Pages

Wednesday, November 8, 2017

மீள்ஸ் 3 - உரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்



https://anmikam4dumbme.blogspot.in/2012/03/blog-post.html
பாபம் புண்ணியம்

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் மக்கள் மத்தியில் அத்ருப்திதான் நிலவுகிறது. அதற்கு காரணங்களுக்கு குறைச்சலே இல்லை.  வீட்டில் ஆரம்பித்து உலகம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அத்ருப்தி. எதை எடுத்தாலும் நடத்தை சரியில்லை. எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. வேலியே பயிரை மேய்கிறது. சட்டத்தை மீறுவது யார் என்று பார்த்தால் அதை காக்க வேண்டிய காவல் துறை, வக்கீல்கள், அரசாங்கமே முதலில் இருக்கிறது. கன்ஸ்யூமர் வழக்கு எத்தனை டாக்டர்கள் மீது வருகிறது? ஒரு வக்கீல் மீதாவது வருகிறதா? இத்தனைக்கும் ஸ்கூல் பசங்க மாதிரி இவங்க ஆன்னா ஊன்னா ஸ்ட்ரைக் பண்ணுகிறார்களே! ஒரு வழக்கு என்று வந்துவிட்டால் எவ்வளவு முறை தள்ளித்தள்ளிப்போகிறது? கோர்டுக்கு போவதே சமாசாரத்தை தள்ளிப்போடத்தான் என்றே ஜனங்கள் மத்தியில் மனசில் பதிந்துவிட்டது. அதனாலேயே யாரும் கோர்ட் வழக்கு என்பதில்  நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை யாருக்குமே இல்லை! ஜனங்கள் அவரவர் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள கேட்பானேன்!
இதை சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன்.
சில நாட்களாக இந்த மாதிரி பிரச்சனைக்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று தீவிரமாக யோசனை செய்தேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் என்பது போல தோன்றினாலும் அந்த காரணத்துக்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசித்ததில் ஒரு விஷயம் தோன்றியது.
உலகத்தில் மக்களுக்கு பாபம், புண்ணியம் அல்லது சரி, தப்பு என்கிற கொள்கை போய்விட்டது.
சரி தப்பு என்கிறது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக சொன்னது. பாபம் புண்ணியம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொன்னது. இன்னும் சிலர் கடவுள் உண்டு என்று நம்பிக்கொண்டு தப்பு செய்தால் பாபம், கடவுள் தண்டிப்பார்; புண்ணியம் செய்தால் பாராட்டி நமக்கு வேண்டியது கொடுப்பார், சொர்கம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் இருக்காரா, அப்படி இருந்தால் அவர் எப்படி இருக்கார், என்ன செய்கிறார் என்கிற சமாசாரத்துக்கு இப்போது போக தேவையில்லை. 1940 களில் பெரும்பாலும் ஜனங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். ஆன்மீகம் கொஞ்சம் சரியான பாதையிலும் இருந்தது. ஜனங்கள் பாபம் செய்ய பயந்தார்கள். யாரேனும் பப்ளிக்கா தப்பு செய்கிறதை பார்த்தால் அருகில் இருக்கிறவர்கள் கண்டித்தார்கள். இது பாபம்டா. செய்யாதே என்றார்கள். பெரும்பாலானவர்கள் அந்த பக்கம் நின்றதால் தப்பு செய்கிறவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.
அப்புறம் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றின. அவற்றின் நடவடிக்கையில் ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம். கடவுள் என்று ஒருவர் இல்லை என்பது அவற்றின் சாராம்சமாக இருந்தது. திருப்பித்திருப்பி இதை வலியுறுத்தியதால் அத்துடன் சேர்ந்த இந்த பாபம் செய்தால் தண்டனை கோட்பாடும் காணாமல் போயிற்று. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தப்பு செய்தால் ஒண்ணும் பிரச்சினை உடனடியாக இராது என்று
தோன்றிவிட்டது.
ஒரு சரியான மாற்று வழியை உறுதி செய்யாமல் வெறுமனே கடவுள் நம்பிக்கையை மட்டும் பெயர்த்து போட்டதில் ஜனங்களுக்கு ஒரு விஷயத்திலும் பயமில்லாமல் போய்விட்டது. எப்போதுமே இருந்து கொண்டிருக்கிற சுயநலம் தலை தூக்கி எனக்கே எல்லாம் வேணும் எந்த வழியில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டது. காலங்காலமாக இருக்கிற லஞ்சம் ஊழல் பயமில்லாமல் பகிரங்கமாக செய்கிற காரியம் ஆகிவிட்டது.
யாரோ சொன்னாங்களே, ஏற்பது இகழ்ச்சின்னு?
தொடரும்.

No comments: