Pages

Thursday, November 10, 2011

ந மம!


இன்றைக்கு அன்னாபிஷேகம் என்று மதுரையம்பதி அண்ணா - மௌலி ஒரு பதிவு இட்டார். அதை பார்த்ததும் சில சிந்தனைகள் எழுந்தன. எவ்வளவு தீர்க சிந்தனையுடன் சில பழக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன!

இன்றைக்கே பெங்களூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர், ஔபாசனம் செய்து கொண்டு இருப்பவர் - ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்ததாகவும் வீட்டு பூஜையில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ததாகவும். தகவல் அனுப்பினார்.

லால்குடியில் என் பையர் இன்று ஆக்ரேயண இஷ்டியும் ஆக்ரேயண ஸ்தாலீபாகமும் செய்தார். (நான் ஒருத்தன்தான் ஒண்ணும் செய்யலை! :-(

ஐப்பசி மாத பௌர்ணமிக்குத்தான் இவையும் செய்யப்படுகின்றன.
என்ன தாத்பர்யம்?
நமக்கு புதிதாக கிடைத்ததை பகவானுக்கு காட்டிவிட்டு எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. தீபாவளிக்கு புது துணியா, எண்ணை குளியல் முடித்து ஸ்வாமிக்கு நம்ஸ்காரம் செய்தே எடுத்துக்கொள்கிறோம். தினசரியே சமைத்த உணவை பகவானுக்கு 'கை காட்டிவிட்டு' உண்ணுகிறோம். இந்த சமயத்தில் - ஐப்பசி மாத பௌர்ணமி தினத்துக்குள் கார் அரிசி நிலத்தில் விளைந்தது அறுவடையாகி களஞ்சியத்துக்கு வந்து சேர்ந்து இருக்கும். இந்த புது அரிசியை உடனே சமைத்து சாப்பிடாமல் பகவானுக்கு அர்ப்பணிக்கிறோம்.

ஔபாசனம் செய்பவரானால் ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்கிறார். இதில் பழைய அரிசி, புது அரிசி இரண்டையும் சோறாக்கி ஹோமம் செய்கிறார். இஷ்டியிலும் அப்படியேதான். இரண்டு அரிசியையும் மாவாக்கி புரோடாசம் என்கிற மாவு உருண்டையாக்கி ஹோமம் செய்கிறோம். இந்த இரண்டுமே இப்போது அருகிவிட்டது இல்லையா? மூன்றாவதாக மேற்சொன்ன இரண்டும் செய்யாதவர்கள் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.

வீட்டில் சிவ பூஜை வைத்துக்கொள்ளாதவர் கோவிலில் செய்கிறார்கள். அன்னத்தை பின்னால் பிரசாதமாக வினியோகம் செய்து விடுவர். மேலே சொன்ன எல்லாவற்றிலுமே தாத்பர்யம் ஒன்றே!
ந மம!
என்னுடையதில்லை.
பகவானே நீயாக உவந்து இதை எனக்கு கொடுத்து இருக்கிறாய். இதில் என் முயற்சி மிகச்சிறிதே! இது என்னுடையதில்லை, உன்னுடையதே! இப்படி ஒரு மனோ பாவம் வர வேண்டும். இதற்குப்பின் அந்த அன்னத்தை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம்.

அக்னியில் இடுவதானால் பிரச்சினை இல்லை. அது அக்னியால் ஜீரணிக்கப்படும். ஆஹுதி செய்தி மீந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொள்வோம். கோவிலில் வினியோகம் ஆகிவிடும். வீட்டில் செய்தால் என்ன செய்வது? யாருக்காவது கொடுத்துவிடுவதே மிகசிறந்தது. பிரசாதமாக கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம்.

"நீ தினசரி பூஜை என்கிறாயே, நிவேதனம் என்கிறாயே, அப்புறம் நீதானே சாப்பிடுகிறாய்? நிவேதனம் செய்தது கொஞ்சமாவது குறைந்ததா? கடவுள் இருந்து அவர் இதை சாப்பிட ஆரம்பித்தால் யாரும் நிவேதனம் செய்ய மாட்டீர்கள்." இப்படி சிலர் கேலி செய்வதுண்டு. நிவேதனம் என்றால் சாப்பிட வைப்பது அல்ல. காட்டுவது. கண்டு அருளப்பண்ணுதல் என்பர் ஸ்ரீ வைஷ்ணவர்கள். இது பலருக்கும் - ஆன்மீக நண்பர்கள் உள்பட- தெரியவில்லை. அதனால் நிவேதனம் செய்யும் போது சாப்பிட ப்ராணாஹுதி செய்வது போலவே செய்கிறார்கள்.

தினசரி நிவேதனமே இதே தாத்பர்யம்தான். என்னுடையதில்லை, உன்னுடையது. இப்படி செய்தால் உணவில் உள்ள குற்றங்களை பகவான் நீக்கி விடுவான் என்பது நம்பிக்கை. காயத்ரி ஜப யக்ஞத்தில் சமைக்க வந்த ஒருவர் சொன்னது: சாதாரணமாக சமைத்தால் அது சுமார் 4 மணி நேரம் கழித்து ருசி மாற ஆரம்பித்துவிடும். ஆனால் அதை நிவேதனம் செய்து இருந்தால் ருசி மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது என் அனுபவம்!

சரி, ஏன் இந்த ந மம? நாம் என்ன கொண்டு வந்தோம் பிறந்த போது? இந்த காற்றும், நீரும், மண்ணும் அவன் கொடுத்தவை. இவற்றை வைத்து கொஞ்சம் மாற்றி உபயோகிக்கிறோம். அவ்வளவே. ஆகவே இந்த உண்மையை அவ்வப்போது நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நமது மமதை போகும் - கர்வம் நீங்கும். அது நல்ல ஆன்மீக முன்னேற்றத்தை தரும். ஆகவே நாம் சொல்வோம், ந மம!
Post a Comment