Pages

Friday, October 31, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 6



தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11 ॥

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்துமுனங்
கேள்வி யவர்க்குரைத்தான் கேண்மையுட-னூழ்விணையா
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்
கெத்தாலு மின் பளிக்கு மீது.

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்து முனம் கேள்வி அவர்க்கு உரைத்தான் கேண்மையுடன் ஊழ்விணையாம் இத்தாலே துய் பயன் உற்றிடும் உங்களுக்கு இங்கு எத்தாலும் இன்பளிக்கும் ஈது.

(இந்த வேள்வியினால் தேவதைகளை வளரச் செய்யுங்கள். அந்த தேவதைகள் உங்களை வளரச் செய்யட்டும், தன்னலம் கருதாத தன்மையுடன் ஒருவர் மற்றொருவரை வளரச் செய்த நீங்கள் மேலான நன்மையை அடைவீர்களாக.)

தேவதைகளுக்கு நாம் பூஜை செய்து உணவளிக்கிறோம். அவை மூலம் பகவான் நமக்கு வேண்டியதை தரான்.

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:।
தைர்தத்தாந ப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12 ॥

அன்னபெரு வேள்வியா லாங்கிறைஞ்சப் பட்டமார்
மன்ன பெரியவன மற்றளிப்ப - ரின்னே
யவர்தந்த போக மவர்க்களியா துண்பான்
கவர்கின்றான் கள்வனே காண்.

அன்ன பெரு வேள்வியால் ஆங்கு இறைஞ்சப் பட்டமார் மன்ன பெரியவன மற்று அளிப்பர். இன்னே அவர் தந்த போகம் அவர்க்கு அளியாது உண்பான் கவர்கின்றான். கள்வனே காண்.

(வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.)

பார்க்கனும்னாலும் அக்னி உதவியாலதான் முடியும். மூச்சு விட்டாலும் வாயுவாலதான். தண்ணி குடிச்சாலும் அது வருணனாலதான். காலை வைத்து நடந்தாலும் அது பூமியாலதான். அன்னம் பூமியாலதான். மழை வேண்டும்னாலும் மேகங்களாலதான். இப்படி இந்த தேவைதைகளோட உதவி இல்லாம உலகத்திலே எந்த காரியமும் நடவாது.

இத்தனை உபகாரத்தை வாங்கிகிட்டு ஒரு நன்றிக்கடனா ஒரு சின்ன பூஜையை செய்யாட்டா என்ன பிரயோசனம்? ஆனா நாம் செய்கிற இந்த சின்ன கர்மாவாலதான் அவங்க ஜீவிச்சு இருக்க முடியும் என்கிறது இல்லை. அதுக்கு பகவான் இருக்கான்; பாத்துப்பான். கோவில்லே நாம ஒரு தீபம் போடறதாலேதான் ஈஸ்வரன்/ பெருமாள் நல்லா இருக்காரா? நாம் பூமாலை வாங்கி கொண்டு போய் போடறதாலேதான் நல்ல இருக்காரா? அப்படி ஒண்ணுமில்லே.

அந்த அந்த கோவில்கள்லே சரியா நடத்துகிற கர்மாக்கள் அந்த இடத்திலே நல்லா தெய்வ இருப்பை உண்டாக்கி அங்கே வர மனிதர்களுக்கு பயனாகும். இதிலே கோவில்ல இருக்கிற பகவானுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை.

ஒரே ஒரு சமித்தையோ ஒரே ஒரு ஸ்பூன் நெய்யையோ எவ்வளவு தேவதைகளை உத்தேசிச்சு ஹோமம் செய்கிறோம்? அதனால் அளவு என்கிறது அவ்வளவு முக்கியமில்லை. அந்த உத்தேசமேதான் தேவதைகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறதாம் - அப்படின்னு வித்யாரண்யர் சொல்கிறாராம். தேவதைகளை உத்தேசித்து செய்கிற இந்த த்ரவ்ய த்யாகமே நமக்கு தர்மம்.

தேவர்கள் கொடுக்கிறதை அவர்களுக்கும் பயனாகிறதா செய்யணும். ஹோமம் யாகம்ன்னு செய்ய முடியலைனாலும் உலக உபகாரமா அன்னதானம் மாதிரி செய்யணும். குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் போது அவனுக்கு அந்த உணவை அர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிடணும். யார் இப்படி நன்றி இல்லாம இருக்கானோ அவன் திருடன் அப்படின்னு கண்ணன் சொல்றான்.

Thursday, October 30, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி --5:




யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9 ॥

ஐவகைய வேள்வியினுக் காகாக் கருமங்கண்
மெய்வகையே கட்டு மிகவுலகை-யிவ்வகையா
யாங்கதனுக் காக வமைந்துன் னசையைவிடுத்
தீங்கிதனை நின்றே யியற்று.

ஐவகைய வேள்வியினுக்கு ஆகாக் கருமங்கள் மெய் வகையே கட்டும் இகவுலகை. இவ்வகையாய் ஆங்கு அதனுக்காக அமைந்து உன் ஆசையை விடுத்து ஈங்கு இதனை நின்றே இயற்று.

(யாகத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்ற கர்மம் தவிர வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித ஸமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. (ஆகையால்) அர்ஜுன! பற்றுதல் இல்லாமல் அந்த யாகத்தின் பொருட்டே கடைமையை நன்கு ஆற்றுவாயாக.)

கண்ணன் சொல்கிறான்: கர்மாவை விட்டதாலே மட்டும் லாபம் இல்லை. விட்டுவிடாததாலே மட்டும் அது தப்பும் இல்லை. கர்மாவோட பலனைதான் விடச்சொல்றேன்?

இங்கே யாகம் என்கிற சொல்லுக்கு கொஞ்சம் விரிவான அர்த்தமே எடுத்துக்கணும். பகவத் அர்ப்பணமா செய்கிற எல்லா கர்மாக்களையுமே அப்படி எடுத்துக்கலாம்.

கர்மா செஞ்சா அதோட பலன்- மேலும் விருப்பு, வெறுப்பு - மேலும் வேலை ன்னு ஒரு மாய சுழல்ல மாட்டிப்போமே என்பது கவலை. எதை செய்தால் அது நம்மை சம்சாரத்தில கட்டுப்படுத்தும், எதை செஞ்சா கட்டுப்பாடு செய்யாதுன்னு சரியாவே வரையரை செஞ்சு வெச்சு இருக்கான் பகவான். இததான் சாஸ்திரங்கள்ல சொல்லி இருக்கு. குடும்பத்தை நடத்த வேலை செய்வதும் அதுக்கான தேவையான வேலைகளை செய்வதும் க்ருஹஸ்த தர்மம். யார் யார் எந்த வேலை எப்படி எவ்வளவு செய்யணும்ன்னு விதிச்சாச்சு.

தேவ பூஜையா செஞ்ச எதுவும் ராகத்வேஷங்களை சம்பாதிச்சு கொடுக்காது. அப்படி இல்லாம சொல்லப்படாத ஏதேதோ வேலைகளை உன் பயனுக்காக செய்தால் அவை சம்சாரத்தில அழுத்தும்தான். உலகத்துக்கு நல்லதுன்னு செய்கிற எதுவும் அப்படி அழுத்தாது.

பயனை கருதாம ஆரம்பத்திலே இருப்போம்ன்னு இல்லை. முதல்ல ஏதோ ஒரு பயனை கருதிதான் செய்வோம். அப்புறமா முன்னேற முன்னேற பயன்கருதாம செய்வோம். அப்படி பயன்கருதாம செய்ய ஆரம்பிக்கிற போது கொஞ்சம் கொஞ்சமா விருப்பு வெறுப்பு போயிடும்.



Wednesday, October 29, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -4



நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8 ॥


நின்றுநீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத்-துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி

நின்று நீ செய்யு(ம்) நியதக் கருமத்தை என்றும் இது மற்று அறிவில் ஏற்றமுடைத்து. உன்றன் உடல் நடப்பும் ஓடாது ஒரு கருமம் அற்றால்; அடல் அடர்த்த தோளா, அறி.

(நீ சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் கர்மங்களை ஆற்றுவது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது.)

கர்மாவையே நீ செய். இல்லைனா சரீர யாத்திரையே நடக்காது. எல்லாத்தையும் விட்டு ஞானம் சித்திச்சபின்தான் சரீர யாத்திரை பற்றி ஒத்தன் கவலை பட மாட்டான். ஞானம் வந்தவன் ஜடபரதர் போல ஒண்ணும் செய்யாம இருப்பான். சுகர் போன்ற ஞானிகள்தான் சாப்பாடு உடை இருக்க இடம் இதல்லாம் கிடைக்குதோ இல்லையோன்னு கவலை படாம இருப்பாங்க.

சன்னியாசிகள்ல ஞானியான சன்னியாசி, ஜிக்ஞாசுவான சன்னியாசி ன்னு இரண்டு உண்டு. (இதெல்லாம் விரிவா ஞான வழில பாப்போம்.)

ஞானம் சித்திச்சுதான் சன்னியாசம் என்று இல்லை. சன்னியாசத்தாலேதான் ஞானம்னும் இல்லை. யாருக்கு குடும்பத்தில் இருந்து கொண்டு ஞானம் தேடறது கஷ்டம்ன்னு தோணுதோ, திட வைராக்கியம் வந்தாச்சோ, சன்னியாச தர்மத்தை கடை பிடிக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கோ அவன் குடும்பத்தை விட்டு விட்டு சன்னியாசம் வாங்கிக்கலாம். இது கஷ்டம் என்கிறதாலதான் சாஸ்திரங்கள்லே கலியுகத்திலே இதை செய்யாதேன்னு சொல்லி இருக்காங்க. குரு பரம்பரையை காப்பாத்தவும் உண்மையா வைராக்கியம் வந்தவங்களும் சிலர் சன்னியாசியா ஆகிறது சரிதான். மத்தவங்க சன்னியாசம் வாங்கிக்கிறது கொஞ்சம் பிரச்சினையானது. பெரும்பாலானவங்க வீட்டிலேயே இருந்து கொண்டேதான் ஞானம் பெற முயற்சி பண்ணணும்.

ஞானிகளை விட ஞானத்தை நோக்கி போகிறவர்கள்தானே -ஜிக்ஞாசு- நிறைய பேர்? இவர்களுக்கு சரீரத்தை காப்பாத்திக்க வேண்டி இருக்கிறதால சன்னியாசிங்களுக்கும் பிக்ஷை எடுத்து சாப்பிட கர்ம தர்மம் சொல்லி இருக்கு. பட்டினி கிடந்து சாகிறதால ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்காது. பசி இருக்கும் போது சாப்பிடாம இருந்தா அது ஆத்ம ஹத்தி தோஷம் ஆகும்.

இப்படி ஞானயோகிக்கும் கர்மம் முழுக்க விடறதில்லையே. மேலும் கர்ம யோகத்திலேயே அறிவும் ஞானமும் உண்டாச்சே!

மனைவி மக்களை விலக்கினாலும் சரீரமே ஒரு வீடா இருக்கு. ஞான கர்ம இந்திரியங்கள் எல்லாம் கூடவே வருதே! அது எல்லாம் மனசு மூலமா வெளியே வரத்தானே வரும்? அப்படி வரும்போது அவை கெட்ட சமாசாரங்கள்ள போகாம இருக்கணுமே! பசி தாகம் இருக்கவே இருக்குமே! அவை தங்களை கவனிக்க வேலை செய்ய தூண்டுமே!

ஞான யோகம் பழக்கம் இல்லாதது. கர்ம யோகம் சின்னதுலேந்து பழகியது.

ஞான யோகத்துக்கு பற்று இல்லாம இருக்கிறது துவக்கப்புள்ளி. அங்கேந்து மேலே முன்னேறலாம். ஆனா கர்ம யோகத்துக்கு அது கடைசி புள்ளி. கொஞ்சம் கொஞ்சம் பற்று இல்லாத நிலையிலேயே கர்ம யோகத்தை ஆரம்பிக்கலாம். அது சுலபமானதும் கூட. அனேகமா எல்லாரும் கொஞ்சம் முயற்சில கர்மாவை செய்துடலாம். இப்படி முயற்சி ஜெயிக்கிறதால மேல மேல தொடர்ந்து சாதனை செய்ய ஏதுவா இருக்கும். செயல்லேந்து நழுவுறது குறைவாவே இருக்கும்.

இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுனனை கர்மத்திலே ஈடுபாடு கொள்ள சொல்கிறான் கண்ணன்.

Monday, October 27, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -3



கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6 ॥


கரும கரணங்கள் காட்டித்தன் னெஞ்சில்
வருமப்பொருணினைந்து மன்னிப் - பெருமைவினைக்
கைம்மையினாற் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினா னென்றே புகல்.

கரும கரணங்கள் காட்டித் தன் நெஞ்சில்
வருமப் பொருள் நினைந்து மன்னிப் - பெருமை வினைக்
கைம்மையினால் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினான் என்றே புகல்.

(அறிவிலியான எவன் புலன்கள் அனத்தையும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்கள நினத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தையுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.)

வாசனைகள மறையாமல் சம்சாரத்தை விட்டு விட்டு போனாலும் அது சன்னியாசம் ஆகாதே. துர் வாசனைகள் இவனை ஏமாத்தி வேறு மாதிரி திரும்பி வந்துடும். இது பொய் ஒழுக்கம் ஆகும். இந்திரியங்களால த்யாகம் பண்ணாலும் மனசால பண்ணலையே. இவனைவிட "ஆமாம் ஐயா, என்ன வேதாந்தம் கேட்டாலும் வைராக்கியம் வரலையே! இந்த கடமைகள் என்னை விட்டு போகாது போல இருக்கேன்" னு உண்மைய சொல்கிறவன் மேல்.

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுந।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7 ॥


நெஞ்சாற் புலனடக்கி நேர்கரும யோகத்தை
யெஞ்சா துழல்கரும விந்தியத்தாற் -றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந்தன் மையுடன் றொத்தற்றான்
வான்றொடர்ந்த வண்புகழான் மற்று.

நெஞ்சால் புலன் அடக்கி நேர் கரும யோகத்தை
எஞ்சாது உழல் கருமவிந்தியத்தால் -துஞ்சாது
தான் தொடங்கி நன்றியலும் தன்மையுடன் தொத்து அற்றான்வான்
தொடர்ந்த வண் புகழான் மற்று.

(ஆனால் அர்ஜுன! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.)

நமக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை பயன்படுத்திக்கொண்டே நாம் ஆன்மீகத்திலே முன்னேற பார்க்கணும். ஒருத்தருக்கு கணக்கு ரொம்ப நல்லா வரலாம். இன்னொருத்தர் "கணக்கு, பிணக்கு, ஆமணக்கு" ன்னு சொல்லாம். இப்படி பிடித்த சமாசாரங்களும் திறமை இருக்கிற சமாசாரங்களும் ஆளுக்கு ஆள் வேறு படும்.

"மனசால யார் ஒருவன் புலன்களை நியமித்து" என்பதையும் கவனிக்கணும். அவை இழுக்கிற விஷயத்திலே நாம் போறது இல்லை. அப்படி செய்தா அது பற்றுல கொண்டுவிடும். இப்படி பற்று இல்லாம போனால் அது ஞான யோகத்துக்கு தகுதியை தரும். புலன்களை அடக்காம, மனசு பரிபக்குவம் இல்லாமல் சன்னியாசம் வாங்கிறதைவிட குடும்பத்தில இருந்து கொண்டே கர்மாவை செய்யலாம்.

இந்த பதிவுகளிலே சன்னியாசத்தை குறித்து சொல்கிற எதுவும் உள்நோக்கிலோ யாரையும் குறிப்பாக மனசில வைச்சுக்கொண்டோ சொல்லவில்லை. பொதுவாக நூல்களிலே சொல்லி இருக்கிறதையும், பெரியவர்கள் உபன்யாஸம் செய்ததையும், பல நாட்களாக கேள்விப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும்தான் எழுதி வருகிறேன்.
~~~~~~~~~
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Friday, October 24, 2008

கண்ணன் காட்டிய கர்ம யோகம் -2


ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4 ॥

இட்டத்தாற்கன்மத் திழியார் வினையொழியார்
விட்டத்தாற் பேறதனை மேலடையார்- தொட்டொன்றைச்
செய்யா ரிறைப்பொ ழுதுநில்லார் செறிந்தியல்வர்
மெய்யார் குணத்தெவரு மிக்கு

இட்டத்தால் கன்மத்து இழியார் வினை ஒழியார்.
விட்டத்தால் பேறதனை மேல் அடையார்- தொட்டு ஒன்றைச்
செய்யார் இறைப் பொழுது நில்லார் செறிந்து இயல்வர்
மெய்யார் குணத்து எவரு மிக்கு

(மனிதன் கர்மங்களைச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே நிஷ்கர்ம நிலையோ - கர்மயோக நிஷ்டையோ அடைவதில்ல. கர்மங்களைச் செய்யாமல் துறப்பதாலேயே ஸித்தியை அதாவது ஸாங்க்யயோக நிஷ்டையையும் பெறுவதில்லை.)

யாராவது "அட, ஏன்டா கர்ம யோகம் கஷ்டப்பட்டு செய்யணும்? கர்ம யோகம் செஞ்சு சித்த சுத்தி வந்துதான், ஞான யோகம் செஞ்சுதான் நாம யார்ன்னு புரிஞ்சுக்கணுமா? அப்ப நேரடியா ஞான யோகம் செய்யலாமே" ன்னு நினைச்சா,

கர்மாவை செய்யாமலே யாரும் அதிலிருந்து விடுபட முடியாது. அதெப்படி? அப்படின்னா கர்மாவை செஞ்சுண்டே விட முடியுமா என்ன? ஒரேயடியா விட்டாதானே அதை விடலாம்? அப்படியில்லை.

உடம்பு சரியில்லை. வைத்தியர்கிட்டே போறோம். மருந்து ஒண்ணு கொடுத்து "விடாம சாப்பிடு" என்கிறார். மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கணும் என்கிறது அவரோட உத்தேசம் இல்லை. மருந்து சாப்பிட்டு கொண்டே இருந்தா அப்புறம் ஆரோக்கியம் வந்த பிறகு "போதும், மருந்து சாப்பிடாதே" ன்னு சொல்வார் வைத்தியர்.

ஆக அப்படிப்பட்ட காலம் வர வரை வேலைசெய்து கொண்டே இருக்கணும். கர்மாவை பலனை எதிர்பாக்காம செஞ்சு செஞ்சு அதில பலன் என்ன கிடைச்சாலும் சரின்னு ஏத்துண்டு போகிற மனப்பக்குவம் வந்தச்சுன்னா ஞான யோகத்துக்கு போகலாம். "கர்மண்யேவாதிகாரஸ்தே" ன்னு சொன்னவன் "சர்வ கர்மாண் பரித்யஜ்ய" என்று சொல்லும் நிலை வரட்டும்.

கர்மாக்களை விட்டு விட்டதாலேயே சித்தின்னும் இல்லை. பொறுப்பில்லாம தன் கர்மாக்களை விட்டுட்டு பயந்து ஓடறவன் ஞானியோ சித்தனோ ஆகிவிட முடியாது. வைணவப் பெரியார்களை பாத்தா குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்று அவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து முடித்து அப்புறமா சன்னியாசம் வாங்கிகொள்வர். ப்ரம்மசர்யத்திலேந்து நேரடியா சன்னியாசம் போகிறது ஒரு விதத்தில் நல்லது - முன்னேற்றம் சீக்கிரமா இருக்கும்னாலும்- அனுபவிக்காம விட்டதை பத்தி அப்பப்ப நினைவு வந்து மனசு கலைய வாய்ப்பு இருக்கவே இருக்கு. குறிப்பா இந்த கலி யுகத்திலே. சன்னியாசின்னு ஆரம்பிச்சு ஏதோ ஒரு மடம் போல அமைப்புன்னு போய் அங்கே விரும்பத்தகாத விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறதை பாத்து கொண்டுதானே இருக்கோம்?

ஞான யோகம் போகணும்ன்னு ஆசை இருந்தா மட்டும் போதாது. அத செய்ய யோக்யதை- சக்தியும் வேணுமே?

ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5 ॥


[வெண்பா முன்னதில் பின் பாகம் இதை சொல்லிவிட்டது]

(ஸந்தேஹமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம்கூடச் செயல் புரியாமல் இருப்பதில்ல. ஏனெனில் மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ரக்ருதியிலிருந்து உண்டான குணங்களால் தன்வசமிழந்து வேறு வழியின்றிச் செயல் செய்யத் தூண்டப்படுகிறன.)

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது.

ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார்.

சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார்.

அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்.

அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.