Pages

Tuesday, May 12, 2009

மூணு உடம்பும் போகணுமே!
சீவன் முத்தருக்கு மூணு உடம்பும் போகணுமே. அப்பதானே பிரம்மத்தோட ஐக்கியமாகலாம்.
ஸ்தூல உடம்பு காலப்போக்கிலே விழுந்துடும். அதாவது பிராரப்த கர்மா முடிஞ்சதுமே மேலே கர்மா செய்ய, அனுபவிக்க வேலை இல்லாததால உடம்பு சவமாயிடும்.
சாதாரணமா இந்த நேரத்தில சூக்கும சரீரம் அவித்தையான காரண சரீரத்தோட ஒட்டிக்கும். இந்த காரண சரீரம்தான் அடுத்த பிறவிக்கு காரணம். இதுதான் ஆன்மாவோட கர்ம மூட்டை ஒட்டிகிட்டு போக கோந்து போல உதவும்.
ஆனா எப்ப ஞானம் வருதோ அப்பவே ஞானத்தீயால அவித்தை எரிஞ்சு சாம்பலாகுமாம். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த காரண சரீரம்தான் இந்த அவித்தை.

அதாவது ஞானத்தாலே காரண சரீரம் அழியும்.

கொல்லன் உலையிலே பாத்தா பழுக்க பழுக்க இரும்பை காய்ச்சுவார். தேவையான உருவம் கிடைக்கிறாப்போல இரும்பு துண்டை சம்மட்டியால அடிப்பார். அப்பறம் மேலே தண்ணிய கொட்டுவார். நல்லா பழுக்க காய்ச்சியதாலே தண்ணி மேலே விழுகிற அந்த வினாடியே ஆவியா போய் காணாம போகும்.

அது போல அவ்வளவு சீக்கிரமா சூக்கும சரீரமும் காணாம போகும்.
எப்படின்னா பசை மாதிரி ஒட்டிகிட்டு அடுத்த இடத்துக்கு கொண்டு போன காரண சரீரம் இல்லை என்கிறதால அதை கட்டுப்படுத்த ஒண்ணும் இல்லாம அதோட இயல்பான நிலையை அடையும். இயல்புன்னா? எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டியதுதான். எல்லா காரியங்களும் அததோட காரணத்தில ஒடுங்குகிறாப்போல சூக்கும தேக சத்துவங்கள் சத்துவ ரஜோ குண தன் மாத்திரைகளாக மாறும்.

முன்னே ஆகாசாத் வாயு... ன்னு இறங்கி வந்தாப்பல இப்ப ஒவ்வொண்ணும் வந்த வழியே ஆகாசத்தில ஒடுங்கி, ஆகாசம் விட்சேப சக்தியில ஒடுங்கி, விட்சேபம் மூல ப்ரக்ருதில ஒடுங்கி, இதுவும் பர ப்ரம்ம சொரூபத்தில லயம் ஆகிடும்.
தலை சுத்துதா! ஒண்ணுமில்லை. சீவன் வந்த அதே வழில திரும்பி போயிடும். அவ்வளோதான்.

அந்த நிலையிலே சாக்கிரத்/ ஸ்வப்ன/ சுசுப்தி இல்லை. அதனால துரியம் ன்னு பேர். இந்த துரிய பரம்பொருள் எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறதால அதுக்கு விபு ன்னு பேர்.


105.
சீவன் முத்தருக்கு சரீர த்ரயம் நீங்கும் விதம்:

அரியமெஞ் ஞானத்தீயா லவித்தையா முடனீறாகும்
பெரியதூ லமுங்காலத்தாற் பிணமாகி விழுமந்நேரம்
உரியசூக்கும சரீரமுலையிரும் புண்டநீர் போல்
துரியமாய் விபுவாய்நின்ற சொரூபத்தி லிறந்துபோமே.

அரிய மெஞ்ஞானத் தீயால் அவித்தையாம் உடல் (காரண சரீரம்) நீறாகும் (சாம்பலாகும்). பெரிய தூலமும் (பருத்த ஸ்தூல சரீரம்) காலத்தால் (காலப்போக்கில் பிரார்த்த கர்மா முடிந்ததும்) பிணமாகி விழும். அந்நேரம் உரிய (தன்னை அறிய சாதனமான) சூக்கும சரீரம் உலை இரும்பு உண்ட நீர் போல் (கொல்லன் உலையில் பழுக்க காய்ச்சிய இரும்பு மீது ஊற்றிய நீர் ஆவியாதல் போல) துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
--
த்வைத, விசிஷ்டாத்வைதம் போல அல்லாது அத்வைத அப்ரதிபந்த அபரோட்ச ஞானம் ஆகையால் அரிய மெய்ஞானம். ஜடமான ஸ்தூல சரீரமும் அறியாமையே சொரூபமான காரண சரீரமும் தன்னை அறிய ஹேது இல்லை. சூக்கும சரீரமே ஹேதுவாம்.(-உரிய சூக்கும சரீரம்) சூக்கும சரீரம் பிரளயத்தில் பிரதம சரீரத்துடன் உண்மையாகிய பிரமத்தில் அத்தியாச ஐக்கியம் ஆதலின் மறுபடி ஜன்மிக்கும். ஆனால் அகண்ட அறிவு சொரூபத்தில் “காய்ச்சின இரும்பு கிரகிக்கின்ற நீர் போல” இறந்த பின் ஜன்மிக்காது.

தாத்பர்யம்: சீவன் முத்தருக்கு தத்துவ ஞானம் வந்தவுடன் காரண சரீரம் நீங்கும். பிராரத்த கர்மம் புசித்து தீர்த்தவுடன் ஸ்தூல சரீரம் நீங்கும். அப்போது சூட்சும சரீரம் பரிபூரண சொரூபத்தில் லயித்து நீங்கும்.

Post a Comment