Pages

Monday, November 14, 2011

புத்தா!


அந்த ஹிமாலய துறவி கண்ணை திறந்த போது புத்த மட தலைமைத்துறவி அவருக்காக காத்திருப்பதை கண்டார்.
வாருங்கள், உங்களுக்கு நான் என்ன செய்யகூடும்?
பெரிய பிரச்சினை. எங்கள் மடாலயம் ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் கூட பிரபலமாக இருந்தது. எல்லா அறைகளும் நிறைந்து இருந்தன. எப்போதும் துறவிகளின் மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.. இப்போதோ அந்த இடம் வெறிச்சோடுகிறது. புதிதாக யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் உம் என்று இருக்கிறார்கள்; மெதுவாக கழட்டிக்கொள்கிறார்கள். என்ன பாபம் செய்தோம், இப்படி ஒரு நிலை வர?

துறவி சொன்னார், அறியாமை என்ற பாபமே!

என்ன அறியாமை? உங்களில் ஒரு புத்தா மறைந்து இருக்கிறார். சாதாரண ஆசாமி போல வேஷம் போட்டு இருக்கிறார். அவரை நீங்கள் யாரும் அறியவில்லை.

அவர் யார் சுவாமி?
அதற்குள் துறவி மீண்டும் த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

குழப்பத்துடனேயே புத்த மடத்துறவி திரும்பினார். திரும்பும் வழி எல்லாம் ஒரே சிந்தனை! நம் மடத்தில் புத்தாவா? யாராக இருக்கும்? அவரா? இவரா? ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. அவரிடம் இந்த குற்றம் இருக்கிறது, இவரிடம் அந்த குற்றம் இருக்கிறது. ஆனால் சாதாரண ஆசாமி போல வேஷமென்றல்லவா சொல்லிவிட்டார்? குற்றமும் ஒரு வேஷமாக இருக்கலாமே?

மடாலயம் முழுதும் இந்த விஷயம் கசிந்துவிட்டது. எல்லோருமே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரா, இவரா? ஒரு விஷயம் நிச்சயம். புத்தர் வேஷம் போட்டு இருப்பதால் நிச்சயம் அவரை கண்டுபிடிக்க முடியாது.

அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையே மாறிப்போனது! இவர் புத்தாவாக இருக்கலாமே! மற்றவர்களிடம் மரியாதை, அன்பு, கரிசனத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். சீக்கிரமே அந்த இடம் மாறிப்போனது. அன்பு பெருகிய அந்த இடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. புதியதாக பல இளந்துறவிகள் சேர ஆரம்பித்தனர். மடாலயத்தின் பழைய பெருமை மீண்டும் ஓங்கியது!

Friday, November 11, 2011

அவரவர் பார்வை.....


அவரவர்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. அதை பொறுத்துப்போவதே நல்லது...

ஒரு ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. ரயில் பெட்டியில் ஏறிய ஒருவரை பின்னாலேயே ஒருவன் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான். போலீஸார் விசாரித்தனர். கொலையை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை -ஸ்டேஷன் மாஸ்டரைத்தவிர. ஆகையால் அவரை ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதித்தர சொன்னார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் எழுதினார்: ரயில் வண்டி நம்பர் 556, 2 ஆம் ப்ளாட்பாரத்தில் 5 நிமிஷம் தாமதமாக வந்து சேர்ந்தது. நான் ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டு கண்காணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது 5566 நம்பர் கோச்சில் சிவப்பு சட்டை அணிந்த ஒரு நபர் ஏறினார். அவரைத்தொடர்ந்து கருப்பு டீஷர்ட் அணிந்த நபர் ஒருவர் ஏறினார். இவர் தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து சிவப்பு சட்டை நபரை பல முறை குத்தினார். பின் ரயில்வே விதிகளுக்கு புறம்பாக அடுத்த பக்கம் தண்டவாளத்தில் இறங்கி சென்று இவ்வாறு சட்டத்தை மீறியவராக நடந்து கொண்டார்...
---
சர்சை தீயிட்டு கொளுத்தியதாக ஒரு கனவான் மீது வழக்கு போடப்பட்டது. பத்திரிகைகளூக்கு அவர் பேட்டி கொடுத்தார். சர்ச் எரிந்து போனதுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அப்படி செய்வது என் நோக்கமல்ல. யாரோ அதில் கார்டினல் இருப்பதாக தவறான செய்தி கொடுத்தார்கள்.....

Thursday, November 10, 2011

ந மம!


இன்றைக்கு அன்னாபிஷேகம் என்று மதுரையம்பதி அண்ணா - மௌலி ஒரு பதிவு இட்டார். அதை பார்த்ததும் சில சிந்தனைகள் எழுந்தன. எவ்வளவு தீர்க சிந்தனையுடன் சில பழக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன!

இன்றைக்கே பெங்களூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர், ஔபாசனம் செய்து கொண்டு இருப்பவர் - ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்ததாகவும் வீட்டு பூஜையில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ததாகவும். தகவல் அனுப்பினார்.

லால்குடியில் என் பையர் இன்று ஆக்ரேயண இஷ்டியும் ஆக்ரேயண ஸ்தாலீபாகமும் செய்தார். (நான் ஒருத்தன்தான் ஒண்ணும் செய்யலை! :-(

ஐப்பசி மாத பௌர்ணமிக்குத்தான் இவையும் செய்யப்படுகின்றன.
என்ன தாத்பர்யம்?
நமக்கு புதிதாக கிடைத்ததை பகவானுக்கு காட்டிவிட்டு எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. தீபாவளிக்கு புது துணியா, எண்ணை குளியல் முடித்து ஸ்வாமிக்கு நம்ஸ்காரம் செய்தே எடுத்துக்கொள்கிறோம். தினசரியே சமைத்த உணவை பகவானுக்கு 'கை காட்டிவிட்டு' உண்ணுகிறோம். இந்த சமயத்தில் - ஐப்பசி மாத பௌர்ணமி தினத்துக்குள் கார் அரிசி நிலத்தில் விளைந்தது அறுவடையாகி களஞ்சியத்துக்கு வந்து சேர்ந்து இருக்கும். இந்த புது அரிசியை உடனே சமைத்து சாப்பிடாமல் பகவானுக்கு அர்ப்பணிக்கிறோம்.

ஔபாசனம் செய்பவரானால் ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்கிறார். இதில் பழைய அரிசி, புது அரிசி இரண்டையும் சோறாக்கி ஹோமம் செய்கிறார். இஷ்டியிலும் அப்படியேதான். இரண்டு அரிசியையும் மாவாக்கி புரோடாசம் என்கிற மாவு உருண்டையாக்கி ஹோமம் செய்கிறோம். இந்த இரண்டுமே இப்போது அருகிவிட்டது இல்லையா? மூன்றாவதாக மேற்சொன்ன இரண்டும் செய்யாதவர்கள் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.

வீட்டில் சிவ பூஜை வைத்துக்கொள்ளாதவர் கோவிலில் செய்கிறார்கள். அன்னத்தை பின்னால் பிரசாதமாக வினியோகம் செய்து விடுவர். மேலே சொன்ன எல்லாவற்றிலுமே தாத்பர்யம் ஒன்றே!
ந மம!
என்னுடையதில்லை.
பகவானே நீயாக உவந்து இதை எனக்கு கொடுத்து இருக்கிறாய். இதில் என் முயற்சி மிகச்சிறிதே! இது என்னுடையதில்லை, உன்னுடையதே! இப்படி ஒரு மனோ பாவம் வர வேண்டும். இதற்குப்பின் அந்த அன்னத்தை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம்.

அக்னியில் இடுவதானால் பிரச்சினை இல்லை. அது அக்னியால் ஜீரணிக்கப்படும். ஆஹுதி செய்தி மீந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொள்வோம். கோவிலில் வினியோகம் ஆகிவிடும். வீட்டில் செய்தால் என்ன செய்வது? யாருக்காவது கொடுத்துவிடுவதே மிகசிறந்தது. பிரசாதமாக கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம்.

"நீ தினசரி பூஜை என்கிறாயே, நிவேதனம் என்கிறாயே, அப்புறம் நீதானே சாப்பிடுகிறாய்? நிவேதனம் செய்தது கொஞ்சமாவது குறைந்ததா? கடவுள் இருந்து அவர் இதை சாப்பிட ஆரம்பித்தால் யாரும் நிவேதனம் செய்ய மாட்டீர்கள்." இப்படி சிலர் கேலி செய்வதுண்டு. நிவேதனம் என்றால் சாப்பிட வைப்பது அல்ல. காட்டுவது. கண்டு அருளப்பண்ணுதல் என்பர் ஸ்ரீ வைஷ்ணவர்கள். இது பலருக்கும் - ஆன்மீக நண்பர்கள் உள்பட- தெரியவில்லை. அதனால் நிவேதனம் செய்யும் போது சாப்பிட ப்ராணாஹுதி செய்வது போலவே செய்கிறார்கள்.

தினசரி நிவேதனமே இதே தாத்பர்யம்தான். என்னுடையதில்லை, உன்னுடையது. இப்படி செய்தால் உணவில் உள்ள குற்றங்களை பகவான் நீக்கி விடுவான் என்பது நம்பிக்கை. காயத்ரி ஜப யக்ஞத்தில் சமைக்க வந்த ஒருவர் சொன்னது: சாதாரணமாக சமைத்தால் அது சுமார் 4 மணி நேரம் கழித்து ருசி மாற ஆரம்பித்துவிடும். ஆனால் அதை நிவேதனம் செய்து இருந்தால் ருசி மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது என் அனுபவம்!

சரி, ஏன் இந்த ந மம? நாம் என்ன கொண்டு வந்தோம் பிறந்த போது? இந்த காற்றும், நீரும், மண்ணும் அவன் கொடுத்தவை. இவற்றை வைத்து கொஞ்சம் மாற்றி உபயோகிக்கிறோம். அவ்வளவே. ஆகவே இந்த உண்மையை அவ்வப்போது நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நமது மமதை போகும் - கர்வம் நீங்கும். அது நல்ல ஆன்மீக முன்னேற்றத்தை தரும். ஆகவே நாம் சொல்வோம், ந மம!

Monday, November 7, 2011

ரொம்ப கரெக்ட்....


ஒரு சிறு நகரம்... ஒருவருக்கு டிரக்டரி தகவல் வேண்டி இருந்தது. அதற்காக 105 டயல் செய்தார். ஒரு பெண்ணின் குரல் பதில் அளித்தது. “நீங்க அதுக்கு 106 டயல் செய்யணும்.”
106 டயல் செய்து தகவலை பெற்ற போது கொஞ்சம் சந்தேகம். குரல் அதே மாதிரி இருக்கே?
“மன்னிக்கணும். கொஞ்ச நேரம் முன்னே இந்த தகவலுக்காக 105 டயல் பண்ணேன். அப்ப பேசினது நீங்கதானே?”
“ஆமாம், இந்த பெண்மணி இன்னிக்கு லீவு. அதனால நானே ரெண்டு வேலையும் பாக்கிறேன்!”
-
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் சரியா?

Friday, November 4, 2011

குருட்டுத்தனமான நம்பிக்கை


சார்ஜென்ட் பாடம் எடுத்துக்கிட்டு இருந்தார்.
மாணவர்களை கேட்டார்: "ஏன் துப்பாக்கியோட பின் பக்கத்தை வால்நட் மரத்தில செய்யறாங்க?"
ஒத்தர் சொன்னார், "அது உறுதியான மரம்"
"தப்பு"
"அது இன்னும் எலாஸ்டிக்கா இருக்கும். துப்பாக்கி பின்னால உதைக்கும் போது அதிகமா தாக்கம் இருக்காது." இன்னொருத்தர்.
"தப்பு"
"அது இன்னும் பள பளன்னு இருக்கும்!"
"தப்பு"
அப்புறம் எல்லாரும் தெரியலைன்னு ஒத்துக்கிட்டாங்க.
சார்ஜென்ட்: "நீங்க இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு, பசங்களா! அதை வால்நட் மரத்துல செய்யற காரணம் என்னன்னா அப்படித்தான் ரெகுலேஷன் புத்தகத்துல போட்டு இருக்கு!"
--
குருட்டுத்தனமாக நம்பிக்கை  இருக்கக்கூடாது!