Pages

Wednesday, January 9, 2013

அத்ருஷ்டம்





திடீரென்று ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுகிறது. நாம் அவரை அத்ருஷ்டக்காரர் என்கிறோம். ஒருவருக்கு வீட்டில நாள் முழுசும் கரண்ட் இருக்கு. அவர ரொம்ப  ரொம்ப அத்ருஷ்டக்காரர்ன்னு சொல்லறோம்.

இந்த அத்ருஷ்டம்ன்னா என்ன?

த்ருஷ்டம் ன்னா பார்க்க முடிவது. அத்ருஷ்டம் பார்க்க முடியாதது.

பலமான காத்து அடிக்கறது; மரக்கிளை முறிஞ்சு  கீழே விழுகிறது. இது பார்க்க முடிகிறது. இது த்ருஷ்டம். காத்து அடிச்சது; அதனால் மரகிளை முறிஞ்சதுன்னு சொல்லிடலாம்.
மேலே ஒரு பந்தை விட்டு எறிகிறோம். அது மேலே ஓரளவு போய் அப்புறம் கீழே விழுகிறது. ஏன் கீழே விழுந்தது? எந்த சக்தி அதை கீழே விழப்பண்ணியது? புவி ஈர்ப்பு விசைன்னு சொல்வாங்க. இதை பார்க்க முடியுமா? முடியலை. சில சோதனைகள் எல்லாம் செய்து அப்படி ஒரு விசை இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவாங்க. நாமும் ஒத்துக்கிறோம்.

ஆக பார்க்க முடியாத ஒண்ணு இல்லைன்னு இல்லை. அது இருக்கலாம். அதை நேரடியாக பார்க்க முடியாது போகலாம். நிரூபணம் செய்யவும் அறிவியலால முடியாமல் போகலாம்.
இப்ப, இந்த கால கட்டத்தில அறிவியலால நிரூபிக்க முடியாததை ஒப்புக்கொள்ள முடியாதுன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் யோசிச்சாலே தெரிஞ்சுடும். தினசரி புதுசு புதுசா ஏதோ அறிவியல் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கு. நேத்து இல்லைன்னது இன்னைக்கு, ஆமாம் இருக்கு ன்னு சொல்கிறாங்க. ஒரு விஷயம் இருக்குன்னு சொல்லறது சுலபம்; இல்லைன்னு சொல்லறது கஷ்டம்.

ரொம்ப சாதாரணமா பலரும் கேட்கிற கேள்வி, ஏன் இப்படி எனக்கு  நடக்குது? நான் நல்ல பையனாத்தானே இருக்கேன், இருந்தேன்? இப்படி கஷ்டம் ஏன் வரணும்?
அல்லது ஒரு சின்ன குழந்தை ஏதோ வியாதியால கஷ்டப்படுது. ஏன் இந்த குழந்தை கஷ்டப்படணும்? அது என்ன தப்பு செஞ்சது? பிறந்து கொஞ்ச நாள் கூட ஆகலையே? அதுக்குள்ள எப்படி தப்பு செய்ய முடியும் ஏன்  இப்படி கஷ்டம் அனுபவிக்கணும்?
அல்லது, இப்பல்லாம் மீடியாக்கள் தேடி தேடி இருக்கிற இல்லாத பால்வன்முறைகளை எல்லாம் எழுதறாங்க இல்லையா? இதெல்லாம் ஏன் நடக்குது?

இதையெல்லாம் மேற்கோள் காட்டியே சில நாத்திகவாதிகள் ஒரு வாதத்தை வைக்கறாங்க! “கடவுள் கருணை வடிவானவர்ன்னா ஏன் ஜனங்க இவ்வளோ கஷ்டப்படுறாங்க?”
உப்பு சாப்பிட்டவன் தாகம் எடுத்து தண்ணி குடிப்பான் என்கிறது போல , நான் செய்கிற எல்லா செயல்களுக்கும் பலனை அனுபவிச்சுத்தானே ஆகணும்? 

ஆனா நாம் இந்த ஜன்மத்துல செய்கிற விஷயங்களை மட்டுமே தெரியுது என்கிறதால கணக்குல எடுத்துக்கிறோம். ஆன்மீகம் என்ன சொல்லுதுன்னா  ஒரு ஜீவனுக்கு ஜன்மங்கள் பலது உண்டு. இறப்பு பிறப்பு என்பது சட்டையை மாத்தற மாதிரிதான்.  ஆகவே செயல்களுக்கு ஒரு தொடர்வு – கன்ட்யூனுடி – இருக்கு. அதே போல எதிர்வினை – செயல்களின் பலன்களுக்கும் ஒரு தொடர்வு இருக்கு.

ஒரு வேலையை திரும்பத்திரும்ப செய்கிறோம். இதுக்கு டெக்னிகலா வ்ருத்தி என்கிறாங்க. ஒரு விஷயத்தை தொடர்ந்து எண்ணுகிற போது அதை சித்த விருத்தி ன்னு சொல்கிறோம் இல்லையா அது போல. அடிக்கடி செய்யும் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமா மெருகேற்றப்படும். பாடப்பாட பாட்டு என்கிறோமே. பாடப்பாட இன்னும் சுளுவாக பாட முடிகிறது. இது போல அடிக்கடி செய்ய அது உள்ளே பதிந்துவிடுகிறது. இப்படி பதிந்ததை பண்புப்பதிவு என்கிறார்கள். சம்ஸ்காரம் என்றும் சொல்வர்.

 இது அடுத்த ஜன்மத்திலும் பிரதி பலிக்கும். இப்படிப்பட்டவர்கள் இசை கற்கப்போக வெகு சுலபமாக கற்றுக்கொண்டு விடுவர். பார்ன் ஆர்டிஸ்ட், ஜீனியஸ் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா? அதே!
எதை திருப்பித்திருப்பி செய்கிறோமோ அது நல்லதோ கெட்டதோ எப்படி இருந்தாலும் தொடர்கிறது. பிறவி குணம் என்று கூட சொல்வார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட மாறு பட்டு இருக்கிறார்கள். சிலருக்கு சின்ன வயசிலிருதே திருட்டு குணம் வருகிறது. எப்படி இது வந்தது என்று குடும்பத்தினர் ஆச்சரியப்படுவர். இப்படி இருக்கிறதை வாசனை என்கிறார்கள். முன்னே சொன்ன விருத்திதான் பலப்பட்டு வாசனை ஆகிறது.
இந்த வாசனைதான் நம்மை சில விஷயங்களை சில வழிகளில் செய்ய வைக்கிறது. இது நல்லதாவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். நல்லதென்றால் அப்படி வைத்துக்கொள்ளலாம், இல்லையா? கெட்டதென்றால் முயற்சி செய்து மாற்றிக்கொள்ளலாம்.
அதெப்படி மாற்றுவது? 

புத்தி பூர்வகமாக சரியான வழியில் செயல்பட வேன்டும். வாசனை நம்மை பழக்கமான வழிக்கு கொண்டு செல்லவே முயலும். நாம் வலுக்கட்டாயமாக மாற்று வழியில் அதை செலுத்த வேண்டும். முன்னே பழகி பழகி ஒரு வழியில் சென்றது இப்போது மெல்ல மெல்ல வேற்று வழியில் பழக ஆரம்பிக்கும்.....
 
 

Wednesday, January 2, 2013

என் உலகம் என் கையிலா -3





இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. உதாரணமா ஒரு அலுவலகத்தில வேலை செய்யறோம். அங்கே நடக்கிற பல விஷயங்கள் நம்ம கண்ட்ரோல்ல இல்லாம இருக்க வாய்ப்பு இருக்கு. அது தெய்வாதீனமான்னா அப்படியும் இல்லை. அது வேற ஒத்தர் ஆதீனத்தில இருக்கு. இந்த மாதிரி விஷயங்களை எப்படி கையாளுவது? சில சமயம் முடியும் சில சமயம் முடியாது. ஆனால் எப்படி பராதீனமான விஷயங்களை சுயாதீனமாக மாத்த முடியுது என்பதிலதான் நம்ம வெற்றி அடங்கி இருக்கு!
-----
இப்படி போன பதிவில எழுதியிருந்தேன்!
இந்த இடத்தில் ஒரு தாட் ப்ளாக் வந்துடுத்து. சரி செய்துக்க ஒரு பெரிவரிடம் போய் பேச ஆரம்பித்தேன்.
எடுத்த எடுப்பிலேயே பிரச்சினை வந்துடுத்து.
"நீ ஏதோ தெய்வாதீனம், சுயாதீனம் ன்னு இருக்கிறதா நினைச்சுகிட்டு இருக்கே! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை, எல்லாமே தெய்வாதீனம்தான்” என்றார்.
அது பரமார்த்திக சத்யம். ஆனால் வியவகாரிக சத்யம் ன்னு ஒண்ணு இருக்கில்லையா?
புரியலையே? அப்சொலூட் ட்ரூத் என்கிறது ஒண்ணு. ப்ராக்டிகல் ட்ரூத் என்கிறது மற்றது. சூரியன் காலையில் கிழக்கே உதிச்சு மாலையில் மேற்கே மறைகிறது என்பது வியவகாரிக ஸத்யம். சூரியன் நடுவிலே இருக்கு, பூமி சுத்தி வருது; உதயம் அஸ்தமனம் எல்லாம் ஒரு மாயை விளைவு என்கிறது பரமார்த்திக ஸத்யம். உலகம் மாயை (ப்ரம்ஹம் ஸத்யம், ஜகன் மித்யா) என்று சொன்னாலும், அப்படி மனசு ஏத்துக்கொண்டாலும், இந்த உலகம்ன்னு ஒண்ணு தெரிகிறவரை அதோட எப்படி இசைந்து போவதுன்னு தெரிய வேண்டி இருக்கே!

மற்றவர் கட்டுப்பாட்டில் இருக்கிற சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது என்பதற்கு வரை உண்டு. பல இடங்களுக்கு போகிறோம். அங்கே இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சட்ட திட்டங்கள் இருக்கு. அதற்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
கோவில், மசூதி, சர்ச் என்று சில இடங்களில் இப்படித்தான் வழிபாடு இங்கே என்று இருக்கு. அதெல்லாம் முடியாது எனக்கு பிடித்தம் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? அங்கே எல்லாம் போய் நீங்க இப்படித்தான் நடந்துக்கணும்ன்னு சண்டை வளர்கிறது சிலருக்கு பிடிச்சிருக்கு.
கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவ மனை ன்னு பல பொது இடங்கள். அங்கேயும் எப்படி இருக்கணும்ன்னு சட்ட திட்டங்கள் இருக்கு. மருத்துவ மனைக்கு போவேன்; எனக்கு பேச்சு சுதந்திரம் இருக்கு. அதனால அங்கே கத்துவேன்னா, அப்படி செய்வது சரியில்லை. கோர்டுக்குப்போய் ஜட்ஜோட சீட்ல உக்காருவேன்னா அதுவும் சரியில்லை. ட்ரெய்ன் நான் சொன்ன பிறகுதான் கிளம்பணும்ன்னு சொல்ல முடியுமா?
இந்த மாதிரி இடங்களிலே நடக்கிறது பிடிக்கலைன்னா அங்கே போகாமல் இரேன்!
இதான் விஷயம்.
எனக்கு இதிலதான் சுதந்திரம் இருக்கு. பராதீனமான விஷயங்களில ஈடுபடலாமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிக்க முடியும். அல்லது நடக்கும் சமாசாரங்களுக்கு என்னுடைய எதிர்வினையை என்னால கட்டுப்படுத்த முடியும்; முடியணும்.

ஆபீஸ் வேலை 9 மணிக்கு துவங்கணும் என்பது ஆபீஸ் சட்ட திட்டம். லேட்டா போனால் என்ன நடக்கும் என்பதெல்லாம் கூட விலாவரியா எழுதி இருக்கும். அதெல்லாம் முடியாது நான் பத்து மணிக்குத்தான் வர முடியும் ன்னு பிடிவாதம் பிடிக்க முடியுமா? ஒன்பது மணிக்கு உன்னால போக முடியாதுன்னா, மேலதிகாரிகிட்ட பேசணும். எனக்கு பத்து மணிக்குத்தான் வர முடியும்; இதுக்காக கூடுதலா சாயந்திரம் ஒரு மணி நேரம் வேலை செய்துட்டு போறேன்; இதனால வேலை எதுவும் பாதிக்காது என்றெல்லாம் சொன்னால் சட்ட திட்டங்களில அதுக்கு இடம் இருந்தால் அல்லது அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒத்துக்கொண்டாலும் கொள்வார். இல்லைன்னா ஆபீஸ் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுதான் ஆகணும். இந்த முடிவு நமக்கு சாதகமா இல்லைன்னா அதுக்கு அப்புறமும் என்ன செய்யலாம் என்பது என் கையில்தான் இருக்கு. சரிப்பட்டு வராதுன்னா வேறு வேலைக்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி சரிப்படும் இடத்துக்கு போய்விடலாம். வேலையை உதறிவிடலாம்.... பல தேர்வுகள் இப்படி நம் கையிலேதான் இருக்கும். இதை விட்டுவிட்டு மேலதிகாரியை திட்டிக்கொண்டோ, தினசரி தாமதமாக வந்து கொண்டோ சண்டை போட்டுக்கொண்டோ இருப்பதில அர்த்தமில்லை.

இப்படி சூழ்நிலை சமாசாரங்களில எனக்கு நேரடி கண்ட்ரோல் இல்லைன்னாலும் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது என் கட்டுப்பாட்டில இருக்கு! இந்த எதிர்வினை சுயாதீனம்! இதுவே எனக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளை தீர்மானிக்கும்!
இந்த சுயாதீன சமாசாரங்களை மனசளவில கையாளாமல் புத்தி பூர்வமாக அணுகினால் நிம்மதியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
மாத்த முடிஞ்சதை மாத்தணும். மாத்த முடியாததை ஒப்புக்கொள்ளணும்! எது மாத்த முடியாதது ன்னு தெரிஞ்சுக்க அருள் செய் ஆண்டவனே! ன்னு ஒரு சொலவடை!
மாத்த முடியக்கூடியது நம்ம மனசுதான்.
ஒரு பெரியவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்ததா சொன்னேன் இல்லையா? அவர் ஒரு அனெக்டோட் சொன்னார். அவருக்கு ஏஜென்சி பிசினெஸ். தில்லியிலே ஒரு வெள்ளைக்காரன் கம்பனிக்கு போவாராம். அங்கே அவர் "செல்ப் கண்ட்ரோல் இஸ் தெ பெஸ்ட் கண்ட்ரோல்" ன்னு எழுதி அவர் ரூமில ஒரு போர்டு தொங்கவிட்டு இருந்தாராம்! அப்புறம் சுதந்திரம் வந்தது; அவரும் கம்பனியை வித்துட்டு போயிட்டார். ஒரு வடக்கத்திய இந்தியர் அதை வாங்கி நடத்திக்கொண்டு இருந்தார். அவர் அந்த ஆபீஸ் போகும்போது அந்த போர்ட் இன்னும் இருக்கான்னு பார்க்க ஆர்வம்! போர்ட் இருந்தது. வாசகம் கொஞ்சம் மாறி இருந்தது. “செல்ப் கண்ட்ரோல் இஸ் தெ ஒன்லி கண்ட்ரோல்” ன்னு மாத்தி இருந்தது!

Friday, December 14, 2012

என் உலகம் என் கையிலா? 2


பாவம், அவங்களுக்கு ஏன் எரிச்சல் நாம் கொடுக்கணும்ன்னு சில நல்லவங்க கேள்வி! நல்லா இருங்கப்பா!
இப்படி செய்யத்தான் பதஞ்சலி சொல்றார்

எப்படி இருந்தாலும் உதாசீனம் என்கிறது ஒரு மிக சக்தி வாய்ந்த ஆயுதம்
நம்பிக்கை வரலை சிலருக்கு! இல்லையா?
தினசரி வாழ்கையில இருந்து ஒரு உதாரணம் பார்க்கலாம். குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கு. அப்பா கூப்பிடறார். இனியா, நீ தனியா என்ன விளையாடுற? ஸ்கூலுக்கு நேரமாச்சு கிளம்பு! (இனியன் யார் பையன்பா? ஓ குசும்பர் பையனா? ச்சும்மா ஒரு எகன மொகன க்கு போட்டது, மன்னிச்சூ!)
இப்ப அப்பா கூப்பிடறதை கேட்டு பையன் வந்துட்டா ஒண்ணும் பிரச்சினை இல்லே. அப்படி இல்லாம, பதிலே சொல்லாம, விளையாடிகிட்டே இருந்தா எரிச்சல் வருமா வராதா? ஹா! அதான் விஷயம். இன்னிக்கு வெள்ளிக்கிழமைப்பா, ஸ்கூல் லீவுன்னு பல்பு கொடுத்தாக்கூட பரவாயில்லை. பிரச்சினை வராது. இதோ வரேன், வர மாட்டேன் போ எல்லாம் கூட ஓகே. அது அடுத்து உரையாடலை தொடரும்.

உதாசீனம்தான் எதிராளிக்கு இன்னும் எரிச்சல் மூட்டிவிடுவது. சூடான பதில் இல்லை. சூடான பதில் இருந்தா பின்னால் வாக்குவாதம் வரும். அதானே எதிராளி எதிர்பார்க்கிறது? அப்படி இல்லாம அவங்களை கடுப்பேத்தறதுக்கு உதாசீனம்தான் வழி.
(மேலே சொன்ன உதாரணத்தோட இன்னொரு வடிவம்தான் தன்னை போதுமான அளவு கவனிக்காத பெற்றோரை குழந்தைகள் அவங்களுக்கு பிடிக்காததை செய்து கவனத்தை ஈர்ப்பது. டீப் சைக்காலஜி சமாசாரம். இப்ப அதுக்கு போக வேண்டாம்.)

ஒரு சின்ன உதாரணத்தைத்தான் பார்த்தோம். நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்பது நம்மகிட்டத்தான் உண்மையில இருக்கு. இதைத்தான் சொல்ல வரேன்.
ஆகவே நமக்கு ஆளுமையில இருக்கிற பல விஷயங்களை நாமே தீர்மானிக்கலாம். தெய்வாதீனமா இருக்கற விஷயங்களில நாம் அதிகமா ஒண்ணும் செய்ய முடியாது. ப்ரார்த்தனை செய்யலாம். சில கர்மாக்களை செய்யலாம்.
மற்ற விஷயங்களில பலதும் நம்ம ஆதீனத்தில இருக்கு என்பதை நாம புரிஞ்சுக்கலை என்பதே காட்ட நினைக்கும் விஷயம்.
நிறைய பேருக்கு நிதானமா யோசிச்சு செயல்படுகிற பழக்கம் இல்லை. பெரும்பாலும் ஒரு ரிஃப்லெக்ஸாத்தான் செயல்படுகிறோம். இன்ன இன்ன செயலுக்கு இன்ன இன்ன எதிர்வினைன்னு சார்ட் போட்டு வெச்சிருக்கோம். அப்படி ஏன் வந்ததுன்னு திருப்பி யோசிக்கக்கூட மாட்டோம்! திட்டினியா திருப்பித்திட்டு. கேவலமா பேசினானா திருப்பி கேவலமா பேசு. இந்த ரீதியில கண்ணுக்குக்கண் ன்னு செயல்படுகிறோம். சரிதானா? இதுல என்ன லாபம் இருக்கு? விவாதங்கள் பலதையும் பார்க்கிறேன். ஒரு விவாதத்தால யாரும் விஷயம் புரிஞ்சுகொண்டு நடத்தையை மாத்திகிட்டதா பார்க்க / கேட்க்கக்கூடவில்லை! பரஸ்பரம் சேற்றை அள்ளி வீசறதும்..... விடுங்க.

ரைட். அப்ப என் உலகம் என் கையில்தான் பெரும்பாலும் இருக்கு. என் அம்மாவோ, அப்பாவோ, பையனோ, பெண்ணோ, மனைவியோ, மேலதிகாரியோ (அதாவது மத்த மேலதிகாரி), யாரானாலும் அவங்க கூட நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதை அவங்க தீர்மானிக்கிறாங்கன்னா நம்ம வாழ்கையை நாம் இன்னும் நம் கையிலே எடுத்துக்கலைன்னு பொருள்.

இப்படி சொல்கிறதாலே 'மத்தவங்க என்ன வேண்ணா சொல்லிட்டுப்போகட்டும். நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்கிறதைத்தான் செய்வேன்' ன்னு அர்த்தமில்லை.
குறிப்பா நான் சொல்கிற இந்த விஷயம் வளர்ந்த மனிதர்களுக்குத்தானே ஒழிய வயதில சின்னவங்களுக்கு இல்லை. பெரியவங்க ஒரு விஷயம் சொன்னா அதை கேட்டு, அதன் படி நடக்கிறது அவங்க கடமை.
நாமும் ச்சும்மா வீணுக்கு நான் என் வழிலதான் போவேன் என்கிறதும் சரியில்லை. மாற்றுக்கருத்துக்கு நாமும் உடன்படலாம், சில காரணங்களுக்காக. இவன் கரிவாயன், இப்படிச்சொல்லிட்டானே, போகட்டும் அப்படியே செய்வோம் முதல் இவர் அனுபவஸ்தர், சொன்னா சரியா இருக்க வாய்ப்புகள் அதிகமிருக்கு வரை பல வகை காரணங்கள் இருக்கலாம்.

இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. ......

Thursday, December 13, 2012

என் உலகம் என் கையிலா? - 1


என் உலகம் என் கையிலா?
சில நாட்கள் நடந்த கோளாறான சிந்தனைகளின் விளைவு! ஹும் படிச்சுடுங்க, நான் பாவம்!

கடந்த சில நாட்களா... சரி சரி உங்களுக்கு புரிஞ்சுடுத்து.
இந்த உலகம் உலகம் ன்னு சொல்லறாங்களே அது எது? நான் இருக்கிறதா நினைக்கிறதா, நீங்க இருக்கிறதா நினைக்கிறதா இல்லை அதுவா இருக்கிறதா?

முன் காலத்திலே 'கடவுள் ஒரு நாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்' ன்னு ஒரு பாட்டு உண்டு. அதில உலகம் எப்படிப்பா இருக்குன்னு கேப்பார். ஒருத்தன் வாழ்வே இனிமை ம்பான். இன்னொருத்தன் அதுவே கொடுமை ம்பான். இப்படி பாட்டு போகும்.

ஒரே உலகம் ஒத்தருக்கு இனிமையாவும் இன்னொருத்தருக்கு கொடுமையாவும் எப்படி இருக்க முடியும்? அது அப்படித்தான் இருக்கு என்கிறது நிதர்சனம். அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது.

ஒத்தர் அப்பாடா என்ன வெய்யில் என்கறார். இன்னொருத்தர் அதைப் பத்தியே ஒரு சிந்தனையும் இல்லாம வெயில்லே நடந்து போறார். சின்னப்பசங்க வெயிலான்னு ஆச்சரியமா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு கிரிக்கெட் ஆடறாங்க! எலும்பும் தோலுமா மூட்டு வியாதிகளோட இருக்கற கிழம் ஒண்ணு அப்பாடா, சொகமா இருக்குனு கூடச்சொல்லலாம்!

அப்ப உலகம் ஒவ்வொருத்தர்கிட்டேதான் இருக்கு. அவரவர் மனசில இருக்கிறது போலவேத்தான் இருக்கு.

இந்த மனசு... , இந்த மனசுதான் பல விஷயங்களுக்கும் காரணம். வாழ்கையை கொடுமையாக்கவும் இதால முடியும்; இனிமையா ஆக்கவும் இதால முடியும்.
இப்படி ரொம்பவே ஜெனரலைஸ் செய்யறத்துக்கு முன்னாடி சில விஷயங்களை … ஹிஹிஹி... மனசில ஏத்திப்போம்!
காத்து அடிக்குது, வெயில் அடிக்குது, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது (அட, நிசமா மழையே காணோம்ன்னாலும் கற்பனையிலதான் கொஞ்சம் கொட்டட்டுமே!) இதெல்லாம் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அது நம்மை பாதிக்காதுன்னு சொல்லவும் முடியாது. மழை இல்லைன்னு சொல்லி வெளியே போய் நனையாம திரும்பி வர முடியாது! ச்சும்மாவான்னா ஒரு கறபனையை வளத்துக்கொண்டு அது படி இருக்குன்னு சாதிச்சா.... பைத்தியக்காரன் பட்டம் சீக்கிரம் வந்துடும்!
இந்த இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். அதீனம் ன்னா ஆளுகை. அதுலேந்துதான் ஆதீனம் வந்தது.  சரி சரி, டைக்ரஸ் ஆக வேணாம்கிடக்கட்டும்.

என்ன சொன்னேன்? இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். இயற்கையா மழை பெய்யுது; பெய்யாம இருக்கு. நம்மால ஒண்ணும் பெரிசா செய்ய முடியலை. அதுவே மழை வேணும்ன்னு தெய்வத்தை வேண்டிக்கொண்டு சில கர்மாக்கள் செய்தா சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மழை பெய்யுது. இப்படி சில விஷயங்கள் நம் ஆளுகைக்கு உட்படாம தெய்வங்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கு. இதை இப்ப இந்த பதிவுல விட்டுடுவோம்.

மீதி பல விஷயங்கள் நம் ஆளுகையில இருக்கு. கொஞ்சம் விவரமா பார்க்கலாம்.
சில வருஷங்கள் முன்னே ஒரு அம்மா என்கிட்ட பொலம்பிகிட்டு இருந்தாங்க. 'சில பேர் என்னை வேணும்ன்னு எரிச்சலூட்டறாங்க' என்பதே அதில முக்கிய விஷயம். கடைசியா என்ன செய்யட்டும் ன்னு கேட்டாங்க. இப்படி பொலம்பறதே கூட ஒரு மாதிரி ரிலீஃப்தான். இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டேன்..
அவங்களோட குறிக்கோள் என்ன?
நான் எரிச்சலாகணும்...
சரி, அவங்களோட குறிக்கோள் நிறைவேறக்கூடாதில்லையா? அதானே நீங்க விரும்பறது?
ஆமாம்.
சரிதான். எப்படி அது நிறைவேறாம இருக்கும்?
.. புரியலை.....
அதாவது அவங்க நீங்க எரிச்சலடையணும்ன்னு நினைச்சு சில விஷயங்கள் சொல்லறாங்க அல்லது சில வேலைகள் செய்யறாங்க.
ஆமாம்.
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க என்ன செய்யணும்?
அதானே உங்ககிட்டே கேட்டுக்கிட்டு இருக்கேன்!
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க எரிச்சலடையக்கூடாது.
ஆமாம், அது எப்படி முடியும்?
அது எப்படி முடியாது? எரிச்சலடைகிறது யார்? அவங்களா, நீங்களா? அது யார் ஆதிக்கத்தில இருக்கு?
எரிச்சலடைய வேண்டியது நான்தான். அது எப்படி எரிச்சலடையாம இருக்க முடியும்?
அது உங்க கண்ட்ரோல்லதானே இருக்கு!
அவங்க ப்ரொவோக் பண்ணறாங்களே?
ஆமாம். அப்படித்தான் சொன்னீங்க. உங்களுக்கு எது எரிச்சல் மூட்டும்ன்னு நல்லா ஸ்டடி பண்ணி வெச்சு இருக்காங்க. எதை சொன்னா உங்களுக்கு கோபம் வருது, எதை செய்தா கோபம் வருது...
ஆமாம். அதை எல்லாம் வேணும்ன்னு அவங்க செய்யறாங்க.
வேணும்ன்னு செய்யறாங்களோ அல்லது அது அவங்க இயல்போ, கிடக்கட்டும். நீங்க பதிலுக்கு கோபப்படாம எரிச்சல் அடையாம இருந்தாதான் அவங்களை தோற்கடித்ததா ஆகும்.

இந்த ஆர்க்யூமெண்ட் எல்லாம் கேட்டுட்டு அவங்க எரிச்சல் ஆகாம இருந்ததுதான் விசேஷம். ரொம்ப கண்ட்ரோல் செய்திருப்பாங்க போலிருக்கு.

அதுக்கு நான் என்ன செய்யணும்?
கொஞ்சம் யோசிக்கணும். அவங்க சொன்னது உண்மையா? உதாரணமா " நீ ஒரு முட்டாள்" ன்னு சொல்கிறாங்க. சாதாரணமா நம்ம எல்லாருக்குமே இதை கேட்டா கோபம் வரும். திட்டினது மேலதிகாரி (இல்லை, தங்கமணி ன்னு தனியா வேற சொல்லணுமா? அதான் மேலதிகாரின்னு சொல்லியாச்சில்லே?) மாதிரி இருந்தா மனசில திட்டிட்டு வெளிவே வந்துடுவோம். இல்லைன்னா சண்டை போடுவோம். இந்த சண்டையத்தான் தவிர்கப்பார்க்கிறோம். யோசிக்கலாம், அவங்க சொன்னது உண்மையா? ஆமாம்ன்னா உண்மைய சொன்னதுக்காக யாரையும் கண்டனம் செய்ய முடியாது. இல்லை பொய் ன்னா, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். இவங்க சொல்கிறது பொய், உண்மைத்தன்மையை யாராலும் மாத்த முடியாது; சொல்லிட்டு போகட்டும்; எனக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி யோசிக்க தோணியாச்சுன்னா அவங்க சொல்கிறதை பொருட்டாவே எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓஹோ அப்படியா ன்னு சிரிச்சுகிட்டே நகர்ந்துட்டா அவங்க எரிச்சல் ஆயிடுவாங்க!
(இன்னும் வரும்)