Pages

Thursday, December 9, 2021

ஶ்ராத்தம் -3




 

ஶ்ராத்தம் என்ற சொல்லே ஶ்ரத்தை என்ற சொல்லில் இருந்து வருகிறது. அதாவது நாம் ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, முழு விசுவாசத்துடன், சரியாக கர்மாவை நாம் செய்தால் முழு பலன் கிடைக்கும் என்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியாக செய்ய வேண்டிய கர்மா. அதனால்தான் இதற்கு சிராத்தம் என்று பெயர்.

இந்த சிராத்தத்திற்கு அவசியமாக -குறைந்த பக்‌ஷம் - யார் யார் வேண்டும் என்று பார்த்தால் நிச்சயமாக நடத்தி வைக்கும் வாத்தியார் வர வேண்டும்.

அடுத்ததாக விஶ்வேதேவர் என்று ஒருவர் வர வேண்டும். அடுத்து பித்ருக்களாக வரணம் செய்வதற்கு ஒருவர் வரவேண்டும். மூன்றாவதாக சிராத்த சம்ரக்‌ஷகர் ... இந்த சிராத்தத்தை நல்லபடியாக ரட்சிப்பவர் யார்? அவர் விஷ்ணு. அந்த விஷ்ணுவாக வரணம் செய்வதற்கு ஒருவர் வேண்டும். இந்த காலத்தில் சிராத்தங்களுக்கு உரிய பிராமணர் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றால் இந்த விஷ்ணுவை விட்டுவிடுகிறார்கள். விச்வேதேவருக்கு ஒருவரும் பித்ருக்களுக்கு ஒருவரும் வரச்சொல்லி இரண்டு பிராமணர்களை வைத்து சிராத்தம் நடக்கிறது. இது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. காலத்தை ஒட்டி... தேச கால வர்த்தமானம் என்பார்கள் இல்லையா? அதை ஒட்டி யார் எங்கே எவ்வளவு பேர் இந்த மாதிரி இருக்கிறார்களோ கிடைக்கிறார்களோ அவர்களை வைத்துக் கொண்டுதான் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்தாமல் இருப்பதற்கு நமக்கு வழி இல்லை. ஆகவே நாம் நடத்த வேண்டும்; முடிந்தவரை நல்ல மனிதர்களாக பார்த்து ஆச்சார அனுஷ்டானங்கள் உள்ளவர்களாக பார்த்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் வாத்தியாரைப்பற்றி சொல்வதற்கில்லை. நம்ம வீட்டு வாத்தியார்தான் வருவார். அவரே.. எதாவது பெரிய ஆர்கனைசேஷனாக வைத்துக்கொண்டு வேறு யாரையாவது அனுப்புகிறார் என்றால் அவரிடம் கொஞ்சம் வேண்டிக்கொண்டு கொஞ்சம் சிரத்தையாக, கவனமாக பார்த்து செய்து வைக்கக் கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்.  

 

அடுத்து நாம் வரணம் செய்யும் பிராமணர்கள் முடிந்தவரையில் ஆசார அனுஷ்டானத்துடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபமாவது செய்பவராக இருக்க வேண்டும். சிகை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் நாம் சொல்லப் போனால் அது எந்த காலத்தில் இருக்கிறீர்கள், இது போல யார் அகப்படுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுந்து விடும். ஆமாம் நாமும்தான் சிகை வைத்துக்கொள்ளவில்லை, இல்லையா? ஆகையால் அதை தவிர்க்க வேண்டி இருக்கிறது ஆனால் இந்த காலத்தை ஒழுங்காக த்ரிகால ஸந்தியாவந்தனம் காயத்ரி செய்பவர் கிடைத்தாலே பெரிய விஷயமாக போய்விட்டது. எப்படியும் நாம் செய்திருக்கிற பாவ புண்ணியங்களை பொறுத்துதான் நமக்கு இந்த வரணத்திற்கு பிராமணர்கள் அமைவார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாமே பெரியதாக ஆசார அனுஷ்டானத்துடன் இல்லை என்றால் ஆனால் வருகிறவர்கள் மட்டும் ஆசார அனுஷ்டானத்துடன் இருக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதில் அர்த்தமில்லை இல்லையா? அது தெளிவாக இருக்கிறது.


No comments: