கடமை என்று ஒன்று ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஆனால் அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கற்பனை செய்து கொண்டிருகிறார்கள். கடமை என்றாலே நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். கடமையை செய்வதே உன் உரிமை. பலனில் இல்லை என்று சொன்னதை, கடமையை செய்; பலனை எதிர்பாராதே என்று பலரும் தவறாக ப்ரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கிடக்கட்டும். இங்கே பரமாத்மா க்ருஷ்ணன் சொன்னது அவரவருக்கான சுய தர்மம் சார்ந்த கடமையைத்தான். நாமோ காசு சம்பாதிக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டு அதை கடமையாகக் கருதி "என் கடமையை நாம் ஒழுங்காக செய்து கொண்டு இருக்கிறேன்" என்று மார் தட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்படி இருப்பது அவரவர் இஷ்டம். இருக்கலாம், ஆனால் க்ருஷ்ணனை இதுக்கு இழுக்க வேண்டாம். சுய தர்மம் பற்றி சொல்லும் போது அதன் அவசியத்தை வலுவாகவே சொல்லி இருக்கிறான். பர தர்மம் பயம் தருவது என்றே சொல்லுகிறான். இன்று பலருடைய பிரச்சினைகளும் அவர் கடமையான பித்ரு காரியத்தை ஒழுங்காக செய்யாமல் இருப்பதில் ஆரம்பிக்கிறது. அடுத்து குல தெய்வ வழிபாடு நின்று போனது.....
ஒவ்வொருவருக்குமே தன் கடமை; தன் குடும்பம் சார்ந்த கடமை; தன் நாட்டை சார்ந்த கடமை என்று பலதும் இருக்கிறது. தனக்கு சாத்திரத்தால் இடப்பட்ட கர்மாக்களை செய்து கொண்டு, பின் காசு சம்பாதிக்கும் வழியை செய்து கொண்டு போகலாம். தன் மனைவியையும் மக்களையும் நல்வழிப்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் சூட்டிக்கையாக இருக்கின்றன. அவை பெரியவர்களிடம் தவறாக நடந்தால் நாம் இப்படி செய்யக்கூடாது என்று சொல்வதில்லை. மாறாக என் குழந்தை என்னவெல்லாம் பேசுகிறது பார் என்று மகிழ்கிறோம். சின்னக்குழந்தை அப்பாவையே சாரி சொல்லு என்று கட்டாயப்படுத்துகிறது. இவர்களும் செய்கிறார்கள். இதற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. வளர்ந்த பிறகு இவர்கள் மற்றவர்கள் தான் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? அப்படி நடக்கவில்லை எனும் போது அதை எப்படி எதிர்கொள்வார்கள்? தர்மப்படி நடக்க வேண்டும் என்றும்; அதில் நம்பிக்கை இல்லையானால், சரி/ தவறு, நல்லது/ கெட்டது என்று தெரிந்து நடக்க வேண்டுமென்றே சிறுவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அடுத்த சந்ததியை உருப்படியாக வளர்ப்பதும் நம் கடமை.....