Pages

Wednesday, January 6, 2010

விசாரசங்கிரஹம் - 11



16.அகங்காரம் ஜீவன் ஆன்மா ப்ரஹ்மம் ஆகிய இவற்றுக்கு தாதான்மிய முண்டாவதெவ்வாறு?

திருஷ்டாந்தம்                                 -       தாஷ்டாந்தம்
அயப் பிண்டம்                                 -      அகங்காரம்
தப்தாய பிண்டம்                             -     ஆன்ம ஸ்வபாவத்தோடு அத்தியாசமாய்த் தோன்றுகிற ஜீவன்
தப்தாய பிண்டத்திலுள்ள அக்னி    -       தேகந்தோறும் விளங்கும் ஜீவனிலுள்ள சிற்பிரகாசம் அதாவது   கூடஸ்த ப்ரஹ்மம்
ஏகமாயுள்ள அக்னி ஜ்வாலை            -ஏகமாயுள்ள வ்யாபக ப்ரஹ்மம்

மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.
தட்டான் மெழுகுருண்டையில் கணக்கற்ற நாநாலோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகாக காணப்படுவது போன்று சுழுத்தியில் எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல சூக்கும தேகங்களும் ஒரே யிருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒன்று பட்டிருத்தலால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறார்கள். இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போன்று ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாய்த் தோன்றுகிறது. இங்ஙனம் சிற்பிரகாசத்தோடு தாதான்மியமாகக்கூடியிருக்கும் மனமாகிய அகங்கார ரூபனான ஜீவனையன்றி ஜீவ சாக்ஷி யாகிய ஆன்மாவும் ஆன்மாவை யன்றி சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இன்றாம். தப்பதாயப்பிண்டமானது கொல்லனாலெவ்வாறடிப் பட்டு விகாரமுற்றாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமும் அடைவதில்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களி லுழன்று சுக துக்கங்களை யனுபவித்தாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமுமின்றி ஆகாசம் போல் வ்யாபகமாயும் ஞான மாத்திரமாயும் ஏகமாயும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது.
--
மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.

தட்டான் வேலை செய்யறப்ப பாத்தா கைவசம் ஒரு மெழுகுருண்டை வெச்சு இருப்பார். என்னதான் சேதாரம்ன்னு கணக்கு காட்டினாலும் ஒரு சின்ன துகள் கூட சேதாரமாகாது. ராவறதை எல்லாம் இந்த மெழுகுருண்டையில ஒத்தி ஒத்தி சேத்துடுவார். இந்த மெழுகுருண்டையில தங்கம் இருக்கலாம்; வெள்ளி இருக்கலாம்; வேற எதும் கூட இருக்கலாம். ஆனாலும் கணக்கற்ற பல வித லோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகு உருண்டையா காணப்படுவது போல;

சுழுத்தியில எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல, சூக்கும, தேகங்களும் ஒரே இருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒண்ணா இருக்கிறதால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறாங்க.

கொல்லன் உலையில நெருப்பு திகுதிகுன்னு எரியும். அதில போட்ட இரும்புத்துண்டு [அயப்பிண்டம்] நல்லா பழுக்க காஞ்சு அதுவும் திகுதிகுன்னு காணும். [தப்தாய பிண்டம்.] கொல்லன் இதை சம்மட்டியால அடி அடின்னு அடிச்சு உருவை மாத்துவான். கட்டியா இருந்த இரும்பு இப்ப தட்டையா - லாடமா ஆயிடுத்து. அடிச்ச அடியிலே இரும்புத்துண்டுக்குத்தான் பாதிப்பே தவிர அதிலிருந்த சூடுக்கு பாதிப்பு உண்டா? அந்த சூடு தானாதான் தணியும்.

இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் (நான் என்பதும்) அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போல ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாயும் (இல்லாததை இருப்பதாக பார்க்கிறது) தோணும். இப்படி சித் பிரகாசத்தோடு தாதான்மியமா கூடியிருப்பது மனமாகிய அகங்கார ரூபனான ஜீவன். (சூரியனும் சூர்ய கிரணங்களும் ஒண்ணா? வேற வேறயா? இப்படி பிரிக்க முடியுமா முடியாதா ந்னு இருக்கிறது தாதான்மியம்.) இந்த ஜீவன் இல்லாம ஜீவ சாக்ஷியாகிய ஆன்மா இல்லை. இந்த ஆன்மா இல்லாம சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இல்லை.
சூடாக்கிய இரும்பு துண்டு கொல்லனால எப்படி அடிப் பட்டு விகாரமா ஆனாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் அடைவது இல்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களில் உழன்று சுக துக்கங்களை அனுபவிச்சாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் இல்லாம ஆகாசம் போல் எங்கும் ஊடுருவியும், ஞானமாயும் ஒண்ணாவும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில பிரகாசிக்கும்.


No comments: