Pages

Wednesday, January 6, 2010

மாக புராணம் 11



11.தேவர் ஓணானை கொண்டு பரீக்ஷித்தது.
பகவான்: "ஆதலால் தேவேந்திரனுக்கு மாக ஸ்நாநம் செய்வித்து கழுதை முகத்தை அகற்றுங்கள். மேலும் அதன் பெருமையை கேளுங்கள். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாகஸ்நாநம் செய்வது மிக உத்தமம். கங்கையும் யமுனையும் கூடுமிடத்திலே சரஸ்வதி அந்தர்வாஹினியாகச் செல்கிறாள். மாகமாஸம் அச்வத்தம், விஷ்ணு, வேதம், பிராம்ஹணன், ராமமந்திரம், லக்ஷ்மீ, கங்கா, மேரு ஆகியவை அந்தந்த இனத்திற்குள் மிக உயர்ந்தது. பிரயாகை, கங்கா, நர்மதா, பச்சிம வாஹினியான காவேரீ, தாம்ரபரணி, கோகர்ணம், பிரபாஸம் முதலிய இருபத்து நான்கு கோடி புண்ணிய தீர்த்தங்களில் பத்தாண்டுகள் ஸ்நாநம் செய்தவருக்கு எவ்வளவு புண்ணியம் வருமோ அவ்வளவு புண்ணியத்தை ஒரு மாஸம் செய்யும் மாகஸ்நாநம் அளிக்கும். மாகமாஸத்தில் தீர்த்தங்கரையில் என்னை ஸாளக்ராமத்தில் சி2லையில் சிறந்த கந்த புஷ்பங்களால் பூஜிப்பவர் எனது லோகத்தை அடைந்து மறுபடி பிறக்க மாட்டார்.

நெல்லி மரத்தின் கீழே துளஸீ, மிருத்திகை, அல்லது கோமயத்தை உடலில் பூசிக்கொண்டு மாகஸ்நாநம் செய்வரது எல்லா பாபங்களும் உடனே நசிக்கும். மாக ஸ்நாநம் செய்யாதவர் யமயாதனையை அனுபவிப்பர். பெண்களுக்கு மாக ஸ்நாநம் ஒரு வரப்பிரசாதம். இரு முறை பூஜிக்கும் விதவையின் பாபமும் அகலும். பக்தியுடன் மாகஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்வது விசே2ஷ புண்ணியத்தை தரும்.

காயத்ரிக்கு சமமான மந்திரம் இல்லை. ஸர்வ பாபங்களையும் போக்கி ஸர்வ லோகங்களையும் அளிக்க வல்லது காயத்ரீ. எனக்கும் பிரும்மாவுக்கும் சிவனுக்கும் ஸகல தேவர்களுக்கும் முக்கியமாக ஸூர்யனுக்கும் இருப்பிடம் காயத்ரீ. மாகமாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்பவர் எல்லா யக்ஞங்களையும் செய்த பலன் பெறுவர். பிரும்ம யக்ஞம் செய்பவர் பிரம்ம லோகம் செல்வர். மாகஸ்நாநம், ஸத்கதா ச்2ரவணம், தீப தானம் இவை பிரும்ம ஞானம் தருபவை. துளஸீமாலை தரித்து துளசீ தளத்தால் ஸாளக்ராம பூஜை செய்வோர்க்கு யம பயமில்லை.

புராணம் சொல்பவர் வேதங்கற்று ஆசாரமுள்ளவராக இருத்தல் வேண்டும். கம்பீரமான வாக்கு, அழகான ஸ்ரீராகம், சா2ஸ்த்ரார்த்தம் இவைகளில்லாத புராணம் கேட்கத்தக்கதல்ல. அந்த குணம் நிறைந்தவர் கூறும் மாகபுராணத்தை பக்தியோடு ஒரு மாதம் கேட்பவர் எனது ஸாரூப்ய முக்தியை பெறுவர். ஸாளக்ராம தீர்த்தம் அருந்துவோர்க்கு ஸர்வ பாபங்களும் அகன்று ஹரி பக்தி உண்டாகும். பத்மாத்ரி குஹையில் உள்ள இந்திரனை அழைத்து வந்து துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்வியுங்கள். முன் போல திவ்ய முகத்துடன் வருவான்!” என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

தேவர்கள் பகவானை பணிந்து திரும்பிய போது அவர்களைப் பார்த்து இடி போல் பயங்கரமான ஒரு சப்தம் செய்தது ஒரு ப்ராணி. அவ்விடத்தில் தேடிச்செல்ல மலை போல் விகார ரூபத்துடன் ஒரு ஓணான் அங்கு பள்ளத்தில் இருந்தது. அது அஸுரனோ என அஞ்சினர். ஆயினும் அதை பலமான கொடிகளைக் கொண்டு கட்டி மேலே இழுக்க முயற்சித்தனர். அது அசையாததைக் கண்டு "இது ஓர் பாப ஜன்மா போல இருக்கிறது. எல்லா பாபமும் மாகஸ்நாநத்தால் அகலுமென அச்சுதன் கூறினாரே! இதற்கு மாகஸ்நாநம் செய்வித்து அந்த பாபம் அகலுகிறதா எனப்பரீக்ஷிப்போம்" என நினைத்தனர். தற்செயலாக மறு நாளே மாகமாஸம் பிறந்தது. அன்று அவர்களும் விதிப்படி மாகஸநாநம்செய்து அந்த ஜலத்தைக் கொண்டு வந்து அதற்கு (ஓணானுக்கு) ஸ்நாநம் செய்வித்தனர். உடனே அது அந்த கோர உடலைவிட்டு திவ்ய ஸ்த்ரீயாக தோன்றிற்று. அதைக்கண்டு அனைவரும் ஆச்சரிய மடைந்தனர்.



விசாரசங்கிரஹம் - 11



16.அகங்காரம் ஜீவன் ஆன்மா ப்ரஹ்மம் ஆகிய இவற்றுக்கு தாதான்மிய முண்டாவதெவ்வாறு?

திருஷ்டாந்தம்                                 -       தாஷ்டாந்தம்
அயப் பிண்டம்                                 -      அகங்காரம்
தப்தாய பிண்டம்                             -     ஆன்ம ஸ்வபாவத்தோடு அத்தியாசமாய்த் தோன்றுகிற ஜீவன்
தப்தாய பிண்டத்திலுள்ள அக்னி    -       தேகந்தோறும் விளங்கும் ஜீவனிலுள்ள சிற்பிரகாசம் அதாவது   கூடஸ்த ப்ரஹ்மம்
ஏகமாயுள்ள அக்னி ஜ்வாலை            -ஏகமாயுள்ள வ்யாபக ப்ரஹ்மம்

மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.
தட்டான் மெழுகுருண்டையில் கணக்கற்ற நாநாலோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகாக காணப்படுவது போன்று சுழுத்தியில் எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல சூக்கும தேகங்களும் ஒரே யிருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒன்று பட்டிருத்தலால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறார்கள். இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போன்று ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாய்த் தோன்றுகிறது. இங்ஙனம் சிற்பிரகாசத்தோடு தாதான்மியமாகக்கூடியிருக்கும் மனமாகிய அகங்கார ரூபனான ஜீவனையன்றி ஜீவ சாக்ஷி யாகிய ஆன்மாவும் ஆன்மாவை யன்றி சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இன்றாம். தப்பதாயப்பிண்டமானது கொல்லனாலெவ்வாறடிப் பட்டு விகாரமுற்றாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமும் அடைவதில்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களி லுழன்று சுக துக்கங்களை யனுபவித்தாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமுமின்றி ஆகாசம் போல் வ்யாபகமாயும் ஞான மாத்திரமாயும் ஏகமாயும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது.
--
மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.

தட்டான் வேலை செய்யறப்ப பாத்தா கைவசம் ஒரு மெழுகுருண்டை வெச்சு இருப்பார். என்னதான் சேதாரம்ன்னு கணக்கு காட்டினாலும் ஒரு சின்ன துகள் கூட சேதாரமாகாது. ராவறதை எல்லாம் இந்த மெழுகுருண்டையில ஒத்தி ஒத்தி சேத்துடுவார். இந்த மெழுகுருண்டையில தங்கம் இருக்கலாம்; வெள்ளி இருக்கலாம்; வேற எதும் கூட இருக்கலாம். ஆனாலும் கணக்கற்ற பல வித லோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகு உருண்டையா காணப்படுவது போல;

சுழுத்தியில எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல, சூக்கும, தேகங்களும் ஒரே இருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒண்ணா இருக்கிறதால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறாங்க.

கொல்லன் உலையில நெருப்பு திகுதிகுன்னு எரியும். அதில போட்ட இரும்புத்துண்டு [அயப்பிண்டம்] நல்லா பழுக்க காஞ்சு அதுவும் திகுதிகுன்னு காணும். [தப்தாய பிண்டம்.] கொல்லன் இதை சம்மட்டியால அடி அடின்னு அடிச்சு உருவை மாத்துவான். கட்டியா இருந்த இரும்பு இப்ப தட்டையா - லாடமா ஆயிடுத்து. அடிச்ச அடியிலே இரும்புத்துண்டுக்குத்தான் பாதிப்பே தவிர அதிலிருந்த சூடுக்கு பாதிப்பு உண்டா? அந்த சூடு தானாதான் தணியும்.

இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் (நான் என்பதும்) அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போல ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாயும் (இல்லாததை இருப்பதாக பார்க்கிறது) தோணும். இப்படி சித் பிரகாசத்தோடு தாதான்மியமா கூடியிருப்பது மனமாகிய அகங்கார ரூபனான ஜீவன். (சூரியனும் சூர்ய கிரணங்களும் ஒண்ணா? வேற வேறயா? இப்படி பிரிக்க முடியுமா முடியாதா ந்னு இருக்கிறது தாதான்மியம்.) இந்த ஜீவன் இல்லாம ஜீவ சாக்ஷியாகிய ஆன்மா இல்லை. இந்த ஆன்மா இல்லாம சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இல்லை.
சூடாக்கிய இரும்பு துண்டு கொல்லனால எப்படி அடிப் பட்டு விகாரமா ஆனாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் அடைவது இல்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களில் உழன்று சுக துக்கங்களை அனுபவிச்சாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் இல்லாம ஆகாசம் போல் எங்கும் ஊடுருவியும், ஞானமாயும் ஒண்ணாவும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில பிரகாசிக்கும்.


Monday, January 4, 2010

விசார சங்கிரஹம் 10



15. கரணேந்திரியாதிகள் அறியுந் தர்மத்தை யுடையனவாக விருந்தும் அவை திருசிய பதார்த்தங்களெனப்படுவதேன்?

திருஷ்யம் அல்லது அறிபடுபொருள் - திருக்கு அல்லது அறிபொருள்
கடம்                                             -  பார்ப்பவன்
தேக கடாதிகள்                              -  கண்
கண்                                              - கண்ணிந்திரியம்
கண்ணிந்திரியம்                             -  மனம்
மனம்                                           - ஜீவன்
ஜீவன்                                          - அறிவு

மேற்கண்டபடி அறிவாகிய நாமே எல்லா பதார்த்தங்களையும் அறிவதால் நாமே திரிக்கெனப்படுவோம். கடாந்தமாயுள்ள பதார்த்தங்கள் யாவும் நம்மால் அறியப்படுவதால் திருசியங்களாம். மேற்காட்டியுள்ள அறிவறியாமை யடுக்குகளிற் கூறப்படும் திருக்கு திரிசியங்களிலும் ஒன்று மற்றொன்றுக்குத் திருக்காக விருப்பினும் அது வேறொன்றுக்கு திருசியமாகலான் அவை யாவும் உண்மையில் திருக்காகா. நாம் எல்லாவற்றையும் அறிவதால் திருக்கென்றும் ஒன்றாலும் அறியப்படாததால் திருசியமன்று என்று சொல்லப்பட்டாலும் திருசியங்களை பற்றியே நாம் திருக்கென்று வழங்கப்படுகிறோமே யன்றி உண்மையில் திருசியமென்பது நமக்கன்னிய மின்மையால் நாம் அவ்விரண்டுக்கும் அதீதமான பொருளாவோம். ஏனையவ எல்லாம் திருக்கு திருசியங்களுக்கு உட்பட்டனவே.

கண், தோல் முதலியவனைத்தும் அறிகிறவையா இருக்கிறப்ப ஏன் அதை எல்லாமே அறியப்படும் பொருளா சொல்கிறாங்க?

அவை எல்லாமே ஒண்ணை அறிஞ்சாலும் அதை அறிய இன்னும் ஒண்ணு வேண்டியிருக்கு.
பட்டியலை பாத்தா ஒண்ணு மத்ததை பாத்தாலும் அதை ஒண்ணு பார்க்குது. ஒத்தன் ஒரு குடத்தை பார்க்கிறதா வெச்சுப்போம். குடத்தை கண் பாக்குது. ம்ம்ம்ம்... ஆனா அதால மட்டுமே "பாக்க" முடியாது. நம் சித்தாந்தங்கள்படி கண் என்கிற உறுப்புக்கு ஒரு சக்தி பாயணும். அப்பத்தான் அது பார்க்கும். (இந்த சக்தியை இந்திரியம் என்கிறாங்க.) அப்படின்னாலும் மனசு அதில ஈடுபடணும். மனசு எங்கோ இருக்க நடந்து போகிறோம். எதிரே ஒத்தர் மேலே முட்டிக்கிறோம், இல்லையா? இந்த மனசு என்ன செய்யுதுன்னு ஜீவாத்மா பாக்கும். இந்த ஜீவனையோ சித் ஆன அறிவு பாக்கும். ஆக கடைசிலே எல்லாத்தையும் பாக்கிறதா இருக்கிறது இந்த பேரறிவுதான். இந்த நிலையிலே பார்க்கிறதும், பார்க்கப்படுவதும் நாமே - அறிவே. அதனால இந்த சமாசாரத்தில நாம அகப்பட மாட்டோம். மத்த எல்லாமே பார்க்கிறதுன்னாலும் எல்லாமே பார்க்கப்படுவதும்தான்.


Saturday, January 2, 2010

மாகபுராணம் -10



10. விச்வாமித்ரரின் மர்கட ரூபம் அகன்றது.
தேவரனைவரும் மஹாவிஷ்ணுவைப் பல பத்யங்களால் பக்தி பரவசர்களாக துதித்தனர். "ப்ரபோ! வெகுநாட்களாக தேவேந்திரன் எங்களைவிட்டு மறைந்துவிட்டார். அதை அறிந்த அஸுரர் எங்களை ஹிம்ஸிக்கின்றனர். இந்த்ரனை எங்களுக்கு அளியுங்கள். அல்லது புது இந்த்ரனையாவது படைத்து ரக்‌ஷியுங்கள் என்றனர். "தேவர்களே! மித்ரவிந்தரது மனைவியிடம் ஆசை கொண்ட இந்தரன் அவரது சாபத்தால் கழுதை முகத்துடன் இருக்கிறான். வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு கோகர்ணத்துக்கு மேற்கில் இருபத்தாறு யோசனை தூரத்தில் உள்ள பத்மாத்ரியின் குகையில் தங்கி இருக்கிறான்.
எனக்கு ச2க்தி இருந்தாலும் ப்ராம்ஹண சாபத்தை அகற்ற முடியாது. வேறெந்த கர்மாவாலும் அந்த சாபமகலாது. துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்து சக்ரனுக்கு ஸ்நாநம் செய்வியுங்கள். சா2பமகலும். முன் போல் முகம் பெற்று தேவ ராஜ்யத்தை ஆள்வான்!” என்றார் பகவான். பகவானது சொல்லில் நம்பிக்கை கொண்டாலும் தேவர் மறு முறையும் அவர் திருவாக்கால் மாக மஹிமையை கேட்க அவா கொண்டு "பகவன்! இந்த்ரன் உள்ள நிலையில் எப்படி விதி வழுவாது மாக ஸ்நாநம் புரிய முடியும்?” என்று கேட்க, "நீங்கள் அவனுக்காக ஸ்நாநம் செய்தாலும் அந்த புண்யத்தால் சா2பமகலும். குரங்கு முகத்துடன் இருந்த விச்2வாமித்ரரை நாரதர்தான் மாகஸ்நாநம் செய்து பழைய முகமுள்ளவராகச் செய்தார். அதைக்கேளுங்கள். பகவான் விச்2வாமித்ர முனி ஒரு சமயம் பூமியை ப்ரதக்‌ஷிணம் செய்துக்கொண்டு கங்காதீரம் வந்தார். அங்கு ஒரு கந்தர்வஸ்த்ரீ தன்னந்தனியே மஹாரண்யத்தில் இருக்கக்கண்டார். அழகிய அவள் ரூபத்தில் மயங்கி, உன்னை ரக்‌ஷிக்கிறேன். நீ அஞ்சாதே! என்று கூறி அவளை ஆலிங்கனம் செய்து பலாத்காரமாக ரமித்தார்.
([அவளது கதை:]
அவளை அவளது பதி ”மாகஸ்நாநம் செய்ய கந்தர்வர் அனைவரும் செல்கின்றனர். நீயும் வா” என்றழைத்தார். கர்மாவிற்கேற்றபடி புத்தி தோன்றும். ”எனக்கு ஸ்நாநம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். வேண்டியவர் ஸ்நாநம் பண்ணுங்கள்” என்று கூறினாள். அவளை நிர்பந்தம் செய்து பதி அழைத்து வந்தார். ஆனால் கூட்டத்தில் மறைந்து ஸ்நாநம் செய்யாமல் வநத்திலே புகுந்து ஒளிந்தாள். கந்தர்வர் அனைவரும் மாகஸ்நாநம் செய்து கந்தர்வ லோகம் சென்றனர். ஸ்நாநம் செய்த கோஷ்டியுடன் சேர விரும்பினாலும் வழி தெரியாததாலும் ஆகாய மார்க்கமாக செல்லும் சக்தியை இழந்ததாலும் கோரமான கங்காதர வனத்தில் தங்கியிருந்தாள்.)
கந்தர்வன் அவளைத்தேடி பூலோகம் வந்து அந்த அரண்யத்தில் மனைவியையும் விச்2வாமித்ரரையும் கண்டு கோபங்கொண்டு முநிவரை குரங்கு முகமுள்ளவராகவும், மனைவியை கல்லாகும்படியும் சபித்து சென்றான். கானகத்தில் குரங்கு முகத்துடன் சஞ்சரிக்கும் விச்2வாமித்ரரைக் கண்டு நாரதர் இரக்கம் கொண்டார். அந்த மாதம் தெய்வச்செயலால் மாக மாதமாக இருந்ததால் அவரை அழைத்துகொண்டு நாரதர் முறைப்படி அருகிலுள்ள ஒரு தடாகத்தில் ஸ்நாநம் செய்தார். அடுத்த க்ஷணத்தில் அவர் (விச்2வாமித்ரர்) முன் போலாக இருவரும் ஆங்குள்ள சிலையில் (கல்லில்) அமர்ந்து ஜபம் செய்தனர். அந்தக்கல்லும் உடனே கந்தர்வ ஸ்த்ரீயாகி, (அவள்) வெட்கத்துடன் இருவரையும் வணங்கி தன்னிருப்பிடம் சென்றாள்.



Friday, January 1, 2010

மாக புராணம் 9



9. ச2க்ரனது கழுதை முகம் அகன்றது.
க்ருத்ஸமதர் எனும் முனிவர் கங்கையில் மாக ஸ்நாநம் செய்து கொண்டு இருந்தபோது ஜந்ஹு முனிவர் மாகத்தின் பெருமையை கூறும்படி வேண்டினார். க்ருத்ஸமதர் துங்கபத்ரா தீரத்தில் மித்ரவிந்தன் என்றோர் முனிவர் இருந்தார். அவரது மனைவி தேவஸ்த்ரீயோ இவள் என எண்ணும்படி ஸர்வ அவயவ ஸுந்தரியாக இருந்தாள். இருவருமாக இல்லறத்தை ஒழுங்காக செய்து வந்தனர். அரக்கர் மீது படையெடுத்து வந்த தேவேந்திரன் அந்த ரிஷி பத்னி ரூபத்தில் மோஹம் கொண்டான். அஸுரர்களை ஒழித்து வெற்றியுடன் தேவஸேனை ஸ்வர்க்க லோகத்திற்குக் கிளம்பிற்று.

இந்திரன் சேனைகளை எல்லாம் அனுப்பிவிட்டு மறுநாள் தான் வருவதாக கூறி அந்த ஆச்ரமத்தில் தங்கினான். மித்ரவந்தர் வேதம் கற்பிக்க ஆச்2ரமத்தை விட்டு வெளியில் சென்றார். அச்சமயம் அமராதிபன் உள்ளே புகுந்து ரிஷிபத்னியை பலவந்தமாக புணர்ந்து ரமித்தான். திடீரென மினிவர் வர இந்திரன் இருளில் மறைந்து வெளிக்கிளம்பினான். முனிவர் "நீ யார்?” என்று கேட்ட போது தான் செய்த தகாத கார்யத்தால் வெட்கி தலை குனிந்து "இந்த்ரன்!” என்று தழ தழத்த குரலில் கூறினான்.

ஞானக்கண்ணால் நடந்ததை அறிந்த முனிவர் ”இந்த்ர! நீயே இப்படிச்செய்வது அடாத கார்யம். ஸாதுக்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இந்த க்‌ஷணமே கழுதை முகத்தை பெறுவாய் என்று சபித்தார். தனது ஆச்2ரமத்தை விட்டு கங்காதீரம் சென்று யோகாக்னியால் உயிரை விட்டார். இந்த்ரன் கேவலமான முகத்தோடு பயங்கரமான கத்தலுடன் ஸ்வர்கம் செல்ல மனமின்றி பத்மாத்ரியின் குகையில் பதுங்கி வசித்தான். வெகு நாட்கள் இந்த்ரன் ஸ்வர்கம் வராமல் இருப்பதை கண்ட அசுரர் இதே தக்க சமயமென தேவர் மீது படையெடுத்துக் கடும் போர் செய்தனர். [தேவர்கள்] தலைவனைத் தேடி திரிந்தும் அகப்படாததால், தங்களான வரை ராக்‌ஷசருடன் போரிட்டனர். அஸுர சேனை ஓங்க தேவ சேனை அடி பட்டு புறங்காட்டி தோல்வியுற்றது. ஸ்வர்கத்தைக் காக்க சில வீரர்களை அங்கு நிறுத்திவிட்டு மற்ற தேவர்கள் எல்லாம் மானிட லோகம் சென்றனர். ஓர் நதியில் எண்ணிறந்த முனிவர் மாக ஸ்நாநம் செய்வதைக் கண்டு அங்கு சென்று அவர்களை கூட்டமாக ஸ்நாநம் செய்யும் காரணத்தை விசாரித்தனர். அவர்கள் மாக ஸ்நாநத்தின் மஹிமையை வர்ணித்தனர். தேவர்களே! மாக ஸ்நாநம், தாநம், ஜபம், புராண ச்2ரவணம் இவைகளை பக்தியுடன் செய்கின்றவர்கள் தன்யர் ஆவர். இச்சமயம் கோதானம் விருஷோத்ஸர்ஜநம், திலாதானம், பாயஸதாநம், கம்பள தானம், வஸ்த்ர தானம் இவைகளை அளிப்பவர் பல்லாண்டு வைகுண்டம் சென்று வஸிப்பர். கோதானம் செய்வோர் கைலாஸம் செல்வர். விருஷோத்ஸர்ஜநம் வைகுண்டத்தை தரும். திலதானம் ஸ்வர்க்க சுகத்தைத் தரும். ஆபூபம் முதலிய பக்‌ஷ்யங்கள் ஸூர்யலோகத்தை தரும். அன்ன தானம் செய்வோர் ஸ்வர்க்கம் செல்வர். பாயஸதானம் செய்வோர் துருவஸ்தானம் செல்வர். கம்பள தானம் அக்னி லோகத்தை அளிக்கும். வஸ்த்ர தானம் செய்வோர் பிரும்மலோகம் செல்வர்.

முப்பது நாளும் இங்ஙனம் பக்தியுடன் ஸ்நாந தாநம் செய்வோர் முற்குறித்த லோகங்களில் சென்று பேரானந்தம் பெறுவர். குளிரின் பயத்தினாலோ, விஷயம் அறியாமையினாலோ, கிழத்தன்மையாலோ, வியாதியினாலோ மாகஸ்நாநம் செய்யாதவர் நீச ஜாதியில் பிறப்பர். மாகஸ்நாநம் செய்யும் சண்டாளனும் சிறந்தவன். அதை செய்யாத ப்ராம்ஹணன் சண்டாளனை விடத்தாழ்ந்தவன். இந்த ஸ்நாந மஹிமையை அறிந்தால் கூட நற்கதி உண்டு. இப்படி மஹ ரிஷிகள் கூறியதைக்கேட்டு தேவர்கள் அனைவரும் விதிப்படி பக்தியுடன் ஸ்நாநம் செய்தனர். முடிவில் சங்க சக்ர கதாபாணியும், பீதாம்பர தாரியும், கருத்த மேகம் போன்ற திரு மேனியுடையவனுமான மஹா விஷ்ணு தர்சனம் தந்தார்.