Pages

Thursday, September 28, 2017

கிறுக்கல்கள் -153





வித்தியாசமான வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும்போது கெட்டது நல்லதே; பாபம் என்பது அருளுக்கு ஒரு வாயில் என்றார் மாஸ்டர்!

சீடர்கள் திகைத்துவிட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: கார்தேஜ் பழைய ரோம சாம்ராஜ்யத்துக்கு ஒரு முள்ளாக இருந்தது. கடைசியில் ரோம் அதை முற்றிலுமாக அழித்துவிட்டது. அதன் பின்னரே அது அமைதியாக இருக்க முடிந்தது… கூடவே அது மெதுவாக ஊளை சதையும் அழுகலுமாக நாறத்தொடங்கிவிட்டது!

உலகத்தில் கெட்டது என்று ஒன்றே இல்லாமல் போகுமானால் மனித உள்ளம் அழுகக்கூடும் என்றார் மாஸ்டர்!

Wednesday, September 27, 2017

கிறுக்கல்கள் -152





மாஸ்டரின் சீடர்கள் சிலர் ஒரு பிரபல மதத்தலைவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மாஸ்டரோ மௌனம் காத்தார்.

இது பற்றி அவரிடம் பின்னால் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: பிறர் மீது தன் சக்தியை காட்டுபவர்கள் உண்மையான மத குரு இல்லை.
பின்னே? மதத்தலைவரின் வேலைதான் என்ன?
சட்டம் போட அல்ல; ஊக்கமூட்ட. வற்புறுத்த அல்ல; விழிப்புணர்வு ஊட்ட!

Wednesday, September 13, 2017

கிறுக்கல்கள் -151




ஒரு விஞ்ஞானி நவீன அறிவியலின் சாதனைகளைப் பற்றிய டாக்குமெண்டரி ஒன்றை மாஸ்டருக்கு காட்டினார். “இதோ பாருங்கள். இப்போது நாங்கள் பாலைவனத்தில் நீரூற்றி சோலையாக்க முடியும். நயாகரா நீர் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி சக்தியை சேமிக்க முடியும். தொலை தூரத்தில் இருக்கும் நக்ஷத்திரத்தின் தன்மையை இங்கிருந்து கணிக்க முடியும். அணுவின் கூறுகளை ஆராய முடியும். சீக்கிரத்தில் நாங்கள் இயற்கையை வென்று விடுவோம்.” 

மாஸ்டருக்கு பிரமிப்பு ஏற்பட்டாலும் சிந்தனை வயப்பட்டார்.

பின்னால் சொன்னார்: “இயற்கையை ஏன் வெல்லனும்? அது நம் நண்பன்.இருக்கும் ஆற்றலை எல்லாம் வெல்ல முடியாத ஒன்றை வெல்வதில் காட்டினால் என்ன? பயம்! பயத்தை எப்போது வெல்லப்போகிறோம்?”

Tuesday, September 12, 2017

கிறுக்கல்கள் -150





மாஸ்டரை சந்தித்த கவர்னர் சொன்னார்: நான் பயமே அறியாதவன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா ஒண்ணே ஒண்ணுதான் பயமுறுத்துது. சாவு! சாவுன்னா என்ன?
எனக்கு எப்படி தெரியும்? என்றார் மாஸ்டர்.
ஆனா நீங்க ஞானியாச்சே?
ஆமா! ஆனா செத்துப்போன ஞானி இல்ல.

Monday, September 11, 2017

கிறுக்கல்கள் -149





உங்கள் மாஸ்டர் எதைத்தான் கற்றுக்கொடுக்கிறார்?
எதுவுமில்லை!
பின்னே எதைத்தான் தருகிறார்?
அவருடைய மௌனம். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு இலை தழையிலும் கூட ஊடுருவும் வான் வழி வந்த கணக்கற்ற சூரிய கிரணங்களின் சக்தி அவருள்ளும் பிரகாசிக்கிறது. அதையும் பெற்றுக்கொள்ளலாம்.