Pages

Saturday, November 21, 2009

காயத்ரி அனுபவங்கள் -10



காயத்ரி ஜபத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இதே போல அனுபவமா என்றால் தெரியாது என்றே சொல்ல வேண்டும். தங்கள் அனுபவங்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். அவற்றையே எழுத முடிந்தது. மேலும் சில அந்தரங்கமானவை. எந்த விசேஷ அனுபவமும் பெறாதவர் இருக்கத்தான் இருப்பர். ஏன் என்று புரிய முதலில் ஏன் இப்படி அனுபவங்கள் நிகழ்கின்றன என்று புரிய வேண்டும்.
நமக்கு என்ன கிடைக்கும் என்பது பெரும்பாலும் நம் கர்ம வினையை பொருத்தது. அதை மீறியா ஏதும் கிடைக்கும்? என்றால் இல்லை என்பதே பதில். பின்னே எப்படி இந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன? இவை பொய்யா?
கர்ம வினைகள் என்ன செய்கின்றன? அவை ஒரு தகுந்த சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில் நமக்கு வேண்டியது கிடைக்க சாதகமானதும் இருக்கும், பாதகமானதும் இருக்கும். புண்ணியங்கள் நல்ல சூழலையும், பாபங்கள் பாதகமான சூழலையும் தோற்றுவிக்கும். நமக்கு வேண்டியது எவ்வளவு கிடைக்கும் என்பது அப்போது நாம் எடுக்கும் முயற்சியையும் பொருத்தது.
காவிரியில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. நாம் ஒரு குடத்தை கொண்டு போனால் ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரலாம். ஒரு சொம்பு கொண்டு போனால் சொம்பு தண்ணீர்தான் கிடைக்கும்.
புண்ணிய பாபங்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். நிறைய பாபம் செய்து இருக்கிறேன். நிறைய புண்ணியமும் செய்து இருக்கிறேன். தானிக்கி தீனி சரி போயிந்தி என்று சொல்ல முடியாது.
ஆனால் நாம் செய்கிற பாபங்களுக்கு பிராயச்சித்தங்கள் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராயச்சித்தம் என்றால் பாபம் முழுக்க போய் விடாது. ஆனால் பெருமளவு குறையும்.
வேண்டுமென வருத்திக்கொள்வது ஒரு வகை பிராயச்சித்தம். உண்ணா நோம்பு போன்றவை இது போல. ப்ராணாயாமம் போன்ற சில கிரியைகளும் பிராயச்சித்தம் ஆகும். மந்திர ஜபங்களும் பிராயச்சித்தம் ஆகும். அதில் முக்கியமானது காயத்ரி. அதனால் காயத்ரியை அதிக அளவில் ஜபிக்க பாபங்கள் வெகுவாக நீங்கி காரியங்கள் நடக்க தகுந்த சூழ்நிலை மேலோங்கிவிடும்.

ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம்.

ஒரு பெரிய புல்வெளி. அதில் ஒரு பசு மாட்டை கட்டிப்போட்டு இருக்கிறது. மாடு எவ்வளவு புல் மேய முடியும்? கயிறு அனுமதிக்கிற அளவு ஒரு வட்டத்தில் மேயலாம். அந்த வட்டத்துக்குள்ளேயே சில மரங்கள் இருக்கலாம், புதர்கள் இருக்கலாம். அவை மாடு தேவையான அளவு மேய முடியாமல் தடுக்கலாம். இந்த புதர்களை நீக்கிவிட்டால் மாடு தேவையான புல்லை தடை இல்லாமல் மேய்ந்து கொள்ளும்.
உலக போகங்களே புல்வெளி. பசு மாடு நாம். கயிறு நம் கர்மா. மரம் புதர்கள் நம் பாபங்கள். இவற்றை நீக்குதல் பிராயச்சித்தங்கள். பிராயச்சித்தங்களால் நம் பாபங்களை குறைத்துக்கொண்டால் கர்மா அனுமதிக்கிற அளவு முழுமையாக உலக போகங்களை அனுபவிக்கலாம்.

இப்ப புரியும் ஏன் சிலருக்கு வியக்கத்தக்கதாக அனுபவங்கள் ஏற்படுகின்றன, ஏன் சிலருக்கு இல்லைன்னு. சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது.
அப்படியானால் கொடுத்து வைக்காத சிலருக்கு ஒரு நல்லதும் காயத்ரி ஜபத்தால் ஏற்படாதா? என்றால் அப்படியும் இல்லை.
ஜப காலத்தில் நடத்தும் ஒரு கூடுதலில் வந்திருந்தவர்களை அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். ஸ்ரீ சீ. ஜப யக்ஞத்தில் வெகு நாட்களாக பங்கு கொள்பவர். அவருக்கு மனைவியின் உடல் நலத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட பிரச்சினைகள். இவர் என்ன சொல்லுவார் என்று விஷயம் தெரிந்த சிலர் ஆச்சரியப்பட நண்பர் பேச ஆரம்பித்தார்.
"மூன்று வருஷங்களாக ஜபம் செய்து வருகிறேன். ஆரம்பித்த போது நிறைய பிரச்சினைகள் இருந்தன. இப்போது ..." என்று சொல்லி நிறுத்திய போது பெரும்பாலானோர் எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சொல்லுவார் என எதிர்பார்த்தனர்.
"இப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கு."
பலரும் ஏமாந்து போனது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
"ஆனால் பெரிய வித்தியாசம். இப்ப "வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும்; சுக துக்கங்கள் வந்து வந்து போகும்" என்று புரிந்துவிட்டது. அதனால இப்போ பிரச்சினைகள் வந்தாலும் கஷ்டப்பட்டாலும் ரொம்ப துக்கப்படுவதில்லை."
கேட்ட பேரில் எவ்வளவு பேருக்கு என்ன புரிந்ததோ, நான் வெகு ஆச்சரியப்பட்டேன். இறைவன் க்ருபை எவ்வளவு இருக்கிறது! இந்த ஞானம் மட்டும் வந்துவிட்டால் எங்கோ போய்விடலாமே!


5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

/"மூன்று வருஷங்களாக ஜபம் செய்து வருகிறேன். ஆரம்பித்த போது நிறைய பிரச்சினைகள் இருந்தன. இப்போது ..

.....இப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கு."

அவருக்கு பிரச்சினைகளாகப் பட்டதெல்லாம், உண்மையில் பிரச்சினைகளே அல்ல..தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளக் கிடைத்த எச்சரிக்கை என்பதாகவோ,

அவருக்குப் பிரச்சினைகளாகப் பட்டவைகளைக் காட்டிலும் பெரிய பிரச்சினைகள், கண்டங்கள் அவரை அறியாமலேயே தீர்ந்து போனதை அவர் கவனிக்கவில்லை என்றோ

கர்மா முழுசாய் அனுபவித்து தீர்க்கிற வரைக்கும், இந்த ஜெபம் பலனளிக்கக் காத்திருக்கும் என்றோ எப்படி வேண்டுமானாலும் அத்தப்படுத்திக் கொள்ளலாமே!

கடந்த காலத்தில் என்னுடைய சொந்தக் கசப்புக்களே, எவ்வளவு உற்ற மருந்தாக இருந்திருக்கிறது என்பதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துகொள்ளும் தருணம் வந்திருக்கிற சொந்த அனுபவத்தில் இருந்து தான் சொல்கிறேன்!

மனம் தளர்ந்துவிடாமல், நம்பிக்கையோடு ஜெபம் செய்துவரச் சொல்லுங்கள்! அதுவே நண்பர்கள் அவருக்குச் செய்கிற பெரும் உபகாரமாக இருக்கும்.

திவாண்ணா said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி. நலம்தானா?
ஆமாம் பலவிதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒரு விதத்தில் எடுத்துக்கொண்டார். அது நல்லதாகவே அமைந்தது அவருக்கு. தொடர்ந்து ஜபம் செய்து வருகிறார்.

//கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துகொள்ளும் தருணம் வந்திருக்கிற சொந்த அனுபவத்தில் இருந்து தான் சொல்கிறேன்!//
ஆமாம். சாதாரணமாக எல்லாம் நல்லபடிதான் நடக்கிறது. நமக்கு பலசமயம் அது புரிவதில்லை. நாம் நினைஅத்தபடி இல்லை என்பதால் அது சரியில்லை என்று நினைக்கிறோம். ம்ம்ம்ம் முன்னேயே இது குறீத்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறேன்.

yrskbalu said...

jabam gives good or bad or nothing - thats not matter.

but whatever comes in our life - accept as it is. that maturity or vision came.

for me - thats the valuable and it will usefull for further entire life.

thats enough also.

Geetha Sambasivam said...

ஏற்கெனவே படிச்சாலும் திரும்பவும் ஒருமுறை படிச்சேன். நன்றி. அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி. எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்கு ஒரு செங்கல் இப்போவே சொல்லி வைக்கறேன், மறுபடியும்.

திவாண்ணா said...

//எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்கு ஒரு செங்கல் இப்போவே சொல்லி வைக்கறேன், மறுபடியும்.//
நினைவிருக்கு! ஜூன் மாசம் ஹோமம் வரும். நீங்களும் நினைவு வெச்சுக்குங்க!