Pages

Saturday, February 19, 2022

#ஶ்ராத்தம் - 39 முடித்து வைப்பது.




 

இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். ஸ்ராத்தத்துக்கான அங்கமாக தர்ப்பணம் இருக்கிறது. அது பரேஹணி தர்ப்பணம் என்று சொல்லப்படும். அதை நியாயமாக அடுத்த நாள் விடிகாலை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லையானால் சிரார்த்தம் பூர்த்தி ஆவது இல்லை. ஆனால் பழக்கத்தில் உடனேயே செய்து விட சொல்கிறார்கள். (இல்லையானால் விடி காலை ஒரு முறை செய்து வைக்க வாத்தியார் வர வேண்டும் என்பதாலோ என்னவோ!) அப்படி செய்வதாக இருந்தால் அதை செய்துவிட்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு பூஜை ஆகியவற்றை சுருக்கமாக செய்து உறவினருடன் புசிக்க போகலாம். வந்தவர்களும் வாத்தியார் நமது பங்காளியாக இல்லாத பட்சத்தில் அவர்கள் நம் வீட்டிலேயே சாப்பிடுவதாக இருந்தால் அவர்களுக்கு தனியாகத்தான் சமையல் செய்ய வேண்டும். ஶ்ராதத்துக்காக சமைத்ததை அவர்கள் சாப்பிடுவதற்கு இல்லை,
இந்த பிண்டங்களை திரட்டி பிறகு என்ன செய்வது என்று கேள்வி இருக்கிறது. அவற்றை எருதுகளுக்கு ஆடுகளுக்கு கொடுத்துவிடலாம். பிராமணனும் பசுவும் கூட அதை சாப்பிடலாம். தீர்த்த சிராத்தமாக இருந்தால் அதை நீரில் நின்று கொண்டு தெற்கு நோக்கி ஆகாயத்தில் எறிய வேண்டும். இதெல்லாம் இப்போது முடியவில்லை என்பதால் பூமியில் புதைத்து விடுகிறார்கள்.
இடவசதி இருக்குமானால் பிராமணர்கள் சாப்பிட்ட இடத்தை பகல் முழுவதும் சுத்தி செய்ய கூடாது. முடிந்ததும் செய்யலாம். இடவசதி இல்லாத பட்சத்தில்- அப்படி தான் அதிகமாக இருக்கும்- பிராமணர்கள் இருக்கும் போது சுத்தி செய்யக்கூடாது. அவர்களை வழி அனுப்பிவிட்டு செய்யலாம். ஸ்வஸ்தி வாசனத்துக்கு முன் இலைகளை அசைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
இந்த நிலையில் இலைகளை எடுத்து சுத்தம் செய்யும்போது அவற்றைக்கொண்டு போய் நாய் முதலியன பூமியை தோண்டி அணுகாத அளவிற்கு பூமியைத் தோண்டி புதைக்க வேண்டும். மண்ணால் மூட வேண்டும். இவற்றில் இருக்கும் மிகுந்த உணவை சேர்த்தே புதைக்க வேண்டும். வீணாக போகிறது என்று நினைத்து யாருக்கும் கொடுத்து விடக்கூடாது. பிண்டங்களை கொடுக்கலாம் என்று சொன்ன பசு எருது ஆடுகள் ஆகியவற்றுக்கு கூட இதை கொடுக்கக்கூடாது.


 

No comments: