Pages

Thursday, March 10, 2016

ஜீவனின் சரித்திரம் - 14


பரம புருஷார்த்தமான ஆத்மாவை அறியாததால்தான் அனர்த்த பரம்பரையே உருவாகி இருக்கிறது. ஆத்மாவை அறிய குருவாக வாஸுதேவனை (ம்க்கும்!) குருவாக ஏற்று பரமபக்தி செய்யாமல் அஞ்ஞானம் அழியாது. அந்த திட பக்தி ஞானத்தையும் வைராக்கியத்தையும் தரும். பகவானின் குணங்களையே த்யானித்து, கேட்டு, சொல்லி, படித்து, நிர்மலமான மனதுடைய சாதுக்கள் இருக்குமிடத்திலேயே ரமிப்பவனாக இருப்பின் பசி தாகம், சோகம், மோஹம் முதலிய பிணிகள் அவனைத்தீண்ட மாட்டா.

நான்’ ’என்’ என்னும் அஹங்கார மமகாரங்களை உடையவனாகத்தான் நாம் பலரும் இருக்கிறோம். நம் பரமார்த்த சொரூபத்தை மறந்து இந்த உடலே நான் என்று நினைக்கிறோம். புத்தியும் மனமும் இயக்கும் வழியில் நாம் சற்றும் சிந்தியாமல் நடந்து கொள்கிறோம். அந்த செயல்களால் ஏற்படும் சுக துக்கங்களை அனுபவிக்கிறோம். ஆனால் நம் உண்மை சொரூபமான அந்த ஆத்மாவை அறியாதவராக இருக்கிறோம். அப்படி இருந்தால் புரஞ்ஜனன் பட்ட துயரங்கள் அனைத்தும் பட வேண்டியதுதான்.

எப்படி இருக்க வேண்டும் என்பதை மலயத்வஜன் கதை சொல்லுகிறது. பெரிய வீரனாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு புத்திரர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு ஞானத்தை தேடிச்செல்கிறார். புனித நீர்நிலைகளில் தன் பாபங்களை கழுவி ஏகாந்தத்தில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டு ஞானத்தை அடைந்து பரப்ரம்ஹத்தில் கலக்கிறார். அவரது பத்னியும் தன் கணவனுக்கு பணிவிடை செய்வது என்ற ஒரே தர்மத்தை கடைபிடித்து அதன் மூலமே பரமாத்மாவின் நினைவு வந்து உபதேசம் பெற்று பூரணமாகிறாள்.

-நிறைந்தது-

No comments: