Pages

Wednesday, October 7, 2009

சாதனை செய்யும்போது இறந்து போனால்?



155.
நாலாம் பூமியில் வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து மாண்டோர்
மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ளவந்து வீடுசேர்வார்
மாலான பவத்தில் விழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா
காலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்த தாமே

நாலாம் பூமியில் வரு முன் மூன்று பூமியும் அடைந்து நடந்து மாண்டோர் மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ள வந்து வீடு சேர்வார். மாலான பவத்தில் விழார். முதற் பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா காலான முதற் பூமி கை வந்தான் முத்தியுங் கை வந்ததாமே.


ஆன்மீக நாட்டம் ஒத்தருக்கு வருது. கஷ்டப்பட்டு முன்னே போறார். வயசாயிடுது. இறந்து போறார். இது வரைக்கும் அவர் கஷ்டப்பட்டது வீணா?
ஒத்தருக்கு நிறைய வயசான பிறகுதான் ஆன்மீக நாட்டமே வருது. நமக்கு வாழ்க்கையே வீணா போச்சு. ஆன்மீகத்தில இனிமே என்ன சாதிக்கப்போறோம் ன்னு அதைரியப்படலாமா? .
நாமும் எத்தனையோ நாளா சாதனை சாதனைன்னு நேரம் போக்கிக்கிட்டு இருக்கோம். என்னத்தை சாதிக்க முடிஞ்சது? ஒரு இஞ்ச் கூட முன்னேறினதா தெரியலையே. ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு டிப்ரெஸ் ஆகலாமா?
தேவையில்லை.
நாம இந்த உலகத்தை விட்டு போகிறப்ப காசு பணம் நகை நட்டு வீடு வாசல் தோட்டமெல்லாம் கொண்டு போக முடியாது. ஆனா இந்த ஆன்மீக முன்னேற்றத்தை கொண்டு போகலாம். விட்ட இடத்திலேந்து தொடரலாம்.

முதல் மூன்று பூமிகளை மட்டும் அடைந்து 4 வது பூமியின் அப்பியாசம் இல்லாமல் மரணமடைந்தவர் மேலான சுவர்க்கம் முதலான பதவிகளை அடைந்து பின் நல்ல வம்சத்தில் பிறந்து நான்காம் பூமி முதலானவற்றை அடைந்து மோக்ஷம் பெறுவர். (நல்ல வம்சம்ன்னா மேலே ஆன்மீகத்தில முன்னேற நல்ல சூழ்நிலையை தரக்கூடிய குடும்பம்.) அவர்கள் மயக்கத்துக்கு காரணமான பிறவியை திருப்பியும் அடைய மாட்டார்.

அதனால முதல் படியான சுபேச்சை கைவருவதே பிரயாசை. அதுக்குத்தான் கஷ்டப்படணும். அது கிடைச்சாச்சுன்னா மற்றவற்றுக்கு சுலபமா போயிடலாம். மற்றவற்றுக்கு காரணமான அது வந்துவிட்டால் முத்தியே கிடைச்சதாகும்.
இதைத்தான் பகவானை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கிறான்னு சொல்கிறாங்களோ என்னவோ.

அப்பாடான்னு இருக்கு இல்லே?


Tuesday, October 6, 2009

பூமிகளை பொருத்திப்பாக்க ...




154.
முன்னிலங்க ளேறியமூ வருமப்பி யாசிகளா முத்த ரல்லர்
பின்னிலங்கள் வரன்வரீயான் வரிட்டனெனுஞ் சீவன் முத்தர் பேத மாகுஞ்
சொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தாந் தூய முத்த
ரின்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல் வேனே

முன் நிலங்கள் (சுபேச்சை, விசாரணை, தனுமாசி ஆகிய மூன்று) ஏறிய மூவரும் அப்பியாசியாவார்கள். [சீவன்] முத்தர் அல்லர். பின் நிலங்கள் (அசம்சத்தி, பதார்த்த பாவனை என்ற மூன்று) வரன், வரீயான், வரிட்டன் எனும் சீவன் முத்தர் பேதமாகும். சொன்ன நடுப் பூமி (சத்துவாபத்தி) வந்த ஞானிகளே பிரம வித்தாம், தூய முத்தர். இன்னமும் அப் பூமிகளின் பெருமைதனை நீ அறிய யான் சொல்வேனே.

நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சதை வெச்சு பாத்தோம்னா சுலபமா இந்த நிலைகளை புரிஞ்சுக்கலாம். சுபேச்சை, விசாரணை, தனுமாசி என்கிற முதல் மூணு நிலைகள்ல இருக்கிறவங்க ஆன்மீக நாட்டம் உள்ளவங்க அவ்வளோதான். இவங்க முன்னேறினாலும் முன்னேறலாம்; இல்லை நல்ல வாசனை கழிஞ்ச பின் மற்ற வாசனைகள் இழுக்க கீழே இறங்கலாம். இல்லை முன்னேற்றம் தடைப்பட்டு அப்படியே நின்னுடலாம். சொல்ல முடியாது.

விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிற அசம்சக்தி என்கிற நிலையில அவரை பிரம்ம வரன் என்கலாம்.
பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அனுபவம் அடைஞ்சு சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்கிட்டார்ன்னு பாத்தோம் இல்லையா? இருந்தாலும் தானாக வெளியே அப்பப்ப வந்து கொஞ்சம் உணவு எடுத்துக்கிறது போல சிலது பண்ணிட்டு திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க.
பதார்த்த பாவனை நிலையில வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல் ன்னு பாத்தோம். இவங்க பிரம்ம வரீயான்.(நினைவிருக்கா? இவர் தானா வெளியே வர மாட்டார். ஆனா மத்தவங்க இவரை வெளியே கொண்டு வரலாம்.)

துரியம் என்பது சாக்கிரம் சொப்பனம் சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி பூரண மௌனமாய் தன்னாலும் பிறராலும் வெளிவராமல் நிர் விகல்ப சமாதி அடைஞ்சுடுவார். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது. இவர் பிரம்ம வரிட்டன்.

இதுக்கு  நடுவில நாலாம் நிலையில இருக்கிறவங்கதான் சீவன் முத்தர்.


Monday, October 5, 2009

இந்த துரீயமே துரியாதீதம்....


இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.
(இப்படியும் சிலர் சொல்கிறாங்க.)

152.
இத்துரிய பூமியே துரியாதீதம் ஆகும்.
முற்புவிமூன் றினுமுலகந் தோன்றுதலாற் சாக்கிரமா மூன்றற் கப்பால்
சொற்பனமா மதுவுமெள்ள நழுவுமைந்தாம் பூமியே சுழுத்தி யாகும்
அற்புதமாஞ் சுகாநுபவ மிகுமாறாம் புவிதுரிய மதற்கப் பாலோர்
கற்பனையி லாதவிட மதீதமென்று மௌனமாக் காட்டும் வேதம்.

(சுபேச்சை முதலான) முற்புவி மூன்றினும் உலகம் தோன்றுதலால் சாக்கிரமாம். மூன்றற்கு அப்பால் [4 வது ஆன சத்துவாபத்தி] சொற்பனமாம் (பிரபஞ்சம் மித்தையாக தோன்றும் கனவு) அதுவும் மெள்ள நழுவும் ஐந்தாம் (அசம்சத்தி) பூமியே சுழுத்தியாகும். அற்புதமாம் சுகாநுபவ மிகும் ஆறாம் புவி [பதார்த்தாபாவனை] துரியம் ஆகும். அதற்கப்பாலோர் (துரியம் எனும் 7 ஆம் பூமி) கற்பனையிலாத இடம் அதீதம் என்று மௌனமாய் காட்டும் வேதம்.
--
சுபேச்சை, தநுமானசி, சத்துவா பத்தி ஆகிய   முதல் 3 பூமிகளில் உலகம் தோன்றுகிறது. நாம சாதாரணமா பாக்கிற இந்த உலகம் தெரியுது. அதனால் அவை சாக்கிரம் ன்னு சொல்லாம்.


நான்காவது சத்துவாபத்தியில் பிரபஞ்சம் மாயை ன்னு தோன்றுகிறது. ஆனா அது என்ன என்கிற தெளிவு இருக்காது. அதனால் அது  கனவு.

5 வது ஆன அப்பியாசத்தில் எல்லாம் பிரம்ம சொரூபமாக தோன்றுகிறது. உலகம் நழுவுகிறது. அதனால் அது சுழுத்தி.

ஆறாவதில் ஆனந்தம் உதிக்கும். இது துரியம்.

இதற்கு அடுத்து ஒன்றும் தோன்றாத நிலையே துரியாதீதம் எனப்பட்டது. அதாவது துரியத்துக்கு அப்பாற்பட்டது.

153.
துரியநிலந் தனைத்துரியா தீதமெனின் மயக்கமென்று கருதி மேலோர்
அரியதொரு விதேகமுத்தி யதீதமென் பாரதுகணக்கி லாறாம் பூமி
மருவுசுழுத் தியிற்காட்சி சுழுத்தி யென்பா ரென்பதுநீ மனதிற்கொள்வாய்
பெருமைதரு ஞானபூ மியின்விகற்ப மின்னமுண்டு பேசக் கேளாய்.

துரிய நிலந்தனைத் துரியாதீதம் எனில் மயக்கம் என்று கருதி மேலோர், அரியதொரு விதேக முத்தி அதீதம் என்பார். அதுகணக்கில் ஆறாம் பூமி. மருவு சுழுத்தியில் காட்சி சுழுத்தி என்பார் என்பது நீ மனதில் கொள்வாய். பெருமை தரு ஞான பூமியின் விகற்பம் இன்னமுண்டு. பேசக் கேளாய்.
--
சீவன் முத்தர் தேகத்துடன் கூடி இருக்க அவர் நிலை துரியாதீதம் ன்னு சொன்னா ஸ்தூல திருஷ்டி இருக்கிறவங்களுக்கு  குழப்பம் வரும் என கருதிய முன்னோர், முதல் மூன்று சாக்கிரம் எனவும் நான்காவது சத்துவாபத்தி கனவு எனவும், ஐந்தும் ஆறும் சேர்த்து காட்சி சுழுத்தி எனவும், ஏழாம் பூமி துரியம் எனவும் கூறினர். இந்த ஞான பூமிகளின் விசேடங்கள் இன்னும் உண்டு.
அதாவது ஒரு சீவன் முத்தர் இருக்கார். அவருக்கு ஞானம் வந்துட்டாலும் கர்மாவை கழிக்க இந்த உலகத்தோட தொடர்பு இருக்கு. இவரோட நிலை எப்படி துரியாதீதம் ஆகும்ன்னு சிலர் குழம்பலாம். இதுக்காக இந்த ஞான நிலைகளை கொஞ்சம் ரீக்ளாஸிபை பண்ணி துரியாதீதம் என்கிற வார்த்தையை எடுத்துட்டாங்க சிலர். வேற இடத்தில படிக்கும்போது குழப்பம் வரக்கூடாதேன்னு இதை குறிப்பிடுறார் ஆசிரியர்.


Friday, October 2, 2009

துரீயமே துரியாதீதம்



151.
தத்துவத்தின் மனமுறைத்து மித்தையெலா மறத்தலசம் சத்தியாகும்
அத்துவிதா னந்தம்வருந் திரிபுடிபோம் பதார்த்தாபா வனைய தாகும்
வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவு னசுபாவந் துரிய மாகும்
இத்துரிய பூமியைமுன் றுரியாதீ தப்பதமென் றதுவுங் கேளாய்

தத்துவத்தில் மனம் உறைத்து மித்தை எலாம் மறத்தல் அசம்சத்தி (சங்கல்பம் அறல்) ஆகும். (5ஆம் பூமி) அத்துவிதானந்தம் வரும்; திரிபுடி போம்; பதார்த்தா பாவனை அதாகும்.(6ஆம் பூமி). வத்து நிலை இருந்தபடி இருந்த மவுன சுபாவம் துரியமாகும். (7ஆம் பூமி) இத்துரிய பூமியை முன் துரியாதீதப் பதம் என்றதுவுங் கேளாய்.
--
5. சம் சத்தின்னா விஷயங்களில பற்று வைக்கிறது.
அசம்சக்தின்னா விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிறது. அதாவது 4 ஆம் பூமியின் அப்பியாசத்தால பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அபரோக்ஷ (மறைவில்லா) அனுபவம் அடைஞ்சு, சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்குதல்.

6. பதார்த்த பாவனை என்பது வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல்.

7. துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து, சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி, பூரண மௌனமாய்; தன்னாலும் பிறராலும் வெளிவராமல்; நிர் விகல்ப சமாதி அடைவதே துரியம் ஆகும். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது.

இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.

Thursday, October 1, 2009

ஞான நிலைகள்



149.
ஞானபூமிகள் ஏழு:
புலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரணையிரண்டாம் பூமியாகும்
நலதநுமா னசிமூன்றாம் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி
சொலுமசம்சத் திப்பேரும் பதார்த்தாபா வனைபேருந் துரியப் பேரும்
மலினமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வகுத்தார் மேலோர்

புலவர் (மகான்கள்) புகழ் முதற் பூமி சுபேச்சை. (சுப இச்சை=சுபம் விரும்பல்) விசாரணை இரண்டாம் பூமியாகும். நல்ல தநுமானசி மூன்றாம் பூமி. சத்துவா பத்தி (உண்மையில் மனதில் நின்றல்) நாலாம் பூமி. சொல்லும் அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகிய பெயர்கள் [கொண்டவற்றை], மலினமறு (களங்கமில்லா) மகனே, ஐந்து ஆறு ஏழு பூமிகளாக வகுத்தார் மேலோர்.
--

150.
துற்சங்க நிவர்த்திவந்து சிவஞானம் விரும்புவது சுபேச்சையாகும்
நற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி
முற்சங்க வேடனைகள் விடறநுமா னசியிந்த மூன்றி னாலும்
சற்சங்க மனதிலுண்மை யறிவுதித்தல் சத்துவா பத்தி தானே

துர் (மூட) சங்க நிவர்த்தி வந்து சிவ (பிரம) ஞானம் விரும்புவது சுபேச்சையாகும்.

நற்சங்க (சாது சங்க) மொழி வினவி ஞானநூல் பழகல் (வேதாந்த சாஸ்திரம் அப்பியாசித்தல்) விசாரணையாம்.

(விசாரணையில் வெளிப்படுவதை) நம்பி முற்சங்க வேடனைகள் (காமாதி வாசனைகளான இச்சைகளை) விடல் தநுமானசி (நினைவு குவிந்து மனம் சிறுகல்).

இந்த மூன்றினாலும் சற்சங்க (வைராக்கியம் முதலான நல்ல குணங்களை பழகிய) மனதில் உண்மை அறிவுதித்தல் (சத் சித் ஆநந்தம் சொரூபமே நான் எனும் அபரோட்ச ஞானம் உதித்தல்) சத்துவா பத்தி தானே.
--
அடுத்து ஞான நிலைகளை பாக்கலாமா?
இதில வர பெயர்கள் அஞ்ஞான பூமிகள் பெயர் மாதிரி சுலபம் இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து நினைவு கொள்ளணும்.
1. சுபேச்சை முதலாவது. தேர்தல்ல சுயேட்சை கேள்விப்பட்டு இருக்கோம். இது என்ன சுபேச்சை?
சுப இச்சை= சுபம் என்பது இங்கு பிரம்ம ஞானத்தால் அடையும் மோக்ஷம். இச்சை விரும்புவது. நம்ம பூர்வ ஜன்ம புண்ணியம் - திடுதிப்புன்னு ஒரு நாள் ஒரு நினைப்பு தோணுது; “அடடா! நாம் மூடத்தனமாக இந்த அநித்திய உலகையும் இதில் உள்ள போகத்தையும் நம்பி பிறப்பிறப்பாகிய பெரிய துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே.” என்ற உணர்வு வந்து, "சே! இனியாவது எல்லா கர்மங்களையும் நிவர்த்தி செய்து எப்படியாவது மோக்ஷமடைய வேண்டும் என திட வைராக்கியம் கொள்வதே சுபேச்சை.

2. அப்படி ஆன பின் குரு, பெரியோர் இவர்களை அடைந்து சாத்திர விசாரணை செய்து ஞானத்தை அடைய அப்யாசித்தல் விசாரணை. இது இரண்டாவது.

3. சாத்திர ஆராய்ச்சியாலும், குருவிடம் கேள்வி கேட்டதாலும் உண்டான பலத்தால் பிரபஞ்சம் அநித்தியம் என்ற உண்மை தோன்றி; மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றில் உள்ள ஆசையை அறவே விடல் தநுமானசி. இது மூன்றாவது நிலை. திடுதிப்புன்னு விட முடியுமா? முதல்ல தனக்கு என்கிற ஆசைகளை ஒழிச்சு, அப்புறம் தன் குடும்பத்துக்கு, தன் உறவினர்களுக்கு, ஊருக்கு ன்னு இது வேணும், அது வேணும் என்கிறதை எல்லாம் விட்டு ஒழிக்கணும்.

4. மேற் கூறிய 3 பூமிகளின் அப்பியாச வலிமையால் சத்துவ வாசனை உடைய மனதினிடத்தில் உண்மை அறிவு உதித்தல் சத்துவாபத்தி. (சத்வ உபத்தி). அதாவது பிரபஞ்சம் கனவு போன்றது நிரந்தரம் இல்லைன்னு உணர்ந்து சத் ரூப பிரம்மமே தான் என அறிந்து பிரம்ம சாக்ஷாத்காரம் அடைய அப்பியாசித்தல்.