ஞாயிறு அன்று அம்மாவின் 'திதி' - ஶ்ராத்தம். இந்த சமயத்தில் தோன்றும் சிலவற்றை பதிவிட நினைக்கிறேன்.
வாத்தியாரிடம் யார் போக்தாவாக வருகிறார்கள் என்று - அவருக்குத் தெரிந்தால்- கேட்டு போன் நம்பர் வாங்கி, போக்த்தாக்களுக்கு போன் செய்து நாளை இன்னார் ஶ்ராத்தம், வந்து நல்லபடி நடத்திக்கொடுக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். முந்தைய நாளே வரணம் செய்யச்சொல்லி ஶாஸ்த்ரத்தில் இருக்கிறது.
எள் உருண்டையை சாப்பாட்டில் போட்டு விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய், அரப்புப் பொடி, குளிக்க வென்னீர் ஆகியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். வாய் சுத்தமாக இருக்க தாம்பூலம், மனது சுத்தமாக இருக்க (கிருசரம்) எள்ளுருண்டை முதலியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். (முன்னாலேயே சமையறையில் சொல்லி வைத்தால்தான் இந்த நேரத்துக்கு எள்ளுருண்டை கிடைக்கும்.)
அதுவே சரி. பொதுவாக எஜமானர்களுக்கு இது பற்றி தெரியாது. வாத்யார் சொல்வதை செய்வார்கள். ஆகவே வாத்யார்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன். ஏற்கெனெவே அப்படி இருந்தால் சந்தோஷம்.
மக்கள் வயதாகும்போது, அவர்கள் விரும்பினாலும் முன்பு போல் செய்ய முடியாத பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஶ்ராத்தம் என்பது மக்கள் சமரசம் செய்யும் ஒரு முக்கிய கர்மா.
முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஶ்ராத்த சமையல். பாரம்பரிய முறையில் செய்ய மிகவும் பரிந்துரைக்கப்பட்டாலும், எளிமையான முறையில் ஶ்ராத்தம் செய்வது விரும்பத்தக்கது. இதில் பலர் ஹிரண்ய சிராத்தத்தின் வழியை மேற்கொள்கின்றனர். ஆனால் இது பிராமணர் அல்லாதவர்களுக்கும், மோசமான உடல்நலக் குறைபாடு போன்ற காரணங்களால் வேறுவிதமாகச் செய்ய முடியாத மக்களுக்கும் ஆகும். இப்படிப்பட்ட காரணங்கள் தவிர்த்து வாருடாந்திர ஶ்ராத்தம் அன்ன ரூபமாகவே செய்யப்பட வேண்டும்.
எனவே சமையலில் உள்ள சிரமத்தை வெளியே எடுப்போம்,
அன்னம் வீட்டுப் பெண்ணால் சமைக்கப்பட வேண்டும்.
மற்றவை விரும்பத்தகாதது என்றாலும் சௌகரியம். ஏற்கெனெவே அன்னிய 'சமையல் மாமி'தான் சமைக்கிறார்கள்.
ஶ்ராத்த சமையலில் கட்டாயம் சேர்க்க வேண்டியது: கோதுமை, உளுந்து, பயறு மற்றும் நல்லெண்ணையில் செய்யப்பட்ட ஏதோ ஒன்று.
காய்கறிகள் மற்றும் பழங்களில் பாகற்காய், பிரண்டை துவையல் மற்றும் பலா பழம்.
ஏன்?
காரவல்லி ஶதஞ்சைவ வஜ்ர வல்லி ஶதத்ரயம்ʼ
*பனஸம்ʼ ஷட் ஶதஞ்சைவ ஶ்ரார்த⁴ காலே விதீ⁴யதே
कारवल्लि शतञ्चैव वज्र वल्लि शतत्रयं
*पऩसं षट् शतञ्चैव श्रार्ध काले विधीयते
எனவே ஒரு ஶ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம்.
ஆகவே சாப்பாட்டில் இவ்வளவு இருந்தால் போதுமானது. இப்படித்தான் சமையல் இருக்கணும் என்று அனாவசிய கற்பனை வைத்துக்கொண்டு முடியாது, ஹிரண்யமாக செய்கிறேன் என்று நினைப்பதை விட இது ஆயிரம் மடங்கு தேவலை.
இதற்குத்தகுந்த ரெசிப்பி யாரும் தயாரித்து இங்கே பதிவிட்டால் சந்தோஷம்.
அவ்வளவு தான். மாம்பழங்களைப் போல எதாவது சேர்த்து - அதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது உங்கள் விருப்பம் - அதனால் போக்தாக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
ஶ்ராத்த பிராமணர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க, முன்கூட்டியே உணவு இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுங்கள்.
ஒரு பிராமணனுக்கு நல்ல உணவு மட்டுமே முக்கியம் என்ற காலம் போய்விட்டது. 5 இலைகள் போட்டு பரிமாறினால் சாப்பிட ஆள் இல்லை. சாப்பிட்டு வாந்தி எடுக்காமல் இருந்தால் போதாதாடா என்பார் என் வாத்தியார். இப்போதெல்லாம் முக்கியமானது பணம். அதை தேவையானால் கூட்டிக்கொடுத்து விடுங்கள். எனவே நீங்கள் முன்கூட்டியே எச்சரித்தால் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது.