Pages

Tuesday, November 24, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -12



அமைதியாக என் ப்ளாக்கை வாசிப்பவர்கலில் என் அக்காவும் ஒருவர். (உடன் பிறந்த அக்கா)
கடந்த பதிவுகளை பார்த்துவிட்டு அதிசயமாக ஒரு மெய்ல் அனுப்பினார். அனுமதியுடன் பிரசுரம்:
-----
அன்புள்ள தம்பி ,
ஜபயக்ன மகிமை படித்தேன் .எனக்கு என்ன அனுபவம் என்று யோசித்தேன் .
ஒன்றும் சொல்ல தெரியவில்லை என்பதாலேயே ஒன்றும் இல்லை என்று ஆகிவிடாது .
பிரச்சினை வந்து பின் சரியாக போவது ஒருபுறம் .
வருவது தெரியாமலே சரியாகி இருக்கும்
அப்படிதான்
அப்படியேதான் என் அனுபவத்திற்கு வராமல் பகவான் பார்த்துகொண்டுவிட்டார் என்றே சொல்லணும்
It is not like problem came and got solved.It got dissolved or it was solved without (prior to)our notice.
one nijam, kathai alla. Sri G went to see Maha Periyava.Kanchi Periyava asked them whether they experienced any rain on the way.G 's wife replied that it was windy near sunguvar chathiram but it didnot rain.Periyava smiled and kept quiet.While returning they stopped near a pottikadai at sunguvar chathiram to have soda.That tea-vala is known to them for a longtime.He said your jeep just escaped by a fraction of a second ,as a huge tree branch got broken and landed on the ground due to strong wind. What do you think abt this?

சின்ன கொப்புளம் வந்து பெரிசாகி ரணமாகியும் சரி பண்ண பாடு பட்டு வேண்டி சரியாகலாம் .
அல்லது கடவுள் அருளால் அமுங்கியும் விடலாம்தானே.அதை கவனித்து கூட இருக்க மாட்டோம் .
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கலாம்

Well done,keep it up!
With all the best wishes,
affly
------------------


Sunday, November 22, 2009

காயத்ரி அனுபவங்கள் -11




இந்த ஜப யக்ஞம் ஆரம்பிக்கும் போது செலவு குறித்து கேள்வி எழுந்தது. வசூல்
ஏதும் வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏன் என்று கேட்டார்கள்.
வசூலுக்கு போக நேரம் இருந்தால் அந்த நேரத்தில் சிலரை போய் பார்த்து ஜபம்
செய்யுங்கள் என்று கேட்கலாம். அல்லது ஜபம் செய்கிறீர்களா ஏதேனும்
பிரச்சினை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். அதுவே முக்கியம் என்றோம்.

இந்த நேரத்தில் குழு அங்கத்தினர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை முன்
வைத்தார். ஜப காலத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடிப்படையாக
கொண்டது அது. ஓ! உங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் குறித்து ஒன்றுமே
சொல்லவில்லையே மன்னிக்கணும்.

சாதாரணமாக கடைபிடிக்க வேண்டிய சிலவற்றையே கட்டுப்பாடு என்று சொல்லி
வைத்தோம். தினசரி மூன்று வேளை சந்தியா உபாசனை, வீட்டு விலக்கு நாட்களில்
ஸ்திரீக்கள் சமைத்து உண்பதில்லை, தினசரி ஒரு ரூபாயாவது தானம்
செய்வது, தினசரி அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்தல், சினிமா, டிவி
பார்ப்பதில்லை, பிரம்ம யக்ஞம் செய்தல். இவற்றில் முதல் இரண்டு
கட்டாயம் என்றும் மற்றது விரும்பத்தக்கது என்றும் திட்டம் செய்தோம். இந்த
கட்டுப்பாடுகள் குறித்து நிறைய சர்ச்சை நடந்தது. கடைசியில்
கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கத்தான் வேண்டும் என்று முடிவாயிற்று.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதில் தினசரி ஒரு ரூபாய் தானம் என்று உத்தேசித்தோம் இல்லையா? அதை
உண்டியலில் போட்டு சேமித்து யக்ஞத்து செலவுக்கே பயன்படுத்திக்கொள்ளலாமே
என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. சாதகர்கள் எப்படி இதை ஏற்பர் என்ற
சந்தேகம் இருந்தாலும் பரீட்சார்த்தமாக முயற்சிக்கலாம் என்றும் இதை
செலுத்தினால்தான் ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று சொல்வதில்லை என்றும்
முடிவு செய்தோம். முதல் வருட ஹோமம் முடிந்த பிறகு இது குறித்து சாதகர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்ததில் எல்லாரும் இதை வரவேற்பது
தெரிந்தது. ஹோமத்தன்று பலரும் ஒரு ரூபாய் நாணயமாக நூறு ரூபாய் கொண்டு
வந்து கொடுத்ததிலேயே இதை ஒருவாறு ஊகித்து இருந்தோம். தானே செலவு செய்து
ஹோமம் செய்வதாக அவர்களுக்கு தோன்றியதில் ஒரு பெருமிதம் அடைந்ததாக
தெரிந்தது. இது தவிர நெய் கால் கிலோ கொண்டு வரச்சொன்னோம். பலரும்
கொண்டுவந்தனர். அல்லது அதற்கான தொகையை செலுத்தினர்.
முதல் சில வருடங்கள் செலவு கையை கடித்தாலும் பின்னால் கொட்டகை போடுவதை
தவிர்த்தபின் வரவும் செலவும் சரியாகிவிட்டது. நெய்யும் ஹோமத்துக்கு
வேண்டிய அளவு தானாகவே வந்து விடுகிறது. இதில் பெரிய விஷயம் என்ன என்றால்
இப்படி மற்றவர்களும் அவரவர் ஊரில் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்துவதை
இது ஊக்குவிக்கிறது என்பதே! செலவு பற்றி கவலை பெரிசாக இல்லை அல்லவா?

Saturday, November 21, 2009

காயத்ரி அனுபவங்கள் -10



காயத்ரி ஜபத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இதே போல அனுபவமா என்றால் தெரியாது என்றே சொல்ல வேண்டும். தங்கள் அனுபவங்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். அவற்றையே எழுத முடிந்தது. மேலும் சில அந்தரங்கமானவை. எந்த விசேஷ அனுபவமும் பெறாதவர் இருக்கத்தான் இருப்பர். ஏன் என்று புரிய முதலில் ஏன் இப்படி அனுபவங்கள் நிகழ்கின்றன என்று புரிய வேண்டும்.
நமக்கு என்ன கிடைக்கும் என்பது பெரும்பாலும் நம் கர்ம வினையை பொருத்தது. அதை மீறியா ஏதும் கிடைக்கும்? என்றால் இல்லை என்பதே பதில். பின்னே எப்படி இந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன? இவை பொய்யா?
கர்ம வினைகள் என்ன செய்கின்றன? அவை ஒரு தகுந்த சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில் நமக்கு வேண்டியது கிடைக்க சாதகமானதும் இருக்கும், பாதகமானதும் இருக்கும். புண்ணியங்கள் நல்ல சூழலையும், பாபங்கள் பாதகமான சூழலையும் தோற்றுவிக்கும். நமக்கு வேண்டியது எவ்வளவு கிடைக்கும் என்பது அப்போது நாம் எடுக்கும் முயற்சியையும் பொருத்தது.
காவிரியில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. நாம் ஒரு குடத்தை கொண்டு போனால் ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரலாம். ஒரு சொம்பு கொண்டு போனால் சொம்பு தண்ணீர்தான் கிடைக்கும்.
புண்ணிய பாபங்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். நிறைய பாபம் செய்து இருக்கிறேன். நிறைய புண்ணியமும் செய்து இருக்கிறேன். தானிக்கி தீனி சரி போயிந்தி என்று சொல்ல முடியாது.
ஆனால் நாம் செய்கிற பாபங்களுக்கு பிராயச்சித்தங்கள் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராயச்சித்தம் என்றால் பாபம் முழுக்க போய் விடாது. ஆனால் பெருமளவு குறையும்.
வேண்டுமென வருத்திக்கொள்வது ஒரு வகை பிராயச்சித்தம். உண்ணா நோம்பு போன்றவை இது போல. ப்ராணாயாமம் போன்ற சில கிரியைகளும் பிராயச்சித்தம் ஆகும். மந்திர ஜபங்களும் பிராயச்சித்தம் ஆகும். அதில் முக்கியமானது காயத்ரி. அதனால் காயத்ரியை அதிக அளவில் ஜபிக்க பாபங்கள் வெகுவாக நீங்கி காரியங்கள் நடக்க தகுந்த சூழ்நிலை மேலோங்கிவிடும்.

ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம்.

ஒரு பெரிய புல்வெளி. அதில் ஒரு பசு மாட்டை கட்டிப்போட்டு இருக்கிறது. மாடு எவ்வளவு புல் மேய முடியும்? கயிறு அனுமதிக்கிற அளவு ஒரு வட்டத்தில் மேயலாம். அந்த வட்டத்துக்குள்ளேயே சில மரங்கள் இருக்கலாம், புதர்கள் இருக்கலாம். அவை மாடு தேவையான அளவு மேய முடியாமல் தடுக்கலாம். இந்த புதர்களை நீக்கிவிட்டால் மாடு தேவையான புல்லை தடை இல்லாமல் மேய்ந்து கொள்ளும்.
உலக போகங்களே புல்வெளி. பசு மாடு நாம். கயிறு நம் கர்மா. மரம் புதர்கள் நம் பாபங்கள். இவற்றை நீக்குதல் பிராயச்சித்தங்கள். பிராயச்சித்தங்களால் நம் பாபங்களை குறைத்துக்கொண்டால் கர்மா அனுமதிக்கிற அளவு முழுமையாக உலக போகங்களை அனுபவிக்கலாம்.

இப்ப புரியும் ஏன் சிலருக்கு வியக்கத்தக்கதாக அனுபவங்கள் ஏற்படுகின்றன, ஏன் சிலருக்கு இல்லைன்னு. சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது.
அப்படியானால் கொடுத்து வைக்காத சிலருக்கு ஒரு நல்லதும் காயத்ரி ஜபத்தால் ஏற்படாதா? என்றால் அப்படியும் இல்லை.
ஜப காலத்தில் நடத்தும் ஒரு கூடுதலில் வந்திருந்தவர்களை அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். ஸ்ரீ சீ. ஜப யக்ஞத்தில் வெகு நாட்களாக பங்கு கொள்பவர். அவருக்கு மனைவியின் உடல் நலத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட பிரச்சினைகள். இவர் என்ன சொல்லுவார் என்று விஷயம் தெரிந்த சிலர் ஆச்சரியப்பட நண்பர் பேச ஆரம்பித்தார்.
"மூன்று வருஷங்களாக ஜபம் செய்து வருகிறேன். ஆரம்பித்த போது நிறைய பிரச்சினைகள் இருந்தன. இப்போது ..." என்று சொல்லி நிறுத்திய போது பெரும்பாலானோர் எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சொல்லுவார் என எதிர்பார்த்தனர்.
"இப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கு."
பலரும் ஏமாந்து போனது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
"ஆனால் பெரிய வித்தியாசம். இப்ப "வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும்; சுக துக்கங்கள் வந்து வந்து போகும்" என்று புரிந்துவிட்டது. அதனால இப்போ பிரச்சினைகள் வந்தாலும் கஷ்டப்பட்டாலும் ரொம்ப துக்கப்படுவதில்லை."
கேட்ட பேரில் எவ்வளவு பேருக்கு என்ன புரிந்ததோ, நான் வெகு ஆச்சரியப்பட்டேன். இறைவன் க்ருபை எவ்வளவு இருக்கிறது! இந்த ஞானம் மட்டும் வந்துவிட்டால் எங்கோ போய்விடலாமே!


Friday, November 20, 2009

காயத்ரி அனுபவங்கள் -9



சில நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவு போட முடியவில்லை. மன்னிக்கணும். இன்று கொஞ்சம் நேரமிருப்பதால் மற்ற பதிவுகளையும் ஷெடூல் செய்துவிடுகிறேன்.
---------
எந்த மந்திரமானாலும் அதற்கு சில சட்ட திட்டங்கள் உண்டு.
மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்லவா? அதனால்தான் அப்படி.

எந்த மந்திரமானாலும் குரு மூலமாக உபதேசம் வாங்கி ஜபம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் பெற முடியும். இல்லையானால் முழுமையான பலன் கிடைக்காது. (மேலும் சில இன் பில்ட் பாதுகாப்புகள் மந்திரங்களுக்கு உண்டு! இங்கே சொல்லவில்லை. குரு சொல்லுவார்.)

முன் காலத்தில் கராத்தே போன்ற கலைகளை யார் வேண்டுமானாலும் ஒருவரிடம் போய் காசு கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. சரியான நபர்களை தேந்தெடுத்து மட்டுமே சொல்லித்தருவார்கள். தவறாக பயன்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம். இது இப்போது கடைப்பிடிக்கப்படாததால் விளைகிற அனர்த்தங்களை பார்த்து வருகிறோம் அல்லவா? சில வருடங்கள் முன் ஒரு பல்கலைக்கழக ஹாஸ்டலில் ஒரு மாணவனை ரேகிங்க் செய்யும்போது ஒரு கராத்தே அடி கொடுக்கப்போய் மாணவன் இறந்து போனார்.

அதே போல மந்திரங்களும் தகுந்த பாத்திரத்தை தேர்ந்தெடுத்தே உபதேசம் செய்யப்படும். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மந்திரமும் இருக்கும். அதை குருவே உணர்வார்.
அதனால் குரு உபதேசம் இல்லாமல் மந்திர ஜபம் செய்யலாகாது. "பின்னே, அப்படி இல்லாமல் இன்னார் ஜபம் செய்து பயன்பெற்று இருக்கிறார்களே?” என்றால் அது "தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்" கதை போன்றதாகும்.

மந்திர ஜபம் செய்வோருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். ஆசார அனுஷ்டான விஷயங்களை பொருத்து இது அமையும். முறைப்படி செய்யாது போனால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும்.

பலர் நினைப்பது போல இது அந்தணருக்கு மட்டுமே இல்லை. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது.
நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் பிரம்மோபதேசமும், பூணூலும், காயத்ரியும் உரியன. நான்காம் வர்ணத்தவர் அவர்களது தர்மத்தை அனுசரிப்பதாலேயே மேன்மை பெற்று விடுவதால் அவர்களுக்கு இது தேவை இல்லை. அவர்களது வேலைகளை உத்தேசித்து அவர்களால் தேவையான ஆசாரத்தையும் கடை பிடிக்க இயலாது.

காலப்போக்கில் மக்கள் ஆசாரத்தை விட விட இப்போது வெகு சிலரே கடைபிடிக்கிறார்கள். மேலை நாட்டு படை எடுப்புகளால் க்ஷத்திரியர்கள் சண்டை போட்டே காலம் கழிக்க ஆசார அனுஷ்டானம் போயிற்று. வைச்யர் திரைக்கடலோடியும் திரவியம் தேட ஆரம்பிக்க அவர்களுக்கும் போயிற்று. இப்போது அசிரத்தையால் அந்தணர்களுக்கும் இது மறைந்து வருகிறது.

அதற்காகத்தான் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

சிலர் ஏன் பெண்களுக்கு இல்லை? வேத காலத்தில் சில பெண் வேத பண்டிதர்களும் இருந்து இருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கலாம்.
அது ஒரு காலம்.

காலப்போக்கில் மனிதனின் சக்தி குறைந்து வருகிறதா இல்லை அதிகமாகிறதா என்று ஒரு கேள்வி. சந்தேகமே இல்லாமல் குறைந்துதான் வருகிறது.
தசரதர் தேவர்களுக்கு தேவாசுர போர்களில் உதவி செய்ய போனதாக இதிகாச / புராணம் சொல்கின்றன. மேலும் பல அரசர்கள் அப்படி செய்து உள்ளார்கள். இப்போது தேவர்களை பார்க்கிறதே முடியவில்லை!
சத்ய யுகத்திலே பலரும் தவம் செய்தே காலம் கழித்தார்கள். துவாபர யுகத்தில் யோகம் செய்து கழித்தார்கள். திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து கழித்தார்கள். இப்போதோ பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இப்படியாக மனிதனின் ஆன்ம சக்தியாகட்டும் தேக சக்தி ஆகட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் அவ்வளவு? பிரதாப சிம்மன் பயன்படுத்திய இரும்பு கவசம் ஜெய்பூர் அரண்மணையில் இருக்கிறது. அவனோ அதை மேலே போட்டுக்கொண்டு சண்டையே போட்டான். இப்போது உள்ள மனிதர்களால் அதை தூக்கக்கூட முடியவில்லை. நாலு பேர் சேர்ந்தே தூக்க வேண்டி இருக்கிறதாம்!
இப்படி க்ஷீணித்து போய்விட்ட நிலையில் ஆன்ம சக்தி குறைந்துவிட்ட சமயத்தில் பெரியோர்களால் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தணர்களுக்கு சைவ உணவே விதிக்கப்பட்டது. பெண்களுக்கு வேத பாடங்கள் வேண்டாம் அல்லது வேள்வி செய்யும் காலத்தில் பயனாகும் மந்திரங்கள் சொல்லி வைத்து சொல்லப்பட வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனல்தான் வேத கால பெண்மணிகள் வேதம் பயின்று இருந்தார்களோ இல்லையோ (வேத ரிஷிகளான அவர்களது கணவர்களிடம் தத்துவ விஷயம் தெரிந்து கொண்டு இருக்கலாம். வேத பாடங்களுக்கு எப்போதும் அதிகாரமில்லை என்றும் ஒரு கருத்து உண்டு ) இப்போது அதற்கு அதிகாரமில்லை.

இதற்காக வருந்த வேண்டாம். நாம ஜபம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து பயன்பெறுங்கள். அல்லது குருவை கண்டுபிடித்து தகுந்த மந்திர உபதேசம் பெறுங்கள்.

இல்லை காயத்ரி மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தால் யோ தேவ ஸவிதா என்று ஆரம்பிக்கும் சுலோகத்தை கற்று ஜபியுங்கள். இதுவும் பலம் வாய்ந்தது என்று என் அக்கா சொல்லி இருக்கிறார். பொருள் காயத்ரியின் பொருளேதான்.

யார் மீதும் எந்த காழ்ப்பும் இல்லாமலே எழுதி இருக்கிறேன். சரியான படி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!



Thursday, November 12, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-8



கடலூரில் ஏழு வருஷம் ஜப யக்ஞம் நடந்த பிறகு மற்ற ஊர்களில் இதை பரப்பலாமா
என்று யோசித்தோம். பார்க்கும் வெளியூர் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசுவோம். ஆரம்ப முதலே சென்னை உள்பட சில ஊர்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் அவர்கள் வருடா வருடம் வர முடியவில்லை. அவரவர் ஊரிலேயே நடக்க வேண்டும் என்று யோசித்தோம். முதல் கட்டமாக நெய்வேலியை பிரித்து அங்கேயே நடத்து முயன்றோம். அவர்கள் உறுதியாக கடலூருக்குத்தான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். வேலூரில் ஒரு வைதீகர் ஸ்ரீ க. அவருடைய பந்துக்கள் இங்கே கடலூரில் இருந்ததால் அவரை முன்னமேயே சந்தித்து இருந்தேன். அவரே இதைப்பற்றி ஒரு முறை பிரஸ்தாபித்தார். விவரங்கள் கேட்டுக்கொண்டு சிலரை அனுப்பலாமா என்றார். தாராளமாக என்றோம்.

5 பேர்களை தேர்ந்து எடுத்து அடுத்த ஹோமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அனைவரும் டாக்டர், ஆடிட்டர் போல நிலையில் இருப்போர். வந்தவர்கள் ஹோமம் செய்து மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்களிடம் "அடுத்த வருடம் உங்கள் ஊரிலேயே செய்கிறீர்களா?” என்றோம். "அவசியமாக!” என்று பதில் வந்தது.

கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல் அந்த வருஷமே துவக்கிவிட்டார்கள். ஆவணி மாதம் ஆரம்பித்து தை மாசியில் ஹோமம் செய்கிறார்கள். இந்த வருடம் மூன்றாவது முறை
ஜப யக்ஞ ஹோமம்.

பங்களூரில் ஒரு நண்பர் என் பையருக்கு. குடும்பத்தில் வேத சம்பந்தம் விட்டுப்போய் சில தலை முறைகள் ஆகிவிட்டாலும் இவருக்கு மட்டும் வேதத்தில் சிரத்தை ஏற்பட்டு முயன்று சில சூக்தங்கள், ருத்திரம், சமகம் போல சில பாடங்களை கற்று வந்தார். என் பையர் நெரூர் போக வேண்டி வந்தபோது தொலை தொடர்பு இல்லாததால் வழி காட்டுதலுக்கு என்னிடம் சொல்லிவிட்டு போனார்.

டாக்டர் என்று தெரிந்து கொண்ட நண்பர் ஸ்ரீ. ஹ. சில மருத்துவ பிரச்சினைகளையும் முன் வைத்தார். அவருடைய அம்மாவுக்கு மார்பக புற்று நோய் கண்டு மருந்து கதிர் மருத்துவங்களுக்கு பலனில்லாமல் அறுவை செய்து இருந்தார்கள். அதில் மீண்டும் புற்று வளர ஆரம்பித்துவிட்டது. டாக்டர்கள் ஜனவரி தாண்ட மாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதை அவர்கள் அம்மாவிடம் சொல்லவில்லை. பிப்ரவரியில் அவருடைய தம்பிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயற்சி நடந்து கொண்டு இருந்தது.  அதையாவது பார்த்துவிட்டு போகலாமே என்பது குடும்பத்தார் எண்ணம். மேலும் இவருக்கு குழந்தை பேறு இல்லாமல்
இருந்தது.

நான் சொன்னேன், "அப்பா! எங்கள் மருத்துவத்திலோ ஆகக்கூடியது எல்லாம் பார்த்து இருக்கிறீர்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை.”
ஏதாவது மந்திர ஜபம் செய்தால் பலிக்குமா?
யார் கண்டது பலித்தாலும் பலிக்கலாம். கர்மாவை பொறுத்து!
என்ன ஜபம் செய்யலாம்?
எனக்கு இருப்பது ஒன் பாய்ன்ட் ப்ரோக்கிராம். காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. பிராயச்சித்தம் இல்லை.
எவ்வளவு செய்ய வேண்டும்?
தினசரி ஆயிரம்?
யப்பா! அவ்வளவு எப்படி முடியும்?
சரி! நீங்கதானே கேட்டீங்க என்ன செய்யணும்ன்னு?
முடியுமா? நான் ஸாப்ட்வேர் எஞ்சினீர். நேரம் கிடைக்கிறது கஷ்டம்.
மனசு வைத்தால் நேரம் கிடைக்கும். முயற்சி பண்ணிவிட்டு அப்புறம் முடியும், முடியாதுன்னு தீர்மானம் செய்யலாமே?

சரி என்று அவரும் தன் ஜபத்தை ஆரம்பித்தார். கஷ்டமாக இருந்தாலும் முயற்சி தொடர்ந்தது. ஆனால் அதிகம் செய்ய ஒரு ஊக்கம் இல்லை.
அடுத்த முறை பேசியபோது "வேலூரில் ஜப யக்ஞம் துவங்குகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்" என்றேன்.
ஸ்ரீ க. வின் தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தேன்.
அடுத்த நாள் இரவு அழைப்பு வந்தது. ஸ்ரீ க விடம் தொலபேசி தொடர்பு கொண்டாராம். ஜப யக்ஞ விவரம் கேட்டுக்கொண்டார். "படிவம் அனுப்புகிறேன். கடைசி நாள் ஆகிவிட்டது, இருந்தாலும் பரவாயில்லை!” என்றார். ஸ்ரீ க.
முகவரி கேட்டு எழுதும் போது ஸ்ரீ கவின் பக்கத்தில் அதுவரை அவருடன் பேசிக்கொண்டு இருந்தவர் வியப்புடன் "அங்கேதானே என் வீடு!” என்றார்.
பார்த்தால் ஸ்ரீ ஹ. உடைய பக்கத்து வீட்டுக்காரர்! அவர் மூலமாகவே படிவம்
அனுப்பப்பட்டது.

ஒரு லட்சம் முடியவில்லை என்றாலும் கணிசமாக ஜபம் செய்தார். ஹோமத்திலும் கலந்து கொண்டார். நானும் அங்கே போயிருந்ததால் சந்திக்க முடிந்தது. இதற்குள் தம்பி கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. பத்திரிகை கொடுத்தார்.
வேலை பளுவில் அவரை அப்புறம் மறந்தாயிற்று. சமீபத்தில் அவர் ஔபாசனம் ஆரம்பிக்க எண்ணி கேட்டுக்கொண்டதால் பையர் போய் ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார். பையர் அங்கே இருக்கும்போது வேறு விஷயத்துக்காக தொடர்பு கொண்டேன். எதிரிலேயே ஸ்ரீ ஹ. இருந்ததால் பேசுகிறாயா என்றார்.
 பேசலாமே!
சுருக்கமாக,
தம்பி திருமணம் நன்றாக நடந்தது; அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். பிரச்சினை ஏதும் இல்லை. மனவி கர்ப்பமாக இருக்கிறார்!

அட இப்படித்தானே நடக்கும்!
பிகு: இதை எழுதிய பின் சமீபத்தில் அவரது அன்னை வேறு காரணங்களால் ஊருக்கு  போய்விட்டார்கள்.