Pages

Wednesday, July 1, 2009

ஏன் எல்லாச்சீவரும் முத்தி அடையவில்லை? பதில்



இந்த ஞானியே எல்லா சீவர்களும் ஆனா இவன் மோக்ஷம் அடைஞ்சா எல்லா ஜீவன்களும் மோக்ஷம் அடையணும்.. இல்லைனா ஜீவன்கள் தனித்தனின்னு ஒத்துக்கணும். இப்படி ஒரு கிடுக்கிப்பிடி போடறார் சீடர். (பின்னே இப்படி ஆழமா கேள்வி கேக்கறவருக்கு மரியதை கொடுக்கணுமில்லே? அதான் சீடர். சீடன் இல்லே!)

37.
அறிஞன் எப்படி சகல சீவராய் விளங்குவான்?

எல்லாசீவரு மிவனானென்றீ ரிவன்றான் முத்தியடைந்
தெல்லாச்சீவரு முத்திபெறாம லிருப்பா னேனையா
எல்லாச்சீவரும் வெவ்வேறானா லிவனெல்லா மலனே
எல்லாப்பொருளு முரைத்தருள் குருவேயிதை நீர்மொழீயீரே

எல்லா சீவரும் இவனான் என்றீர். இவன் தான் முத்தியடைந்து எல்லாச் சீவரும் முத்தி பெறாமல் இருப்பானே ஐயா? எல்லாச்சீவரும் வெவ்வேறானால் இவன் எல்லாம் அலனே? எல்லாப் பொருளும் உரைத்தருள் குருவே இதை நீர் மொழீயீரே.
[எல்லா சீவர்களுமாய் இருக்கும் ஞானி முத்தி அடைந்தால் ஏன் எல்லாச்சீவரும் முத்தி அடையவில்லை?]

சரியான கேள்வி அப்பா!
ஆன்மா ஒண்ணுதான். அந்தக்கரணம் பலவிதமா இருக்கிறதாலே ஜீவர்கள் பலவிதமா உற்பத்தி ஆகிறது. இந்த எல்லா ஜீவர்களிலேயும் பிரதி பலிக்கிறது ஒரே ஆத்மாதான். எண்ணிக்கையில்லா உடம்புகளிலே எண்ணிக்கை இல்லா அந்தக்கரணங்கள் குடிகொண்டு இருக்கு. அதிஷ்டான ஆன்மா ஒண்ணுதான் ஆனாலும் அந்தக்கரணங்களிலே பிரதிபலிக்கிற ஜீவன்கள் ஏராளம்.

சந்திரன் பிரகாசிக்கிறது. உலகம் முழுக்க பிரகாசிக்கிற சந்திரன் ஒண்ணுதான்.
இருக்கிற எல்லா நீர் நிலைகளிலேயும் அதோட பிம்பம் தெரிகிறது.
அது ஏரியா இருக்கலாம், குளமா இருக்கலாம், பல விதமான மண் குடங்களில் இருக்கிற தண்ணீரா இருக்கலாம். ஒரு குடம் உடைஞ்சு போனா ஒரு பிரதிபலிப்பு காணாம போயிடும். ஆனா வானத்து சந்திரன் அப்படியேதான் இருக்கு. மத்த நீர் நிலைகளில பிரதிபலிக்கிற சந்திரன்களும் அப்படியேதான் இருக்கும்.

குடத்து சந்திரனுக்கு உண்மையிலேயே தான் வானத்து சந்திரனோட பிரதிபலிப்புன்னு தெரிஞ்சு குடம் உடைஞ்சு வானத்து சந்திரனாகவே ஆகிடும் போது மத்த குடத்து சந்திரன்கள் அப்படியேதானே இருக்கும்? குடங்களிலே இருக்கற தன் பிரதிபலிப்புதான் ன்னு வான சந்திரனுக்கு தெரிஞ்சாலும் குடத்து சந்திரன்களுக்கு அது தெரியாதே!

அதே போல அந்தக்கரணம் நீங்குகிற ஜீவன் மட்டுமே மோக்ஷம் அடையும்; அதிஷ்டான பிரம்மத்திலே ஐக்கியமாகும். அந்தக்கரணம் இருக்கிற ஜீவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.

(இந்த கேள்வியையே இன்னொரு விதமா கேக்கலாம் இல்லையா? எல்லாமே பிரம்மம்னா ஏன் நமக்கு நாம் பிரம்மம்ன்னு தெரிய மாட்டேங்குது?)

38.
விடை:
அகமெனு மான்மாபூரண மேகமனேக விதஞ்சீவர்
அகமெனு மந்தக்கரணோ பாதிகளளவிலை யாதலினால்
சகமுழுதுங் குளிர்சந்திர னேகஞ்சலசந்திரர் பலராம்
சகமதிலேரி குளஞ்சிறுகுழி சால்சட்டி குடம்பலவால்

அகமெனும் ஆன்மா பூரணம், ஏகம். (ஒன்றே) அனேக விதம் சீவர், அகமெனும் அந்தக்கரண உபாதிகள் அளவிலை (ஆதலினால்.) சக முழுதும் குளிர் சந்திரன் ஏகம். (ஒன்றே) சல சந்திரர் பலராம். சகம் அதில் ஏரி, குளம், சிறுகுழி, சால் சட்டி குடம் பலவால்.

[சந்திரன் ஒன்றே ஆனாலும் நீர் நிலைகள் பலவாததால் அதில் பிரதிபலிக்கும் சந்திரர்கள் அனேகம். அதே போல் ஆன்மா ஒன்றாயினும் அந்தக்கரணத்தில் பிரதிபலித்த அதன் சாயல்களான சீவர்கள் எண்ணற்றவர்.]

39.
சட்டிகுடங்களி லொன்றுநசித் திடினதினுட் சலசந்திரன்
ஒட்டுமுதற்சந் திரனொடுகூடு மொழிந்தவை கூடாவே
கட்டுமுபாதி நசித்திடுசீவன் காரணமாவான் மாவில்
கிட்டுமயிக்கிய முபாதி கெடாதவர் கேவலமாகாரே


சட்டிகுடங்களில் ஒன்று நசித்திடின் அதினுட் சலசந்திரன் ஒட்டு முதற் சந்திரனொடு கூடும். ஒழிந்தவை கூடாவே. கட்டும் (வேறு படுத்தி காட்டும்) உபாதி நசித்திடும் சீவன், காரணமாம் ஆன்மாவில் ஐக்கியம் கிட்டும், உபாதி கெடாதவர் கேவலமாகாரே.

[நீர் சட்டி உடைந்தால் அதில் பிரதிபலித்த சந்திரன் காணாமல் போய் அதிஷ்டான சந்திரனுடன் ஒன்றாகி விடும். மற்ற நீர் நிலைகளில் உள்ள ஆபாச சந்திரர்கள் (பிரதிபலிப்பு) அப்படியேதான் இருக்கும். அது போல ஞானி அகந்தை போய் ஆன்மாவோடு ஒன்றி விடுவான். மற்ற சீவர்கள் அப்படியே இருப்பர்.]


1 comment:

Geetha Sambasivam said...

//அந்தக்கரணம் பலவிதமா இருக்கிறதாலே ஜீவர்கள் பலவிதமா உற்பத்தி ஆகிறது.//

மனசைக் குடைஞ்சுண்டிருந்த கேள்விக்குப் பதில் புரிய ஆரம்பிச்சிருக்கு. நன்னிங்கோ!!!