன் தம்பிகள் சேர்ந்து ஶ்ராத்தம் செய்யலாமா, செய்யக்கூடாதா?" என்று கேட்டார் . "செய்யலாமே ! அதற்கு ஒரு வழி இருக்கிறது ஒவ்வொருவருமே குறைந்தபட்சம் இரண்டு இரண்டு
பிராமணர்களை வரிக்கணும். வாத்தியார் ஒருவரே இருந்து அவர் சொல்ல சொல்ல செய்து
கொண்டு போகலாம். சமையல் தனித் தனியாக வேண்டியது இல்லை. எல்லாருக்குமே ஒன்றாகவே
சமைக்கலாம். பித்ருகளுக்கு போடுவது அவரவர் ஔபாசனாக்னியில் சமைத்த சருவைதான்
போட வேண்டும்! என்று சொன்னேன்.
அவர் சிரித்துக் கொண்டு "அப்படி எல்லாம்
நடப்பதில்லையே! எல்லாரும் ஒன்றாக சேர்ந்து செய்கிறார்கள்.
அதில் ஒருவர்
மட்டும்தான் செய்கிறார். மற்றவர்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு அண்ணாவின் பக்கத்தில் நின்று விட்டு, கடைசியில் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் செலவை பகிர்ந்து கொண்டு எள்ளுண்டையும் பலகாரங்களையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். இப்படி செய்தால் அது சரியா? என்று கேட்டார்.
நான் "இல்லப்பா, அது தப்பு. சரியில்லை" என்று சொன்னேன். அதற்கு அவர் அப்படியானால் இதை நீங்கள்
எழுத எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவலாக பலரும்
செய்கிறார்கள். வாத்தியாரிடம் கேட்டால் " ஏன்பா, இப்படியாவது வருஷத்துக்கு ஒரு தரம் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அதை ஏன் கெடுக்க வேண்டும்" என்கிறார்கள்.
அதுக்குத்தான் கல்யாணம் கார்த்தி என்று இருக்கே? ஆனா அது காணாமப்போயிண்டு இருக்குத்தான். முன்னேயெல்லாம் நாலு நாள் கல்யாணம். 'தங்கள் இஷ்ட மித்ர பந்துக்களுடன் நான்கு நாட்கள் முன்னேயே வந்திருந்து நடத்தி வைக்க வேண்டும் என்றுதான் அழைப்பிதழிலேயே இருக்கும். இப்பல்லாம் ராத்திரி வண்டி ஏறி காலையில் முகூர்த்தத்துக்கு வந்துவிட்டு சாப்பிட்டவுடன் கிளம்பி விடுகிறார்கள். குழந்தைகள் ஸ்கூல் போகாமல் இருக்கக்கூடாது என்று அவர்களை அழைத்து வருவதில்லை. அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி மனைவியும் வருவதில்லை. இப்படித்தான் குடும்பம் சிதறுகிறது" என்றேன்.
"அதனால் அவசியம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார். "நான் அனேகமாக எழுதியிருப்பேனே?" என்று கேட்டேன்.
"இல்ல டாக்டர் இந்த
முக்கியமான விஷயத்தை நீங்க எழுத மறந்துவிட்டீர்கள் என்றார். "சரி நான் அந்த பைலை அதை பார்த்து உறுதி செய்து
கொள்கிறேன். அதில் இல்லை என்றால் புதிதாக பதிவு போடுகிறேன்." என்று சொன்னேன். அவரும் "நானே அதை மீண்டும் ஒரு தரம் பார்த்துவிட்டு
உங்களுக்கு சொல்கிறேன்" என்றார். இன்றைக்கு சாயந்தரம் அவரை போன் செய்து "டாக்டர் முழுக்க பார்த்துவிட்டேன். அந்த விஷயத்தை நீங்கள் எழுதவில்லை என்று
சொன்னார். அதனால என்னப்பா, இன்று இரவே பதிவு போட்டு விடுகிறேன் என்று சொன்னேன். இதோ போட்டு விட்டேன்.

