Pages

Friday, September 13, 2013

பிள்ளையார் விசர்ஜனம்...


பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சாச்சு! அங்கங்க ஏற்கெனெவே விசர்ஜன நிகழ்வுகளும் நடக்க ஆரம்பிச்சாச்சு.
வருஷா வருஷம் இதை ஒட்டி சில கேள்விகள் எழும். சில விஷயங்கள் விவாதிக்கப்படும்.
நீர்நிலை மாசு படுது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீர்நிலைகள் மாசு படுவது பத்தி கவலைப்பட்டுத்தான் நீர்நிலைகளையே காணாமல் போகச்செய்கிறார்கள் என்று தோன்றுகிறது! போரூர் ஏரி தனியார் உடமை என்று சொல்லி அதை ஒரு பகுதியில் மண் போட்டு தூர்க்கிறார்கள் என்று செய்தி படித்தேன்.

முன் காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறு ஊருக்கு ஊர் குளம் இருந்த காலத்தில் பூஜை முடிந்து பிள்ளையரை அதில் சேர்ப்பதில் கஷ்டமில்லை. இப்போதோ கிணறே கிடையாது. ஊருக்கு ஊர் குளமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.

எங்கிருந்து பிள்ளையார் செய்ய மண் வந்ததோ அங்கேயே அது திரும்பிவிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் கலெக்ஷன் சென்டர் வைத்து அங்கே மண் பிள்ளையாரை பெற்று அவர் வந்த இடத்தில் சேர்க்க வழி செய்யலாம்.

இன்னொரு விஷயம் பிள்ளையாரை விசர்ஜனம் செய்கிறேன் பேர்வழி என்று விநாயகர் சிலைகளை காலால் உதைத்து ஒடித்து எல்லாம் செய்கிறார்கள் என்பது.
இதைத்தான் முக்கியமாக சொல்ல வந்தேன். இதில் நம் பேதமை கொஞ்சம் இருக்கிறது.
ஆன்மீகத்தில் ஒரு வழி அத்வைதம். இது மிக உயர்ந்த வழி எனப்படுகிறது. இதன் படி பார்த்தால் உதைப்பவனும் இல்லை உதை வாங்குகிற வஸ்துவும் இல்லை. ஆனால் இந்த நிலையில் சாதாரண மக்களாகிய நாம் இருக்க இயலவில்லை. இதை விட்டு விடலாம்.
சாதாரண மனித மட்டத்தில் இருந்து சரியாக இருந்து யோசித்தால் சில விஷயங்கள் புரிய வரலாம்.
கோவிலில் வைக்க ஒரு சிற்பி கல்லை செதுக்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க செதுக்க அது உருவம் பெறுகிறது. ஏறத்தாழ முழு உருவம் பெற்றுவிட்ட நிலையிலும் அவன் அதன் மீது ஏறி நின்று கூட வேலை செய்வான். அதில் அவன் தவறேதும் காண்பதில்லை. ஏன் என்றால் அது இன்னும் கல்தான். அது எப்போது ஸ்வாமி ஆகிறது? எப்போது அதை நெல்லிலும் நீரிலும் இட்டு வாசம் செய்வித்து மந்திரங்கள் ஓதி கண் திறந்து சடங்குகளை பூர்த்தி செய்கிறார்களோ அப்போதுதான் அது ஸ்வாமித்வம் பெறுகிறது. இப்போது அந்த சிற்பியை கூப்பிட்டு காலால் மிதி பார்க்கலாம் என்றால் அபசாரம் அபசாரம் என்பான்! விதிகள் படி பூஜைகள் நடக்க நடக்க அந்த இறைத்தன்மை அதிகரிக்கிறது. மாறாக பல வருஷங்களாக கும்பாபிஷேகம் செய்யாமலும் நித்திய பூசைகள் சரிவர இல்லாமலும் போனால் அப்போது அங்கே ஸ்வாமித்வம் குறைகிறது.

பூஜையின் போதே எப்படி ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கோ, சரஸ்வதி படத்துக்கோ எப்படி ஸ்வாமித்வம் வருகிறது? ப்ராணப்ரதிஷ்டை என்று செய்து பூஜை முடியும் வரை ப்ரீதி பாவத்துடன் இந்த சித்திரத்தில் / பிம்பத்தில் இரு என்று சொல்ல அந்த சித்திரத்தில்/ பிம்பத்தில் இறைத்துவாம் வருகிறது. இப்படி சங்கல்பம் செய்வதால் பூஜை முடிந்த பின் 'யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி' - உன் இடத்துக்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல அந்த இறைத்துவம் பொது இறைத்துவத்துடன் கலந்து விடுகிறது. அதன் பின் மஞ்சள் பிள்ளையார் வெறும் மஞ்சள்தான். படம் வெறும் சித்திரம்தான்.

பிள்ளையார் சதுர்த்தி சமாசாரமும் அப்படித்தான். பிள்ளையார் பிம்பத்தை மண்ணிலோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸீலோ காகிதத்திலோ செய்து பூஜை செய்ய சங்கல்பத்தால் அங்கே ஸ்வாமித்வம் வந்துவிடுகிறது. விசர்ஜன காலத்தில் கற்பூரம் காட்டி போய் வா என்று அனுப்பிவிட்டால் ஸ்வாமித்வம் போய் விடுகிறது! மீதி இருப்பது வெறும் மண் / ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்/ காகிதம். இதை நடைமுறைக்கு தகுந்தபடி டிஸ்போஸ் செய்வதில் ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பல வருஷங்கள் உயிருடன் இருந்த ஆசாமியை இறந்தபின் கொஞ்சம் மரியாதையுடன் கொண்டு எரிப்பது / புதைப்பது போல இதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடப்பதில்லை. அதனால் நமக்கு மனசு சமாதானம் ஆவதில்லை.இதுக்கு ரொம்ப துன்பம் வேண்டாம் என்கிறதே சொல்ல வந்தது.
நாமும் சோம்பேறித்தனமாக வீட்டில் இருக்கிற மண் பிள்ளையாரை கொண்டு வந்து உற்சவம் நடக்குமிடத்தில் வைத்துவிட்டு ஒரு ரூபாயை உண்டியில் போட்டுவிட்டு பொறுப்பு முடிந்ததாக எஸ்கேப் ஆகிவிடுகிறோம்! வண்டியில் இப்படி சேரும் ஆயிரக்கணக்கான பிள்ளையாரை என்ன செய்ய? தூக்கித்தான் எறிவார்கள். இதற்கு புலம்பினால் என்ன செய்ய? நமக்குத்தான் சிரத்தை போதவில்லை.

நம் வீட்டு பிள்ளையாரை நாமே டிஸ்போஸ் செய்வோம்
 

Thursday, September 12, 2013

அனந்தப்பள்ளி அன்னதானம்....


 "ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?” என்று கேட்க அடுத்த கதை வந்தது!......
--
இந்த கதையை சொல்லறத்துக்கு முன்னே மஹாபாரதக்கதை ஒண்ணை நினைவு படுத்தினா நல்லா இருக்கும்!
மஹா கோபியான துர்வாசர் தன் சிஷ்யர்கள் சிலருடன் திருதராஷ்ட்ரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். திருதராஷ்ட்ரன் முறை படி அவரை வரவேற்றான். தன் மகன் துரியோதனை அழைத்து "அப்பா, இவரை நன்றாக கவனித்துக்கொள். இவர் ஆசீர்வாதம் செய்துவிட்டால் எப்பவுமே உனக்குத்தான் வெற்றி” என்றான்.
துரியோதனுக்கு இது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவரை உபசரித்தான். ஆனால் துர்வாசர் மகிழ்ந்ததாக தோன்றவில்லை.

தன் மாமா சகுனியிடம் இப்படி தெருவில் போகிறவர்களையும் காட்டுவாசிகளையும் உபசரிக்கும் நிலைக்கு வந்துவிட்டேனே என்று துரியோதன் புலம்பினான். சகுனி "டேய் கவலைப்படாதே! இதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம். நான் சொல்கிறபடி செய். துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடு. அவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோ, அவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும். இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார்? சாபம் கொடுப்பார். நமக்கு நல்லது!” என்றான்.

துரியோதனன் அதே போல துர்வாசர் கிளம்பும் போது அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமி, எனக்கு கிடைத்த இதே பாக்கியம் என் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும். காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் சென்று அவர்களது உபசாரத்தையும் தாங்கள் ஏற்க வேண்டும் ” என்று வேண்டிக்கொண்டான். துர்வாசருக்கும் பாண்டவர்களை காண வேண்டும் என்று தோன்றியதால் அவரும் பாண்டவர்களைத் தேடிக்கிளம்பினார். காட்டில் அவர்களை ஒரு நடுப்பகல் தாண்டிய நேரத்தில் கண்டுபிடித்தார். பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். பக்கத்தில் நதியில் நீராடி வருகிறோம். உணவு தயாராகட்டும் என்று சொல்லி அனைவரும் நீராடச்சென்றனர். பாண்டவர்கள் திகைத்தனர். சூரியன் கொடுத்த பாத்திரத்தில் இருந்து தினசரி உணவு எடுத்து இருக்கும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு கழுவி வைத்துவிட்டால் அடுத்த நாள்தான் உணவு கிடைக்கும்
 
ஆபத்து வந்தால்தானே நாம் கடவுளை நினைக்கிறோம்! த்ரௌபதி க்ருஷ்ணனை வேண்டினாள்! கண்ணா, இது என்ன சோதனை! எல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே! இப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன்? எங்கே போவேன். முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றே! நீதான் காப்பாற்ற வேண்டும்!
உடனே அங்கே க்ருஷ்ணன் வந்து சேர்ந்தான்.

இப்போதுதான் உன்னை நினைத்தேன். ஒரு விஷயம்!
உன் விஷயம் எல்லாம் அப்புறம் ஆகட்டும். இப்போது எனக்கு மஹா பசி. உணவிடு!
ஹா! கண்ணா நீயுமா என்னை சோதிப்பாய்?
என்ன சோதனை? அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பாடு போடு.
அதைத்தான் சொல்கிறேன். உணவு பாத்திரம் காலி.
பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்.
பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே!
பரவாயில்லை அதை இங்கே கொண்டு வா!

பாத்திரத்தில் ஒரு மூலையில் ஒரே ஒரு பருக்கை சாதமும் கீரையும் ஒட்டிக்கொண்டு இருந்தது. த்ரௌபதி தலை குனிந்தாள்!
க்ருஷ்ணன் பருக்கையை எடுத்து உண்டான், தண்ணீர் குடித்தான் ஏதோ பெரிய விருந்து சாப்பிடது போல ஏப்பம் விட்டான். சரி சரி, நான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்!

நீராடி கடன் முடித்து கரையேறிய துர்வாசர் மற்றும் அவரது சிஷ்யர்களுக்கு திடீரென்று வயிறு நிரம்பிய உணர்வு! இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை! இப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவது? பேசாமல் அவர்கள் கிளம்பி வேறு திசையில் போய்விட்டனர்!
--
ஆந்திராவில் மதனப்பள்ளி என்றொரு ஊர். அக்கம் பக்கம் எல்லாம் மலைவாசிகள், குறவர்கள் வசிக்கும் கிராமங்கள் ஏறத்தாழ 30-40 இருந்தன. அங்கே மஹா பெரியவா கேம்ப். உள்ளூர்வாசிகள் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்து கொண்டு இருந்தனர். அன்னக்கொடி கட்டிவிட்டால் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் செய்தே தீர வேண்டும். திடீரென்று ஒரு நாள் இந்த மலைவாசிகளிடம் ஒரு சலசலப்பு. டவுனில் அன்னதானம் செய்கிறார்களாமே! நாமும் போய் விருந்து சாப்பிட்டு வரலாம். காலையில் கிளம்பி ஆங்காங்கே மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு மதனப்பள்ளியை நோக்கி நடக்கலாயினர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி சுமார் 200- 250 பேர் அன்னதான கூடத்தை நோக்கிப் போய் கொண்டு இருந்தனர். ஆனால் அங்கேயோ அன்றைய உணவுப்பறிமாறல் முடிந்துவிட்டது. வழக்கமாக இவ்வளவு பேர் என்று ஒரு கணக்கில்தானே சமைப்பார்கள்? இந்த நேரத்தில் இத்தனை மலைவாசிகள் உணவுக்கு வருவதாக தகவல் உணவு கூடத்துக்கு போயிற்று. அங்கே பொறுப்பில் இருந்தவர்கள் கையை பிசைந்தனர். துளிக்கூட மீதி இல்லையே! பாத்திரங்களைக்கூட கழுவி கவிழ்த்தாயிற்று! புதிதாக சமைக்கலாம் என்றால் முகாம் முடியும் தறுவாயாக இருந்ததால் ஸ்டோரும் காலி! என்ன செய்வது? மஹா பெரியவா திருவடிகளே சரணம்!

பிற்பகல் தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்த பெரியவா திடீரென்று கார்யஸ்தரை அழைத்தார். “டேய், எனக்கு ரொம்ப பசிக்கறதேடா! ஏதாவது செய்யேன்!” கார்யஸ்தர் திகைத்தார்! பெரியவா இப்பத்தானே பிக்ஷை பண்ணா? அதுக்குள்ள பசிக்கிறதா! என்ன விந்தை இது?
"என்னடா யோசிக்கறே? எனக்கு இப்ப ரொம்ப பசிடா!"
"சாப்பாட்டுக்கடை முடிஞ்சுடுத்தே பெரிவா! இருந்தது எல்லாத்தையும் பறிமாறியாச்சு. மீதி ஒண்ணுமே இல்லையே!"
"சரி சரி, நீ ஒண்ணும் பண்ண மாட்டே. கிடக்கட்டும்."

தரிசனத்துக்கு வந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார். பெரும்பாலும் காலையே தரிசனம் செய்தவர்கள். அதனால் புதிதாக அவர்கள் கையில் ஒன்றுமில்லை. ஒருவர் மட்டும் கையில் சிறு பொட்டலம் வத்து இருந்தார். அவரை கிட்டே வரும்படி சைகை செய்தார். அவரும் கிட்டே வந்து தன்னிடமிருந்த பொட்டலத்தை மூங்கில் தட்டில் வைத்து நமஸ்கரித்தார். பெரியவா பொட்டலத்தை பிரிந்தார். உள்ளே கல்கண்டு இருந்தது. அதில் ஒன்றை எடுத்தார். அதையும் கீழே வைத்து கையால் தட்ட அது சுக்கு நூறாகியது. அதில் ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். கமண்டலத்தில் இருந்த நீரை ஒரு உத்தரணி அளவு வாயில் விட்டுக்கொண்டார். அடுத்து ஒரு பெரிய ஏப்பம் விட்டார்!

அப்பாடா! இப்பத்தான் பசி அடங்கித்து என்றார்! கல்கண்டு கொண்டு வந்தவரைப்பார்த்து நீ இன்னிக்கு மகத்தான தொண்டு செஞ்சிருக்கே! ஒரு இருநூறு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டே! என்றார்!

அன்னதான மண்டபத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது மலை வாசிகள் கூட்டம். ஆச்சு, இதோ இந்த மூலை திரும்பினால் மண்டபம் இருக்கு இடம் வந்துவிடும்.
திடீரென்று அவர்கள் எல்லாருக்கும் வயிறு நிரம்பிய உணர்வு! இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இப்ப சாப்பிட முடியாது போலிருக்கே! ஆமாம் இன்னொரு நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம். கூட்டம் அப்படியே ஊரை சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டு கிராமத்துக்கு திரும்ப கிளம்பிவிட்டது!
 

Wednesday, September 11, 2013

ஜகத் குரு!


திருவண்ணாமலை பெரியவரை அண்மையில் சந்தித்தேன். வழக்கம் போல மஹா பெரிவா கதை சொல்லுங்கன்னு கேட்டேன். அவர் சொன்ன கதை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதன் கருவை தெய்வத்தின் குரலில் படித்து இருக்கிறேன். ஆனால் அதன் பின் இவ்வளவு கதை இருப்பது தெரியாது!
==
மஹா பெரியவாளின் யாத்திரை காசி நகரை நெருங்கியது. காசி ராஜா மதன் மோஹன் மாளவியா. ஆதித்ய நராயண சிங்.  அவர் பெரியவாளை பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார். சிலருக்கு இது பிடிக்கவில்லை! அவர்கள் ராஜாவிடம் சென்று காஞ்சி மடம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் காஞ்சி மடாதிபதிகள் ஜகத் குரு என்று அழைத்துக்கொள்வது சரியில்லை என்றும் "போட்டுக் கொடுத்தார்கள்.” இதை கேட்ட ராஜாவுக்கு மனசு சஞ்சலப்பட்டு விட்டது. வரவேற்புக்கு எல்லாம் ஏற்பாடு ஆகிவிட்டதே, என்ன செய்வது. யோசித்து யோசித்து குழம்பி, கடைசியில் பூர்ண கும்பம் சொடுப்பதை தவிர்த்துவிட நினைத்தார்.
காசி ஹிந்து சர்வ கலாசாலையின் சம்ஸ்க்ருத துறை பேராசிரியரை அழைத்து நாளை நீங்கள் சென்று பூர்ண கும்பம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர் அதிர்ச்சியுடன் "ஏன்? என்ன ஆயிற்று? உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா, தீட்டு ஏதும் வந்துவிட்டதா?” என்றூ வினவினார். ராஜா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.
பேராசிரியருக்கு ராஜாவின் மனசை யாரோ கலைத்து இருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது.
"பூர்ண கும்பத்தை நான் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன். அது நான் செய்தா பாக்கியம்! ஆனால் காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும். அவர் எப்பேர்பட்ட மஹான்! சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியா? யாரோ அவரைப்பற்றி தவறாக சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதா? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று உங்களுக்குத் தெரியாதா? குறைந்தது சம்ஸ்க்ருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா?” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.
திக்குமுக்காடிப்போன ராஜா "சரி சரி நானே நாளை பூர்ண கும்பம் கொடுக்கிறேன். நீங்கள் பக்கத்தில் இருங்கள்!” என்று ஒத்துக்கொண்டார்.

ஊர் எல்லை. ஏராளமான ஜனங்கள் பெரியவாளை எதிர்கொண்டழைக்க கூடி இருக்கிறார்கள். ராஜாவும் ஆஜர்.
பெரியவாளும் வந்து சேர்ந்தார். சூரியன் போல் பிரகாசித்துக்கொண்டு நிற்கும் பெரியவாளை கண்ட ராஜாவின் பூர்ண கும்பத்தை ஏந்திய கைகள் நடுங்குகின்றன. கீழே போட்டுவிடுவார் போல் இருந்தது. பேராசிரியர் அதை தானே வாங்கி வேத மந்திரம் கோஷித்து பெரியவாளிடம் நீட்டுகிறார். அவரும் அதை ஏற்கிறார்.
பின் பேராசிரியரைப் பார்த்து "ராஜாவுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு போலிருக்கே? தாராளமாக கேட்கச்சொல்லு" என்கிறார்.
ராஜா சம்ஸ்க்ருதத்திலேயே கேட்கிறார். “ஜகத் குரு என்பவர் யார்? யாருக்கு அந்த பட்டம் பொருந்தும்?”
பெரியவா சிரித்துக்கொண்டே "இந்த கேள்விக்கு பதில் கிடைக்க சாயந்திரம் வரை பொறுக்க முடியுமா? நான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்பு கூட்டம் என்றும், என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே!”
ராஜாவும் ஒப்புக்கொண்டார்.
மாலை சதஸ் கூடியது.
காசி நகர சார்பாக வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது. பெரியவா ஏற்புரை நிகழ்த்தலானார்.
"இன்றைக்கு ஒருவர் என்னைப்பார்த்து கேட்டார், ஜகத் குருன்னா யாரு? அந்த பட்டம் யாருக்குப்பொருந்தும்?”
கேள்வியை கேட்ட பின் ஒரு முறை நிதானமாக கூட்டத்தினர் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார்.
"நான் பார்க்கிற வரையில் என்னைத்தவிர அந்த பட்டத்துக்கு பொருந்தமானவரா யாரையும் பார்க்கலை!”
கூட்டம் கப்சிப் என்றாகிவிட்டது! ஒரே அதிர்ச்சி! ஒரு சன்யாஸி! தன்னைத்தானே இப்படி புகழ்ந்து கொள்வதா? பலருக்கு ச்சீ என்றாகிவிட்டது.
பெரியவா தொடர்ந்தார்.

"யார் ஜகத் குரு?

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: |
என்று தக்ஷிணாமூர்த்தியை ஜகத் குருவாக சொல்லியிருக்கு.

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
என்று க்ருஷ்ணனை ஜகத் குருவாக சொல்லி இருக்கு.

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
என்று ஆச்சார்யாளையும் சொல்லி இருக்கு.
வேறு யாரையும் இப்படி சொன்னதாக தெரியவில்லை.
ஜகத் குரு என்பதை இரண்டு விதமா அர்த்தம் பண்ணலாம். ஜகதாம் குரு என்றால் ஜகத்துக்கே குரு என்பதாக முன்னே மூன்று பேரை சொன்னேன்.
யாருக்கு 'ஜகத் ஏவ குரு' என்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். யாருக்கு இந்த உலகமே குருவா இருக்கோ அவர் ஜகத்குரு என்றும் அர்த்தம் பண்ணலாம். அப்படிப்பார்த்தா சின்ன வயசில் இந்த மடத்துக்கு வந்ததில் இருந்து லோகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கேன். இன்னமும் பாடம் கற்றுக்கொள்கிறேன். அதனால்தான் வேறு யாரையும் விட எனக்கே அதுக்கு அதிக அருகதை இருக்குன்னு சொன்னேன்"
ராஜா இதை கேட்டதும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார்! சபையில் 'ஓபனாக' "நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியை கேட்டவன். இப்போது புரிந்து போயிற்று. நீங்களே ஜகத் குரு. ஜகத் ஏவ குரு இல்லை, ஜகதாம் குரு!” என்று உணர்ச்சி பொங்க கூறினார். சபையோர் ஆரவாரித்தனர்!
--
இந்த கதையின் இன்னும் ஆதென்டிக் வெர்சன் வேறு இருக்கிறது. சக்கையை விட்டு சாரத்தை மட்டும் கிரஹிக்க ப்ரார்த்திக்கிறேன்.
====
"ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?” என்று கேட்க அடுத்த கதை வந்தது!......