சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. சாதாரண சிராத்தத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹவிர் பாகம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய சிராத்தத்தில் கர்தா சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் கொடுக்கலாம்.
பிதா மாதா இறந்த திதிக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை. அதாவது அப்பாவின்/ அம்மாவின் சிராத்தம் அஷ்டமியில் வரும் என்றால் அஷ்டமி அன்றுதான்
சிராத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.
மஹாளய பக்ஷத்தில் ஒரு நாள் மட்டும்
சிராத்தம் கொடுப்பதாக இருந்தால் சதுர்தசி நீங்கலாக பஞ்சமி முதல் அமாவாசை வரை என்று
வேண்டுமானாலும் செய்யலாம். திதி வார நக்ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும்.
அமாவாசை, வ்யதீபாதம், அபபரணீ, த்வாதசி. அஷ்டமீ, வருஷ சிராத்த திதி இவற்றில் செய்ய
இப்படி தோஷம் பார்க்க வேண்டியது இல்லை. கர்தா சந்ததி இல்லாத விதுரனாகவோ; சந்ததி இல்லாத விதவையாகவோ,
ப்ரஹ்மசாரியாகவோ இருந்தால் அமாவாசை அன்று செய்யவும்.
கௌண காலத்தில் செய்வதாக இருந்தால்
நந்தை, வெள்ளிக்கிழமை, ப்ரதமை, சதுர்தசீ ஆகியவற்றை விலக்கவும். (நந்தை? அது முஹூர்த்தம்
சம்பந்தப்பட்டது.)
மேலே ’திதி வார நக்ஷத்ர தோஷம்
ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும்’ என்று சொன்னோமல்லவா? அவை என்ன?
ப்ரதமை, ஷஷ்டி,ஏகாதசி; வெள்ளிக்கிழமை;
கர்தா, பத்னீ, ஜேஷ்டபுத்ரன் ஆகியோருடைய நக்ஷத்திரம்; வ்யதீபாதம் சம்பந்தப்படாத ரோஹிணீ;
ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம் ஆகியவை தோஷமுள்ளவை.
சந்ததி இல்லாதவர்கள் – பத்னி,
புத்திரன் இல்லாத விதுரன், விதவை ; ப்ரம்மச்சாரி - அமாவாசை அன்று செய்ய வேண்டும். சந்ததி உள்ளவர்கள் அமாவாசை
அன்று செய்யலாகாது. பிதா இல்லாத புத்திரர்கள் எல்லோருமே செய்ய வேண்டும். குடும்பம்
பிரிந்து இருந்தால் தனித்தனியாகவே செய்ய வேண்டும்.
ச்ராத்தம் / தர்ப்பணம் செய்ய உசித
காலம் மாத்யாஹ்ணிக காலத்துக்கு பின் அபராஹ்ண காலத்துக்குள். அதாவது 12-30 க்கு மேல்
3-30 க்குள். இந்த சரியான நேரத்தில் செய்பவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.
பக்ஷ தர்ப்பணம் செய்வோர் அமாவாசை
அன்று அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகே மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயத்தில் இன்னொரு விசேஷம் சாதாரணமாக
செய்யும் சிராத்தம் போல் இல்லாமல் மற்றவர்களுக்கும் இதில் பங்கு கொடுக்கலாம் என்பதே.
அவர்கள் காருணிக பித்ருக்கள் எனப்படுவர். அவர்களது பட்டியல் பின்னால் வருகிறது, இவர்களில்
யாருடைய கோத்திரமும் பெயரும் தெரியுமோ அவர்களுக்கு அவர்கள் இறந்து போயிருந்தால் வஸு ரூபமாக வரித்து சிராத்தம்
/ தர்ப்பணம் கொடுக்கலாம்; தனித்தனியாக செய்ய வேண்டும்.
ஸபத்னீ மாதா (தந்தையின், தன் அம்மாவல்லாத
இன்னொரு மனைவி), பெரியப்பா, சித்தப்பா, அண்ணா தம்பிகள், பிள்ளைகள்; அப்பாவுடன் கூடப்பிறந்த
தமக்கை, தங்கைகள்; மாப்பிள்ளைகள்; அக்கா, தங்கை, பெண், மனைவி, மாமனார், நாட்டுப்பெண்,
மைத்துனன், குரு, ஆசார்யன். காப்பாற்றின யஜமானன்; நண்பர்கள் – இப்படி பலருக்கும் தர்ப்பணம்
செய்யலாம். பெயர் கோத்திரம் தெரியாதவர்களுக்கும் பொதுவாக காருண்ய பித்ரு என்று சொல்லி
செய்யலாம்.
இப்படி காருண்ய பித்ருக்களுக்கு
தர்ப்பணம் செய்கையில் தனியாக கூர்ச்சம் வைத்து ஆவாஹணம் செய்ய வேண்டும்.
வருஷ சிராத்தத்தின் சிராத்தாங்க (பரேஹணி) தர்ப்பணம்
அடுத்த நாள் காலையில் விடிவதற்குள் செய்யப்பட வேண்டும், ஆனால் மஹாளய சிராத்தத்தின் பரேஹணி தர்ப்பணம்
அன்றே செய்யப்பட வேண்டும், இந்த காலத்தில் வருஷ சிராத்தத்திலேயே மிக அரிதாகவே அடுத்த
நாள் செய்கிறார்கள். இதற்கு சமாதானம் இந்த விதியில் இருந்தது எடுத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது!
No comments:
Post a Comment