Pages

Wednesday, January 2, 2013

என் உலகம் என் கையிலா -3

இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. உதாரணமா ஒரு அலுவலகத்தில வேலை செய்யறோம். அங்கே நடக்கிற பல விஷயங்கள் நம்ம கண்ட்ரோல்ல இல்லாம இருக்க வாய்ப்பு இருக்கு. அது தெய்வாதீனமான்னா அப்படியும் இல்லை. அது வேற ஒத்தர் ஆதீனத்தில இருக்கு. இந்த மாதிரி விஷயங்களை எப்படி கையாளுவது? சில சமயம் முடியும் சில சமயம் முடியாது. ஆனால் எப்படி பராதீனமான விஷயங்களை சுயாதீனமாக மாத்த முடியுது என்பதிலதான் நம்ம வெற்றி அடங்கி இருக்கு!
-----
இப்படி போன பதிவில எழுதியிருந்தேன்!
இந்த இடத்தில் ஒரு தாட் ப்ளாக் வந்துடுத்து. சரி செய்துக்க ஒரு பெரிவரிடம் போய் பேச ஆரம்பித்தேன்.
எடுத்த எடுப்பிலேயே பிரச்சினை வந்துடுத்து.
"நீ ஏதோ தெய்வாதீனம், சுயாதீனம் ன்னு இருக்கிறதா நினைச்சுகிட்டு இருக்கே! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை, எல்லாமே தெய்வாதீனம்தான்” என்றார்.
அது பரமார்த்திக சத்யம். ஆனால் வியவகாரிக சத்யம் ன்னு ஒண்ணு இருக்கில்லையா?
புரியலையே? அப்சொலூட் ட்ரூத் என்கிறது ஒண்ணு. ப்ராக்டிகல் ட்ரூத் என்கிறது மற்றது. சூரியன் காலையில் கிழக்கே உதிச்சு மாலையில் மேற்கே மறைகிறது என்பது வியவகாரிக ஸத்யம். சூரியன் நடுவிலே இருக்கு, பூமி சுத்தி வருது; உதயம் அஸ்தமனம் எல்லாம் ஒரு மாயை விளைவு என்கிறது பரமார்த்திக ஸத்யம். உலகம் மாயை (ப்ரம்ஹம் ஸத்யம், ஜகன் மித்யா) என்று சொன்னாலும், அப்படி மனசு ஏத்துக்கொண்டாலும், இந்த உலகம்ன்னு ஒண்ணு தெரிகிறவரை அதோட எப்படி இசைந்து போவதுன்னு தெரிய வேண்டி இருக்கே!

மற்றவர் கட்டுப்பாட்டில் இருக்கிற சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது என்பதற்கு வரை உண்டு. பல இடங்களுக்கு போகிறோம். அங்கே இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சட்ட திட்டங்கள் இருக்கு. அதற்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
கோவில், மசூதி, சர்ச் என்று சில இடங்களில் இப்படித்தான் வழிபாடு இங்கே என்று இருக்கு. அதெல்லாம் முடியாது எனக்கு பிடித்தம் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? அங்கே எல்லாம் போய் நீங்க இப்படித்தான் நடந்துக்கணும்ன்னு சண்டை வளர்கிறது சிலருக்கு பிடிச்சிருக்கு.
கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவ மனை ன்னு பல பொது இடங்கள். அங்கேயும் எப்படி இருக்கணும்ன்னு சட்ட திட்டங்கள் இருக்கு. மருத்துவ மனைக்கு போவேன்; எனக்கு பேச்சு சுதந்திரம் இருக்கு. அதனால அங்கே கத்துவேன்னா, அப்படி செய்வது சரியில்லை. கோர்டுக்குப்போய் ஜட்ஜோட சீட்ல உக்காருவேன்னா அதுவும் சரியில்லை. ட்ரெய்ன் நான் சொன்ன பிறகுதான் கிளம்பணும்ன்னு சொல்ல முடியுமா?
இந்த மாதிரி இடங்களிலே நடக்கிறது பிடிக்கலைன்னா அங்கே போகாமல் இரேன்!
இதான் விஷயம்.
எனக்கு இதிலதான் சுதந்திரம் இருக்கு. பராதீனமான விஷயங்களில ஈடுபடலாமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிக்க முடியும். அல்லது நடக்கும் சமாசாரங்களுக்கு என்னுடைய எதிர்வினையை என்னால கட்டுப்படுத்த முடியும்; முடியணும்.

ஆபீஸ் வேலை 9 மணிக்கு துவங்கணும் என்பது ஆபீஸ் சட்ட திட்டம். லேட்டா போனால் என்ன நடக்கும் என்பதெல்லாம் கூட விலாவரியா எழுதி இருக்கும். அதெல்லாம் முடியாது நான் பத்து மணிக்குத்தான் வர முடியும் ன்னு பிடிவாதம் பிடிக்க முடியுமா? ஒன்பது மணிக்கு உன்னால போக முடியாதுன்னா, மேலதிகாரிகிட்ட பேசணும். எனக்கு பத்து மணிக்குத்தான் வர முடியும்; இதுக்காக கூடுதலா சாயந்திரம் ஒரு மணி நேரம் வேலை செய்துட்டு போறேன்; இதனால வேலை எதுவும் பாதிக்காது என்றெல்லாம் சொன்னால் சட்ட திட்டங்களில அதுக்கு இடம் இருந்தால் அல்லது அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒத்துக்கொண்டாலும் கொள்வார். இல்லைன்னா ஆபீஸ் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுதான் ஆகணும். இந்த முடிவு நமக்கு சாதகமா இல்லைன்னா அதுக்கு அப்புறமும் என்ன செய்யலாம் என்பது என் கையில்தான் இருக்கு. சரிப்பட்டு வராதுன்னா வேறு வேலைக்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி சரிப்படும் இடத்துக்கு போய்விடலாம். வேலையை உதறிவிடலாம்.... பல தேர்வுகள் இப்படி நம் கையிலேதான் இருக்கும். இதை விட்டுவிட்டு மேலதிகாரியை திட்டிக்கொண்டோ, தினசரி தாமதமாக வந்து கொண்டோ சண்டை போட்டுக்கொண்டோ இருப்பதில அர்த்தமில்லை.

இப்படி சூழ்நிலை சமாசாரங்களில எனக்கு நேரடி கண்ட்ரோல் இல்லைன்னாலும் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது என் கட்டுப்பாட்டில இருக்கு! இந்த எதிர்வினை சுயாதீனம்! இதுவே எனக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளை தீர்மானிக்கும்!
இந்த சுயாதீன சமாசாரங்களை மனசளவில கையாளாமல் புத்தி பூர்வமாக அணுகினால் நிம்மதியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
மாத்த முடிஞ்சதை மாத்தணும். மாத்த முடியாததை ஒப்புக்கொள்ளணும்! எது மாத்த முடியாதது ன்னு தெரிஞ்சுக்க அருள் செய் ஆண்டவனே! ன்னு ஒரு சொலவடை!
மாத்த முடியக்கூடியது நம்ம மனசுதான்.
ஒரு பெரியவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்ததா சொன்னேன் இல்லையா? அவர் ஒரு அனெக்டோட் சொன்னார். அவருக்கு ஏஜென்சி பிசினெஸ். தில்லியிலே ஒரு வெள்ளைக்காரன் கம்பனிக்கு போவாராம். அங்கே அவர் "செல்ப் கண்ட்ரோல் இஸ் தெ பெஸ்ட் கண்ட்ரோல்" ன்னு எழுதி அவர் ரூமில ஒரு போர்டு தொங்கவிட்டு இருந்தாராம்! அப்புறம் சுதந்திரம் வந்தது; அவரும் கம்பனியை வித்துட்டு போயிட்டார். ஒரு வடக்கத்திய இந்தியர் அதை வாங்கி நடத்திக்கொண்டு இருந்தார். அவர் அந்த ஆபீஸ் போகும்போது அந்த போர்ட் இன்னும் இருக்கான்னு பார்க்க ஆர்வம்! போர்ட் இருந்தது. வாசகம் கொஞ்சம் மாறி இருந்தது. “செல்ப் கண்ட்ரோல் இஸ் தெ ஒன்லி கண்ட்ரோல்” ன்னு மாத்தி இருந்தது!
Post a Comment