Pages

Monday, December 6, 2021

ஶ்ராத்தம் -1




 

ராம் ராம். அனைவருக்கும் வணக்கம். நண்பர் பாண்டிச்சேரி ரமேஷ் சில பல நாட்கள் முன்னால் சிராத்தம் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுதான் நிறைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதே நான் எதற்கு எழுத வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் - "இல்லை அந்த புத்தகங்கள் எல்லாம் படித்து தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதனால் நீங்கள் வழக்கம் போல் எளிமையாக பேசி எழுதினால் நன்றாக இருக்கும்" என்றார். அதை கிடப்பில் போட்டுவிட்டு சில நாட்கள் முன்னால் சீரியஸாக அதை செய்யலாம் என்று தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.

 

முதலாவதாக நமக்கு புரிய வேண்டிய விஷயம் என்னவென்றால் சிரார்த்தம் அதாவது பித்ரு பூஜனம் என்கிற இந்த விஷயம் அவசியமாக செய்ய வேண்டியது. அப்பா அம்மா இருப்பவர்கள் செய்யவேண்டி இருக்காது என்றாலும் தன்னுடைய தாய் தந்தையர் அதை சரியாக அனுசரிப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் பார்க்கும்போது பலர் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். காரணத்தில் ஒரு பெரும் பங்கு பித்ரு காரியங்களை செய்யாதது என்பதாக இருக்கிறது. ஆகவே நாம் கட்டாயமாக இதை செய்ய வேண்டும். தேவ காரியங்களுக்கும் பித்ரு காரியங்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. தேவ காரியங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றாலும் செய்யாமல் விட்டு விடுவதிலோ அல்லது மிகச் சுருக்கமாக செய்வதிலோ பெரிய தப்பு என்று சொல்ல முடியவில்லை. ஆனால் பித்ரு காரியங்களை விட்டு விட்டால் இல்லை அதை குறைத்து செய்தால் நிச்சயம் தோஷம் ஏற்படுகிறது. நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ கெட்டது நடக்கும் என்ற பிரச்சனை இருக்கிறது. ஆகவே அதை விட்டுவிட முடியாது.

 

 இன்னொரு விஷயம் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எப்படி தேவ பூஜைகளை காரியங்களை - ஹோமம் போன்றவற்றை நாம் செய்து நல்ல பலனை அடைய முடியுமோ அதேபோல சரியாக உருப்படியாக செய்வதன் மூலம் நாம் பெருத்த பலன்களை பெறலாம். பல விஷயங்களை பித்ரு காரியங்களை சரியாக செய்து அவர்களை திருப்தி செய்வதன் மூலமே நாம் பெற்று விடவும் முடியும். ஆகவே இதுவே இவற்றை ஒழுங்காக செய்வதற்காக விஷயம்.

 

நான் இப்போது பேச இருக்கிற விஷயங்கள் அந்தணர்கள் வேதம் பயின்றவர்கள் வேதத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் எப்படி செய்ய வேண்டும் - அதிலும் கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதை நான் பேசப் போகிறேன். ஏனென்றால் நான் அந்த சூத்திரத்தை சேர்ந்தவன்தான். ஆகவே எனக்கு தெரிந்ததை தானே நான் பேச முடியும்? ஒவ்வொரு சூத்திரத்திலும் ஒவ்வொரு மாதிரி விஷயம் விவரித்திருக்கும்.

 

இருந்தாலும் சில விஷயங்கள் பொதுவானவை. அவரவர் சூத்திரப்படி செய்ய வேண்டியது முக்கியம் என்றாலும் இதை நீங்கள் கேட்டால் சில பொதுவான விஷயங்கள் முழுக்க நமக்கு சரிவர பிடிபடும். ஒரு காரியத்தை என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருப்பதை விட என்ன செய்கிறோம் என்று புரிந்து செய்வது என்பது இன்னும் சிலாக்கியமானது. அதில் இன்னும் அர்த்தம் இருக்கிறது. ஆகவே அடுத்த பதிவிலிருந்து இது பற்றி பார்த்துக்கொண்டு போகலாம்.


No comments: