கிடைச்சதை கொண்டு திருப்தியா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்.
சீட்டாட்டத்தில போடுகிற சீட்டை வெச்சுக்கொண்டுதானே விளையாடுகிறோம். எனக்கு ஏஸ் ஸ்பேட் வரலை, ஜாக்கி டயமண்ட் வரலைன்னு முனகறதில்லை.
கிடைச்ச சாப்பாட்டை உண்டு கொண்டு ஒரு பிச்சைக்காரன் இருந்தான். சாப்பாடு சாதாரண சாப்பாடா இருந்தாலும் மனசு நிறைவா இருந்ததால நல்ல புஷ்டியா இருந்தான். ராஜா ரோந்து போகும்போது இவன் ஜாலியா மரத்தடியில படுத்து தூங்கறதை பார்த்து அதிசயப்பட்டான்.
மந்திரி! இவன் பிச்சைக்காரனா இருந்து கொண்டு எப்படி இப்படி புஷ்டியா இருக்கான் ன்னு கேட்டான். பிச்சை எடுத்தாலும் இவன் மனசு நிறைஞ்சு இருக்கு ராஜா, அதான் என்றார் மந்திரி. ராஜாவுக்கு சமாதானமாகலை. இவனை ஒல்லியாக்கி காட்டறேன்னார் மந்திரி. செய் பார்க்கலாம் ன்னார் ராஜா.
அடுத்த நாள் ஆளனுப்பி அந்த பிச்சைக்காரனை வர வைச்சார். அப்பா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இங்க நாலு நாள் தங்கிட்டு போன்னார். பிச்சைக்காரனும் ஒத்துண்டான். மந்திரி வீடு. கேக்கணுமா? ராஜோபசாரம். அன்னிலிருந்து வகைவகையா சாப்பாடு. ஜம்ன்னு சாப்பிட்டு தூங்கி.... ஜாலியா ஒரு வாரம் போச்சு. அப்புறம் சந்தோஷம்பா போய் வான்னு வெளியே அனுப்பிட்டார்.
பிச்சைக்காரனும் வழக்கமா தங்கற இடத்துக்கு போயிட்டான். அப்புறம் வழக்கம் போல பிச்சை எடுத்தான். ஆனா சாப்பிடற நேரம் "ச்சே! வடை பாயசத்தோட சாப்பிட்டோம், இப்ப இல்லையே"ன்னு தோணித்து. கன்னாட் ப்ளேஸ்ல நருலாவில ஐஸ்க்ரீம் சாப்பிடப்பிறகு எப்படி மத்த எந்த ஐஸ்க்ரீமும் சுவைக்காதோ அப்படி பிச்சை எடுத்த சாப்பாடு எவ்வளோ கிடைச்சும் சுவைக்கலை. விருந்தை நினைச்சு நினைச்சு ஏங்கி ஏங்கியே அவன் இளைச்சு போயிட்டான்!
எல்லாம் மனசு போடுற ஆட்டம்!
முடிவா (அப்பாடா!) ஆசை இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி எல்லாரும் இருக்கணும்ன்னும் எதிர்பார்க்கலை. இருந்தாலும் ஆசையை மடை திருப்பி கடவுள் பக்கம் செலுத்தலாம். அல்லது அடிப்படை தேவைகளுக்கு மேலே ஆசை படாமல் இருக்கலாம். அல்லது படுகிற ஆசையை பொது நலன் பக்கம் திருப்பலாம். நமக்குன்னு இல்லாம நம்ம தெருவுக்கு, நம்ம ஊருக்கு, நம்ம நாட்டுக்குன்னு ஆசை படலாம். பகீரதனும்தான் ஆசை பட்டான். அதனால எவ்வளோ நன்மை விளைஞ்சது! பொது நலன்ல நம்ம நலனும் கலந்தே இருக்கும் இல்லையா? ஆசாமியை கீழே கொண்டு போக அதீத ஆசை மாதிரி எதுவும் சக்தியுடையதா இல்லை! யோசிப்போம்!