Pages

Tuesday, December 14, 2021

ஶ்ராத்தம் – 4 -வரணம் முறை





(விஶ்வேதேவர் என்பதே சரியாக எழுதும் முறை.)
நல்லது. வந்தவர்களில் வயதானவரை விஸ்வேதேவராக வரணம் செய்யவேண்டும். பித்ருக்களாக இரண்டாம் நபரை வரணம் செய்ய வேண்டும்.
இங்கே ஆரம்பத்தில் பொதுவாக சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். விஸ்வேதேவருக்கு எந்த உபசாரம் செய்வதாக இருந்தாலும் நாம் வழக்கமாக பூணூல் அணிவது போல அதாவது இடது தோளில் பூணூல் இருப்பதாக செய்ய வேண்டும். அட்சதை என்கிற முனை முறியாத அரிசியை உபயோகப்படுத்த வேண்டும். மங்களாக்‌ஷதை வேறு; இந்த அட்சதை வேறூ. அக்‌ஷதை என்றால் முனை முறியாதது என்றுதான் பொருள். மங்களாக்‌ஷதை என்பது இது போன்ற அரிசியுடன் மஞ்சள், குங்குமம், நெய் ஆகியவற்றை சேர்த்து தேவ பூஜைக்காக தயார் செய்வது. சாதாரணமான முனை முறியாத அரிசியை களைந்து உலர வைத்து உபயோகித்தால் அது இந்த சிராத்தத்துக்கானது. விஸ்வேதேவருக்கு செய்யக்கூடிய எல்லா உபசாரங்களிலும் இடது தோளில் பூணூல், அதாவது உபவீதி என்பார்கள், அதே மாதிரி அக்ஷதை இதுதான் உபயோகத்திற்கு வரும். விஸ்வேதேவர் என்பதே தேவர் என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவருக்கு செய்வது நாம் விரல் நுனிகளால் நேரடியாக அரிசியோ அக்‌ஷதையோ ஜலமோ விழுவதாகத்தான் செய்வோம். இதுவே பித்ரு என்றால் மறித்து செய்வோம் இல்லையா?
அடுத்து பித்ருக்கள். பித்ருக்களுக்கு எந்த உபசாரம் செய்வதானாலும் எள்தான் பயனாகும். (ஒரு விதி விலக்கு அப்புறம் சொல்கிறேன்) அத்துடன் அவருக்கு செய்யும் பல காரியங்களையும் இடது தோளில் இருக்கும் பூணூலை வலது தோளுக்கு மாற்றி கொண்டு அதாவது ப்ராசீனாவீதி என்பார்கள் - தொங்கும் பூணூலின் கீழ் இடது கை விட்டு வலது தோளுக்கு மாற்றி அணிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். அதே போல எள்ளை எடுக்க மோதிரவிரலும் கட்டைவிரலும் பயனுக்கு வரும். அதை போடுவது, ஜலம் விடுவது போன்றவை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் விழும்படி செய்ய வேண்டும்.
நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது விஸ்வேதேவருக்கு எப்போதுமே தெய்வ பூஜை மாதிரி இடது தோளில் பூணூல், விரல் நுனிகளால் அர்ப்பணம். பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூல்; கையை மறித்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவில் தர்ப்பணம் முதலான விஷயங்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஸ்வேதேவர்கள் இந்த சிரார்த்தத்துக்கு பலத்தை சேர்ப்பதற்காக இங்கே கூடி வருகிறார்கள். இல்லாவிட்டால் சிராத்தம் எனப்து பித்ருக்களை உத்தேசித்ததுதான் இல்லையா? ஆனால் இங்கே விஸ்வேதேவர்கள் என்ற இவர்கள் வருகிறார்கள். புரூரார்த்ரவ சம்ஹிகேப்ப்யஹ என்பார்கள். ஆருணம் வேத பாடத்தில் - சூரியநமஸ்காரம் என்றும் சொல்வர்- பார்த்திருக்கலாம் விஸ்வேதேவர்கள் பற்றிப் பேசப்படுகிறது. மிகவும் பலம் வாய்ந்தவர்கள் அவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்றெல்லாம் வரும். அத்தகைய பலம் விஸ்வேதேவர்கள் இந்த சிரார்த்தத்துக்கு பலம் சேர்ப்பதற்காக வருகிறார்கள். ஆகவே அவர்களும் நம்முடைய பூஜைக்கு உரித்தானவர்கள்தான். மேலும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, December 12, 2021

ஶ்ராத்தம் -5 - விஶ்வேதேவர், ஶ்ராத்தத்துக்கு முன்.




 

வயதாகிவிட்டது. பலதும் மறந்து போகிறது. ஆகவே நோக்கம் வழக்கமான சிராத்தத்தை கொஞ்சம் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டு போவதுதான் என்றாலும் இந்த விஶ்வேதேவர் குறித்து இங்கே ஒரு விஷயம்.

விஶ்வா என்பவள் தக்ஷப் ப்ரஜாபதியின் மகள். அவளுடைய பிள்ளைகள் 12 பேர். அவர்களே விஶ்வேதேவர்கள். இவர்களே சிராத்தங்களில் பலம் சேர்க்க பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள். எந்த மாதிரியான சிராத்தத்தில் யார் யார் வருவர் என்று நிர்ணயம் இருக்கிறது. பார்வணத்தில் ' புரூரவார்த்ரவ ஸம்க்ஞக விஸ்வேதேவர்' என்போம். இந்த ஸம்க்ஞக என்னது? சமிக்ஞை கேள்விப்பட்டு இருப்போம். சிக்னல். அதாவது ஒரு அடையாளம். 'புரூரவார்த்ரவ ஸம்க்ஞக விஸ்வேதேவா என்றால் புரூரவர் ஆர்தரவர் என்ற அடையாளம் கொண்ட விஸ்வேதேவர்கள் என்று பொருள். பூணூல் போன்ற சுப காரியங்களிலும் நாந்தீ சிராத்தம் என்று செய்கிறோம் இல்லையா? அங்கே வரும் விஸ்வேதேவர்கள் வேறு இருவர். ஸத்யர், வஸூ. இதே போல மற்றவை. மஹாளயத்தில் துரு ரோசனர். யாகத்தில் கர்மாங்கமாக செய்யும் சிராத்தத்தில் க்ரது, தக்ஷர். ஸபிண்டீகரணத்தில் காலர், காமுகர். ஸன்யாஸாங்க சிராத்தத்தில் ஸாது, ருரு.



ரைட். இப்போது சிராத்தத்துக்கு முந்தைய நாள் செய்ய வேன்டியவற்றை பார்த்துவிடலாம். ஆமாம். சிராத்தம் என்றால் எப்போது வருகிறது என்று நாமே அறிந்து தயாராக இருக்க வேண்டும். இன்ன நாள் சிராத்தம் என்று தகவல் சொல்லுவது வாத்தியாரின் வேலை இல்லை. ஆனால் நடுவில் எப்போதோ அப்படி ஆக்கி வைத்திருக்கிறோம். "சிராத்தம்ன்னா ரெண்டு நா முன்னாடியா சொல்லறது? முன்னாலேயே சொல்லி இருக்க வேணாமோ? அது வாத்தியாரோட ட்யூட்டி இல்லையோ?” என்று அங்கலாய்த்த பெண்மணியை பார்த்து இருக்கிறேன். தப்பு; அது அவருடைய வேலை இல்லை. எங்கள் தந்தை புதிய பஞ்சாங்கம் வந்த உடனேயே இரண்டு சிராத்த நாட்களையும் குறித்து வைத்துவிடுவார். ‘தமிழ்' மாசமும் பக்‌ஷமும் திதியும் தெரிந்தால் போதும். பஞ்சாங்கத்திலேயே சிராத்த திதி என்று தனியாக கடைசி பத்தியில் கொடுத்து இருக்கிறார்கள். அந்த மாசத்துக்கான பக்கத்தில் வளர்பிறையா தேய் பிறையா என்று கொஞ்சம் கவனத்துடன் பார்த்து திதியை கண்டு கொள்ளலாம்.

 

வரிக்க வேண்டிய பிராமணர்களை (இங்கே யார் யாரை வரிக்கலாம் என்று பார்க்கப்போவதில்லை. பின்னால் எழுதினாலும் எழுதுவேன்.) எல்லோரும் சாப்பிட பிறகு இரவில் அவரது வீட்டுக்குப்போய் வரிக்க வேண்டும் என்று இருக்கிறது. இப்போது நடைமுறையில் இல்லை. ஏன்? யார் வரப்போகிறார்கள் என்றே நமக்குத்தெரியாது. சில சமயம் வாத்தியாருக்கே தெரியாது. நகரங்களில் இது ஆர்கனைஸ் ஆகிவிட்டது. வாத்தியார் அந்த ஆர்கனைசேஷன் பொறுப்பில் இருப்பவருக்கு சொல்லிவிடுவார். அவர் பொறுப்பாக அனுப்பி வைத்துவிடுகிறார்கள்

 

சிராத்தம் வரும் ஒரு மாஸத்திற்கு முன் பரான்னம் சாப்பிடக் கூடாது. அதாவது தன் வீட்டில் மனைவியோ தாயோ சமைத்தது தவிர எதுவும் சாப்பிடக்கூடாது. தற்காலத்தில் ஹோட்டலில் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்ய வேன்டும் போலிருக்கிறது. குரு, மாமா, சகோதரி, மாமனார் இவர்கள் வீட்டு அன்னம் பரான்னமல்ல. இவ்வளவு நாட்கள் நியமம் இருக்க முடியாதென்றால் ஒரு பக்ஷம், அல்லது ஒரு வாரமாவது குறைந்தது 3 நாளாவது பரான்னம் சாப்பிடாமலிருக்க வேண்டும். ஸ்திரீ ஸங்கமும் பாய் மெத்தையும் படுக்கையும் கூடாது. 1 வாரம் முன்னே எண்ணைத் தேய்த்துக் கொள்ளக் கூடாது. இது பெரிய பிரச்சினை இல்லை போலிருக்கிறது. ஏனென்றால் முக்காலே மூன்றுவாசி பேருக்கு இந்த பழக்கம் ஏற்கெனெவே இல்லை!

தேவையான காய்கறிகள், இலை, மளிகை சாமான்கள் ஆகியவற்றை வாங்கி வரவேண்டும். அடுத்த நாளுக்கு தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என்பதை சோதித்துக்கொள்ள வேன்டும்.

அடுத்து சிராத்த நாளில் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.


Thursday, December 9, 2021

ஶ்ராத்தம் -3




 

ஶ்ராத்தம் என்ற சொல்லே ஶ்ரத்தை என்ற சொல்லில் இருந்து வருகிறது. அதாவது நாம் ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, முழு விசுவாசத்துடன், சரியாக கர்மாவை நாம் செய்தால் முழு பலன் கிடைக்கும் என்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியாக செய்ய வேண்டிய கர்மா. அதனால்தான் இதற்கு சிராத்தம் என்று பெயர்.

இந்த சிராத்தத்திற்கு அவசியமாக -குறைந்த பக்‌ஷம் - யார் யார் வேண்டும் என்று பார்த்தால் நிச்சயமாக நடத்தி வைக்கும் வாத்தியார் வர வேண்டும்.

அடுத்ததாக விஶ்வேதேவர் என்று ஒருவர் வர வேண்டும். அடுத்து பித்ருக்களாக வரணம் செய்வதற்கு ஒருவர் வரவேண்டும். மூன்றாவதாக சிராத்த சம்ரக்‌ஷகர் ... இந்த சிராத்தத்தை நல்லபடியாக ரட்சிப்பவர் யார்? அவர் விஷ்ணு. அந்த விஷ்ணுவாக வரணம் செய்வதற்கு ஒருவர் வேண்டும். இந்த காலத்தில் சிராத்தங்களுக்கு உரிய பிராமணர் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றால் இந்த விஷ்ணுவை விட்டுவிடுகிறார்கள். விச்வேதேவருக்கு ஒருவரும் பித்ருக்களுக்கு ஒருவரும் வரச்சொல்லி இரண்டு பிராமணர்களை வைத்து சிராத்தம் நடக்கிறது. இது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. காலத்தை ஒட்டி... தேச கால வர்த்தமானம் என்பார்கள் இல்லையா? அதை ஒட்டி யார் எங்கே எவ்வளவு பேர் இந்த மாதிரி இருக்கிறார்களோ கிடைக்கிறார்களோ அவர்களை வைத்துக் கொண்டுதான் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்தாமல் இருப்பதற்கு நமக்கு வழி இல்லை. ஆகவே நாம் நடத்த வேண்டும்; முடிந்தவரை நல்ல மனிதர்களாக பார்த்து ஆச்சார அனுஷ்டானங்கள் உள்ளவர்களாக பார்த்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் வாத்தியாரைப்பற்றி சொல்வதற்கில்லை. நம்ம வீட்டு வாத்தியார்தான் வருவார். அவரே.. எதாவது பெரிய ஆர்கனைசேஷனாக வைத்துக்கொண்டு வேறு யாரையாவது அனுப்புகிறார் என்றால் அவரிடம் கொஞ்சம் வேண்டிக்கொண்டு கொஞ்சம் சிரத்தையாக, கவனமாக பார்த்து செய்து வைக்கக் கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்.  

 

அடுத்து நாம் வரணம் செய்யும் பிராமணர்கள் முடிந்தவரையில் ஆசார அனுஷ்டானத்துடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபமாவது செய்பவராக இருக்க வேண்டும். சிகை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் நாம் சொல்லப் போனால் அது எந்த காலத்தில் இருக்கிறீர்கள், இது போல யார் அகப்படுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுந்து விடும். ஆமாம் நாமும்தான் சிகை வைத்துக்கொள்ளவில்லை, இல்லையா? ஆகையால் அதை தவிர்க்க வேண்டி இருக்கிறது ஆனால் இந்த காலத்தை ஒழுங்காக த்ரிகால ஸந்தியாவந்தனம் காயத்ரி செய்பவர் கிடைத்தாலே பெரிய விஷயமாக போய்விட்டது. எப்படியும் நாம் செய்திருக்கிற பாவ புண்ணியங்களை பொறுத்துதான் நமக்கு இந்த வரணத்திற்கு பிராமணர்கள் அமைவார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாமே பெரியதாக ஆசார அனுஷ்டானத்துடன் இல்லை என்றால் ஆனால் வருகிறவர்கள் மட்டும் ஆசார அனுஷ்டானத்துடன் இருக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதில் அர்த்தமில்லை இல்லையா? அது தெளிவாக இருக்கிறது.


Tuesday, December 7, 2021

ஶ்ராத்தம் -2




 

முக்கிய விஷயத்துக்குள் போகும் முன் ஒரு சின்ன விஷயம். ஶ்ராத்தம் என்று எழுதுவதே சரி. சிலர் இந்த ஶ வை பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார்கள். அதனால் உலக நடைமுறையை ஒட்டி சிராத்தம் என்று எழுதுகிறேன். இன்னொரு முக்கிய விஷயம் இது சிரார்த்தம் இல்லை. கூடுதல் ர் வராது. ஆனால் பலரும் இப்படி தப்பாக உச்சரிப்பதை பார்க்கலாம். அதனால் சொன்னேன்.
 
சரி, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நாம் இந்த சிராத்தத்தை செய்வது ஔபாசன அக்னியில். திருமணமான அனைத்து அந்தணர்களும் ஔபாசனம் என்னும் அக்னி காரியத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யாதவர்களே பலர். இந்த காலத்தில் ஔபாசனம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது ஆகவே செய்யாதவர்களுக்காக முதலில் ஔபாசன அக்னியை உண்டாக்கி விட்டு, விட்டுபோன காலத்துக்கான ப்ராயச்சித்தங்களையும் செய்த பிறகு இந்த ஔபாசனமானது ஆரம்பிக்கிறது. காலை ஔபாசனம் செய்யப்பட்டு ஶ்ராத்தம் அதன் பின் துவங்குகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த வித்தியாசத்தை உணரவில்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் 'விச்சின்ன ஔபாசன அக்னி சந்தானம்' என்னும் இந்த ஔபாசன அக்னியை மீண்டும் உற்பத்தி செய்வது கொள்ளும் காரியம் ஶ்ராத்தத்தின் ஒரு அங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஒரு வேளை நாம் ஔபாசன அக்னியை பராமரித்து ஔபாசனம் செய்பவராக இருந்தால் அதிலேயே ஶ்ராத்தத்தை செய்ய வேண்டும். அதிலேயே ஶ்ராத்த அன்ன ஹோமத்துக்கான ஹவிஸை தயாரித்துக்கொள்ள வேண்டும். ஒரு சின்ன டம்ளர் அரிசியை களைந்து அதற்கேற்றபடி நீரை ஒரு சிறு குண்டானில் கொதிக்க வைத்து அரிசி இட்ட பதினைந்து இருபது நிமிடங்களில் ஹவிஸ் தயாராகிவிடும். இதுதான் சிரத்தை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. சிலபேர் 'சிரத்தை இருக்கிறது: ஆனால் என்னால் தினசரி ஔபாசனம் எல்லாம் செய்ய முடியவில்லையே' என்றால் சிராத்த பக்ஷத்தின் ஆரம்பத்தில் ஔபாசன அக்னியை தோற்றுவித்து விட்டு சிராத்த நாள் வரைக்கும் தினசரி காலை சாயம் ஔபாசனம் செய்து விட்டு அதில் இந்த ஹவிஸை தயார் செய்து கொள்ளலாம். இது நல்லது. குறைந்தது மூன்று நாட்களாவது இதை செய்து கொண்டிருந்தால் இந்த ஔபாசன அக்னி பலம் வாய்ந்தது என்று சொல்லும் தன்மையை கொண்டிருக்கும். இதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ப்ரம்ஹ யக்ஞம்.
 
அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்ததும் ப்ரம்ஹ யக்ஞம் செய்து வைப்பார்கள். அதே போல இங்கேயும் ஶ்ராத்தம் முடிந்த பிறகு ப்ரம்ஹ யக்ஞம் செய்து வைப்பார்கள். இந்த பிரம்ம யக்ஞம் செய்வது என்பது ஒரு நித்திய கர்மா. அதாவது தினசரி செய்ய வேண்டிய விஷயம். மத்த நாளெல்லாம்தான் செய்யவில்லை, இன்றாவது செய்யட்டுமே என்ற ரீதியில்தான் அவரது வீட்டுக்கு வரும் வாத்தியார்கள் அதை செய்து வைத்துவிட்டு கொடுக்கிறார்கள். மற்றபடி நமக்கு தெரியாது செய்ய முடியாது என்ற நிலை இல்லாமல் சொல்லி செய்து வைப்பதற்கு யாரோ இருக்கிறார்கள், அதனால் பலன் உள்ளது. ஆகவே இந்த கர்மாவை தினசரி செய்ய வேண்டியது. ஶ்ராத்தம் அன்றைக்கும் செய்கிறோம் என்று தெரிந்து கொள்வோம்.
 

Monday, December 6, 2021

ஶ்ராத்தம் -1




 

ராம் ராம். அனைவருக்கும் வணக்கம். நண்பர் பாண்டிச்சேரி ரமேஷ் சில பல நாட்கள் முன்னால் சிராத்தம் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுதான் நிறைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதே நான் எதற்கு எழுத வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் - "இல்லை அந்த புத்தகங்கள் எல்லாம் படித்து தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதனால் நீங்கள் வழக்கம் போல் எளிமையாக பேசி எழுதினால் நன்றாக இருக்கும்" என்றார். அதை கிடப்பில் போட்டுவிட்டு சில நாட்கள் முன்னால் சீரியஸாக அதை செய்யலாம் என்று தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.

 

முதலாவதாக நமக்கு புரிய வேண்டிய விஷயம் என்னவென்றால் சிரார்த்தம் அதாவது பித்ரு பூஜனம் என்கிற இந்த விஷயம் அவசியமாக செய்ய வேண்டியது. அப்பா அம்மா இருப்பவர்கள் செய்யவேண்டி இருக்காது என்றாலும் தன்னுடைய தாய் தந்தையர் அதை சரியாக அனுசரிப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் பார்க்கும்போது பலர் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். காரணத்தில் ஒரு பெரும் பங்கு பித்ரு காரியங்களை செய்யாதது என்பதாக இருக்கிறது. ஆகவே நாம் கட்டாயமாக இதை செய்ய வேண்டும். தேவ காரியங்களுக்கும் பித்ரு காரியங்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. தேவ காரியங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றாலும் செய்யாமல் விட்டு விடுவதிலோ அல்லது மிகச் சுருக்கமாக செய்வதிலோ பெரிய தப்பு என்று சொல்ல முடியவில்லை. ஆனால் பித்ரு காரியங்களை விட்டு விட்டால் இல்லை அதை குறைத்து செய்தால் நிச்சயம் தோஷம் ஏற்படுகிறது. நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ கெட்டது நடக்கும் என்ற பிரச்சனை இருக்கிறது. ஆகவே அதை விட்டுவிட முடியாது.

 

 இன்னொரு விஷயம் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எப்படி தேவ பூஜைகளை காரியங்களை - ஹோமம் போன்றவற்றை நாம் செய்து நல்ல பலனை அடைய முடியுமோ அதேபோல சரியாக உருப்படியாக செய்வதன் மூலம் நாம் பெருத்த பலன்களை பெறலாம். பல விஷயங்களை பித்ரு காரியங்களை சரியாக செய்து அவர்களை திருப்தி செய்வதன் மூலமே நாம் பெற்று விடவும் முடியும். ஆகவே இதுவே இவற்றை ஒழுங்காக செய்வதற்காக விஷயம்.

 

நான் இப்போது பேச இருக்கிற விஷயங்கள் அந்தணர்கள் வேதம் பயின்றவர்கள் வேதத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் எப்படி செய்ய வேண்டும் - அதிலும் கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதை நான் பேசப் போகிறேன். ஏனென்றால் நான் அந்த சூத்திரத்தை சேர்ந்தவன்தான். ஆகவே எனக்கு தெரிந்ததை தானே நான் பேச முடியும்? ஒவ்வொரு சூத்திரத்திலும் ஒவ்வொரு மாதிரி விஷயம் விவரித்திருக்கும்.

 

இருந்தாலும் சில விஷயங்கள் பொதுவானவை. அவரவர் சூத்திரப்படி செய்ய வேண்டியது முக்கியம் என்றாலும் இதை நீங்கள் கேட்டால் சில பொதுவான விஷயங்கள் முழுக்க நமக்கு சரிவர பிடிபடும். ஒரு காரியத்தை என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருப்பதை விட என்ன செய்கிறோம் என்று புரிந்து செய்வது என்பது இன்னும் சிலாக்கியமானது. அதில் இன்னும் அர்த்தம் இருக்கிறது. ஆகவே அடுத்த பதிவிலிருந்து இது பற்றி பார்த்துக்கொண்டு போகலாம்.