Pages

Friday, September 13, 2013

பிள்ளையார் விசர்ஜனம்...


பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சாச்சு! அங்கங்க ஏற்கெனெவே விசர்ஜன நிகழ்வுகளும் நடக்க ஆரம்பிச்சாச்சு.
வருஷா வருஷம் இதை ஒட்டி சில கேள்விகள் எழும். சில விஷயங்கள் விவாதிக்கப்படும்.
நீர்நிலை மாசு படுது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீர்நிலைகள் மாசு படுவது பத்தி கவலைப்பட்டுத்தான் நீர்நிலைகளையே காணாமல் போகச்செய்கிறார்கள் என்று தோன்றுகிறது! போரூர் ஏரி தனியார் உடமை என்று சொல்லி அதை ஒரு பகுதியில் மண் போட்டு தூர்க்கிறார்கள் என்று செய்தி படித்தேன்.

முன் காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறு ஊருக்கு ஊர் குளம் இருந்த காலத்தில் பூஜை முடிந்து பிள்ளையரை அதில் சேர்ப்பதில் கஷ்டமில்லை. இப்போதோ கிணறே கிடையாது. ஊருக்கு ஊர் குளமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.

எங்கிருந்து பிள்ளையார் செய்ய மண் வந்ததோ அங்கேயே அது திரும்பிவிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் கலெக்ஷன் சென்டர் வைத்து அங்கே மண் பிள்ளையாரை பெற்று அவர் வந்த இடத்தில் சேர்க்க வழி செய்யலாம்.

இன்னொரு விஷயம் பிள்ளையாரை விசர்ஜனம் செய்கிறேன் பேர்வழி என்று விநாயகர் சிலைகளை காலால் உதைத்து ஒடித்து எல்லாம் செய்கிறார்கள் என்பது.
இதைத்தான் முக்கியமாக சொல்ல வந்தேன். இதில் நம் பேதமை கொஞ்சம் இருக்கிறது.
ஆன்மீகத்தில் ஒரு வழி அத்வைதம். இது மிக உயர்ந்த வழி எனப்படுகிறது. இதன் படி பார்த்தால் உதைப்பவனும் இல்லை உதை வாங்குகிற வஸ்துவும் இல்லை. ஆனால் இந்த நிலையில் சாதாரண மக்களாகிய நாம் இருக்க இயலவில்லை. இதை விட்டு விடலாம்.
சாதாரண மனித மட்டத்தில் இருந்து சரியாக இருந்து யோசித்தால் சில விஷயங்கள் புரிய வரலாம்.
கோவிலில் வைக்க ஒரு சிற்பி கல்லை செதுக்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க செதுக்க அது உருவம் பெறுகிறது. ஏறத்தாழ முழு உருவம் பெற்றுவிட்ட நிலையிலும் அவன் அதன் மீது ஏறி நின்று கூட வேலை செய்வான். அதில் அவன் தவறேதும் காண்பதில்லை. ஏன் என்றால் அது இன்னும் கல்தான். அது எப்போது ஸ்வாமி ஆகிறது? எப்போது அதை நெல்லிலும் நீரிலும் இட்டு வாசம் செய்வித்து மந்திரங்கள் ஓதி கண் திறந்து சடங்குகளை பூர்த்தி செய்கிறார்களோ அப்போதுதான் அது ஸ்வாமித்வம் பெறுகிறது. இப்போது அந்த சிற்பியை கூப்பிட்டு காலால் மிதி பார்க்கலாம் என்றால் அபசாரம் அபசாரம் என்பான்! விதிகள் படி பூஜைகள் நடக்க நடக்க அந்த இறைத்தன்மை அதிகரிக்கிறது. மாறாக பல வருஷங்களாக கும்பாபிஷேகம் செய்யாமலும் நித்திய பூசைகள் சரிவர இல்லாமலும் போனால் அப்போது அங்கே ஸ்வாமித்வம் குறைகிறது.

பூஜையின் போதே எப்படி ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கோ, சரஸ்வதி படத்துக்கோ எப்படி ஸ்வாமித்வம் வருகிறது? ப்ராணப்ரதிஷ்டை என்று செய்து பூஜை முடியும் வரை ப்ரீதி பாவத்துடன் இந்த சித்திரத்தில் / பிம்பத்தில் இரு என்று சொல்ல அந்த சித்திரத்தில்/ பிம்பத்தில் இறைத்துவாம் வருகிறது. இப்படி சங்கல்பம் செய்வதால் பூஜை முடிந்த பின் 'யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி' - உன் இடத்துக்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல அந்த இறைத்துவம் பொது இறைத்துவத்துடன் கலந்து விடுகிறது. அதன் பின் மஞ்சள் பிள்ளையார் வெறும் மஞ்சள்தான். படம் வெறும் சித்திரம்தான்.

பிள்ளையார் சதுர்த்தி சமாசாரமும் அப்படித்தான். பிள்ளையார் பிம்பத்தை மண்ணிலோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸீலோ காகிதத்திலோ செய்து பூஜை செய்ய சங்கல்பத்தால் அங்கே ஸ்வாமித்வம் வந்துவிடுகிறது. விசர்ஜன காலத்தில் கற்பூரம் காட்டி போய் வா என்று அனுப்பிவிட்டால் ஸ்வாமித்வம் போய் விடுகிறது! மீதி இருப்பது வெறும் மண் / ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்/ காகிதம். இதை நடைமுறைக்கு தகுந்தபடி டிஸ்போஸ் செய்வதில் ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பல வருஷங்கள் உயிருடன் இருந்த ஆசாமியை இறந்தபின் கொஞ்சம் மரியாதையுடன் கொண்டு எரிப்பது / புதைப்பது போல இதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடப்பதில்லை. அதனால் நமக்கு மனசு சமாதானம் ஆவதில்லை.இதுக்கு ரொம்ப துன்பம் வேண்டாம் என்கிறதே சொல்ல வந்தது.
நாமும் சோம்பேறித்தனமாக வீட்டில் இருக்கிற மண் பிள்ளையாரை கொண்டு வந்து உற்சவம் நடக்குமிடத்தில் வைத்துவிட்டு ஒரு ரூபாயை உண்டியில் போட்டுவிட்டு பொறுப்பு முடிந்ததாக எஸ்கேப் ஆகிவிடுகிறோம்! வண்டியில் இப்படி சேரும் ஆயிரக்கணக்கான பிள்ளையாரை என்ன செய்ய? தூக்கித்தான் எறிவார்கள். இதற்கு புலம்பினால் என்ன செய்ய? நமக்குத்தான் சிரத்தை போதவில்லை.

நம் வீட்டு பிள்ளையாரை நாமே டிஸ்போஸ் செய்வோம்
 

No comments: