Pages

Wednesday, February 23, 2022

#ஶ்ராத்தம் - 41 ஶ்ராத்தத்தின் புகழ்ச்சி





சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
தேவலர்: சிராத்தத்தை செய்பவன் நோய் நொடி இல்லாமல் நெடுநாள் வாழ்வான். புத்திரன் பேரன் ஆகியவர்களை உடையவன் ஆவான். செல்வத்தை விரும்பினால் செல்வம் உடையவனாகவும் ஆவான். பரலோகத்தில் அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பலவித சிறந்த உலகங்களையும் அதிகமான யஷஸ்ஸையும் அடைவான்.
எமன் என்பவர் சொல்லுவது: யார் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னி உள்ள பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லாப் பிராணிகளுக்கும் உள்ளே இருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்.
சிராத்தத்தை செய்யாவிடில் தோஷம் இருக்கிறது. அந்த இடத்தில் புத்திரர்கள் பிறப்பதில்லை; மனிதர்கள் நோயற்று இருப்பதில்லை; நெடுநாள் வாழ்வதும் இல்லை; நன்மையும் அடைவதில்லை.
மார்க்கண்டேயர் சொல்லுவது: அநியாயமான வழியில் சம்பாதித்த திரவியங்களால் சிராத்தத்தை செய்கின்றனரோ அந்த சிராத்தத்தால் சண்டாளர்களும் புல்கசர்களும் திருப்தி அடைகின்றனர். பித்ருக்கள் திருப்தி அடைவதில்லை.
யாக்ஞ்வல்கியர்: வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் என்பவர் சிராத்த தேவதைகளான பித்ருக்கள் ஆவார், அவர்கள் சிராத்தத்தினால் திருப்தி செய்யப்பட்டால் அவர்கள் மனிதர்களின் பித்ருக்களை திருப்தி செய்கின்றனர். இப்படி திருப்தியடைந்த பித்ருக்கள் ஆயுசு தனம் வித்யை சுவர்கம் மோக்ஷம் சுகங்கள் ராஜ்யம் ஆகியவற்றை கொடுக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சக்தி உள்ளது.
எப்படி வழிதவறி போன கன்று பல பசு மாடுகள் இருக்கும்போது தன் தாயான பசுவையே அடைகிறதோ அதுபோல சிராத்தத்தில் கொடுத்த அன்னத்தை மந்திரமானது பித்ருக்களை அடைவிக்கிறது என்று வியாசர் சொல்லுகிறார்.
மத்ஸ்யர் சொல்லுவது: நாமம் கோத்திரம் ஆகியவை ஹவ்ய கவ்யங்களை பித்ருக்களுக்கு கொண்டு சேர்ப்பவை. நமது பித்ருக்கள் வேறு ஜென்மம் எடுத்து இருக்கலாம். அந்தந்த ஜன்மாவுக்கு தகுந்தாற்போல ஆகாரத்தை அடைத்து அந்தப் பிராணிகளை திருப்தி செய்கின்றன. நல்ல கர்மங்களைச் செய்து தெய்வத்தன்மை அடைந்து இருந்தால் அவனுக்கு அது அமிர்தமாக ஆகும். பசுவாகப் பிறந்திருந்தால் அது புல்லாக ஆகும். பாம்பாக பிறந்திருந்தால் காற்றாகி போய் சேரும். யக்‌ஷனாக பிறந்திருந்தால் அது பானமாக ஆகிறது. கழுகு பிறந்திருந்தால், அசுரர்களாக பிறந்திருந்தால் அது மாம்சமாக ஆகிறது. பித்ரு இன்னும் பிரேதம் ஆகவே இருந்தால் அது இரத்தம் கலந்த ஜலம் ஆகிறது. மனிதனாக பிறந்து இருந்தாலும் அது பலவித சுகத்தை உண்டாக்கும் அன்ன பானம் முதலியதாய் ஆகிறது.
இப்படிப்பட்ட சிராத்தத்தை செய்ய வேண்டியவர்கள் தவறாது செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.
இன்னும் சமையல் சமாசாரங்களும் மற்ற ஸுத்திரக்காரர் விஷயமும் பாக்கி இருக்கிறது.
தந்தையின் ஆப்த்திகம் இந்த வாரம் வருவதால் அடுத்த வாரம் தொடரலாம்.


Tuesday, February 22, 2022

ஶ்ராத்தம் - 40 முடிவு, பரேஹணி தர்ப்பணம்





வைஶ்வதேவம் செய்யும் புண்ணியவான் சிராத்தம் முடிந்து செய்யலாம். ஆனால் அதற்காக தனியாக பாகம் செய்து செய்ய வேண்டும்.
சிராத்தம் செய்து முடித்து சேஷத்தை கர்த்தா சாப்பிடாவிட்டால் விஶ்வேதேவர்கள் ஹவிஸை ஏற்பதில்லை. கவ்யங்களை பித்ருக்களும் எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே அவசியம் பித்ரு சேஷத்தை சாப்பிட வேண்டும். ஏகாதசி விரதம் இதனால் கெட்டுப் போகாது. கர்த்தா நீங்கலாக மற்றவர்களுக்கு கெட்டுப் போகும் என்று தோன்றினால் குறைந்தது முகர்ந்து பார்க்க வேண்டும். பழம் காய்கறிகள் வியஞ்ஜனங்கள் பால் தயிர் நெய் தேன் இவற்றுக்கு பித்ரு சேஷம் என்ற தோஷம் இல்லை. மிகுந்து போனதை யாரும் சாப்பிடலாம்.
ஒருவேளை பசி இல்லை என்றால் கூட எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
அடுத்து இந்த சிராத்த தினத்தில் சிரார்த்தம் செய்தவன் சிராத்தம் உண்டவன் ஆகியோருக்கான நியமங்களை பார்க்கலாம். இவர்கள் அன்று இரவு முழுவதும் பிரம்மச்சர்யத்துடன் இருக்க வேண்டும். மீண்டும் புசிப்பது, வழி நடப்பது, வாகனத்தில் ஏறுவது, தேகப்பயிற்சி செய்வது, ஸ்த்ரீ சங்கமம் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது. வேதம் சொல்லுவது, பகலில் தூங்குவது, வேறு யாரிடமும் தானம் வாங்குவது, பாரம் சுமப்பது ஆகியவற்றையும் செய்யக்கூடாது .
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
கடைசியாக பரேஹணி தர்ப்பணம்.
இந்த தர்ப்பணம் நடக்காமல் சிராத்தம் பூர்த்தி ஆவது இல்லை என்பதால் கர்த்தா இடையில் பிராமணர்கள் அல்லாதவருடன் பேசக்கூடாது. முடிந்தவரை மௌனமாகவே இருந்து விட வேண்டும். அடுத்த நாள் விடிகாலையில் சூரியன் உதயமாகும் முன்னர் இதை செய்ய வேண்டும். ஹிந்துக்கள் கணக்குப்படி சூரியன் உதயமானால்தான் அடுத்த நாள் என்பது ஆரம்பிக்கிறது. தேவையானால் மலஜலம் கழித்து, கை கால் முகம் அலம்பி துடைத்துக்கொண்டு ஆசமனம் செய்து பரேஹனி தர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். (வேறு புத்தகத்தில் ஸ்னானம் சொல்லி இருக்கிறது) இது அமாவாசையில் தர்ப்பணம் போலவேதான். கூர்ச்சம் உண்டு. பித்ரு ஆவாஹனம் உண்டு. ஆனால் யாருடைய ஸ்ரார்த்தமோ அந்த வர்க்கத்தை மட்டுமே ஆவாஹனம் செய்ய வேண்டும். அப்பாவுக்கு சிரார்த்தம் ஆனால் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ என்று மட்டும் ஆவாஹனம். அதேபோல அம்மாவுக்கான ஸ்ராத்தம் ஆனால் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹி என்று மட்டும் ஆவாஹனம். அமாவாசை தர்ப்பணம் போலவே செய்து முடிக்க வேண்டும். தர்ப்பங்களை பிரித்து எறிந்து ஆசமனம் செய்தபிறகு பல் துலக்குவது போன்ற தினசரி வேலைகளை ஆரம்பிக்கலாம்.
இத்துடன் ஶ்ராத்தப்பிரயோகம் முடிகிறது.

Saturday, February 19, 2022

#ஶ்ராத்தம் - 39 முடித்து வைப்பது.




 

இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். ஸ்ராத்தத்துக்கான அங்கமாக தர்ப்பணம் இருக்கிறது. அது பரேஹணி தர்ப்பணம் என்று சொல்லப்படும். அதை நியாயமாக அடுத்த நாள் விடிகாலை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லையானால் சிரார்த்தம் பூர்த்தி ஆவது இல்லை. ஆனால் பழக்கத்தில் உடனேயே செய்து விட சொல்கிறார்கள். (இல்லையானால் விடி காலை ஒரு முறை செய்து வைக்க வாத்தியார் வர வேண்டும் என்பதாலோ என்னவோ!) அப்படி செய்வதாக இருந்தால் அதை செய்துவிட்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு பூஜை ஆகியவற்றை சுருக்கமாக செய்து உறவினருடன் புசிக்க போகலாம். வந்தவர்களும் வாத்தியார் நமது பங்காளியாக இல்லாத பட்சத்தில் அவர்கள் நம் வீட்டிலேயே சாப்பிடுவதாக இருந்தால் அவர்களுக்கு தனியாகத்தான் சமையல் செய்ய வேண்டும். ஶ்ராதத்துக்காக சமைத்ததை அவர்கள் சாப்பிடுவதற்கு இல்லை,
இந்த பிண்டங்களை திரட்டி பிறகு என்ன செய்வது என்று கேள்வி இருக்கிறது. அவற்றை எருதுகளுக்கு ஆடுகளுக்கு கொடுத்துவிடலாம். பிராமணனும் பசுவும் கூட அதை சாப்பிடலாம். தீர்த்த சிராத்தமாக இருந்தால் அதை நீரில் நின்று கொண்டு தெற்கு நோக்கி ஆகாயத்தில் எறிய வேண்டும். இதெல்லாம் இப்போது முடியவில்லை என்பதால் பூமியில் புதைத்து விடுகிறார்கள்.
இடவசதி இருக்குமானால் பிராமணர்கள் சாப்பிட்ட இடத்தை பகல் முழுவதும் சுத்தி செய்ய கூடாது. முடிந்ததும் செய்யலாம். இடவசதி இல்லாத பட்சத்தில்- அப்படி தான் அதிகமாக இருக்கும்- பிராமணர்கள் இருக்கும் போது சுத்தி செய்யக்கூடாது. அவர்களை வழி அனுப்பிவிட்டு செய்யலாம். ஸ்வஸ்தி வாசனத்துக்கு முன் இலைகளை அசைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
இந்த நிலையில் இலைகளை எடுத்து சுத்தம் செய்யும்போது அவற்றைக்கொண்டு போய் நாய் முதலியன பூமியை தோண்டி அணுகாத அளவிற்கு பூமியைத் தோண்டி புதைக்க வேண்டும். மண்ணால் மூட வேண்டும். இவற்றில் இருக்கும் மிகுந்த உணவை சேர்த்தே புதைக்க வேண்டும். வீணாக போகிறது என்று நினைத்து யாருக்கும் கொடுத்து விடக்கூடாது. பிண்டங்களை கொடுக்கலாம் என்று சொன்ன பசு எருது ஆடுகள் ஆகியவற்றுக்கு கூட இதை கொடுக்கக்கூடாது.


 

ஶ்ராத்தம் - 38 -பிண்ட ப்ரதானம் -2




 

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு  குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி காதில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு கை அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை பத்னிக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் பூணூலை மாலையாக அணிந்து இருக்க வேண்டும். இதற்கு மந்திரம் ‘அபாந்த் வௌஷதீனாம்…’ என இருக்கிறதுபொருள்: ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’. அவளும் கிழக்கு முகமாக உட்கார்ந்து சத்புத்திரன் உண்டாவான் என்று நினைத்து ‘ஆதத்த’ என்ற மந்திரம் சொல்லி அதை உட்கொள்ள வேண்டும். (நித்தியனான இறைவன் தாமரை மாலை அணிந்த குமாரனை உண்டு பண்ணியது போல பித்ருக்கள் குழந்தையை உண்டு பண்ணட்டும்). இக்காலத்தில் பிள்ளை பேறு இல்லாமல் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த பிரயோகம் தெரியாமல் இருக்கிறது. பிறகு கர்த்தா பூணூலை இடம் செய்து கொண்டு பிண்ட பித்ரு தேவதைகளை வணங்கி பிரணவத்தை சொல்லி (மற்ற) எல்லா பிண்டங்களையும் தொட வேண்டும். பிறகு எல்லா பிண்ட பித்ரு தேவதைகளையும் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு இந்த பிண்டங்களை இரண்டிரண்டாக இரண்டு கைகளாலும் மறித்து முதலில் நடு பிண்டங்களையும் பின் தெற்கிலும் கடைசியாக வடக்கிலும் எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இந்த பிண்டத்திற்கு அடியிலிருந்த இந்த தர்ப்பங்களை எடுத்து எள்ளும் ஜலமும் எடுத்து ‘ஏஷாம் ந மாதா’  என்ற மந்திரம் சொல்லி - ஆமாம் அமாவாசை தர்ப்பணத்தில் வரும் அதேதான் - பித்ரு தீர்த்தமாக கீழே விட்டு தர்ப்பைகளை போட்டு விட வேண்டும். பிறகு பூணூலை நேர் செய்து கொண்டு ஆசமனம் செய்து, ஔபாசன அக்னியிலிருந்து பஸ்மா எடுத்து இட்டுக் கொள்ளலாம். துளசி தீர்த்தம் அக்ஷதை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ‘காயேன வாசா’ சொல்லி எல்லாவற்றையும் பிரம்மார்ப்பணம் செய்துவிட வேண்டும். பிறகு யாரும் உண்ணும் காலத்தில் ஜபம் செய்து இருந்தால் அவர்களுக்கும் நடத்தி வைத்த வாத்தியாருக்கும் தக்க சம்பாவனை தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.


Tuesday, February 15, 2022

ஶ்ராத்தம் - 37 -பிண்ட ப்ரதானம்




 

 அடுத்ததாக பிண்ட பிரதானம்இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும்பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை  பரப்ப வேண்டும்முன்னே ஹோமம் முடிந்து மிகுந்தது சிறிது பிராமணர்களுக்கு போட்டுவிட்டு மீதி வைத்திருக்கும் அன்னத்தில் ஆறு பிண்டங்களை பிடிக்க வேண்டும்.

மார்ஜயந்தாம் மம பிதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹஹ என்று சொல்லி கிழக்கு தர்ப்பங்களில் வடக்கில் ஆரம்பித்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். பின் மேற்கே  அதே போல 3 இடங்களில் மார்ஜயந்தாம் மம மாதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹ்யஹ என்று சொல்லி தர்ப்பங்களில்  எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.(இதற்கெல்லாம் ப்ராசீனாவீதி, பித்ரு தீர்த்தம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா? ) 

ஒவ்வொரு பிண்டமாய் எடுத்து ‘ஏதத்தேதத’  என்று சொல்லி ஓவ்வொரு பித்ரு பெயரையும் சொல்லி கையை மறித்து வடக்கிலிருந்து தெற்காக தந்தை வர்க்கத்துக்கு முதலிலும் பிறகு தாய் வர்க்கத்திற்கு இரண்டாவதாகவும்  பிண்டங்களை வைக்க வேண்டும்ஒவ்வொரு பிண்டத்தையும் வைத்தபின் அதற்கு மேற்கே சிறிது உதிரி அன்னத்தை வைக்க வேண்டும் இதை வைக்கும் போது ‘யே சத்வாமனு’ என்று சொல்ல  வேண்டும்.  (அதாவது ‘யே ச த்வாம் அனு உங்களை சார்ந்தவர்களுக்கு என்று பொருள்). பிறகு மந்திரங்கள் கூறி உபஸ்தானம் செய்ய வேண்டும். ‘பித்ருக்களே, உங்களை அனுசரித்து இங்கே வந்த மற்ற பித்ருக்களும் எங்களை நாடிவந்து ஹவிஸை வேண்டுகின்றவர்களும் அதேபோல மாத்ரு வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இந்த அன்ன பிண்டத்தை பெற வேண்டும். இரண்டு வர்க்கத்தினரும் திருப்தி அடைய வேண்டும்’ என்று கூறுவதுடன் பல முறை ‘திருப்தி அடையுங்கள்’ என்று வேண்டுகிறோம்.

இப்படியாக சிராத்தம் செய்வது செய்யப்பட்டவருக்கு மட்டும் இல்லாமல் அவரை சார்ந்த பலருக்கும் பயனாகிறது என்று இந்த மந்திரம் காட்டுகிறது. அர்க்கியத்துக்கு சேர்த்த தீர்த்தங்களை ஒரே பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையால் மூடி எல்லா பிண்டங்களையும் மூன்று முறை அப்பிரதட்சணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும். ஹோமத்தில் உபயோகித்த சின்ன பெரிய இலைகள் நெய் பாத்திரம் மற்ற பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தெற்கு பக்கம் கவிழ்த்து வைத்து ‘திருப்யத திருப்யத திருப்யத’ என்று ஒன்பது முறை கூறி இலைகள் முதலானவற்றை இரண்டிரண்டாக பாத்திரங்களை நிமிர்த்தி வடக்கு பக்கம் வைக்க வேண்டும். பிறகு பிண்ட பித்ரு தேவதைகளுக்கு ஸ்ராத்தத்திற்காக செய்த வடை அதிரசம் இவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.