Pages

Friday, January 6, 2017

அந்தணர் ஆசாரம்- 11




நெற்றி இட்டுக்கொள்வது.
அவரவர் குல ஆசாரப்படி எப்படி நெற்றி இட்டுக்கொள்ள வேண்டும். ஊர்த்வ புண்டரத்தின் மீது கிடைமட்டமாக புண்டரம் தரிக்கக்கூடாது என்றோ அல்லது மாறாகவோ ரிஷிகள் சொல்லி இருப்பதை பார்த்து குழப்பம் அடையத்தேவையில்லை. பஸ்மாவை தரிக்க கண்டனம்; அதை கண்டனம் செய்து ஒரு கண்டனம் என்றெல்லாம் க்ரந்தங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் வித்வான்களுக்கு விட்டுவிடுவோம். நாம் குல ஆசாரத்தை கடைபிடிப்பதே நல்லது. நாமாக அதை மாற்றிவிடக்கூடாது. வெற்று நெற்றியுடன் செய்யும் கர்மாக்களால் பலனே இல்லை.

கோபீ சந்தனத்தினால் ஊர்த்வ புண்டரம் தரிக்கும் முறை இருக்கிறது. கோபி சந்தனம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த இடம் க்ருஷ்ணன் வாசம் செய்யும் த்வாரகை என்றே சொல்லுகிறார்கள். வாஸுதேவோபனிஷத்தில் தரிக்கும் விதி விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. பார்த்துக்கொள்ளவும்.
நமஸ்கரித்து சந்தனத்தை எடுத்து ப்ரார்த்தித்து, இமம்மே கங்கே மந்திரத்தால் நீர் சேர்த்து விஷ்ணோர்நுகம் மந்திரத்தால் குழைத்து அதோ தேவா அவந்து ந: மந்திரத்தாலும், மும்முறை விஷ்ணு காயத்ரியாலும் அபி மந்த்ரணம் செய்து சங்க சக்ர கதா* ரணாகதம் - மந்திரத்தால் த்யானம் செய்து இட்டுக்கொள்ள வேண்டும்.
க்ருஹஸ்தன் ‘கேசவ’ எனத்துவங்கும் நாமங்களால் நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, வல இடைப்பகுதி, தோள், கழுத்து; இடப்பக்க இடைப்பகுதி, தோள், கழுத்து; பின் இடுப்பு, பின் கழுத்து ஆகிய இடங்களில் தரிக்க வேண்டும். கடைசியாக வாஸுதேவ என சிரசில் தரிக்க வேண்டும்.
ப்ரம்மச்சாரிகளுக்கு 5 இடங்கள் மட்டும். நெற்றி. கழுத்து, மார்பு, தோள்கள்.
பரம ஹம்ஸ சன்யாசிக்கு நெற்றி மட்டும்; மற்ற சன்யாஸிகளுக்கு சிரஸ், நெற்றி, மார்பு மட்டில்.
யக்ஞம், தானம், ஜபம், ஹோமம், வேதம் சொல்லுதல், பித்ரு தர்பணம் இவை புண்டரம் இல்லாமல் செய்தால் பலனில்லை எனப்படுகிறது.

காலாக்னி ருத்ரோபநிஷத்தில் விபூதி தாரண முறை சொல்லப்படுகிறது. அக்னியில் உண்டான பஸ்மாவை ஸத்யோஜாதம் முதலான 5 மந்திரங்களால் எடுத்து ‘அக்னிரிதி பஸ்ம, வாயுரிதி பஸ்ம, ஜலமிதி பஸ்ம, ஸ்தலமிதி பஸ்ம, வ்யோமேதி பஸ்ம’ என்று மந்திரிக்க வேண்டும். ‘மாநஸ்தோகே’ எனும் மந்திரத்தால் கையில் எடுத்துக் கொண்டு ‘மாநோ மஹாந்தம்’ எனும் மந்திரத்தால் ஜலம் சேர்த்துக் குழைக்க வேண்டும். ‘த்ரியாயுஷம்’ எனும் மந்திரத்தால் தலை, நெற்றி, மார்பு, தோள்களிலும் ‘த்ரியாயுஷம், த்ரியம்பகம், த்ரிசக்தி’ என்று மூன்று கோடுகளில் குறுக்காக இட்டுக் கொள்ள வேண்டும். இது சாம்பவ விரதம் எனப்படும். பரமேஶ்வரனுக்கு ப்ரீதியை கொடுப்பது.
இப்படி தெரிந்து தரிக்கிற நாலு ஆஶ்ரமிகளும் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவர் ஆவார்; எல்லா தேவதைகளையும் த்யானம் செய்தவராவார்; எல்லா புண்ய தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தவராவார். எல்லா செல்வங்களையும் அடைவார். எல்லா விஷய சுகங்களையும் அனுபவிப்பார். எல்லா வேதங்களிலும் உள்ள ருத்ர மந்திரங்களை ஜபம் செய்தவராவார். சரீர த்யாகம் செய்த பின் ஶிவ ஸாயுஜ்யம் அடைவார்; மீண்டும் பிறக்க மாட்டார் என்கிறார் பகவான் காலாக்னி ருத்ரர்.
ெற்றி, இரண்டு கைகள், வயிறு, சிரஸ், மார்பு, இடுப்பின் பக்க வாட்டில் ஜலத்துடன் கலந்து தரிக்க வேண்டும். வேதமறிந்து கர்மாக்கள் செய்யும் ப்ராம்ஹணன் அவசியம் தரிக்க வேண்டும். ச்ராத்தம், யக்ஞம், ஜபம், ஹோமம், வைஶ்வதேவம், தேவ பூஜை ஆகியவற்றில் அவசியம் தரிக்க வேண்டும். இல்லாமல் செய்தால் பலனில்லை எனப்படுகிறது.
ஆயுஸ், செல்வம், மோக்ஷம் ஆகியவற்றை விரும்புகிறவன் அவசியம் செய்ய வேண்டும். இது நான்கு வர்ணத்தாருக்கும் பொருந்தும்.

விபூதியை எப்போதும் நெற்றியில் கிடைவாட்டிலேயே தரிக்க வேண்டும்; கோபி சந்தனத்தை ஊர்த்வமாக; சந்தனம் இரு வழிகளிலும் செய்யலாம். ஒரு போதும் வட்டமாக பொட்டு போல இட்டுக்கொள்ளக்கூடாது. உமி சாம்பல், கல் பொடி முதலியவற்றை தரிக்கக்கூடாது. பிரசாதமாக கிடைத்த மஞ்சள் குங்குமம் தவிர எந்த பொடியையும் தரிக்கக்கூடாது

No comments: