Pages

Thursday, May 14, 2009

ஜட பரதர்




பானை உதாரணம் போல எல்லா ஆன்மாக்களும் பரமான்மாவில் கலக்காது.

ஜீவன் முத்தனுடைய ஆன்மா பிரியும்போது அதனிடம் கர்மா பற்று இல்லை. அது பரமான்மாவையே பற்றி இருக்கு. மத்தவங்க ஆத்மாக்களுக்கு கர்ம பற்று இருக்கு. அதனால அதிலே கலந்து அந்த நிலையை அடையும். சாதாரணமா நடக்கிற ஒருவன் ஒரு காலை முன்னாலே வைத்து அப்புரமா அடுத்த காலை எடுத்து வைக்கிறது போல உயிர் பிரியும் தருணத்திலே அடுத்து போற இடம் முடிவாயிடும். அதனால ஜீவன் முத்தர் ஆன்மா போல அது பற்றில்லாம தேகத்தை விட்டு வெளியே வருகிறதில்லை. பரமாத்மாவிலே கலக்கிறதும் இல்லை.

ஜட பரதர் அவரோட முன் ஜன்மம் ஒண்ணிலே ராஜாவா இருந்தார். பிறகு சன்னியாசம் மேற்கொண்டு மோக்ஷம் வேண்டி தபஸ் பண்ணார். சந்தியையிலே ஆற்றுக்கு போய் சூர்ய உபாசனை செய்கிற நேரம் ஒரு நிறை கர்ப்பமான மான் அங்கே வந்தது; அது தண்ணி குடிக்கப்போச்சு.

தண்ணியிலே வாயை வைச்ச அதே சமயம் ஒரு சிங்கம் கர்ஜிக்கிற சத்தம் கேட்டது. மான் மிரண்டு போய் ஆற்றிலே குதிச்சு இறங்கி நீஞ்சி அக்கரைக்கு போகப்பாத்தது. அதே சமயம் மான்குட்டி கர்பத்திலேந்து நழுவி பிரசவம் ஆயிடுத்து. மான் களைப்பினாலேயும் நீஞ்ச முடியாமையாலும் செத்துப்போச்சு.

இதை பாத்துகிட்டு இருந்த பரதருக்கு இரக்கம் மேலிட்டது. அடப்பாவமே! இந்த மான்குட்டிக்கு இப்படி ஒரு கதியான்னு பரிதாபப்பட்டு அதை எடுத்துப்போய் வளக்க ஆரம்பிச்சார். அது மேலே உசிரையே வெச்சுட்டார். அதுக்கு உணவு தரதும் அதை மத்த மிருகங்கள்கிட்டேந்து காப்பாத்தனுமேன்னு கவலை படுகிறதும்... இப்படியே இருக்கும் போது உயிரும் பிரிஞ்சது.

மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தபஸால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தபஸ்வியா இருந்து மோக்ஷம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜ்ன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.

என்ன சொல்ல வந்தேன்னா உயிர் பிரிகிறபோது எந்த நினைவோட இருக்கோமோ அதே பிறவியை அடைவோம். அதுக்குத்தான் பகவான் நாமாவை எப்பவும் சொல்லிகிட்டே இருக்கணும்; பகவத் சிந்தனையே சதாசர்வ காலமும் இருக்கணும் என்கிறது. அப்பதான் இறக்கும்போதும் அதே நினைப்பு இருக்கும்; பகவானையும் அடைஞ்சுடுவோம். இதுக்குத்தான் இறக்கும் தறுவாய்லே இருக்கிறவங்க பக்கத்திலே இருந்து கொண்டு பகவான் நாமாக்களை உரக்க சொல்லணும்ன்னும் சொல்லி இருக்காங்க.

ஜீவன் முத்தர் எப்பவும் பரமான்மாவையே நினைத்து அதிலேயே ஒன்றி இருக்கிறதாலே அவர் அதோட ஐக்கியம் ஆகிடுவார். சிவன் விஷ்ணு அம்பாள் ன்னு ஒரு கற்பனையிலே இருக்கிறவங்க அந்த அந்த ஈசனோட லோகத்தை அடைவாங்க. அது மோக்ஷம் இல்லை. முன்னாலே பரமாத்ம அனுபவம் இருந்தாதான் இறக்கிற நேரம் அதிலே இருக்க முடியும். இது சாதாரணமா யாருக்கும் வாய்க்கிறதில்லை.

ஞானிக்கு தன்னோட தேகம் எங்கே விழணும் எப்ப விழணும்ன்னு ஒண்ணும் லட்சியமே இல்லை. பரிசுத்தமான இடம் வேணும்ன்னு இல்லை, சிவராத்திரி, ஏகாதசி, உத்தரயணம் ன்னு ஒண்ணும் வேணாம். பிராரப்தம் தீர்ந்து எங்கே எப்ப விழுந்தாலும் விடுதலையாவான்; பரமாத்மாவோட ஒன்றுவான்.

--
நெரூருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கேன். வர 4 நாளாகும். போஸ்ட் ஷெடூல் பண்ணியாச்சு. திங்கள் வந்துதான் மேற்கொண்டு.

Wednesday, May 13, 2009

விதேக முத்தன்



மண் பானை ஒண்ணு இருந்தது. அது இருந்த வரைக்கும் அதால பிரிக்கப்பட்டு கட ஆகாசம் ன்னு ஒண்ணு இருந்தது. மாமியாரோ மருமகளோ யாரோ ஒத்தர் அதை போட்டு உடச்சுட்டாங்க. அப்ப அது காணாம போச்சு. "காணாம" ன்னா வெளியே இருக்கிற மகா ஆகாசத்தோட ஒண்ணா போச்சு.

சீவன் முக்தருக்கு ஒட்டிகிட்டு இருந்தது உடம்புதான்.
இந்த உபாதி போன உடனே ஆதி/ அந்தம்/ நடு ன்னும் உள்ளே வெளியேன்னும் ஒண்ணுமில்லாத கைவல்லிய நிலைக்கு போய் அங்கேயே எப்பவும் இருப்பார்.

106.
விதேக முத்தன் இயல்பு:

கடமெனு முபாதிபோனாற் ககனமொன் றானார்போல
வுடலெனு முபாதி போன வுத்தரஞ் சீவன்முத்தர்
அடிமுடி நடுவுமின்றி யகம்புற மின்றிநின்ற
படிதிகழ் விதேகமுத்திப் பதமடைந் திருப்பரென்றும்

கடம் (குடம்) எனும் உபாதி போனால் ககனம் (ஆகாயம்) ஒன்று ஆனார் போல உடலெனும் உபாதி போன உத்தரம் (பிறகு) சீவன் முத்தர், அடி முடி நடுவும் இன்றி அகம் புறம் இன்றி நின்றபடி திகழ் (இருந்தபடி விளங்குகின்ற) விதேக முத்திப் பதம் அடைந்து என்றும் இருப்பர்.
--
எங்கும் பரவிய ஆகாயம் குட ஆகாயம். மகா ஆகாயம் என குடத்தால் மட்டுமே பிரிக்கப்படுகிறது. குடம் உடைந்து போன அந்த வினாடியே எப்படி அந்த இரண்டு ஆகாயங்களும் ஒன்றாகி விடுமோ அப்படி உடல் நீங்கிய அந்த வினாடியே சீவன் முத்தரும் பரி பூரணமான பிரமமும் ஒன்றாவர்கள்.

"மறு பிறப்புன்னு ஒண்ணும் கிடையாது; ஆன்மா பற்றி இருந்த உடம்பு போச்சுன்னா வந்த இடமான பரமாத்மாவோட கலந்துடும்" ன்னு ஒரு வாதம் உண்டு. இதை சாத்திரங்கள் தப்புன்னு நிரூபிச்சு இருக்கு.

இதை உண்மைன்னு ஒத்துண்டா கடவுள் இல்லை ன்னு சொல்லனும். அல்லது கடவுள் செய்கிறது அநியாயம் ன்னு சொல்லணும். ஏன்னா எல்லாரும் ஒரே மாதிரி இல்லை. சிலர் புத்திசாலியாவும் சிலர் என்னை மாதிரி டம்மியாவும் பிறந்து இருக்காங்க. சிலர் பணக்கார குடும்பத்திலேயும் சிலர் ஏழ்மையிலேயும் பிறந்து இருக்காங்க. இப்படி எக்க சக்கமா சொல்லிட்டே போகலாம் இல்லியா?

இப்ப பிறந்து இருக்கோம். அதனால முன்னே ஒரு ஜன்மம் இருந்து இருக்கணும். அதுக்கு முன்னே ஒண்ணு இருந்து இருக்கணும். இப்படியே அநாதியா.... போன பிரலயத்தையும் தாண்டி பின்னாலே போகும். ஒரு ஜன்மத்தில செய்கிற கர்மா அடுத்த நாலு ஜன்மத்துக்கு வித்தா இருக்காம். அதாவது ஒரு ஜன்மத்தில செய்கிற பாப கர்மாவுக்கு அடுத்த நாலு ஜன்மாவுக்கு அனுபவிச்சு தீக்கணும். அதனால யாருக்கு பிராரப்த கர்மா இந்த ஜன்மத்தில அனுபவிச்சு தீர்க்கிறாப் போல இல்லையோ அவங்களுக்கு ஞானம் வராது. மூணு ஜன்மங்கள்லே ஏறக்குறைய எல்லாம் அனுபவிச்சு தீர்த்து புதுசா ஒண்ணும் ஒட்டிக்காம இருந்தாதான் ஞானம் உண்டாகும்.


Tuesday, May 12, 2009

மூணு உடம்பும் போகணுமே!




சீவன் முத்தருக்கு மூணு உடம்பும் போகணுமே. அப்பதானே பிரம்மத்தோட ஐக்கியமாகலாம்.
ஸ்தூல உடம்பு காலப்போக்கிலே விழுந்துடும். அதாவது பிராரப்த கர்மா முடிஞ்சதுமே மேலே கர்மா செய்ய, அனுபவிக்க வேலை இல்லாததால உடம்பு சவமாயிடும்.
சாதாரணமா இந்த நேரத்தில சூக்கும சரீரம் அவித்தையான காரண சரீரத்தோட ஒட்டிக்கும். இந்த காரண சரீரம்தான் அடுத்த பிறவிக்கு காரணம். இதுதான் ஆன்மாவோட கர்ம மூட்டை ஒட்டிகிட்டு போக கோந்து போல உதவும்.
ஆனா எப்ப ஞானம் வருதோ அப்பவே ஞானத்தீயால அவித்தை எரிஞ்சு சாம்பலாகுமாம். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த காரண சரீரம்தான் இந்த அவித்தை.

அதாவது ஞானத்தாலே காரண சரீரம் அழியும்.

கொல்லன் உலையிலே பாத்தா பழுக்க பழுக்க இரும்பை காய்ச்சுவார். தேவையான உருவம் கிடைக்கிறாப்போல இரும்பு துண்டை சம்மட்டியால அடிப்பார். அப்பறம் மேலே தண்ணிய கொட்டுவார். நல்லா பழுக்க காய்ச்சியதாலே தண்ணி மேலே விழுகிற அந்த வினாடியே ஆவியா போய் காணாம போகும்.

அது போல அவ்வளவு சீக்கிரமா சூக்கும சரீரமும் காணாம போகும்.
எப்படின்னா பசை மாதிரி ஒட்டிகிட்டு அடுத்த இடத்துக்கு கொண்டு போன காரண சரீரம் இல்லை என்கிறதால அதை கட்டுப்படுத்த ஒண்ணும் இல்லாம அதோட இயல்பான நிலையை அடையும். இயல்புன்னா? எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டியதுதான். எல்லா காரியங்களும் அததோட காரணத்தில ஒடுங்குகிறாப்போல சூக்கும தேக சத்துவங்கள் சத்துவ ரஜோ குண தன் மாத்திரைகளாக மாறும்.

முன்னே ஆகாசாத் வாயு... ன்னு இறங்கி வந்தாப்பல இப்ப ஒவ்வொண்ணும் வந்த வழியே ஆகாசத்தில ஒடுங்கி, ஆகாசம் விட்சேப சக்தியில ஒடுங்கி, விட்சேபம் மூல ப்ரக்ருதில ஒடுங்கி, இதுவும் பர ப்ரம்ம சொரூபத்தில லயம் ஆகிடும்.
தலை சுத்துதா! ஒண்ணுமில்லை. சீவன் வந்த அதே வழில திரும்பி போயிடும். அவ்வளோதான்.

அந்த நிலையிலே சாக்கிரத்/ ஸ்வப்ன/ சுசுப்தி இல்லை. அதனால துரியம் ன்னு பேர். இந்த துரிய பரம்பொருள் எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறதால அதுக்கு விபு ன்னு பேர்.


105.
சீவன் முத்தருக்கு சரீர த்ரயம் நீங்கும் விதம்:

அரியமெஞ் ஞானத்தீயா லவித்தையா முடனீறாகும்
பெரியதூ லமுங்காலத்தாற் பிணமாகி விழுமந்நேரம்
உரியசூக்கும சரீரமுலையிரும் புண்டநீர் போல்
துரியமாய் விபுவாய்நின்ற சொரூபத்தி லிறந்துபோமே.

அரிய மெஞ்ஞானத் தீயால் அவித்தையாம் உடல் (காரண சரீரம்) நீறாகும் (சாம்பலாகும்). பெரிய தூலமும் (பருத்த ஸ்தூல சரீரம்) காலத்தால் (காலப்போக்கில் பிரார்த்த கர்மா முடிந்ததும்) பிணமாகி விழும். அந்நேரம் உரிய (தன்னை அறிய சாதனமான) சூக்கும சரீரம் உலை இரும்பு உண்ட நீர் போல் (கொல்லன் உலையில் பழுக்க காய்ச்சிய இரும்பு மீது ஊற்றிய நீர் ஆவியாதல் போல) துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
--
த்வைத, விசிஷ்டாத்வைதம் போல அல்லாது அத்வைத அப்ரதிபந்த அபரோட்ச ஞானம் ஆகையால் அரிய மெய்ஞானம். ஜடமான ஸ்தூல சரீரமும் அறியாமையே சொரூபமான காரண சரீரமும் தன்னை அறிய ஹேது இல்லை. சூக்கும சரீரமே ஹேதுவாம்.(-உரிய சூக்கும சரீரம்) சூக்கும சரீரம் பிரளயத்தில் பிரதம சரீரத்துடன் உண்மையாகிய பிரமத்தில் அத்தியாச ஐக்கியம் ஆதலின் மறுபடி ஜன்மிக்கும். ஆனால் அகண்ட அறிவு சொரூபத்தில் “காய்ச்சின இரும்பு கிரகிக்கின்ற நீர் போல” இறந்த பின் ஜன்மிக்காது.

தாத்பர்யம்: சீவன் முத்தருக்கு தத்துவ ஞானம் வந்தவுடன் காரண சரீரம் நீங்கும். பிராரத்த கர்மம் புசித்து தீர்த்தவுடன் ஸ்தூல சரீரம் நீங்கும். அப்போது சூட்சும சரீரம் பரிபூரண சொரூபத்தில் லயித்து நீங்கும்.

Monday, May 11, 2009

சீவன் முத்தர் மகிமை



காயத்தில் வேறாகத் தன்னைக் கண்டோன்
காயமீ றினுமறியான் கன்னற் கட்டி
தீயிற்கா யினுமறிந்த போது மின்பந்
தீராத வாறுபோற் றெளிந்த ஞானி
மாயத்தின் மோகத்தாற் பேத மாகான்
மணந்தபர புருடன்மேல் மனஞ்சேர் மங்கை
நேயத்தான் மனைதொழில்கள் செய்யு மாபோ
னிகழ்தொழிற்செய் யினும்பரத்தி னிலமை நீங்கான்
-வாசிட்டம்

¨நினைப்பெலாம் விட்டு நிர்த்தொந்தனாய் ஞான சீலனாய் இருக்கிறவனுக்குத் தனக்குத்தானே வந்த போகத்தில் சுக துக்கங்களில்லை.¨
¨பிரம்ம ஞானியை புண்ணிய பாவ பலன்கள் தொடர மாட்டா; நிர்மல ஆகாசத்தைப் புகை தொடராதது போல¨
என்கிறது அஷ்டா வக்கிர கீதை.

ஏன்னா அவன் அஞ்ஞானிகளை மாதிரி சீவ பாவத்திலே பலனை கருதி எதையும் செய்கிறதில்லை. செயல்கள் எல்லாமே பிராரப்த பலனை பொறுத்தவை. அந்த பலன் வறுத்த விதை மாதிரி பொசிப்புக்கு மட்டுமே தகுதி உள்ளது. பாப புண்ணியங்களை உண்டாக்க தகுதி இல்லாதது என்கிறார் வள்ளலார்.

வறுத்தவிதை யுண்பதன்றி மாநிலத்தை கீன்று
செறுத்துவிதைப் பாரோ தெளி
-வள்ளலார்- பாசவியல்

குரு சொல்கிறார்: அன்புள்ள மகனே, ஜீவன் முத்தரை சேவிச்சவங்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரையும் மகிழ்ச்சி அடைய வைச்சு அரிய தவமெல்லாம் பண்ணி ஜன்ம சாபல்யம் பெற்றவங்களா ஆவாங்க ன்னு வேதங்கள் சொல்லுது.

தபஸ் பண்ணி திரிமூர்த்திகளிலே ஒத்தரை பாத்து வரம் வாங்கினா சிலசித்திகளும் புண்ணியங்களும் மட்டுமே கிடைக்கும், ஆனா மூணு பேரையும் ஒண்ணாவே பாத்துடலாமே! ப்ரம்மத்தோட சத்வ நிழல்தானே இந்த மூணு விதமா காணப்படுது! ஜீவன் முத்தரோ பரப்பிரம்ம சொரூபமே! இந்த ஞானியோட தரிசனத்தால வரங்களும் கிடைக்கும்; குரு கிடைத்து அவர் மூலமா முத்தியும் கிடைக்குமே!
அறிவால பல விஷயங்களை சாதிக்கலாம். ஆனா பிரம்மஞானத்தை அடைய முடியாது. அதனாலே எல்லாத்தையும்விட அதுவே கஷ்டமானது. அதனால ஞானிகளோட மகிமை அளவிட முடியாதது.
யாரான ஒரு பெரிய விஷயம் செய்துட்டதா சொன்னா, ஆமா, இதென்னடா பெரிய பிரம்ம வித்தை ன்னு சொல்வோம்.
கீதையிலே கண்ணனும் பிரம்ம ஞான சாதனமே மிகவும் வருத்தம் தருவதுன்னு சொல்கிறான். அதை அடைந்தவங்கள் நிசமாவே பெரியவங்கதானே!

திரிவித வுலகத் தரிதொரு ஞானி
தேர்விடத் தென்றுமோ ரொன்றை
யுரைசெயிற் பிரம வித்தையொத் தரிதோ
வென்றுமிவ் வுலகுரைப் பதனா
லரிசொல்கீ தையினும் பிரமசாதகரி
னார்க்குள வருத்தமென் பதனாற்
பெரியதோர் வருத்த மெனமறை துணிந்த
பிரமநா னெனவிருத் தலினான்
--
பிரிச்சு பாக்க
திரிவித உலகத்து அரிதொரு ஞானி
தேர்விடத்து என்றும் ஓர் ஒன்றை
உரை செயிற் பிரம வித்தை ஒத்தது அரிதோ
என்றும் இவ் உலகு உரைப்பதனால்
அரி சொல் கீதையினும் பிரம சாதகரினார்க்கு
உள வருத்தம் என்பதனால்
பெரியதோர் வருத்தம் என மறை துணிந்த
பிரம நான் எனவிருத்தலினால்.

-வைராக்கிய தீபம்.

104.
அதற்கு வேத பிரமாணம்:

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவனயனெடு மாலான
மூவரு மகிழ நோன்பு முழுவதுஞ் செய்துசன்ம
பாவன மானாரென்று பழமறை முழங்கு மிப்பான்
மேவருஞ் சீவன்முத்தர் விதேகமுத்தியுநீ கேளாய்

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவன், அயன் (பிரமன்), நெடு மாலான (விஷ்ணு) மூவரும் மகிழ நோன்பு முழுவதும் (தவங்கள் அனைத்தும்) செய்து சன்ம பாவனமானார் (பரி சுத்தமானார்) என்று பழ மறை முழங்கும். இப்பான் (இனி) மேவருஞ் (மேவ அரும்=பொருந்துதற்கு அரிய) சீவன்முத்தர் [அடையும்] விதேகமுத்தியும் (உடல் நீங்கிய முத்தி) நீ கேளாய்.

Friday, May 8, 2009

ஜீவன் முத்தரை பாவ புண்ணியங்கள் தொடராத அதிசய வழி....




சரி, ஜீவன் முத்தரா இருக்காரு. அடுத்த பிறவி இல்லே. ஆனா இந்த பிறவி கர்மாவ தீர்க்க உலகத்திலே வாழணும். பற்றில்லாம கர்மம் செய்யறாரு. அதனால இந்த நிலை வந்த பிறகு கர்மம் பிடிச்சுக்காது சரிதான். ஆனா பிறக்கறப்பவே ஞானியா பிறக்கலையே! பிறந்ததுலேந்து இந்த பிறவில செஞ்சது? அதோட கர்ம பலன் என்ன ஆகும்? அதெப்படி அது ஒட்டாம போகும்? அது எங்கேயாவது போய் சேரணுமே?

எப்படின்னா ...
பிராரத்த கர்மா சில "நல்ல" விஷயங்களையும் செய்யத்தூண்டும். அதே சமயம் சில "கெட்ட" விஷயங்களையும் செய்யத்தூண்டும்.

அட! இவனெல்லாம் சாமியாரு வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான். இவனை எனக்கு தெரியாதா? (இப்படி பண்ணான், அப்படி பண்ணான்...) சுத்த பிராடு சார்!.... இந்த ரீதியிலே சிலர் அவரை திட்டிகிட்டு இருப்பாங்க. அவங்க புதுசா கர்மாவால வரக்கூடிய பாவத்தை எல்லாம் சேர்த்து வாங்கிக்கிறங்களாம்!

விஷயம் தெரிஞ்ச சிலர் ஜீவன் முத்தரை பூஜை பண்ணி, போற்றி புண்ணியத்தை எல்லாம் வாங்கிப்பாங்களாம். ஞானி லெவெல்லே அதுவும் பிரச்சினைதானே? பொன் விலங்கு!

அப்ப இருந்த ஒரே கர்மாவான பிராரத்த கர்மாவும் ஜீவன் முத்தரை விட்டு போயிடும்.

103.
சீவன் முத்தர் செய்யும் இருவினை எப்படி நீங்கும்?

பொறுமையாற் பிராரத்தத்தைப் புசிக்குநாட் செய்யுங் கர்மம்
மறுமையிற் றொடர்ந் திடாமன் மாண்டுப்போம் வழியேதென்றால்
சிறியவ ரிகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்
அறிவுளோ ரறிந்து பூசித் தறமெலாங் கைக்கொள்வாரே

மறுமையில்[லாத சீவன் முத்தர்] பொறுமையால் பிராரத்தத்தை புசிக்கும் நாள் [சீவன் முத்தராய் உள்ள போது] செய்யும் கர்மம் [அவர்களை] தொடர்ந்திடாமல் மாண்டுப்போகும் வழி ஏதென்றால், [அவர்களை] சிறியவர் (மூடர்கள்) இகழ்ந்து ஞானி செய்த பாவத்தைக் கொள்வார். அறிவுளோர் (விவேகிகள்) அறிந்து (அவர்கள் தன்மை அறிந்து) பூசித்து அறமெலாம் (புண்ணியங்களை) கைக்கொள்வாரே (ஏற்றுக்கொள்வார்).
தாத்பர்யம்: சீவன் முத்தர் செய்யும் வினைகளின் புண்ணிய பாப பலன்களை விவேகியும் அவிவேகியும் ஏற்பர்.
--
பொறுமையால்- “சுக விஷயம்” வரின் உடனே முன்வந்தும் “துக்க விஷயம்” வரின் பின் தங்கியும் இல்லாது இரண்டையும் சமமாக ஏற்பதால்.. சாரத்தைவிட்டு சக்கையை பார்ப்பது போல மூடர்கள் பிராரத்தத்தால் வரும் அகுணத்தை பார்த்து இகழ்ந்து பாவத்தை கைப்பற்றுவர். ஜலத்தை விட்டு பாலை கொள்ளும் அன்னம் போல் முமுட்சுக்கள் அகுணத்தை விட்டு சொற்பமாக இருந்தாலும் குணத்தைப் பார்த்து சிவ சொரூபமாய் எண்ணி அர்சனையாதி செய்து புண்ணியத்தை கைக்கொள்வர்.