Pages

Thursday, October 1, 2009

ஞான நிலைகள்149.
ஞானபூமிகள் ஏழு:
புலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரணையிரண்டாம் பூமியாகும்
நலதநுமா னசிமூன்றாம் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி
சொலுமசம்சத் திப்பேரும் பதார்த்தாபா வனைபேருந் துரியப் பேரும்
மலினமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வகுத்தார் மேலோர்

புலவர் (மகான்கள்) புகழ் முதற் பூமி சுபேச்சை. (சுப இச்சை=சுபம் விரும்பல்) விசாரணை இரண்டாம் பூமியாகும். நல்ல தநுமானசி மூன்றாம் பூமி. சத்துவா பத்தி (உண்மையில் மனதில் நின்றல்) நாலாம் பூமி. சொல்லும் அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகிய பெயர்கள் [கொண்டவற்றை], மலினமறு (களங்கமில்லா) மகனே, ஐந்து ஆறு ஏழு பூமிகளாக வகுத்தார் மேலோர்.
--

150.
துற்சங்க நிவர்த்திவந்து சிவஞானம் விரும்புவது சுபேச்சையாகும்
நற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி
முற்சங்க வேடனைகள் விடறநுமா னசியிந்த மூன்றி னாலும்
சற்சங்க மனதிலுண்மை யறிவுதித்தல் சத்துவா பத்தி தானே

துர் (மூட) சங்க நிவர்த்தி வந்து சிவ (பிரம) ஞானம் விரும்புவது சுபேச்சையாகும்.

நற்சங்க (சாது சங்க) மொழி வினவி ஞானநூல் பழகல் (வேதாந்த சாஸ்திரம் அப்பியாசித்தல்) விசாரணையாம்.

(விசாரணையில் வெளிப்படுவதை) நம்பி முற்சங்க வேடனைகள் (காமாதி வாசனைகளான இச்சைகளை) விடல் தநுமானசி (நினைவு குவிந்து மனம் சிறுகல்).

இந்த மூன்றினாலும் சற்சங்க (வைராக்கியம் முதலான நல்ல குணங்களை பழகிய) மனதில் உண்மை அறிவுதித்தல் (சத் சித் ஆநந்தம் சொரூபமே நான் எனும் அபரோட்ச ஞானம் உதித்தல்) சத்துவா பத்தி தானே.
--
அடுத்து ஞான நிலைகளை பாக்கலாமா?
இதில வர பெயர்கள் அஞ்ஞான பூமிகள் பெயர் மாதிரி சுலபம் இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து நினைவு கொள்ளணும்.
1. சுபேச்சை முதலாவது. தேர்தல்ல சுயேட்சை கேள்விப்பட்டு இருக்கோம். இது என்ன சுபேச்சை?
சுப இச்சை= சுபம் என்பது இங்கு பிரம்ம ஞானத்தால் அடையும் மோக்ஷம். இச்சை விரும்புவது. நம்ம பூர்வ ஜன்ம புண்ணியம் - திடுதிப்புன்னு ஒரு நாள் ஒரு நினைப்பு தோணுது; “அடடா! நாம் மூடத்தனமாக இந்த அநித்திய உலகையும் இதில் உள்ள போகத்தையும் நம்பி பிறப்பிறப்பாகிய பெரிய துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே.” என்ற உணர்வு வந்து, "சே! இனியாவது எல்லா கர்மங்களையும் நிவர்த்தி செய்து எப்படியாவது மோக்ஷமடைய வேண்டும் என திட வைராக்கியம் கொள்வதே சுபேச்சை.

2. அப்படி ஆன பின் குரு, பெரியோர் இவர்களை அடைந்து சாத்திர விசாரணை செய்து ஞானத்தை அடைய அப்யாசித்தல் விசாரணை. இது இரண்டாவது.

3. சாத்திர ஆராய்ச்சியாலும், குருவிடம் கேள்வி கேட்டதாலும் உண்டான பலத்தால் பிரபஞ்சம் அநித்தியம் என்ற உண்மை தோன்றி; மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றில் உள்ள ஆசையை அறவே விடல் தநுமானசி. இது மூன்றாவது நிலை. திடுதிப்புன்னு விட முடியுமா? முதல்ல தனக்கு என்கிற ஆசைகளை ஒழிச்சு, அப்புறம் தன் குடும்பத்துக்கு, தன் உறவினர்களுக்கு, ஊருக்கு ன்னு இது வேணும், அது வேணும் என்கிறதை எல்லாம் விட்டு ஒழிக்கணும்.

4. மேற் கூறிய 3 பூமிகளின் அப்பியாச வலிமையால் சத்துவ வாசனை உடைய மனதினிடத்தில் உண்மை அறிவு உதித்தல் சத்துவாபத்தி. (சத்வ உபத்தி). அதாவது பிரபஞ்சம் கனவு போன்றது நிரந்தரம் இல்லைன்னு உணர்ந்து சத் ரூப பிரம்மமே தான் என அறிந்து பிரம்ம சாக்ஷாத்காரம் அடைய அப்பியாசித்தல்.


Post a Comment