Pages

Sunday, July 4, 2010

பாரத ஸாவித்ரீ-1


பாரத ஸாவித்ரீ

இதென்ன ஸாவித்ரீ, புதிதாக இருக்கிறதே என்று பலர் கேட்கலாம். பிரசித்தி பெற்ற பதிவிரதா சிரோமணிக்கு ஸாவித்ரீ என்று பெயர் உண்டு. காயத்ரீ மந்திரத்துக்கும் அப்பெயர் உண்டு. [பிரணவமும் வ்யாஹ்ருதிகளும் நீங்கிய காயத்ரீ] ஆனால் இதென்ன பாரத ஸாவித்ரீ, புதிதாக இருக்கிறதே என்று ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட நினைக்கலாம். பண்டை இதிகாஸமான மஹாபாரதத்தில் சுவர்காரோஹண பர்வத்தின் இறுதியில் இந்த பாரத ஸாவித்ரீ என்ற சொல் காணப்படுகிறது. அப்பர்வத்தில் 64 வது ஸ்லோகத்தில் இந்த “பாரத ஸாவித்ரீ” என்பதை காலையில் எழுந்து எவன் படிக்கிறானோ அவன் பாரத படனத்தின் பலனை அடைந்து பர ப்ருஹ்மத்தையும் அடைகிறான் என்று புகழ்ந்து சொல்லப்பட்டு இருக்கிறது.

சாதாரணமாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தில் உள்ள ஸவித்ரு தேவதையை உத்தேசித்த முக்கியமான காயத்ரீ மஹாமந்திரத்தைக் குறிக்கிறது. அந்த மந்திரமில்லாமல் ஸந்த்யோபாஸனமே கிடையாதாகையால் லக்ஷணையாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தையே குறிக்கலாம். காலையில் எழுந்திருந்து இந்த ஸ்லோகங்களை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறபடியால் இது ஸந்த்யோபாஸனத்திற்கு சமமாக ஆகின்றது. இந்த ஸ்லோகங்கள் பாரதத்தில் உள்ளபடியால் இதற்கு "பாரத ஸாவித்ரீ" என்று பொருத்தமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என நாம் கருதலாம்.

பாரதத்திற்கு உரையாசிரியரான நீலகண்டரும் "காலை சந்த்யையில் பாரதம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரதி தினம் படிப்பதற்கு தகுதியானவையும் பாரத ஸார ஸங்கிரமாகவும் உள்ள இந்த நான்கு ஸ்லோகங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார். அந்த ஸ்லோகங்களை இனி வரிசையாக பார்க்கலாம்.


2 comments:

மதுரையம்பதி said...

உள்ளேனய்யா!...படிக்கக் காத்திருக்கிறேன்.

திவாண்ணா said...

நல்லது!