Pages

Tuesday, November 14, 2017

இறப்பு - 2






உலகில் எது ஆச்சரியம்? ன்னு யக்ஷன் கேட்ட கேள்விக்கு தர்மர் "பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டே இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?” அப்படின்னு சொல்லுகிறார்.

யோசிச்சுப்பாத்தா இது எவ்வளோ இயற்கையானது! பிறக்கும் போதே இறப்பும் நிச்சயமா இருக்கு. எப்ப என்கிறதுதான் ஆளுக்கு ஆள் வித்தியாசமா இருக்கு. பிறந்தவர் இறக்காமலே இருந்தா என்ன ஆகும்?

ஒரு ராஜா இருந்தான். இறப்பற்ற வாழ்கையை தரும் தண்ணீர் இருக்கிற சுனையைப்பத்தி அவனுக்கு கொஞ்சம் தகவல் கிடைத்தது. அதைத்தேடி கிளம்பினான். சில வருஷங்கள் சுற்றி அலைந்து ஒரு வழியா அதை கண்டு பிடிச்சான். ஆஹான்னு சந்தோஷப்பட்ட நேரத்தில அங்க ஒரு காகம் வந்தது. அதோட இறக்கை ஒண்ணு காணவே காணோம். மத்ததும் நிறைய இறகுகள் பிஞ்சு இருந்தது. அதால பறக்கவே முடியலை. மெதுவா தத்தித்தத்தி நொண்டிக்கொண்டே வந்து சேர்ந்தது. பார்க்கவே பரிதாபமா இருந்தது. ஹீன ஸ்வத்தில "ராஜா, நீ இறப்பிலா வாழ்வு தரும் சுனையை தேடி வந்தயா?” ன்னு கேட்டது. ராஜா ஆமாம்ன்னான். சரி. நானும் அப்படித்தான் அலைஞ்சு திரிஞ்சு இதை கண்டு பிடிச்சேன், தண்ணி குடிச்சேன். இந்த தண்ணியை குடிக்கறதுக்கு முன்னால என் நிலையை கொஞ்சம் பாத்துட்டு முடிவு பண்ணுன்னு சொல்லித்து. ராஜா கொஞ்சம் யோசிச்சுட்டு சரியாத்தான் சொல்லறேன்னு நன்றி சொல்லிட்டு தண்ணியை குடிக்காமலே திரும்பிட்டான்! 
 
ஆண்டவா என்னை கொண்டு போக மாட்டயா? ன்னு அழுது புலம்பறவங்களை நாமும் பார்த்து இருப்போம். ஊஹும்! லேசில போகாது. இந்த பிறவில அனுபவிக்க வேண்டிய கர்மாவை அனுபவிச்சுட்டுத்தான் போகும்.

அதே போல போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. கோவிந்த தீக்‌ஷிதர் கோவில் ஒண்ணை கட்டினார். ஸ்தபதி அருமையான வேலை செஞ்சு இருந்தார். கும்பாபிஷேகத்துக்கு முந்திய நாள் மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தபோது அதிர்ச்சியானார். அவரிடம் முன்னே வேலை செய்த ஒரு நபரை பார்த்தார். அவர் இறந்துபோய் சில வருடங்கள் ஆகிவிட்டு இருந்தன. இவன் எப்படி இங்கே இப்போ? யோசித்துக்கொண்டு இருந்தப்ப அவன் கிட்டே வந்து வணங்கி "ஐயா வணக்கம். நான் சாதாரணமா மனிதர் கண்னுக்கு தெரிய மாட்டேன். ஆனா உங்க தபோ சக்தியால நீங்க என்னை பார்க்க முடியறது" என்றான். கூடவே "இப்ப எனக்கு யமதர்மராஜனுக்கு வேலை செய்யச்சொல்லி இருக்காங்க" என்றான். "எமனா? உனக்கு இங்க என்ன வேலை?"ன்னு கேட்டார். "ஐயா இந்த கோவிலை கட்டின ஸ்தபதிக்கு ஆயுசு முடியுது. நாளை கும்பாபிஷேகத்துக்கு குறிச்ச நேரத்துக்கு கொஞ்சம் முந்தி அவரை கொண்டுபோயிடுவேன்; ஏணியில ஏறும்போது கீழே விழுந்து போயிடுவார்" என்றான்.

அடுத்த நாள் காலை தீக்‌ஷிதருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வளோ நல்ல வேலை செய்து கொடுத்த ஸ்தபதி இறந்து போவதாவது! அத்தோட கும்பாபிஷேகத்துக்கும் அது தடையா இருக்குமே! ஸ்தபதியை வீட்டுக்கு அழைத்துப்போனார். ஒரு அறையில் வைத்துப்பூட்டினார். சாவியை வெளியே ஆணியில் மாட்டிவிட்டு காவலுக்கு ஒரு ஆளையும் போட்டுவிட்டு வந்துவிட்டார். கும்பாபிஷேகத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. கடைசி நேர வேலை ஒன்றை செய்ய ஸ்தபதியை தேடினார்கள். எங்கெங்கோ அலைந்து கண்டிபிடித்தும் விட்டார்கள். காவலுக்கு இருந்தவர் அவசரமாக இயற்கை உபாதையை கவனிக்க போயிருந்தார். ஆணியில் மாட்டி இருந்த சாவியால் கதவைத்திறந்து அவரை வெளியே விட்டார்கள். அவசரமான வேலையை தெரிந்துகொண்ட ஸ்தபதி அவசர அவசரமாக போனார். அதே அவசரத்தில் ஏணி ஏறினவர் தடுக்கி விழுந்தார்; போய் சேர்ந்தார்!

நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..




No comments: