Pages

Friday, January 30, 2009

அந்தக்கரணம், ஞான இந்திரியங்கள்.



தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும் இத் தன்மாத்திரைகள் ஐந்திலும் தொடர்ந்து கூடி நிற்கும்.
அதாவது சத்வம் ரஜஸ் தமஸ் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும். அதோட இல்லாம 5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.

சரியா?
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து அந்தக்கரணம் உருவாகும்.
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து ஞான இந்திரியங்கள் - புலன்கள் உருவாகும்.

அந்தக்கரணம் பத்தி http://anmikam4dumbme.blogspot.com/2008/12/blog-post_14.html இலே பாத்தோம். இது ஒண்ணே ஆனாலும் செய்கிற வேலையின் தன்மை படி ஐந்தா இருக்குன்னு பாத்தோம். அதான் சமஷ்டி சமாசாரம்!

ஞான இந்திரியங்கள் அஞ்சு.
காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

இந்த அந்தக்கரணங்களும் ஞான இந்திரியங்களும் சத்வ குணத்திலேந்து வந்ததாலே ஞானத்துக்கு சாதனமா - ஞானம் அடைய உதவுகிற கருவிகளா- ஆகும்.

37.
தன் மாத்திரையின் சத்துவ குணத்தில் அந்தக்கரண ஞானேந்திரிய உற்பத்தி:
ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும்
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவியாகும்
ஓதிய பின்னை யைந்து முளம்புத்தி யிரண்டா ஞான
சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே

ஆதிமுக்குணம் (தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும்) இப்பூத மடங்கலும் (இத் தன்மாத்திரைகள் ஐந்திலும்) தொடர்ந்து (கூடி) நிற்கும். கோதில் (குற்றமில்லாத) வெண் குணத்தில் (சத்துவத்தில்) ஐந்து கூறு உணர் கருவியாகும். (ஞானேந்திரியங்கள்). ஓதிய (சொல்லப்பட்ட) பின்னை ஐந்தும் உளம் புத்தி இரண்டாம் (மனம் புத்தி எனும் இரு பரிணாமம் உடைய அந்தக்கரணமாம்). இவ்வேழும் சற்குணப் பிரிவினாலே (சத்துவ குண அம்சமானதால்) ஞான சாதனமாம் (ஞானேந்திரியங்கள், அறி கருவிகள்).



Thursday, January 29, 2009

தன் மாத்திரைகள்




இந்த விட்சேப சக்தியால சீவர்கள் அஞ்ஞானம் ஒழிஞ்சு மோக்ஷம் அடைய எது தேவையோ அதை எல்லாம் பகவான் படைச்சு இருக்கான். இதனால்தான் ஆவரணம் மோசம் விட்சேபம் நல்லதுன்னு சொல்கிறது.

அப்படி என்ன படைச்சு இருக்கு? நம்மோட உடம்பு (சுவரை வெச்சுதானே சித்திரம் எழுத?) அந்தக்கரணங்கள் (இது வழியாதான் மோட்சத்துக்கு வழியை தேடணும்) புவனங்கள் - அதாங்க உலகங்கள் (இல்லாட்டா எங்கே வாழறது?) போகங்கள் (உடல்லே உயிர் தங்கணுமே?)

சரி. இப்ப இதெல்லாம் எப்படி தோன்றியது? இதுக்கு சிலர் வெவ்வேறு விதமா பதில் சொன்னாலும் இப்ப பாக்கிறது பரவலா ஒத்துகிட்டது.

முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான். அதிலேந்து வாயு. வாயுலேந்து அக்னி. அக்னிலேந்து நீர். நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.
இதுக்கெல்லாம் இப்ப பேர் சூக்கும பஞ்ச பூதங்கள் அல்லது தன் மாத்திரைகள்.
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இவை இருக்கும்.
ஆகாசத்திலே வாயு முதலான மத்தது இருக்கும். வாயுவிலே அக்னி முதலா மத்தது ..இப்படியே...
இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அதன் வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன் மாத்திரையோட (18 பிப்ரவரி அன்று திருத்தம்)
அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணங்களும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?

ஆகாசத்தின் குணம் எல்லாத்துக்கும் இடம் தருவது.
வாயுவுக்கு இந்த குணமும் உண்டு. மேலும் அதோட இயற்கையான சலன குணமும் உண்டு.
அக்னிக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல் கூட அதோட குணமான உருவமும் உண்டு.
நீருக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் கூட அதோட குணமான ருசியும் உண்டு.
மண்ணுக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம், ருசி, கூட அதோட குணமான மணம் உண்டு.

இவற்றினால அனுபவிக்கிற சாதனமான தநு - சூட்சும உடல்கள் உண்டாகும்.

36.
விட்சேப சக்தியில் தன் மாத்திரையான சூட்சும பூத உற்பத்தி கூறல்.

தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற்
காற்றதாங் காற்றிற்றீயாங் கனலினீர் நீரின்மண்ணாம்
போற்றுமிவ் வைந்துநொய்ய பூதங்களென்று பேராம்
சாற்றுமற் றிவற்றிற்போக சாதனதநு வுண்டாகும்

[முன்] சொல்லிய தோற்றமாம் சத்திதன்னில் (விட்சேபசக்தியில்) (சத்தத்தின் மாத்திரையான) விண்ணாம்; விண்ணிற் (ஸ்பரிசத்தின் மாத்திரையான) காற்றதாம்; காற்றின் (ரூபத்தின் மாத்திரையான) தீயாம்; கனலின் (ரஸத்தின் மாத்திரையான) நீர்; நீரின் (வாசனையின் மாத்திரையான) மண்ணாம். போற்றும் இவ்வைந்தும் (இந்த 5 தன் மாத்திரைகளும்) நொய்ய (சூட்சுமமான) பூதங்கள் என்று பேராம். சாற்றும் இவற்றில் போக சாதன[மான] தநு (சூட்சும தேகங்கள்) உண்டாகும்.

[விட்சேப சக்தியில் இருந்து பஞ்ச பூதங்களின் தன்மைகள் உண்டாகும்]


Wednesday, January 28, 2009

பட்டாம்பூச்சி






நேத்து ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி!
கிருத்திகா அக்கா பட்டாம்பூச்சி விருது அனுப்பி இருந்தாங்க. அவங்களே ¨இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும்.¨ அப்படின்னு எழுதினாங்க.

அவங்க வலைப்பதிவிலே ¨திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாராதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.¨
அப்படின்னு எழுதி இருக்காங்க.  இதுக்கு நான் அர்ஹனா என்கிறது கொஞ்சம் சந்தேகம்.

சாதாரணமா இந்த டேக் (tag) விளையாட்டு கொஞ்சம் பிரச்சினையானது. சிலருக்கு நாமும் அனுப்பினா மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு மனசிலே தோணித்து.
இருந்தாலும் கிருத்திகா அக்கா சொன்ன ¨விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.¨ என்கிற வரிகள் மனசை நெகிழ வைத்து விட்டது.

என் வழிகாட்டி வலையில நான் செலவழிக்கிற நேரத்தை மட்டுப்படுத்தின பின்னே  நான் படிக்கிற வலைப்பூக்களை ஏற்கெனெவே குறைச்சாச்சு. சரி ரேண்டமா சிலருக்கு அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இதனால மத்தவங்களை நான் மதிக்கலைன்னோ இல்லை அவங்க வலைப்பூ coolest one அப்படின்னு நினைக்கலைனோ இல்லை. அவங்க ¨அப்பாடா நமக்கு வேலை மிச்சம்¨ ன்னு பெருமூச்சு விட்டுக்கலாம்.
யார் யார்ன்னு சொல்லும் முன்னே...

அட, இந்த இழை எங்க ஆரம்பிச்சதுன்னு ஒரு க்யூரியாசிடி. அதுக்கு கூகுளாரை கூப்பிட்டா 14 பக்கத்துக்கு ¨பட்டாம்பூச்சி விருது¨ விடைகள் கிடைச்சது. அதிலேந்து என்னத்தை கண்டுபிடிக்க?
வேற வழி இல்லை. பதிவுகளை பின் பக்கமா தொடர்ந்து போகணும். ஏற்கெனெவே இணையம் நல்லா இல்லையேன்னு நினைச்சா...

இணையத்துக்கு திடீர்ன்னு உடம்பு சரி இல்லாம போயிடுத்து. சும்மா பற பறன்னு உந்தீ பறக்க ஆரம்பிச்சது. சரி, நாராயணான்னு கொஞ்சம் க்ளிக்கினேன். (அம்பி இப்படி க்ளிக் குன்னு எழுத கூடாதா? கிளிக்குக்கு ன்னு எழுத போய் எவ்வளோ பேர் ஏமாந்து போயிட்டாங்க? ;-)

கண்டு பிடிச்சது கீழே:
கிருத்திகா அவங்களுக்கு அனுப்பினது
பாசமலர் -->
திவ்யா  -->
வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் *பிரபுவிற்கும், இரவீ
கில்ஸ் பதிவுல விவரம் இல்லை. சரின்னு பிரபு பக்கம் போய் அப்புறம்..
1. *குந்தவை  2.தமிழ் தோழி 3.தாரணிபிரியா
மோகனுக்கு
நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா
அப்பாடா இங்க கொஞ்சம் உதவி கிடைச்சது. அவரும் என்னை மாதிரியே தேடி ஒரு பட்டியல் போட்டு இருந்தார். அப்படியே G3...

அணிமா <----

ராகவன் <----

ரம்யா <----

பூர்ணிமா <----

விஜய் <-----

திவ்ய பிரியா <------

G3(பிரவாகம் )--->

கார்த்தி/mgnithi--->

Gils/Shanki---->

பிரியா -->

Kartz---->

Tusharmargal--->

Akansha---->

Infinity---->

Simple Elegant Girl ---- >

Chronic Chick Talk ----->

Empty Streets----->

The Blog Reviewer--->

biotecK---->

KisAhberuang---->


blogscope >
இவர்தான் ஆரம்பிச்சதோன்னு ஒரு சந்தேகத்தோட முடிச்சு இருந்தார்!
இந்த பட்டியல் எவ்வளொ சரின்னு தெரியலை.
சரி பட்டாம்பூச்சி மேலே பறக்க என்னால ஆனது!

ரேண்டம் தேர்விலே முதல்ல கீதா அக்கா
அட, என்ன பண்ணறது? முடிவை மாத்திக்க முடியாதே? இவங்க பதிவுகள் நான் வலைப்பூவுக்கு புதுசா இருந்தப்ப படிச்ச பதிவுகள்ள ஒண்ணு. அபி அப்பா ¨பொங்கள்¨ பதிவு போடப்போய் படிச்ச இவங்க கண்ணாடி உடஞ்சுபோனது பத்தி எழுதி - சிரிப்பா வந்தது. அப்பலேந்து படிக்க ஆரம்பிச்சது.

வடுவூர் குமார். இவரோடதுதான் முதல் முதல் படிச்ச பதிவு. உபுண்டு வழியா போய் இவர் அது பத்தி பதிவு போட்டதை பாத்து, இவர் கட்டட விஷயங்கள் எழுத அதுல எனக்கு ஒரு ஆர்வம் இருந்ததால.... இப்ப துபாய் போய் அங்கேந்து பதியறார்.

கடைசியா கோமா அக்கா. படம் எடுக்க ஒரு ஆர்வம் வந்து பிட் போட்டோ போட்டிகளில கலந்து கொள்ளப்போய் அங்கே அறிமுகம் ஆகி இவங்க ஹா ஹா ஹாஸ்யம் எழுத- நான்  படிக்க ஆரம்பிச்சுட்டேன். என் பெரியப்பா சொல்லுவார் யார் நகைச்சுவையை ரசிக்கலையோ அவங்களுக்கு ஏற்கெனெவே நல்ல தண்டனை கிடைச்சாச்சு!

3 பேரும் கீழே இருக்கிற விதிகளை கடைபிடிக்க பாருங்க. இல்லைனாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன். :-)
நல்லது, கடைசியா
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)






தமஸ் என்ன ஆச்சு?



சரி அடுத்து தாமசம் என்கிற தமஸ்.
[மூல புத்தகத்திலே கொஞ்ச தூய தமிழா இருக்கு. ராசதம் ன்னு சொன்னா ராஜசம். மூலத்தை மாத்துக்கூடாது என்கிற கொள்கையாலே அப்படியே போடறேன். குழம்ப வேண்டாம்.]
ஆமாம் தமஸோமா ஜ்யோதிர் கமய ´தமஸ்´ தான்.

இந்த தமோ குணத்திலே பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை இரண்டா பிரியும். ஒண்ணு ஆவரணம். இரண்டாவது விட்சேபம். (விக்ஷேபம்)
ஆவரணம் என்கிறது மறைப்பு. விட்சேபம் என்கிறது பல வகையா தோன்றுகிற விஷயம்.
எந்த சக்தி நாம நம்மை சரியா, உண்மையா பாக்க முடியாம தடுக்கிறதோ அதுதான் ஆவரண சக்தி. இதோட சேட்டையாலதான் நாம ப்ரம்மம்ன்னு தோணாம வேற மாதிரி தோணுது. என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த நினைப்பை நீக்க முடியலியே! அது அவ்வளோ பவர்புல்!
இரண்டாவதான விட்சேபம் சுவாரசியமானது!
இந்த உலகம் மாறிட்டே இருக்கு. ஒரு கணத்திலே இருந்தது அடுத்த கணம் இல்லை. மாலை சூரியன் அஸ்தமிக்கிறப்ப பாருங்க. வண்ணக்கோலங்களை மாறிட்டே இருக்கிறதை!
இன்னிக்கி பாத்த வானம் நாளை அதே போல இல்லை. தாவரம் அதே போல இல்லை.
நாமும் ஒரு செகண்ட் இருக்கிறாப்பல அடுத்த செகண்ட் இல்லை. உடம்பில பல செல்கள் செத்து பலது புதுசா உருவாகிகிட்டு இருக்கு!


இப்படி எல்லாமே புதுசு புதுசா விதவிதமா மாறிகிட்டே இருக்கிறது விட்சேப சக்தியாலதான்.
ரெண்டுமே தாமசத்திலேந்து வந்தாலும் ஆவரணம் பொல்லாது விட்சேபம் நல்லது. ஏன்னு அப்புறம் பாக்கலாம்.


35.
சீவ ஈஸ்வரர்களுக்கு சூட்சும சரீராதி உண்டான முறைமை கூறத்துவங்கி முதலில் சக்திகளின் தோற்றம் சொல்லல்:

ஏமமா யாவினோ தவீசனா ரருளி னாலே
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

PG

ஏம மாயா வினோத ஈசனார் அருளினாலே, பூமலி (பொலிவு மிகுந்த) உயிர்கட்கு எல்லாம் போக சாதனம் (ஆன சூக்கும தேகம்) உண்டாக தாமத குணம் இரண்டு சக்தியாய் பிரிந்து தோன்றும். வீமமா (பயங்கரமான) மூடல் (ஆவரணம்) என்றும் விவிதமாம் தோற்றம் (விட்சேபம்) என்றும்.
தாத்பர்யம்: சித்தின் நிழல்தங்கிய தமோ குணமானது அறிவு விளங்காததாகிய ஆவரண சக்தியாகவும் அறிவு விளங்குவதாகிய விட்சேப சக்தியாகவும் தோன்றியது.



Tuesday, January 27, 2009

ஈசர்கள், சீவர்கள்.




இப்படி உண்டாகிற சீவர்களுக்கு அந்த ராஜஸ குணமே ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். வித் என்பது ஞானம். அவித்தை ஞானமல்லாதது, அதாவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திலேயே இருக்கிறதுதானே சீவர்களாகிய நம்மோட இயல்பு? அவித்தை கணக்கில்லாம இருக்கிறது. உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்.

அடுத்து தாமசம்.
அதுக்கு போகும் முன்னே இந்த ஈஸ்வரனும் சீவர்களும் என்ன ஆகிறார்கள்ன்னு பாக்கலாம்.

இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.

அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.

ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது ருத்திரனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.
[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க.]

சீவர்களிலேயும் இதே போல பிரிவுகளை பாக்கலாம்.

ராஜசம் அதிகமாகும் போது சீவர்கள் எப்பவும் வேலை செய்கிறவங்களா இருப்பாங்க. உலகமே இவங்களாலதான் இயங்குது!
சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)
தாமசம் அதிகமாகும் போது சோம்பி திரிஞ்சு மயக்கத்தோட காலம் போக்கறவங்களா இருப்பாங்க.
முன்னம் சொன்னது போல எல்லாருக்குமே ஒரு குணம் அதிகமானாலும் மற்ற 2 குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

{ஈச்வரன் செய்யும் காரியங்களை ஒட்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்றாக பிரிந்து தகுந்த காரியங்களை செய்கிறான். சீவர்கள் செய்யும் காரியங்களை ஒட்டி வேலை செய்கிறவர்கள், ஞான நாட்டம் உள்ளவர்கள், சோம்பேறிகள் என்று 3 ஆக உள்ளார்கள்.}

34
அழுக்கொடு பற்றுஞ்சீவர்க் கதுவேயா நந்தகோசம்
சுழுத்திகா  ரணசரீரஞ் சொன்னதிம் மட்டுமோக
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னோம்
வழுத்துசூக் குமவாரோப வழியுநீ  மொழியக்கேளாய்

அழுக்கொடு (அவித்தையுடன்) பற்றும் (அவித்தையில் பொருந்தும்) சீவர்க்கு அதுவே (அந்த அவித்தையே) ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம்.  சொன்னது இம் மட்டும் (இவ்வளவும்) மோக (மயக்கமாக தோன்றிய பிரக்கிருதியின்) முழுக்குணத்து இரண்டால் (சத்துவ, ரஜோ குணங்கள்) வந்த மூல ஆரோபம் (காரண அத்தியாசம்) சொன்னோம். வழுத்து (கூறாத) சூக்கும ஆரோப வழியும் மொழிய நீ கேளாய்.

PG:


{ஸ்படிகம் அடுத்த வண்ணம் ஆவது போல அவித்தை. அவித்யா காரியங்களில் பொருந்துதலால் அது சீவனின் இயல்பும் ஆனதால் "அழுக்கொடுபற்றும்”. சுழுத்தி சுகத்தையும் ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் பிரியம், மோதம், பிரமோதம் முதலான சகத்தை  அனுபவிப்பதால் "ஆனந்த மய கோசம்”. ஜக்ரத் ஸ்வப்ன அவத்தை  அடங்கியிருத்தலால் "சுழுத்தி". சீவன் தோன்றினதற்கும் ஸ்தூல சூட்சும சரீரம் உண்டாவதற்கும் மூலம் ஆகையால் "காரண சரீரம்".}

தாத்பர்யம்: சித்தின் நிழல்பொருந்திய சத்துவ ராசத குணம் மாயை, அவித்தை  எனப்படும். அந்த பிரதி பிம்பங்களின் பெயர்கள் முறையே  ஈசன், சீவன். அவர்களுக்கு அந்த மாயை, அவித்தையே காரண சரீரம்; சுழுத்தி அவத்தை; ஆநந்த மய கோசம். அந்த காரண சரீரங்களை  அபிமானித்ததால் அவற்றின் பெயர் அந்தர்யாமி, பிராஞ்ஞன். இவர்களுக்கு முறையே சிருட்டி முதலான, ஜாக்ரத் முதலான தொழில்களில் பற்று அற்று இருப்பதும், வைப்பதும் இயல்பு. இவை  அனைத்தும் காரண அத்தியாசம் எனப்படும்.