9. ச2க்ரனது கழுதை முகம் அகன்றது.
க்ருத்ஸமதர் எனும் முனிவர் கங்கையில் மாக ஸ்நாநம் செய்து கொண்டு இருந்தபோது ஜந்ஹு முனிவர் மாகத்தின் பெருமையை கூறும்படி வேண்டினார். க்ருத்ஸமதர் துங்கபத்ரா தீரத்தில் மித்ரவிந்தன் என்றோர் முனிவர் இருந்தார். அவரது மனைவி தேவஸ்த்ரீயோ இவள் என எண்ணும்படி ஸர்வ அவயவ ஸுந்தரியாக இருந்தாள். இருவருமாக இல்லறத்தை ஒழுங்காக செய்து வந்தனர். அரக்கர் மீது படையெடுத்து வந்த தேவேந்திரன் அந்த ரிஷி பத்னி ரூபத்தில் மோஹம் கொண்டான். அஸுரர்களை ஒழித்து வெற்றியுடன் தேவஸேனை ஸ்வர்க்க லோகத்திற்குக் கிளம்பிற்று.இந்திரன் சேனைகளை எல்லாம் அனுப்பிவிட்டு மறுநாள் தான் வருவதாக கூறி அந்த ஆச்ரமத்தில் தங்கினான். மித்ரவந்தர் வேதம் கற்பிக்க ஆச்2ரமத்தை விட்டு வெளியில் சென்றார். அச்சமயம் அமராதிபன் உள்ளே புகுந்து ரிஷிபத்னியை பலவந்தமாக புணர்ந்து ரமித்தான். திடீரென மினிவர் வர இந்திரன் இருளில் மறைந்து வெளிக்கிளம்பினான். முனிவர் "நீ யார்?” என்று கேட்ட போது தான் செய்த தகாத கார்யத்தால் வெட்கி தலை குனிந்து "இந்த்ரன்!” என்று தழ தழத்த குரலில் கூறினான்.
ஞானக்கண்ணால் நடந்ததை அறிந்த முனிவர் ”இந்த்ர! நீயே இப்படிச்செய்வது அடாத கார்யம். ஸாதுக்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இந்த க்ஷணமே கழுதை முகத்தை பெறுவாய் என்று சபித்தார். தனது ஆச்2ரமத்தை விட்டு கங்காதீரம் சென்று யோகாக்னியால் உயிரை விட்டார். இந்த்ரன் கேவலமான முகத்தோடு பயங்கரமான கத்தலுடன் ஸ்வர்கம் செல்ல மனமின்றி பத்மாத்ரியின் குகையில் பதுங்கி வசித்தான். வெகு நாட்கள் இந்த்ரன் ஸ்வர்கம் வராமல் இருப்பதை கண்ட அசுரர் இதே தக்க சமயமென தேவர் மீது படையெடுத்துக் கடும் போர் செய்தனர். [தேவர்கள்] தலைவனைத் தேடி திரிந்தும் அகப்படாததால், தங்களான வரை ராக்ஷசருடன் போரிட்டனர். அஸுர சேனை ஓங்க தேவ சேனை அடி பட்டு புறங்காட்டி தோல்வியுற்றது. ஸ்வர்கத்தைக் காக்க சில வீரர்களை அங்கு நிறுத்திவிட்டு மற்ற தேவர்கள் எல்லாம் மானிட லோகம் சென்றனர். ஓர் நதியில் எண்ணிறந்த முனிவர் மாக ஸ்நாநம் செய்வதைக் கண்டு அங்கு சென்று அவர்களை கூட்டமாக ஸ்நாநம் செய்யும் காரணத்தை விசாரித்தனர். அவர்கள் மாக ஸ்நாநத்தின் மஹிமையை வர்ணித்தனர். தேவர்களே! மாக ஸ்நாநம், தாநம், ஜபம், புராண ச்2ரவணம் இவைகளை பக்தியுடன் செய்கின்றவர்கள் தன்யர் ஆவர். இச்சமயம் கோதானம் விருஷோத்ஸர்ஜநம், திலாதானம், பாயஸதாநம், கம்பள தானம், வஸ்த்ர தானம் இவைகளை அளிப்பவர் பல்லாண்டு வைகுண்டம் சென்று வஸிப்பர். கோதானம் செய்வோர் கைலாஸம் செல்வர். விருஷோத்ஸர்ஜநம் வைகுண்டத்தை தரும். திலதானம் ஸ்வர்க்க சுகத்தைத் தரும். ஆபூபம் முதலிய பக்ஷ்யங்கள் ஸூர்யலோகத்தை தரும். அன்ன தானம் செய்வோர் ஸ்வர்க்கம் செல்வர். பாயஸதானம் செய்வோர் துருவஸ்தானம் செல்வர். கம்பள தானம் அக்னி லோகத்தை அளிக்கும். வஸ்த்ர தானம் செய்வோர் பிரும்மலோகம் செல்வர்.
முப்பது நாளும் இங்ஙனம் பக்தியுடன் ஸ்நாந தாநம் செய்வோர் முற்குறித்த லோகங்களில் சென்று பேரானந்தம் பெறுவர். குளிரின் பயத்தினாலோ, விஷயம் அறியாமையினாலோ, கிழத்தன்மையாலோ, வியாதியினாலோ மாகஸ்நாநம் செய்யாதவர் நீச ஜாதியில் பிறப்பர். மாகஸ்நாநம் செய்யும் சண்டாளனும் சிறந்தவன். அதை செய்யாத ப்ராம்ஹணன் சண்டாளனை விடத்தாழ்ந்தவன். இந்த ஸ்நாந மஹிமையை அறிந்தால் கூட நற்கதி உண்டு. இப்படி மஹ ரிஷிகள் கூறியதைக்கேட்டு தேவர்கள் அனைவரும் விதிப்படி பக்தியுடன் ஸ்நாநம் செய்தனர். முடிவில் சங்க சக்ர கதாபாணியும், பீதாம்பர தாரியும், கருத்த மேகம் போன்ற திரு மேனியுடையவனுமான மஹா விஷ்ணு தர்சனம் தந்தார்.
No comments:
Post a Comment