Pages

Friday, March 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 1



”என்னப்பா இன்னைக்கு கோவமா இருக்கே?” ன்னு கேட்டார் டீக்கடைக்காரர்.
”ஹும்! நேத்து சிவராத்திரியா? கோவிலுக்கு போனேன். திரும்பி வந்து பாத்தா என் பைக்கை காணலை. இங்க கோவில்ல வேண்டிக்கலாம்ன்னு வந்தா … அங்க பாருங்க!” என்றான் இளைஞன்.

’அப்ப வரேங்க’ என்றவாறு விடை பெற்றுக்கொண்டு இருந்தனர் போலீஸ் ஏட்டும் ஒரு காவலரும். “கோவில்லேயே திருட்டு! தன் சொத்தையே காப்பாத்திக்க தெரியாதவர என் சொத்த காப்பாத்தி கொடுக்கப்போறாரா? சாமிக்கு சக்தி இருக்கான்னே சந்தேகமா இருக்கு!”

”இது என்ன கோவில்?” கேள்வி வந்தது ஒரு வயதான பெரியவரிடம் இருந்து. வழுக்கைத்தலை. இருந்த கொஞ்சம் முடியும் வெள்ளிக்கம்பி போல இருந்தது, படித்துக்கொண்டு இருந்த பேப்பரை தாழ்த்திக்கொண்டு கேட்டார்.

பிள்ளையார் கோவில்!
உள்ளே சாமி இருக்கா இல்லையா?
இருக்குன்னுதான் இவ்ளோ நாள் நினைச்சுகிட்டு இருந்தேன்.
அதோ அங்கே இருக்கற கோவில்?
துர்கை. சக்தி வாஞ்ச அம்மன். இப்ப அங்க போலாமான்னுதான் யோசிக்கிறேன்.
ஓஹோ. அது பக்கத்திலேயே எதோ கோவிலாட்டம் இருக்கே?
நீங்க வெளியூரா? அது பெருமா கோவில்.
அங்கே எல்லாமும் சாமி இருக்கா?
ஆமா அதுல என்ன சந்தேகம்?
அப்ப சாமி இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு, அதுக்கு பக்கத்திலேயும் இருக்கு? அதெப்படி?
என்ன சொல்றீங்க? சாமி இல்லாத எடம் இருக்கா என்ன?
! அதான் கேட்டேன். பேரு, உருவம் வேற ஆனாலும் அது ஒரே சாமிதான். இப்ப இங்க என்ன காணாமப்போச்சாம்?
இது சின்ன கோவில். பெரிசா ஒண்ணுமில்லே. பூச சாமான் பொக போடறது மணி தட்டு… இப்படி பலது காணாமப்போச்சாம்.
! அப்ப கோவில் நிர்வாகம் பண்ணறவங்க கொஞ்சம் பாவம்தான். அதெல்லாம் திருப்பியும் வாங்கணும். ஆமா, அதுல பிள்ளையாருக்கு என்ன நட்டம்?
என்ன கேக்கறீங்க?
சாமி இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு. அது இல்லாத இடம் இல்லைன்னு சொன்ன இல்லையா? இப்ப காணாமப்போன பொருள் எல்லாம் அந்த சாமியோட ராஜ்யத்த தாண்டி எங்கேயாவது போச்சா என்ன?
இளைஞன் யோசனையில் ஆழ்ந்தான். ம்ம்ம்ம்… காணாம போனத திருடன் என்ன பண்ணுவான். எங்கயானா விப்பான். வாங்கறவங்க என்ன செய்வாங்க? பொக போடற கரண்டி, மணி எல்லாத்தையும் என்னதான் செய்ய முடியும்? அது எல்லாம் வேற இடத்தில சாமிக்கு பயன்படுத்துவாங்க இல்லியா?

நீங்க சொல்லறது... என்று ஆரம்பித்த இளைஞன் திரும்பிப்பார்த்தான். காலி பெஞ்சில் பேப்பர் படபடத்துக்கொண்டு இருந்தது!

Thursday, March 10, 2016

ஜீவனின் சரித்திரம் - 14


பரம புருஷார்த்தமான ஆத்மாவை அறியாததால்தான் அனர்த்த பரம்பரையே உருவாகி இருக்கிறது. ஆத்மாவை அறிய குருவாக வாஸுதேவனை (ம்க்கும்!) குருவாக ஏற்று பரமபக்தி செய்யாமல் அஞ்ஞானம் அழியாது. அந்த திட பக்தி ஞானத்தையும் வைராக்கியத்தையும் தரும். பகவானின் குணங்களையே த்யானித்து, கேட்டு, சொல்லி, படித்து, நிர்மலமான மனதுடைய சாதுக்கள் இருக்குமிடத்திலேயே ரமிப்பவனாக இருப்பின் பசி தாகம், சோகம், மோஹம் முதலிய பிணிகள் அவனைத்தீண்ட மாட்டா.

நான்’ ’என்’ என்னும் அஹங்கார மமகாரங்களை உடையவனாகத்தான் நாம் பலரும் இருக்கிறோம். நம் பரமார்த்த சொரூபத்தை மறந்து இந்த உடலே நான் என்று நினைக்கிறோம். புத்தியும் மனமும் இயக்கும் வழியில் நாம் சற்றும் சிந்தியாமல் நடந்து கொள்கிறோம். அந்த செயல்களால் ஏற்படும் சுக துக்கங்களை அனுபவிக்கிறோம். ஆனால் நம் உண்மை சொரூபமான அந்த ஆத்மாவை அறியாதவராக இருக்கிறோம். அப்படி இருந்தால் புரஞ்ஜனன் பட்ட துயரங்கள் அனைத்தும் பட வேண்டியதுதான்.

எப்படி இருக்க வேண்டும் என்பதை மலயத்வஜன் கதை சொல்லுகிறது. பெரிய வீரனாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு புத்திரர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு ஞானத்தை தேடிச்செல்கிறார். புனித நீர்நிலைகளில் தன் பாபங்களை கழுவி ஏகாந்தத்தில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டு ஞானத்தை அடைந்து பரப்ரம்ஹத்தில் கலக்கிறார். அவரது பத்னியும் தன் கணவனுக்கு பணிவிடை செய்வது என்ற ஒரே தர்மத்தை கடைபிடித்து அதன் மூலமே பரமாத்மாவின் நினைவு வந்து உபதேசம் பெற்று பூரணமாகிறாள்.

-நிறைந்தது-

Wednesday, March 9, 2016

ஜீவனின் சரித்திரம் - 13



வருடமே கந்தர்வராஜா. பகல்கள் கந்தர்வர்கள். இரவுகள் கந்தர்வ பெண்கள். இவர்கள் சுற்றிச் சுற்றி வந்து ஆயுளை அபகரிக்கின்றனர்.
கால கன்னிகை மூப்பு. அவளை யாரும் விரும்புவதில்லை. (யயாதியின் மகன் புரு மட்டுமே விரும்பி ஏற்றான்.) உலகை அழிக்க யவனன் இவளை தங்கையாக கொள்கிறான். உடல் வியாதிகளும் மனோ வியாதிகளும் இவனது சேனை வீரர்கள். ப்ரஜ்வாரம் என்பது ப்ராணிகளை அழிக்கும் கொடிய நோய். நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களில் அஞ்ஞானத்துடன் ஜீவன் உழலுகிறான். உண்மையில் குணமில்லாதவனானாலும் உடல், ப்ராணன், புலன்கள், மனது இவற்றின் நன்மை தீமைகளை தனதாக எண்ணி சிற்றின்பங்களையே ‘நான்’ ‘எனது’ என்று நினைத்துக்கொண்டே அனுபவிக்கிறான்.
பரமாத்மாவின் நினைவு இல்லாததால் மாயையில் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். (அந்த நினைவு இருக்க வேண்டும் என்று உதாரணமாக மலையத்வஜன் கதை பின்னால் சொல்லப்பட்டது) முக்குணங்களை ஒட்டி நல்ல/ கெட்ட செயல்களை செய்து அதன் கர்ம பலனாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவை ஆணாகவோ பெண்ணாகவோ விலங்காகவோ தேவராகவோ கர்ம பலனை ஒட்டி அமைகின்றன. பசியால் வாடும் நாய் ஒன்று வீட்டில் இருந்து வீடாக சென்று தன் கர்ம பலனை ஒட்டி உணவோ கல்லடியோ பெற்றுக்கொண்டு திரிவது போல இவனும் செய்கிறான். எப்போதும் ஏதோ ஒரு துக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை நீக்க முயன்றால் வேறு ஒரு துக்கம் வந்து சேரும். தலையில் இருக்கும் பாரத்தை தோளுக்கு மாற்றுவது போலத்தான் இருக்கும். ஞானமில்லாமல் ஒரு கர்மா இன்னொரு கர்மாவை முழுமையாக சமன் செய்ய இயலாது. கனவினுள் கனவு காணும்போது உள் கனவு முடிந்தாலும் எப்படி முழிப்பு ஏற்படாதோ அப்படி ஒன்றுக்கு பதிலாக இன்னொரு கர்மா செய்தாலும் உதவாது.
உண்மையில் இந்த உடல், புலன், விஷயங்கள் இல்லை என்றாலும் சம்சாரம் விடுவதில்லை! கனவு பொய்யானாலும் அதால் ஏற்படும் அனுபவம் (சுக துக்கங்கள்) மெய் அல்லவா?

Tuesday, March 8, 2016

ஜீவனின் சரித்திரம் - 12



இடது கண் வலதை விட சற்று பிரகாசம் குறைந்தது எனப்படுகிறது. ஆகவே அது மின்மினிப்பூச்சி. இந்த இரண்டு கண்களாலும் பிரகாசப்படுத்தப்படுபவை மட்டுமே பார்க்கப்படும். நாசிகளால் வாசனை தெரிகிறது. முக்யம் என்ற பெரிய வாயில் வாய். அதன் வழியே வெளியே செல்லும் கடைச்சரக்கு சொற்கள். உள்ளே வருவன உணவு.
காதுகளால் கர்ம சாஸ்திரங்களையும் மோக்‌ஷ சாஸ்திரங்களையும் கேட்டு அறிகிறான். ஆசுரி வழியாக சிற்றின்பத்தை அனுபவிக்கிறான். நிர்ருதி மலத்துவாரம் ஆகும்.
குருடர்களான பொற்கொல்லன் நீதிபதி ஆகியோரில் நீதிபதி கால்கள். செல்ல வேண்டிய வழியில் நடத்துவதால் நீதிபதி. பொற்கொல்லன் கைகள். பொருட்களை வடிவமைப்பதால். இரண்டும் துவாரங்கள் இல்லை என்பதை குறிக்க குருடர்கள் எனப்பட்டனர்.
அந்தப்புரம் என்பது ஹ்ருதயம். மனமே அங்குள்ள விஷயங்கள். அங்கே அவன் மயக்கத்தையும் திருப்தியையும் கிளர்ச்சியையும் அடைகிறான். இவையே சத்வ, ரஜோ, தமோ குணங்களின் பரிணாமங்கள்,
அவள் செய்வதை அனைத்தையும் இவன் செய்தான் எனில் கர்மத்தால் கட்டுண்டு புத்தி செய்வதை ஆத்மா தான் செய்வதாக நினைக்கிறான் எனப்பொருள்.
அவன் வேட்டைக்கு கிளம்பினான் இல்லையா? அந்த உடலே ரதம். புலன்கள் குதிரைகள். காலத்தின் வேகமே ரதத்தின் வேகம். அஹங்காரம், மமகாரம் என இரண்டு தண்டங்கள். புண்ணியமும் பாபமும் சக்கரங்கள். மாயை அதன் அச்சு. முக்குணங்களே கொடிகள். ஐந்து ப்ராணன்கள் பூட்டுகள்.மனதே கடிவாளம். புத்தி தேரோட்டுபவன், ஹ்ருதயம் ஆசனம், சோகமும் மோஹமும் குதிரைகளை கட்டுமிடம், ஐந்து புலன் விஷயங்கள் ஆயுதங்கள், தோல் முதல் சுக்ரசோணிதம் வரை ஏழு தாதுக்கள் கவசங்களாக சொல்லப்பட்டன. ஐந்து கர்மேந்திரியங்களும் நகரும் திறனாகும். அவன் வேட்டையில் ஈடுபட்டது விஷய கேளிக்கைகள்.
(ஏற்கெனெவே நகரமே உடல் என்றெல்லாம் சொல்லியாயிற்றே; இப்ப இது என்ன திருப்பி? என்றால்.. இது இன்னொரு பரிமாணம். புத்தி/ மனம் நல்ல வாசனைகளை சார்ந்து இருக்கலாம். அப்போது அது நல்ல மனசு என்றோ நல்ல புத்தி என்றோ சொல்லப்படுகிறது. கெட்ட வாசனைகளை சார்ந்து நிற்கும் போது கெட்ட மனது என்றோ கெட்ட புத்தி என்றோ சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட வாசனைகளால் தூண்டப்பட்டு ‘கெட்ட’ காரியங்களை செய்கிறோம். பின்னர் இதில் களித்து களைத்து திரும்பும் போது, ’நல்ல’ புத்தி நம்மை கடிந்து கொள்கிறது. ’இல்லை இல்லை இனிமே இப்படி செய்யவே மாட்டேன்’ என்றெல்லாம் நமக்கு நாமே உற்தி மொழி கொடுத்து சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். திருப்பி வாசனைகள் அதற்கே இழுத்துக்கொண்டு போகும் என்பது வேறு விஷயம்! இதையே இந்த இடத்தில் சொல்லி இருக்கிறதாக எடுத்துக்கொள்ளலாம்.)

Monday, March 7, 2016

மஹா ஶிவராத்திரி ஸ்பெஷல்….


மஹா ஶிவராத்திரி ஸ்பெஷல்…. 
ஶிவ அஷ்டோத்திர  ஶத நாமாவளி...
நிதானமாக கேட்க. 9 நிமிடங்கள். 9 எம்.பி.
பொருளுடன் உரை முந்தைய பதிவுகளில் - இங்கே துவங்கி 11 பதிவுகள். நாலு காலமாக  இருப்பதால் பெரிதாகி படிக்க வேண்டி இருக்கிறது.

நிதானமாக கேட்க ஒலி வடிவம். 9 நிமிடங்கள். 9 எம்.பி.