இந்த பேரன் பேத்திகள் ஒரு பந்தம். மத்ததெல்லாம் விட்ட பிறகும் இது ஒட்டிக்கொண்டு இருக்கும்! பிள்ளை பெண் எல்லாம் ஒரு வயதுக்கு மேல் நம் பேச்சை கேட்கிறதில்லை. அப்படி எதிர் பார்க்கிறதும் சரியில்லை. அதனால அவங்க செயல்கள் நமக்கு உவப்பா இல்லாம போயிடலாம். பந்தம் விலகிடும். பேரன் பேத்திகள் அப்படி இல்லை. குறைஞ்சது அவங்களும் ஒரு வயசு - அஞ்சு இருக்கலாம்- அஹங்காரம் ன்னு ஒண்ணு வரும் வரை. அப்புறம் வந்த பிறகு உறவு வேற மாதிரி போயிடலாம். அது வரை அன்கண்டிஷனல் லவ் தான் இருக்கும்!
ஸோ, எந்த உறவுமே நிரந்தரம் இல்லை. அட, உசிரே நிரந்தரம் இல்லைன்னா அப்புறம் உறவு என்ன? நாளை காலை கண் விழித்து இந்த போஸ்ட் போடுவேனா என்கிறது நிச்சயமில்லை. இருந்தாலும் நாம் எல்லோருமே நாளை இதை செய்வோம் அதை செய்வோம் என்று நினைத்துக்கொண்டே தூங்கப்போகிறோம். அதுவே யதார்த்தம். நிறைய ப்ளான் செய்கிறதுலேயும் அர்த்தமில்லை. ப்ளான் செய்யாம செய்கிறதுலேயும் அர்த்தமில்லை. அப்ப நடுவில .. ஒரு சின்ன ஸ்கெலிடன் ப்ளான்... சமயம் வரும்போது அதை சுத்தி வளர்த்துக்கலாம்.... பகவான் அதுக்கு சமயம் வரும்போது ப்ளான் ஆப் ஆக்ஷனையும் வகுத்துக்கொடுப்பான். பாத்துக்கலாம்.
மரணம் என்று ஒன்று இருக்கிறது. அதை பலருக்கும் பிடிப்பதில்லை! எப்படியாவது அதை தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்தது தள்ளிப்போட வேண்டும் என்றாவது பார்க்கிறார்கள். பல மாதங்கள் முன் ஒரு குழுமத்தில் சும்மா கேட்டேன். "இப்போது உனக்கு காலம் முடிந்துவிட்டது போகலாம் வா!” என்று எம தர்ம ராஜன் கூப்பிட்டால் என்ன செய்வீர்கள் என்று. ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டாற்போல தோன்ற வைத்துவிட்டார்கள்!
யோசித்துப்பார்த்தால் மரணத்தைப்போல இயற்கையானது ஒன்றுமே இல்லை. இப்போதெல்லாம் பிறப்பில் கூட கொஞ்ச செயற்கைத்தனம் வந்துவிட்டது. ஆனால் இறப்பு இறப்பாகவே இருக்கிறது. அதற்கான நேரம் வந்துவிட்டால் எதுவுமே அதை தடுக்க முடியவில்லை! என்னதான் மெஷின் எல்லாம் வைத்து அதை நீடிக்கப்பார்த்தாலும்... இப்போதெல்லாம் புற்று நோய் என்று ஒன்று பிரபலமாக இருக்கிறது. அதன் வகைகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றன! போன நூற்றாண்டு ஆன்மீக சிம்மங்கள் இரண்டு பேர் இதனால் பாதிக்கப்பட்டு எப்படி இதனுடன் வாழ வேண்டுமென்று காட்டிவிட்டே போய் இருக்கிறார்கள். யார் அவர்கள் என்று தெரிகிறதல்லவா?
புற்று நோய்க்கு சிலர் இருக்கும் சொத்தை எல்லாம் செலவழித்து 'குண'ப்படுத்திக்கொள்கிறார்கள். அப்பாடா தப்பித்தாயிற்று என்று நினைத்தால் அப்படி ஒன்றும் நடப்பதில்லை. வேறு ஒன்றால் ஊருக்கு போய் விடுகிறார்கள். ஹார்ட் அட்டாக் போல ஏதோ ஒன்று வந்து அழைத்துப்போய் விடுகிறது....
பிறவி வந்தால் பின்னாலேயே இறப்பும் நிச்சயம். இருந்தாலும் அது தமக்கு இப்போதைக்கு வராது என்றே எல்லாரும் நினைக்கிறார்கள். அத்துடன், தான் இறப்பில்லாமலே இருக்க முடியுமா என்றும் ஆராய்கிறார்கள். இதைத்தான் தர்மன் யட்சனிடம் பேரதிசயமாக சொல்கிறான்!
பிறக்கும் போதே நம் ஆயுள், போகம், எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விடுவதாக பதஞ்சலி சொல்கிறார். அந்த ஆயுளை நாம் வாழ்தே தீருவோம். தற்கொலை, பலரும் இன்வால்வ் ஆகும் விபத்து போன்றவற்றை தவிர்த்து ஒரு ஜீவன் தன் காலம் முடிந்த பிறகே உடலை விடுகிறது. போகும் போது தன் பாப புண்ணியம் வாசனைகளை தவிர்த்து எதையும் எடுத்துப்போக முடியவில்லை!
இருந்தாலும் தன் வாழ்நாளை நீட்டிக்க செய்யும் முயற்சி, துன்பம் எல்லாம் அந்தந்த ஜீவன் தன் கர்மாவை கழிக்க உதவுகிறது.
எதற்கு பகவான் அனுப்பினானோ அதை முடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்னும் என்ன பாக்கி இருக்கிறதோ யார் கண்டார்கள்! எதாக இருந்தாலும் முடித்துவிட்டு கூப்பிடும் போது போக எப்போதுமே நான் ரெடி! அதனால் யம பயமே இல்லை. (யார் எமனை தினமும் தொழுகிறார்களோ அவருக்கு யம பயம் இராது என்பது சாஸ்திரம். அதனால் இறப்பு கிடையாது என்றில்லை. பயம் இராது அவ்வளவே! )
சாதாரணமாக ஒருவர் மிகவும் அஞ்சுவது இறப்புக்குத்தான். அந்த அச்சமில்லை என்றால் அவரை ஒன்றும் செய்ய முடியாது! எந்த பிரச்சினையானாலும் "அதனால் என்ன ஆகிவிடும்” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க ஏதோ ஒன்றில் அது போய் முடிகிறது! அத்துடன் நான் வாழ முடியுமா முடியாதா என்று கேட்டால் முடியுமென்பதே நேர்மையான பதிலாக இருக்கும். வாழ முடியாதென்றால் அதற்கும் நான் ரெடி என்று சொன்னால்? அப்புறமென்ன? அப்படிப்பட்டவரை எதும் பாதிக்க முடியாது!
9 comments:
நோயை குணப்படுத்திக் கொள்ள முயல்வதும் கர்மாவின் காரணமாகத்தான் இல்லையா ??
மனதில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும்...
காலையில் எழுந்த உடன் இருந்த என் மன நிலைக்கு ஒத்த பதிவாக இருக்கிறது.
எதற்காக இன்னும் இருக்கிறேன் என்று எனக்கே புரியாத நிலையிலும்
ஏதோ ஒன்று என்னுள் இந்த உயிரை இன்னும் உடலில் இருக்க வைக்கும் உபாயங்களைத்
தேடிக்கொண்டு தான் இருக்கிறது.
ப்ரச்னை கள் ஒன்றுமே பெரியதாக இல்லையெனினும் பெரிய ப்ரச்னைகள் இல்லாததே
பெரிய ப்ரச்னையாக இருக்கிறது. பெரிய ப்ரச்னைகள் உடல் ரீதியில் இருப்பவர்கள்
அத்ருஷ்ட சாலிகளோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
கிங் லியரில் எட்கர் தனது தந்தை லியரிடம் சொல்வது நினைவுக்கு வருகிறது. கிங் லியர் தன்னையே
வெறுத்து தற்கொலை செய்து கொள்ள துணியும் நேரத்தில் சொல்கிறார்:
"நீ பிறப்பதற்காக காத்திருந்தாய் . பிறக்கும் தருணம் உன் கைகளில் இல்லை. அதுபோல
இறப்பதற்காகவும் காத்திருக்கவேண்டும். அது உன் கைகளில் இருப்பதாக நினைப்பது சரியல்ல. "
எல்லாமே ஈச்வர சங்கல்பம்.
சுப்பு தாத்தா.
//பல மாதங்கள் முன் ஒரு குழுமத்தில் சும்மா கேட்டேன். "இப்போது உனக்கு காலம் முடிந்துவிட்டது போகலாம் வா!” என்று எம தர்ம ராஜன் கூப்பிட்டால் என்ன செய்வீர்கள் என்று. ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டாற்போல தோன்ற வைத்துவிட்டார்கள்!//
எப்போ, எந்தக் குழுமம்? நினைவில் இல்லை. போகலாம்னு கூப்பிட்டால் போக வேண்டியது தான். :)))))
ஆமாம். மணி மந்திரம், ஔஷதம் ஆகியவற்றால் குணப்படுத்திக்கொள்ள முயல்வது இயல்பே. அதில் தவறும் இல்லை!
என்னோட கமென்ட் எங்கே? நல்லாக் குலுக்கிப் பாருங்க. ஃபாலோ அப் வந்திருக்கு. மின்சாரம் போனதிலே என்ன கமென்டினேன்னு நினைவிலும் இல்லை! :))))))
கீ அக்கா, மத்த கமென்ட் எல்லாம் இப்பத்தான் பாத்தேன்.
அது பல நாட்களுக்கு முன்னே இருந்த ஆங்கில குழுமம்.
சுப்பு ஸார், நல்ல பொருத்தமான கோட்!
தனபாலன் நன்றி!
Post a Comment