Pages

Wednesday, July 1, 2009

ஏன் எல்லாச்சீவரும் முத்தி அடையவில்லை? பதில்



இந்த ஞானியே எல்லா சீவர்களும் ஆனா இவன் மோக்ஷம் அடைஞ்சா எல்லா ஜீவன்களும் மோக்ஷம் அடையணும்.. இல்லைனா ஜீவன்கள் தனித்தனின்னு ஒத்துக்கணும். இப்படி ஒரு கிடுக்கிப்பிடி போடறார் சீடர். (பின்னே இப்படி ஆழமா கேள்வி கேக்கறவருக்கு மரியதை கொடுக்கணுமில்லே? அதான் சீடர். சீடன் இல்லே!)

37.
அறிஞன் எப்படி சகல சீவராய் விளங்குவான்?

எல்லாசீவரு மிவனானென்றீ ரிவன்றான் முத்தியடைந்
தெல்லாச்சீவரு முத்திபெறாம லிருப்பா னேனையா
எல்லாச்சீவரும் வெவ்வேறானா லிவனெல்லா மலனே
எல்லாப்பொருளு முரைத்தருள் குருவேயிதை நீர்மொழீயீரே

எல்லா சீவரும் இவனான் என்றீர். இவன் தான் முத்தியடைந்து எல்லாச் சீவரும் முத்தி பெறாமல் இருப்பானே ஐயா? எல்லாச்சீவரும் வெவ்வேறானால் இவன் எல்லாம் அலனே? எல்லாப் பொருளும் உரைத்தருள் குருவே இதை நீர் மொழீயீரே.
[எல்லா சீவர்களுமாய் இருக்கும் ஞானி முத்தி அடைந்தால் ஏன் எல்லாச்சீவரும் முத்தி அடையவில்லை?]

சரியான கேள்வி அப்பா!
ஆன்மா ஒண்ணுதான். அந்தக்கரணம் பலவிதமா இருக்கிறதாலே ஜீவர்கள் பலவிதமா உற்பத்தி ஆகிறது. இந்த எல்லா ஜீவர்களிலேயும் பிரதி பலிக்கிறது ஒரே ஆத்மாதான். எண்ணிக்கையில்லா உடம்புகளிலே எண்ணிக்கை இல்லா அந்தக்கரணங்கள் குடிகொண்டு இருக்கு. அதிஷ்டான ஆன்மா ஒண்ணுதான் ஆனாலும் அந்தக்கரணங்களிலே பிரதிபலிக்கிற ஜீவன்கள் ஏராளம்.

சந்திரன் பிரகாசிக்கிறது. உலகம் முழுக்க பிரகாசிக்கிற சந்திரன் ஒண்ணுதான்.
இருக்கிற எல்லா நீர் நிலைகளிலேயும் அதோட பிம்பம் தெரிகிறது.
அது ஏரியா இருக்கலாம், குளமா இருக்கலாம், பல விதமான மண் குடங்களில் இருக்கிற தண்ணீரா இருக்கலாம். ஒரு குடம் உடைஞ்சு போனா ஒரு பிரதிபலிப்பு காணாம போயிடும். ஆனா வானத்து சந்திரன் அப்படியேதான் இருக்கு. மத்த நீர் நிலைகளில பிரதிபலிக்கிற சந்திரன்களும் அப்படியேதான் இருக்கும்.

குடத்து சந்திரனுக்கு உண்மையிலேயே தான் வானத்து சந்திரனோட பிரதிபலிப்புன்னு தெரிஞ்சு குடம் உடைஞ்சு வானத்து சந்திரனாகவே ஆகிடும் போது மத்த குடத்து சந்திரன்கள் அப்படியேதானே இருக்கும்? குடங்களிலே இருக்கற தன் பிரதிபலிப்புதான் ன்னு வான சந்திரனுக்கு தெரிஞ்சாலும் குடத்து சந்திரன்களுக்கு அது தெரியாதே!

அதே போல அந்தக்கரணம் நீங்குகிற ஜீவன் மட்டுமே மோக்ஷம் அடையும்; அதிஷ்டான பிரம்மத்திலே ஐக்கியமாகும். அந்தக்கரணம் இருக்கிற ஜீவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.

(இந்த கேள்வியையே இன்னொரு விதமா கேக்கலாம் இல்லையா? எல்லாமே பிரம்மம்னா ஏன் நமக்கு நாம் பிரம்மம்ன்னு தெரிய மாட்டேங்குது?)

38.
விடை:
அகமெனு மான்மாபூரண மேகமனேக விதஞ்சீவர்
அகமெனு மந்தக்கரணோ பாதிகளளவிலை யாதலினால்
சகமுழுதுங் குளிர்சந்திர னேகஞ்சலசந்திரர் பலராம்
சகமதிலேரி குளஞ்சிறுகுழி சால்சட்டி குடம்பலவால்

அகமெனும் ஆன்மா பூரணம், ஏகம். (ஒன்றே) அனேக விதம் சீவர், அகமெனும் அந்தக்கரண உபாதிகள் அளவிலை (ஆதலினால்.) சக முழுதும் குளிர் சந்திரன் ஏகம். (ஒன்றே) சல சந்திரர் பலராம். சகம் அதில் ஏரி, குளம், சிறுகுழி, சால் சட்டி குடம் பலவால்.

[சந்திரன் ஒன்றே ஆனாலும் நீர் நிலைகள் பலவாததால் அதில் பிரதிபலிக்கும் சந்திரர்கள் அனேகம். அதே போல் ஆன்மா ஒன்றாயினும் அந்தக்கரணத்தில் பிரதிபலித்த அதன் சாயல்களான சீவர்கள் எண்ணற்றவர்.]

39.
சட்டிகுடங்களி லொன்றுநசித் திடினதினுட் சலசந்திரன்
ஒட்டுமுதற்சந் திரனொடுகூடு மொழிந்தவை கூடாவே
கட்டுமுபாதி நசித்திடுசீவன் காரணமாவான் மாவில்
கிட்டுமயிக்கிய முபாதி கெடாதவர் கேவலமாகாரே


சட்டிகுடங்களில் ஒன்று நசித்திடின் அதினுட் சலசந்திரன் ஒட்டு முதற் சந்திரனொடு கூடும். ஒழிந்தவை கூடாவே. கட்டும் (வேறு படுத்தி காட்டும்) உபாதி நசித்திடும் சீவன், காரணமாம் ஆன்மாவில் ஐக்கியம் கிட்டும், உபாதி கெடாதவர் கேவலமாகாரே.

[நீர் சட்டி உடைந்தால் அதில் பிரதிபலித்த சந்திரன் காணாமல் போய் அதிஷ்டான சந்திரனுடன் ஒன்றாகி விடும். மற்ற நீர் நிலைகளில் உள்ள ஆபாச சந்திரர்கள் (பிரதிபலிப்பு) அப்படியேதான் இருக்கும். அது போல ஞானி அகந்தை போய் ஆன்மாவோடு ஒன்றி விடுவான். மற்ற சீவர்கள் அப்படியே இருப்பர்.]


Tuesday, June 30, 2009

ஞானி ஈசனுக்கு ஒப்பு!




34.
ஆரூடர்களிலும் சிலர் சமாதி முதலியன செய்வதென்ன என வினா +அதற்கு உத்தரம்

உத்தம குருவே யாரூடமா யொருதொழி லற்றவருள்
சித்தமடங்கு தியானாதிகள்சிலர் செய்குவதென் னெனெறால்
இத்தலமருவும் பிராரத்தப் பிரிவெப்படி யப்படியே
முத்தரும்வெகு விதமாவ ரென்பதுமுன்னே சொன்னேனே

உத்தம குருவே, ஆரூடமாய் ஒரு தொழில் அற்றவர் உள் சித்தம் அடங்கும் தியானாதிகள் (தியானம் முதலியன) சிலர் செய்குவது என்ன என்று கேட்டால், இத்தல (இவ்வுலகில்) மருவும் (பற்றும்) பிராரத்தப் பிரிவு எப்படி அப்படியே. முத்தரும் வெகு விதமாவர் என்பது முன்னே சொன்னேனே.
[முந்தைய படலத்தில் ஜீவன் முத்தரும் பிராரப்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது]

ஞானிகளோட விவகாரங்கள் எல்லாமெ உலக உபகாரத்தை கருதிதானே தவிர அவற்றால அவனுக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. ஏன்னா அதெல்லாம் அவன் எந்த பலனை கருதியும் ஆசையோட செய்வதில்லை. அதனால அவனுக்கு துன்பமும் கிடையாது. இது எப்படிருக்குன்னா ஈஸ்வரன் சிருட்டிக்கிறான், காக்கிறான், சம்ஹாரமும் செய்யறான். இதனால அவனுக்கு பாபம் புண்ணியம் ஒண்ணும் இல்லையே! ஞானிக்கு உலக உபகாரமா யாரும் கேட்டா அவங்களுக்கு போதனை செய்யறதும்; அவனோட உடம்பு விழும் வரை உடம்பு காப்பாத்தப்படணும் என்கிறதால அதுக்கு ஆகாரம் போடறதும் மட்டுமே விவகாரம். இதுவும் அவன் சத்துவத்திலேயே நிக்கிறதால அவனுக்கு எந்த வேலையும் செய்கிற பாவமும் இல்லை; அதனால எந்த கர்மாவும் அவனுக்கு ஒட்டாது.

35.
வேறொரு பிரகாரம் த்ருஷ்டாந்தம் பூர்வகம் விடை

நல்லவனேகே ளுலகுபகாரம் ஞானிகள் விவகாரம்
அல்லதுவே றொருபெறுபேறும் மிலையதனாற்பிணியுமிலை
வல்லசிருட்டி முதற்பல தொழிலால் வரு புண்ணிய பாவம்
எல்லவருக்கு மநுக்கிரகஞ் செயு மீசனடைந்திலனே

நல்லவனே கேள். ஞானிகள் விவகாரம் உலகு உபகாரம் அல்லாது வேறொரு பெறு பேறும் இல்லை. அதனாற் பிணியும் இல்லை. வல்லசிருட்டி முதல் பல தொழிலால் வரு புண்ணிய பாவம், எல்லவருக்கும் (எல்லா உயிர்களுக்கும்) அநுக்கிரகம் செய்யும் ஈசன் அடைந்திலனே.
[ஈசனும் தொழில் செய்கிறான். ஆனால் அவனுக்கு புண்ணிய பாவங்கள் சேர்வதில்லை அல்லவா? ஞானி பிராரத்தம் தீரும் வரை உடல் இருப்பதால் அதன் போஷனை பொருட்டு உண்ணல் ஆகியன செய்வான். ஆனால் அவனது உள்பார்வையில் எந்த தொழில் செய்வதாயும் அவன் உணர்வதில்லை. அவன் மனம் சத்துவ குணத்தில் மட்டும் நிற்பதால் அவனுக்கு எந்த கர்மமும் உண்டாவதில்லை.]

அட ஞானி ஈஸ்வரனுக்கு சமம்ன்னா சொல்லறீங்க? அது எப்படி?
எப்படின்னா ரெண்டு பேருக்குமே நான், என்னுது ன்னு ஒண்ணுமேஇல்லை.
ஞானிதான் ஈசன், பல ஜீவர்கள், உலகம் எல்லாமே! அப்படித்தான் அவனோட பாவனை இருக்கும்!

36.
ஞானவான் ஈசனுக்கு எப்படி ஒப்பாவான்?
ஈசனுமா யருவாயுருவாகி யெழுந்தரு ளுங்குருவே
ஈசனுஞானியு மொப்பென்றீரே யெப்படியொப் பென்றால்
ஈசனுஞானியு மமதையகந்தை யிகந்ததினாலொப்பாம்
ஈசனுமாம் பலசீவருமா முலகெல்லா மிவனாமே

ஈசனுமாய் அருவாய் உருவாகி எழுந்தருளும் குருவே, ஈசனும் ஞானியும் ஒப்பென்றீரே, எப்படி ஒப்பு என்றால், ஈசனும் ஞானியும் மமதை (என்னுடையது என்ற எண்ணம்) அகந்தை (நான் என்ற எண்ணம்) இகழ்ந்ததினால் ஒப்பாம். ஈசனுமாம் பலசீவருமாம் உலகெல்லாம் இவனாமே. ("நான், என்" போனதால் ஈசன், உலகு, பல சீவர்கள் எல்லாவற்றையும் தான் என்றே உணர்கிறான்)


ம்ம்ம்ம்ம்.. அப்படின்னா இவர் முக்தி அடைஞ்சா மத்த எல்லாருமே முக்தி அடையணுமே! அப்படி நடக்கிறதில்லையே!
(அட அதானே!)

சமாதி 2 வகை



33.
கிருத கிருத்திய ஞானிக்கு விவகாரம் தீருங்காலமும் அவன் யாதொரு தொழிலும் செய்வதில்லை எனவுங் கூறல்:

தெரிதரு மகனேயாரம் பத்தொடுதீரும் விவகாரம்
உரியதியானமும் விவகாரங்களு முள்ள தொழிலன்றோ
துரியபரம்பொரு ளானவர் வேறொருதொழில் செய்வதுமுண்டோ
அரியசமாதிகள் பழகுவனே லவனாரூடனுமன்றே

தெரிதரு (அறிவுள்ள) மகனே! ஆரம்பத்தொடு தீரும் விவகாரம். [ஆரம்பித்துவிட்ட பிராரப்த கர்மம் ஒழியும் வரை விவகாரம் இருக்கும்] உரிய தியானமும் விவகாரங்களும் உள்ளத்தின் (அந்தக்கரண) தொழிலன்றோ? துரிய [நிலை அடைந்து] பரம்பொருளானவர் வேறொரு தொழில் செய்வதும் (செய்யத்தேவையும்) உண்டோ? [அப்படி] அரியசமாதிகள் பழகுவனேல் அவன் ஆரூடனும் அன்றே.

சமாதி 2 வகை. 1. சவிகற்ப சமாதி 2. நிர்விகற்ப சமாதி.
விகற்பம் ன்னா பேதம் வேறுபாடு. சவிகற்ப சமாதின்னா கொஞ்சம் வேறுபாடு இருக்கிற சமாதி.
சவிகற்ப சமாதியில் ஆன்மா அணு அணுவாக அனுபவிக்கப்படிகிறது. இதில் பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படுபவன் என பேதம் உண்டு. (திரிபுடி என்பது இதுவே -ஞாத்ரு, ஞானம், ஞேயம் [subject - object - action] ).

நிர்விகற்ப சமாதி கொஞ்சம் கூட வேறுபாடு இல்லாத சமாதி. இதுல திரிபுடி ஒழிஞ்சு விடும். அகண்டாகாரமான சாக்ஷாத்கார நிலை.

தானாய் தன் மனமே யல்லாலொன்றைத்
தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும்
போயொளிப்ப தல்லாது புலம்வேறி ன்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
ஞாதுருவு நழுவா னழுவி நிற்கும்
ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா
ரதுவானா லதுவாவ ரதுவே சொல்லும்
தானாய் தன் மனமே அல்லால் ஒன்றைத் தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும் போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம்
ஞானாகாரத்தினொடு ஞேயமற்ற ஞாதுருவு நழுவா நழுவி நிற்கும் ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு யார் சொல்வார்? அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்
(தாயுமானவர்)

முதல்ல சவிகற்ப சமாதிதான் ஒத்தருக்கு கிடைக்கும். அப்புறமா இருக்கிற கொஞ்சம் வித்தியாசமும் போய் நிர்விகல்பம் ஆகிடும்.

இதெல்லாம் இல்லாம சகஜ சமாதின்னு ஒண்ணு உண்டு. நிர்விகற்ப சமாதியோட கனவு போல சாப்பிடுகிறது முதலியத செய்து கொண்டு சதா நிஷ்டையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆரூடர் விவகாரங்களை செய்தாலும் அவை செயல் ஆகாது. ஏன்னா அவை அவர்களோட பார்வையில விவகாரத்தோட கூடிய சம்பந்தம் இல்லாதவை. அவர்களுக்கு ஞானமும் செய்கையும் பரஸ்பரம் விரோதமில்லை. அவங்களோட விவகாரத்துக்கு அனுபவம் விரோதமில்லை. அவங்களோட அனுபவத்துக்கு விவகாரம் விரோதமில்லை.

பின்னே சீவன் முக்தரா இருக்கிற சிலர் ஏன் இந்த தியானம் முதலானதெல்லாம் செய்கிறாங்கன்னு கேட்டா.....
முன்னேயே சொன்ன விஷயம் ஒண்ணு நினைவு இருக்கா பிராரத்தப்படி பல விதமா இவங்க இருப்பாங்கன்னு சில காரியங்கள் நடக்கும்ன்னு? அதுவும் அதை சேர்ந்ததுதான்.
மாதவம் செய்யினும் செய்வர் வாணிபம் செய்யினும் செய்வர் ன்னு முன்னே பாத்தோம்.
(தத்துவ விளக்கம் பகுதி - 97. )

"பிரம வித்துக்கள் இப்படி நான்கு விதமாக இருப்பானேன்?

பேதகர் மத்தால்வந்த பிராரத்த நாநாவாகும்
ஆதலால் விவகாரங்க ளவரவர்க் காவவாகும்
மாதவஞ் செயினுஞ்செய்வார் வாணிபஞ் செயினுஞ்செய்வார்
பூதலம் புரப்பாரையம் புகுந்துண்பார் சீவன்முத்தர்."

ஆரூட தசை அடையு முன்னே யார் இந்த தியானம் முதலானதை செய்கிறாங்களோ அவங்களையே கிரியை அற்றவன்னு சொல்ல முடியாது. ஆரூட தசை அடைஞ்சாச்சுன்னா அவர் கிரியை அற்றவரே கிருத கிருத்தியரே.

Monday, June 29, 2009

திருப்பியும்...ஞானி தொழில் செய்கிறானா இல்லையா?




32
ஆனாலையா குருவே காண்ப தசத்திய மென்றாலும்
நானாவிவ காரந்துய ரலவோஞான சுகந்தருமோ
போனாலன்றோ நன்றா நிட்டை புரிந்திடல் வேண்டாவோ
தானாநிட்டை புரிந்தாற் செய்கை தவிர்த்தவனெப்படியோ

ஆனால் ஐயா குருவே காண்பது அசத்தியம் என்றாலும் நானா விவகாரம் துயரலவோ? ஞான சுகந்தருமோ?[இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகும் ஞான சுகம் அப்போது இருக்குமோ?] [விவகாரம்] போனால் அன்றோ நன்றா நிட்டை புரிந்திடல்? (நிற் விகற்ப சமாதியில் இருத்தல்) அது வேண்டாவோ? தானா நிட்டை புரிந்தால் செய்கை தவிர்த்தவன் எப்படியோ? [ஒரு இடத்தில் அமர்ந்து தேக சேட்டையை நிறுத்தி மனதை ஒடுக்கி நிஷ்டை பழகுவதும் ஒரு தொழில்தானே? அப்படி இருக்க எப்படி தொழிலற்றவன் என்று சொல்லலாம்?]

ஞானி தொழில் செய்கிறானா இல்லையா ந்நு உறுதி செய்துக்க திருப்பியும் கேட்கிறான் சீடன். சரி உடம்பு இருக்கிற வரை ஏதாவது விவகாரம் இருக்கும்ன்னு சொல்லறீங்க. நாம கண்ணால பாக்கிறதெல்லாம் அசத்தியம்ன்னா அதோட விவகாரங்களில சம்பந்தமானா துன்பம்தானே. இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகிற பிரம்ம ஆனந்தம் - ஞான சுகம் அப்போது இருக்குமா என்ன? அது வேணுமானா நிஷ்டை பழகணும்தானே? அப்படி நிஷ்டையில உக்காந்தா அது தொழில்தானே?
அதாவது சும்மா மனசை அடக்கி உட்காருகிறது கூட வேலைதானே என்கிறான் சீடன்.

அப்பா, பிராரப்த கர்மா கழிகிற வரை விவகாரம் இருக்கத்தான் இருக்கும். அப்படி இல்லாட்டா அது தீர முடியாது. தியானம், சமாதி எல்லாம் நிச்சயம் வேலைதான். சந்தேகமில்லை. அதெல்லாம் அந்தக்கரணத்தால செய்கிற வேலைதான். துரிய நிலையை அடைஞ்ச சாக்ஷாத்காரத்தை அடைஞ்சவங்களுக்கு செய்கிற வேலைன்னு ஒண்ணும் கிடையாது. அப்படி செய்தா அவங்க சீவன் முக்தன் இல்லை. இப்படி சர்வ நிச்சயமா சொல்கிறார் குரு.......

Saturday, June 27, 2009

தேவ் சார் கேள்வி



/ஒரு ஜீவந்முக்தருக்கு ஸ்தூல தேஹம் தவிர, லிங்க தேஹம், காரண சரீரம் இரண்டுமே அழிந்து
விடுகின்றன என்று பொருள் கொள்ள வேண்டுமா ?
மனம் மாய்ந்து விடுகிறது என்றால் அதை ஒட்டிய அனத்துமே இல்லை என்றாக வேண்டும் அல்லவா?//
நல்ல கேள்வி கேட்டார் தேவ் சார்!
இது வரை பாத்ததின் பின்னணியிலே கொஞ்சம் இதை பாக்கலாம்.
நாம் ஒரு ஜீவன் ஞான சாதனை செஞ்சு மேலே மேலே போகிறதை பாத்து கொண்டு இருக்கோம்.
ஒரு பெரிய திருப்பு முனை ஞானம் உதிக்கிறது. ( அது புதுசா ஒண்ணும் உதிக்கலை. மாயை போய் உண்மை நிலை தெரியுது அவ்வளோதான்.) சாதகன் சந்தேகம், விபரீதம் போல இருக்கிற அபாயங்களை எல்லாம் தாண்டி ஸ்திரப்பட்டாச்சு. இது ஜீவன் முக்த நிலை. ஞானம் வந்தாச்சு; ஆனா இன்னும் இந்த ஸ்தூல சரீரம் விழலை. எப்போ விழும்? ஞானத்தீயிலே சஞ்சித ஆகாமி கர்மாக்கள் எரிஞ்சு போச்சு. மீதி இருக்கிற ஏற்கெனெவே ஆரம்பிச்சு விட்ட பிராரத்த கர்மா முடிஞ்சதும் சரீரம் விழுந்துடும்.
அது வரை?
சூக்கும சரீரம் கொஞ்சம் இருக்கும். அந்தக்கரணம் போச்சு. அதனால்தானே அஞ்ஞானம் போகும்? பிரம்மத்தையும் கூடஸ்தனையும் பிரிக்கிறது அதுதானே? பிராணன்கள், ஞான கர்மேந்திரியங்கள் இருக்கும். அதனாலதானே இன்னும் இந்த உடம்பு சிலதை "உணர்கிறது" ,"நடக்கிறது” "சாப்பிடுகிறது”.....?
ஆனா அந்தக்கரணம் போன பிறகு எதோட ஆதீனத்திலே இவை இருக்கும்? ரஜசும் தமசும் அழிஞ்சு போன நிலையிலே சத்துவ மனசு மட்டும் எஞ்சி இருக்கும் இல்லையா? அதோட ஆதிக்கத்திலே இருக்கும். அதான் மனசோட சொரூப நாசம்.
இந்த சத்வ மனசு பிரம்மத்தை தனித்தனியா அணு அணுவா பார்க்கும் நிலையிலே இருக்கிறது. இது சவிகற்ப சமாதி.
இதை சத்வ மனசோட ஆதீனம்ன்னு சொல்லாம ஈஸ்வரனோட ஆதீனத்திலேன்னும் சொல்கிறங்க. அந்தக்கரணம் போயிடுத்து. ஜீவாத்மா பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிடுத்து. ஆனா இந்த உடம்பு விழணுமே? அது வரை விவகாரம் நடக்கணுமே? ஒரு சைதன்யம் (தேவ் சார் இதைப் பத்தி இன்னும் மின்தமிழிலே எழுதலையே?!) - இயங்கு சக்தி - இல்லாம ஜடப்பொருள் எப்படி இயங்கும்? அதனால அது ஈஸ்வரனோட சக்தியிலே இயங்கும். அப்ப அது ஈஸ்வரனோட விளையாட்டுப்படி இயங்கும். சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி சாப்பிடக்கொடுத்ததை வீசி எறிஞ்சாலும் எறியும்; பகவான் ரமணர் மாதிரி எல்லாத்தையும் மௌனமா சாட்சியா பாத்து கொண்டு இருந்தாலும் இருக்கும்; ஜட பரதர் போல மலத்திலேயும் சேற்றிலேயும் இருந்தாலும் ஒண்ணும் தெரியாம இருந்தாலும் இருக்கும். பல ஜீவன் முக்தர்கள் - இவங்க ஜீவன் முக்தர்ன்னே தெரியாமலே இருக்கிறவங்க – எப்படி இருந்தாங்களோ அதே போல வேஷம் போட்டுகிட்டு இருந்து நாடகம் ஆடிட்டுப்போனாலும் போகும்!
ஆச்சு. பிராரத்த கர்மா ஒருவழியா அனுபவிச்சு முடிஞ்சு போச்சு. மத்த கர்மா ஏற்கெனெவே போயிடுத்து. அந்தக்கரணம் போனப்பவே ஆணவமும் போச்சு. சரீர விவகார நடைமுறைக்கு கனவு போல எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மாயையும் போயிடும். இப்படி காரண சரீரம் அழிஞ்சு போனதாலே சூக்கும சரீரத்தை அடுத்த பிறவிக்கு கொண்டு போகிற ஏஜென்ட் இல்லாம சூக்கும சரீரம் எங்கிருந்து வந்ததோ அங்கேயே போய் ஒடுங்கிடும்.
பிரமத்தை தனித்தனியா அனுபவிச்ச சவிகற்ப சமாதி போய் விகற்ப சமாதியும் வந்துடும். அவ்வளோதான். ஜீவன் பிரம்மத்தோட கரைஞ்சு போகிற ப்ராசஸ் முழுமை ஆகிடும்.

இப்படித்தான் நான் புரிஞ்சு கொண்டு இருக்கேன்.
விமர்சனங்களை வரவேற்கிறேன்!