10. விச்வாமித்ரரின் மர்கட ரூபம் அகன்றது.
தேவரனைவரும் மஹாவிஷ்ணுவைப் பல பத்யங்களால் பக்தி பரவசர்களாக துதித்தனர். "ப்ரபோ! வெகுநாட்களாக தேவேந்திரன் எங்களைவிட்டு மறைந்துவிட்டார். அதை அறிந்த அஸுரர் எங்களை ஹிம்ஸிக்கின்றனர். இந்த்ரனை எங்களுக்கு அளியுங்கள். அல்லது புது இந்த்ரனையாவது படைத்து ரக்ஷியுங்கள் என்றனர். "தேவர்களே! மித்ரவிந்தரது மனைவியிடம் ஆசை கொண்ட இந்தரன் அவரது சாபத்தால் கழுதை முகத்துடன் இருக்கிறான். வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு கோகர்ணத்துக்கு மேற்கில் இருபத்தாறு யோசனை தூரத்தில் உள்ள பத்மாத்ரியின் குகையில் தங்கி இருக்கிறான்.எனக்கு ச2க்தி இருந்தாலும் ப்ராம்ஹண சாபத்தை அகற்ற முடியாது. வேறெந்த கர்மாவாலும் அந்த சாபமகலாது. துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்து சக்ரனுக்கு ஸ்நாநம் செய்வியுங்கள். சா2பமகலும். முன் போல் முகம் பெற்று தேவ ராஜ்யத்தை ஆள்வான்!” என்றார் பகவான். பகவானது சொல்லில் நம்பிக்கை கொண்டாலும் தேவர் மறு முறையும் அவர் திருவாக்கால் மாக மஹிமையை கேட்க அவா கொண்டு "பகவன்! இந்த்ரன் உள்ள நிலையில் எப்படி விதி வழுவாது மாக ஸ்நாநம் புரிய முடியும்?” என்று கேட்க, "நீங்கள் அவனுக்காக ஸ்நாநம் செய்தாலும் அந்த புண்யத்தால் சா2பமகலும். குரங்கு முகத்துடன் இருந்த விச்2வாமித்ரரை நாரதர்தான் மாகஸ்நாநம் செய்து பழைய முகமுள்ளவராகச் செய்தார். அதைக்கேளுங்கள். பகவான் விச்2வாமித்ர முனி ஒரு சமயம் பூமியை ப்ரதக்ஷிணம் செய்துக்கொண்டு கங்காதீரம் வந்தார். அங்கு ஒரு கந்தர்வஸ்த்ரீ தன்னந்தனியே மஹாரண்யத்தில் இருக்கக்கண்டார். அழகிய அவள் ரூபத்தில் மயங்கி, உன்னை ரக்ஷிக்கிறேன். நீ அஞ்சாதே! என்று கூறி அவளை ஆலிங்கனம் செய்து பலாத்காரமாக ரமித்தார்.
([அவளது கதை:]
அவளை அவளது பதி ”மாகஸ்நாநம் செய்ய கந்தர்வர் அனைவரும் செல்கின்றனர். நீயும் வா” என்றழைத்தார். கர்மாவிற்கேற்றபடி புத்தி தோன்றும். ”எனக்கு ஸ்நாநம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். வேண்டியவர் ஸ்நாநம் பண்ணுங்கள்” என்று கூறினாள். அவளை நிர்பந்தம் செய்து பதி அழைத்து வந்தார். ஆனால் கூட்டத்தில் மறைந்து ஸ்நாநம் செய்யாமல் வநத்திலே புகுந்து ஒளிந்தாள். கந்தர்வர் அனைவரும் மாகஸ்நாநம் செய்து கந்தர்வ லோகம் சென்றனர். ஸ்நாநம் செய்த கோஷ்டியுடன் சேர விரும்பினாலும் வழி தெரியாததாலும் ஆகாய மார்க்கமாக செல்லும் சக்தியை இழந்ததாலும் கோரமான கங்காதர வனத்தில் தங்கியிருந்தாள்.)
கந்தர்வன் அவளைத்தேடி பூலோகம் வந்து அந்த அரண்யத்தில் மனைவியையும் விச்2வாமித்ரரையும் கண்டு கோபங்கொண்டு முநிவரை குரங்கு முகமுள்ளவராகவும், மனைவியை கல்லாகும்படியும் சபித்து சென்றான். கானகத்தில் குரங்கு முகத்துடன் சஞ்சரிக்கும் விச்2வாமித்ரரைக் கண்டு நாரதர் இரக்கம் கொண்டார். அந்த மாதம் தெய்வச்செயலால் மாக மாதமாக இருந்ததால் அவரை அழைத்துகொண்டு நாரதர் முறைப்படி அருகிலுள்ள ஒரு தடாகத்தில் ஸ்நாநம் செய்தார். அடுத்த க்ஷணத்தில் அவர் (விச்2வாமித்ரர்) முன் போலாக இருவரும் ஆங்குள்ள சிலையில் (கல்லில்) அமர்ந்து ஜபம் செய்தனர். அந்தக்கல்லும் உடனே கந்தர்வ ஸ்த்ரீயாகி, (அவள்) வெட்கத்துடன் இருவரையும் வணங்கி தன்னிருப்பிடம் சென்றாள்.
No comments:
Post a Comment