Pages

Wednesday, March 9, 2016

ஜீவனின் சரித்திரம் - 13



வருடமே கந்தர்வராஜா. பகல்கள் கந்தர்வர்கள். இரவுகள் கந்தர்வ பெண்கள். இவர்கள் சுற்றிச் சுற்றி வந்து ஆயுளை அபகரிக்கின்றனர்.
கால கன்னிகை மூப்பு. அவளை யாரும் விரும்புவதில்லை. (யயாதியின் மகன் புரு மட்டுமே விரும்பி ஏற்றான்.) உலகை அழிக்க யவனன் இவளை தங்கையாக கொள்கிறான். உடல் வியாதிகளும் மனோ வியாதிகளும் இவனது சேனை வீரர்கள். ப்ரஜ்வாரம் என்பது ப்ராணிகளை அழிக்கும் கொடிய நோய். நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களில் அஞ்ஞானத்துடன் ஜீவன் உழலுகிறான். உண்மையில் குணமில்லாதவனானாலும் உடல், ப்ராணன், புலன்கள், மனது இவற்றின் நன்மை தீமைகளை தனதாக எண்ணி சிற்றின்பங்களையே ‘நான்’ ‘எனது’ என்று நினைத்துக்கொண்டே அனுபவிக்கிறான்.
பரமாத்மாவின் நினைவு இல்லாததால் மாயையில் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். (அந்த நினைவு இருக்க வேண்டும் என்று உதாரணமாக மலையத்வஜன் கதை பின்னால் சொல்லப்பட்டது) முக்குணங்களை ஒட்டி நல்ல/ கெட்ட செயல்களை செய்து அதன் கர்ம பலனாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவை ஆணாகவோ பெண்ணாகவோ விலங்காகவோ தேவராகவோ கர்ம பலனை ஒட்டி அமைகின்றன. பசியால் வாடும் நாய் ஒன்று வீட்டில் இருந்து வீடாக சென்று தன் கர்ம பலனை ஒட்டி உணவோ கல்லடியோ பெற்றுக்கொண்டு திரிவது போல இவனும் செய்கிறான். எப்போதும் ஏதோ ஒரு துக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை நீக்க முயன்றால் வேறு ஒரு துக்கம் வந்து சேரும். தலையில் இருக்கும் பாரத்தை தோளுக்கு மாற்றுவது போலத்தான் இருக்கும். ஞானமில்லாமல் ஒரு கர்மா இன்னொரு கர்மாவை முழுமையாக சமன் செய்ய இயலாது. கனவினுள் கனவு காணும்போது உள் கனவு முடிந்தாலும் எப்படி முழிப்பு ஏற்படாதோ அப்படி ஒன்றுக்கு பதிலாக இன்னொரு கர்மா செய்தாலும் உதவாது.
உண்மையில் இந்த உடல், புலன், விஷயங்கள் இல்லை என்றாலும் சம்சாரம் விடுவதில்லை! கனவு பொய்யானாலும் அதால் ஏற்படும் அனுபவம் (சுக துக்கங்கள்) மெய் அல்லவா?

No comments: