அந்த ஹிமாலய துறவி கண்ணை திறந்த போது புத்த மட தலைமைத்துறவி அவருக்காக காத்திருப்பதை கண்டார்.
வாருங்கள், உங்களுக்கு நான் என்ன செய்யகூடும்?
பெரிய பிரச்சினை. எங்கள் மடாலயம் ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் கூட பிரபலமாக இருந்தது. எல்லா அறைகளும் நிறைந்து இருந்தன. எப்போதும் துறவிகளின் மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.. இப்போதோ அந்த இடம் வெறிச்சோடுகிறது. புதிதாக யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் உம் என்று இருக்கிறார்கள்; மெதுவாக கழட்டிக்கொள்கிறார்கள். என்ன பாபம் செய்தோம், இப்படி ஒரு நிலை வர?
துறவி சொன்னார், அறியாமை என்ற பாபமே!
என்ன அறியாமை? உங்களில் ஒரு புத்தா மறைந்து இருக்கிறார். சாதாரண ஆசாமி போல வேஷம் போட்டு இருக்கிறார். அவரை நீங்கள் யாரும் அறியவில்லை.
அவர் யார் சுவாமி?
அதற்குள் துறவி மீண்டும் த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
குழப்பத்துடனேயே புத்த மடத்துறவி திரும்பினார். திரும்பும் வழி எல்லாம் ஒரே சிந்தனை! நம் மடத்தில் புத்தாவா? யாராக இருக்கும்? அவரா? இவரா? ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. அவரிடம் இந்த குற்றம் இருக்கிறது, இவரிடம் அந்த குற்றம் இருக்கிறது. ஆனால் சாதாரண ஆசாமி போல வேஷமென்றல்லவா சொல்லிவிட்டார்? குற்றமும் ஒரு வேஷமாக இருக்கலாமே?
மடாலயம் முழுதும் இந்த விஷயம் கசிந்துவிட்டது. எல்லோருமே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரா, இவரா? ஒரு விஷயம் நிச்சயம். புத்தர் வேஷம் போட்டு இருப்பதால் நிச்சயம் அவரை கண்டுபிடிக்க முடியாது.
அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையே மாறிப்போனது! இவர் புத்தாவாக இருக்கலாமே! மற்றவர்களிடம் மரியாதை, அன்பு, கரிசனத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். சீக்கிரமே அந்த இடம் மாறிப்போனது. அன்பு பெருகிய அந்த இடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. புதியதாக பல இளந்துறவிகள் சேர ஆரம்பித்தனர். மடாலயத்தின் பழைய பெருமை மீண்டும் ஓங்கியது!
1 comment:
மனித மனங்களின் நாடியைப் புரிந்து கொண்ட துறவி. நல்லாவே மாற்றிவிட்டார் அனைவரையும்.
Post a Comment