Pages

Friday, April 22, 2011

யோக சாஸ்திரம் நிறைவு...




  पुरुषार्थशून्यानां गुणानां प्रतिप्रसवः कैवल्यं स्वरूपप्रतिष्ठा वा चितिशक्तिरिति ।।34।।
புருஷார்த²ஶூந்யாநாம்° கு³ணாநாம்° ப்ரதிப்ரஸவ​: கைவல்யம்° ஸ்வரூபப்ரதிஷ்டா² வா சிதிஶக்திரிதி || 34||

புருஷார்த²ஶூந்யாநாம்° = இனி செய்ய வேண்டிய புருஷார்த்தங்கள் இல்லாத; கு³ணாநாம்° = (புத்தி முதலிய பரிணாமங்களை அடைந்த சத்வம் முதலான) குணங்களின்; ப்ரதி ப்ரஸவ​: = தத்தம் காரணத்தில் ஏற்படும் லயத்தால் ப்ரக்ருதியில் ஒடுங்கி விடுதலானது; கைவல்யம்° =கைவல்யம் எனப்படும்; ஸ்வரூப = சொந்த ரூபத்தில்; ப்ரதிஷ்டா² = நிலை பெறல்; வா = அல்லது; சிதிஶக்தி = சத் சக்திக்கு; இதி = இவ்வாறு (யோக சாஸ்திரம் நிறைவுற்றது)

ஸத்வம் முதலான குணங்கள் புத்தி முதலிய பரிமாணங்களை அடைகின்றன. போகம், விவேக க்யாதி என்ற இரண்டு குணங்களையும் ஒரு புருஷனுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டால் அவற்றின் காரியம் அத்துடன் முடிந்துவிடும். அவை சம்பாதித்து கொடுக்க வேண்டிய புருஷார்த்தம் ஏதும் இல்லை. வேலை இல்லாததால் அவை தாம் வந்த வழியே தம் தம் காரணத்தில் லயமடைகின்றன. மனதில் உள்ள ஸமாதி நிரோதம், வ்யுத்தானம் ஆகியன மனதிலும், மனம் அஹம் தத்துவத்திலும், அஹம் தத்துவம் மஹத் தத்துவத்திலும், மஹத் ப்ரதானத்திலும் லயமாகும். ஒரு தனி நபரின் விஷயத்தில் இதுதான் மோக்ஷமாகும்.

இன்னொரு வழியில் சொல்ல சுத்த சைதன்யமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலகி, தன் உண்மையான சொரூபத்தில் நிலை பெறுதல் மோக்ஷம் ஆகும். இந்த யோக சாத்திரத்தில் சொல்லியுள்ள சாதன அனுஷ்டானத்தால் ஒவ்வொருவரும் புருஷ விவேக ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பது தெளிவு.

इति पातञ्जलि योगसूत्रं सम्पूर्णम् ।।
இதி பாதஞ்ஜலி யோக³ஸூத்ரம்° ஸம்பூர்ணம் ||
ॐ शान्तिः शान्तिः शान्तिः ।
ஓம்° ஶாந்தி​: ஶாந்தி​: ஶாந்தி​: |
சுபம்!

Thursday, April 21, 2011

பரிணாமத்தில் இருக்கும் கிரமம்:




 क्षणप्रतियोगी परिणामापरान्तनिर्ग्राह्यः क्रमः ।।33।।

க்ஷணப்ரதியோகீ³ பரிணாமாபராந்தநிர்க்³ராஹ்ய​: க்ரம​: || 33||

க்ஷணப்ரதியோகீ³ = க்ஷண ஸமூஹத்தை நிமித்தமாக உடையதாகிறது; பரிணாம = மாறுதலின்; அபராந்த = முடிவினால்; நிர்க்³ராஹ்ய​: = கிரகிக்க முடியாமல், ஊஹிக்கப்படுவதாக: க்ரம​: = க்ரமம் என்பது;

ஒரு மாறுதலின் ரூபம் மாறுதல் முடிந்த பிறகே தெரிய வரும். இடைநிலையில் அது முழுவதுமாக தெரிய வராது. குறித்த நேரத்தில் குறிப்பிட்டதாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். அதற்கு மேல் சொல்ல முடியாது. அதனால் அது ஊகித்து அறியப்படுவதாகிவிடும். ஆகவே க்ரமம் என்பது நேரத்தை சார்ந்ததாகிறது.

யோக சித்தாந்தப்படி புருஷன் நீங்கலான எல்லாம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில வஸ்துக்களின் மாறுதல் கிரமம் நேரடியாக தெரிகிறது. சில அனுமானத்தால் அறியக்கூடும்.

மண்ணை பிசைந்து குயவன் மண் உருண்டை ஆக்குகிறான். பின் அதை குடமாக ஆக்குகிறான். குடம் உடைந்தால் ஓட்டஞ்சில்லு ஆகிறது. பின் அது பொடிந்து மண் பொடி ஆகிறது. இப்படி மாறுதல் பிரத்யக்ஷமாக தெரிகிறது. இதே போல் ஒரு துணியை வாங்கி பெட்டியில் வைத்து பல காலம் கழித்து பார்த்தால் அது வலு குறைந்து காணப்படுகிறது.
அநித்திய வஸ்துக்கள் அல்லாமல் நித்ய வஸ்துக்களுக்கும் பரிணாமம் இதே போல உண்டா என்று கேட்டால், எது நித்தியம் என்று ஒரு கேள்வி எழுகிறது. நித்தியம் இரு வகையாகும். ஒன்று கூடஸ்த நித்தியம். இரண்டாவது பரிணாமி நித்தியம். புருஷ தத்துவத்தில் பரிணாமம் இல்லை. அதனால் அது எப்போதுமே நித்தியம். ஸத்வம் முதலிய குணங்கள் பரிணாமி நித்தியம் ஆகும்.

புத்தி அநித்தியமானது; மாறுதல் அடையக்கூடியது. ராகம் முதலான இந்த மாறுதல்களுக்கு ஒரு முடிவு உள்ளது- விவேக க்யாதி ஏற்பட்டால் இவை முடிந்துவிடும். உற்பத்தி கிரமத்துக்கும் மாறான கிரமத்தில் லயம் ஏற்பட்டுவிடும். (எங்கிருந்து வந்ததோ அங்கேயே வந்த வழியிலேயே பின் நோக்கிப்போய் சேரும்) ஆனால் இப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. கல்ப கோடி காலம் ஆனால் ஒருவர் முக்தி அடைகிறார்கள். உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது.

Wednesday, April 20, 2011

முக்குணங்களின் சுபாவம்:



ततः कृतार्थानां परिणामक्रमसमाप्तिर्गुणानाम् ।।32।।

தத​: க்ரு«தார்தா²நாம்° பரிணாமக்ரமஸமாப்திர்கு³ணாநாம் || 32||

தத​: =பர வைராக்கியம் ஏற்பட்ட பின்; க்ரு«தார்தா²நாம்° =செய்ய வேண்டியவற்றை செய்து முடித்த: கு³ணாநாம் = ஸத்வம் முதலான குணங்களுக்கு; பரிணாம க்ரம ஸமாப்தி: = மாறுதலின் வரிசையின் முடிவு (உண்டாகின்றது)

முக்குணங்களுக்கு வேலை இல்லையெனில் அவை பரிணாமம் ஏதும் அடையாமல் இருந்துவிடும். விவேக க்யாதி ஏற்பட்ட பின் சரீரத்தையோ இந்திரியங்களையோ அவை உண்டு பண்ணுவதில்லை. இதனால் விவேகம் அடைந்த புருஷனை பொறுத்த வரை அவற்றின் மாறுதலுக்கு முடிவு ஏற்படுகிறது.

Tuesday, April 19, 2011

தர்மமேகஸமாதி அடைந்தவனின் சித்தம்:




तदा सर्वावरणमलापेतस्य ज्ञानस्याऽऽन्त्याज्ज्ञेयमल्पम् ।।31।।

ததா³ ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞாநஸ்யா''ந்த்யாஜ்ஜ்ஞேயமல்பம் || 31||

ததா³ = அதனால் (தர்மமேகஸமாதியால்) ஸர்வ =எல்லா; ஆவரண = மறைப்பு; மலா = அழுக்கு; பேதஸ்ய = விலகுதல்; ஜ்ஞாநஸ்ய = ஞானத்தின்; ஆநத்யாத் = ஆநந்தத்தின்; ஜ்ஞேயம் = அறியத்தக்கன; அல்பம் = மிகக்குறைவாக (ஆகிறது)

தர்மமேக ஸமாதியில் இல்லாதபோது சித்தத்தின் நிலை என்ன?
சித்தம் முதலில் தமோ குணத்தால் மூடப்பட்டு இருந்தது. அதனால் ரஜோ குணம் மட்டுமே அதை ஏதோ சில விஷயங்களில் அதை தூண்ட முடிந்தது. சிறிது தமோ குணம் விலக பின் ஏதோ சில வஸ்துக்களை மட்டும் க்ரஹிக்கும் சக்தி பெற்றது.

தர்மமேகஸமாதியை அடைந்த சித்தத்தின் ரஜோ தமோ அழுக்குகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. சித்த தத்துவத்தை மறைத்த அவித்யை முழுதும் விலகுகிறது. ஆதலால் சித்தம் நிர்மலமாகிறது. சாதாரணாமாக அறியத்தக்க பிரபஞ்சம் மிகச்சிறிதாக ஆகிறது. எப்படி ஒரு குடம் கடலின் நீர் அனைத்தையும் அடக்க போதுமானதில்லையோ, ஒரு பூச்சி வானத்தை மறைக்க போதுமானதில்லையோ அது போல் சித்தத்தின் அறியும் திறனுக்கு தீனி போட இந்த அறியத்தக்க பிரபஞ்சம் போதுமானதில்லை. இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.

Monday, April 18, 2011

தர்மமேக ஸமாதியின் பலன்:



ततः क्लेशकर्मनिवृत्तिः ।।30।।
தத​: க்லேஶகர்மநிவ்ரு«த்தி​: || 30||

தத​: = அதனால் (தர்மமேகஸமாதியால்) க்லேஶ = அவித்யா முதலான 5 க்லேசங்களின்; கர்ம = புண்ணியம் பாபம் ஆகிய கர்மங்களின்; நிவ்ரு«த்தி​: = முடிவும் (முழுமையாக ஏற்படுகிறது)

தர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.


Friday, April 15, 2011

தர்மமேக ஸமாதி:




प्रसंख्यानेऽप्यकुसीदस्य सर्वथा विवेकख्यातेर्धर्मेघः समाधिः ।।29।।

ப்ரஸம்°க்²யாநே'ப்யகுஸீத³ஸ்ய ஸர்வதா² விவேகக்²யாதேர்த⁴ர்மேக⁴​: ஸமாதி⁴​: || 29||

ப்ரஸம்°க்²யாநே அபி = ப்ரக்ருதி- புருஷ- விவேக- ஞானத்தின் பலனான எல்லாவற்றையும் ஒன்றாக காண்பது (விவேக ப்ரசங்க்யானம்), எல்லாவற்றையும் அறிவது (ஸர்வ க்ஞாத்ருத்வம் ) முதலானவற்றில் கூட; அகுஸீத³ஸ்ய = ஆசை வைக்காதவனுக்கு; ஸர்வதா² = எப்போதும், நிரந்தரமாய்; விவேக க்²யாதே: =விவேக ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதால்; த⁴ர்மேக⁴​: ஸமாதி⁴​: = தர்மமேகஸமாதி ஏற்படுகிறது.

விவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது. அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது. அப்படிப்பட்டவனுக்கு எப்போதும் விவேக ஸாக்ஷாத்காரமே இருக்கிறது. வேறு ஒரு ப்ரத்யயமும் (தடையும்) ஏற்படுவதில்லை. அதுவே தர்மமேகஸமாதி ஆகும். அசுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.


Thursday, April 14, 2011

வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை அழித்தல்:




  हानमेषां क्लेशवदुक्तम् ।।28।।

ஹாநமேஷாம்° க்லேஶவது³க்தம் || 28||

ஹாநம் =முற்றிலும் விடுபடுதல்; ஏஷாம்° = இவற்றுக்கு (வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு); க்லேஶவத்³= க்லேசங்களை போன்றதாக: உக்தம் = சொல்லப்பட்டுள்ளது.

வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு முற்றிலும் அழிவு க்லேசங்களை போன்றதாக சொல்லப்பட்டுள்ளது. க்லேசங்கள் எப்படி அழியும்? பாதம் 2 முதல் சூத்திரம் முதல் சொன்னவற்றில் இருந்து: முதலில் க்ரியா அனுஷ்டானத்தால் அதை தேயச்செய்து, பின் விவேக க்யாதி உண்டாகி, முதிர்ச்சி அடைய ஸம்ஸ்காரங்கள் பொசுக்கப்பட்டு, பின் முற்றிலும் அழியும் என்று அறிந்தோம். அதேதான் இங்கும். விவேக க்யாதி முதிர முதிர அது வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.


Wednesday, April 13, 2011

வ்யுத்தான ப்ரத்யயம்:



तच्छिद्रेषु प्रत्ययान्तर्णि संस्कारेभ्यः ।।27।।

தச்சி²த்³ரேஷு ப்ரத்யயாந்தர்ணி ஸம்°ஸ்காரேப்⁴ய​: || 27||

தச்சி²த்³ரேஷு = விவேக க்யாதி ரூபமான சித்த விருத்தி தாரையின் இடைவெளிகளில்; ஸம்°ஸ்காரேப்⁴ய​: = வேறு விதமான சித்தவிருத்தியை உண்டு பண்ணுகிறதாயும், வாஸனா ரூபமாயும் இருக்கிற ஸம்ஸ்காரங்களில் இருந்து; ப்ரத்யயாந்தர்ணி = நான் என்னுடையது என்பதற்கு வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன.

விவேக க்யாதி ரூப சித்தவிருத்தியில் இருப்பவன் மோக்ஷத்தில் நிலைத்து இருக்கிறான். இதில் எல்லா நேரமும் இருக்கும் நிலை வரும் வரை அவன் அவ்வப்போது நடுவில் வாசனைகளால் பாதிக்கப்படுவான். அப்போது வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன. இந்த இடைக்காலத்தில் உண்டாகிற நான் எனது முதலான சித்த விருத்திகள் வ்யுத்தான ப்ரத்யயம் எனப்படும். பயிற்சி தொடர தொடர இவை குறைந்து காணாமல் போகும்.

Tuesday, April 12, 2011

ஆத்ம தத்துவத்தை அறிந்தவனுடைய சித்தம்:



तदा विवेकनिम्नं कैवल्यप्राग्भारं चित्तम् ।।26।।

ததா³ விவேகநிம்நம்° கைவல்யப்ராக்³பா⁴ரம்° சித்தம் || 26||

ததா³ = ஆத்ம தத்துவத்தை அறிந்த பின்; விவேக = புருஷன் - மற்ற வஸ்துக்கள் இடையே வித்தியாசத்தை; நிம்நம்° = பற்றிக்கொண்டதாயும்; கைவல்ய = மோக்ஷத்தை; ப்ராக்³பா⁴ரம்° = முடிவான பலனாக உடையதாயும்; சித்தம் = சித்தம் (ஆகிறது)

உலக விஷயங்களில் பற்றுள்ளதாக இருந்த சித்தம் ஆத்ம தத்துவத்தை அறிந்தபின் கைவல்லியம் என்ற மோக்ஷத்தை பலனாக அடைகிறது. தர்மமேகம் என்ற த்யானத்தில் பற்றுகொள்கிறது.


Sunday, April 10, 2011

ஆசையின் முடிவு



विशेषदर्शिन आत्मभावभावनानिवृत्तिः ।।25।।
விஶேஷத³ர்ஶிந ஆத்மபா⁴வபா⁴வநாநிவ்ரு«த்தி​: || 25||

விஶேஷ த³ர்ஶிந = முன் சொன்ன யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு; ஆத்ம பா⁴வ = ஆத்ம தத்துவ விஷயத்தில்; பா⁴வநா = அறிய வேண்டும் என்ற ஆசையின்; நிவ்ரு«த்தி​: = முடிவு (உண்டாகிறது)

"நான் யார்? எனக்கு மற்ற வஸ்துக்களுடன் என்ன சம்பந்தம்?" என அறிய ஆசை ஏற்படவே மிகுந்த புண்ணியம் செய்து இருக்கவேண்டும். நான் என்று அறியப்படுபவன் தேகத்தில் இருந்தும் வேறானவன்; இந்திரியங்களில் இருந்தும் வேறுபட்டவன்; புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டவன்; ஞான ஸ்வரூபன்; இப்படி விவேக ஞானத்தை ஒருவன் அடைய வேண்டும். யாருக்கு தேகம், இந்திரியங்கள் முதலானவற்றில் ஆத்ம பாவனை இருக்கிறதோ (அதாவது இவையே தான், ஆத்மா என்று நினைக்கிறானோ) அவனுக்கு மோக்ஷத்துக்கு அதிகாரமில்லை. யார் ஆத்ம தத்துவத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கே மோக்ஷத்தில் அதிகாரம் உண்டு.

யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசையின் முடிவு உண்டாகிறது. அதாவது அது நிறைவேறுகிறது- ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்கிறான்.

Friday, April 8, 2011

சித்தமே எல்லாம் செய்யுமா?



तदसंख्येयवासनाभिश्चित्तमपि परार्थ संहत्यकारित्वात् ।।24।।
தத³ஸம்°க்²யேயவாஸநாபி⁴ஶ்சித்தமபி பரார்த² ஸம்°ஹத்யகாரித்வாத் || 24||

தத்³ = அது; அஸம்°க்²யேய = எண்ணற்ற; வாஸநாபி⁴: = வாசனைகளால்; சித்தம் அபி =சித்தம் கூட; பரார்த² = தன்னிலும் வேறான ஒரு தத்துவத்துக்கு அங்கமாகிறது; ஸம்°ஹத்யகாரித்வாத் = இன்னொன்றின் உதவியை எதிர்பார்த்தே காரியம் செய்வதால்;

யோக சித்தாந்தப்படி சித்தம் எண்ணற்ற வாசனைகளுடன் கூடியது. சுக துக்கங்கள் இதிலேயே உள்ளன. அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவனுக்காகவே உள்ளது; அதாவது அவனுக்கு அங்கமானது என்பது ஒரு பார்வை. இந்த முறைப்படி, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் சித்தத்துக்குத்தான் என்று பெயர் பெறும்; வேறு ஒன்றுக்கு இல்லை; ஆகவே சித்தமே எல்லாம் செய்யுமென்றால் புருஷன் என்று ஒன்று தேவையில்லை என்பது ஒரு வாதம்.

ஆனால் சித்தமானது தன்னிலும் வேறான இந்திரியங்கள், சரீரம் இவற்றின் உதவி கிடைத்தால்தான் தன் காரியங்களை செய்து கொள்ளுகிறது. வீடு தோட்டம் ஆகியன ஒரு எஜமானனுக்காக உள்ளவை. எஜமானன் இல்லையானால் அவை சீரழிந்து இல்லாமல் போய்விடும். இதே போல சித்தம் தன்னிலிருந்தும் வேறான ஒரு தத்துவத்துக்கு போக்யம் (அனுபவிக்கப்படுவது) ஆகிறது; அந்த தத்துவமே புருஷன் எனப்படும்.

Thursday, April 7, 2011

சித்தம் காண்பித்து கொடுப்பது...




द्रष्टृदृश्योपरक्तं चित्तं सर्वार्थम् ।।23।।
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யோபரக்தம்° சித்தம்° ஸர்வார்த²ம் || 23|| 

த்³ரஷ்ட்ரு = பார்க்கிறவன்; «த்³ரு«ஶ்யோபரக்தம்° = பார்க்கப்படும் வெளி வஸ்துக்கள் உடன் கூடியிருப்பதால்; சித்தம்° = சித்தமானது; ஸர்வார்த²ம் = எல்லா வஸ்துக்களையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஒரு பக்கம் காண்பவனான புருஷனுடனும் மறு பக்கம் பார்க்கப்படும் பொருட்களுடனும் சித்தம் சம்பத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே இது எல்லாவற்றையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஜலத்தில் பிரதிபலித்த சந்திரன் வானத்தில் உள்ள சந்திரன் இல்லை என்பது போல சித்தத்தில் ப்ரதிபலிக்கிற புருஷன் நிஜ புருஷன் இல்லை. ஆனால் சித்தத்தில் பிரதிபலிப்பதையே புருஷனாக விவேகம் இல்லாதவர் எண்ணுகின்றனர். உண்மையில் பார்க்கிறவன் என்பது சித்தத்தில் உள்ள புருஷனின் ப்ரதிபிம்பமே. அதனால் சித்தம் எல்லாப்பொருட்களையும் காண்பித்து கொடுப்பதாகிறது.

Wednesday, April 6, 2011

புருஷனுக்கு சித்த விருத்திகளில் ஸம்பவம்:



 चितेरप्रतिसक्रमायास्तदाकारापत्तौ स्वबुद्धिसंवेदनम् ।।22।।

சிதேரப்ரதிஸங்க்ரமாயாஸ்ததா³காராபத்தௌ ஸ்வபு³த்³தி⁴ஸம்°வேத³நம் || 22||

சிதே: = புருஷனுடைய; (சன்னிதான பலத்தால்) அப்ரதி ஸங்க்ரமாயா: = விஷயத்துடன், க்ரியையை முன்னிட்டு ஏற்படும் சம்பந்தம் இல்லாத; ததா³காராபத்தௌ = புருஷனுடைய பிரதிபிம்பமாக புத்தி ஆகும்போது; ஸ்வ பு³த்³தி⁴ ஸம்°வேத³நம் = புருஷனுக்கு அவனால் போக்யமான சித்த விருத்தியின் அனுபவம் உண்டாகிறது.

கிரியை செய்பவன் கர்த்தா ஆவான். (செயலை செய்பவன்). அதன் பலனை அவனே அனுபவிப்பவனாகவும் (போக்தா) ஆகிறான். புருஷனுக்கு செயல் என்பதில்லை எனில் எப்படி போக்தாவாக ஆவான்?

புத்திக்கு க்ரியையை முன்னிட்டு வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இது போல புருஷனுக்கு குடம் போன்ற வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் இல்லை. புருஷனுக்கு பரிணாமமே இல்லை. க்ரியையும் இல்லை.

ஸந்நிதி பலத்தால் புத்தியில் புருஷனின் ப்ரதி பிம்பம் ஏற்படுகிறது. இந்த புத்தியிலேயே சித்த விருத்தியின் சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த ப்ரதி பிம்பம் ஏற்படுவதையே புருஷனின் போகம் என்கின்றனர். சூரியன் அசையாதிருக்கும்போது ஜலத்தில் தெரியும் அதன் பிம்பம் ஜலம் அசைவதால் அசைவுறுவது போல புருஷனுக்கு எந்த விகாரமுமில்லை; இருந்தாலும் அப்படி விகாரம் உள்ளது போல தோன்றுகிறது.


Tuesday, April 5, 2011

சித்த ஓட்டம்



 चित्तान्तरदृश्यत्वे बुद्धेरतिप्रसङ्गः स्मृतिसंकरश्च ।।21।।
சித்தாந்தரத்³ரு«ஶ்யத்வே பு³த்³தே⁴ரதிப்ரஸங்க³​: ஸ்ம்ரு«திஸம்°கரஶ்ச || 21||

சித்தாந்தர த்³ரு«ஶ்யத்வே = (சித்த விருத்தியானது) வேறொரு சித்த விருத்தியால் க்ரஹிக்கப்படுவதாக ஆகுமானால்; பு³த்³தே⁴ர் = சித்த விருத்தி விஷயமான சித்த விருத்திக்கு; அதிப்ரஸங்க³​: = முடிவில்லாமையும்; ஸ்ம்ரு«தி ஸம்°கரஶ்ச = எல்லா விருத்திகளுக்கும் ஸ்மரணமும் (ஏற்படும்.)

ஒரு பொருளை பார்க்கிறோம். இது பற்றி சித்தம் ஒன்று நினைக்கிறது. அடுத்த கணம் வேறொன்றை நினைக்கிறது. முன் வந்த எண்ணத்தை புதிதாக வந்தது கிரஹிக்குமா? இதை அடுத்து வரும் சித்த விருத்தி கிரஹிக்குமா? இப்படி நிகழும் என்று ஏற்றுக்கொண்டால் இது ஒரு முடிவில்லாத நீழல் ஆகிவிடும். எதுவும் நிர்ணயமும் ஆகாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நினைவும் ஏற்படும். நடைமுறையில் ஒரு குடத்தைப்பார்க்கும் போது அதை ஒட்டி எழுந்த நினைவுகள் 'எல்லாமே' நினைவுக்கு வருவதில்லையே! ஆகவே இது சரியில்லை. ஒரு சித்த விருத்தி இன்னொன்றால் க்ரஹிக்கப்படுவதில்லை.

ஒரு எண்ண ஓட்டம் நிகழும் போது ஒன்றை மறந்தே இன்னொன்று வருகிறது. ஜபம் செய்ய உட்காருகிறோம். மனசு அலை பாய்கிறது. ஜபத்தை விட்டு 'இன்று என்ன டிபன்? அடைக்கு அரைத்துக் கொண்டு இருந்தார்களே? அப்ப அடைதான் டிபன்; அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லையே? வயிறு வலிக்கும்; அட! டாக்டர் பில் கட்ட மறந்தே போச்சு; அடுத்த வீட்டு பையனுக்கு டாக்டர் சீட் கிடைச்சு இருக்காமே..' இந்த ரீதியில் எண்ணத்தொடர் சம்பந்தமில்லாமல் போய் கொண்டே இருக்கும். ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. சிறிது நேரம் போனால் இப்படி என்னவெல்லாம் எண்ணம் எழுந்தது என்பதும் நினைவில் இல்லாமல் போய் விடும்.


Saturday, April 2, 2011

'வேறு ஒன்று'



 एकसमये चोभयानवधारणम् ।।20।।
ஏகஸமயே சோப⁴யாநவதா⁴ரணம் || 20||

ஏக ஸமயே = ஒரே நேரத்தில்; ச உப⁴யாந் அவதா⁴ரணம் = இரண்டு வஸ்துக்களை க்ரஹித்தல் என்பது ஸம்பவிக்காது.
சிவப்பு பச்சை என சித்த விருத்தி விஷயங்களை அறியும். ஆனால் அது தன்னையே அறியாது. சித்த விருத்திக்கு சுய ப்ரகாசம் இல்லை. சித்தம் மற்ற விஷயங்களை அறிந்தாலும் அதை அறிய வேறு ஒன்று தேவைப்படுகிறது.
இந்த 'வேறு ஒன்று' இன்னொரு சித்த விருத்தி இல்லை. ஏனெனில்....

Friday, April 1, 2011

சித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசம்...




  न तत्स्वाभासं दृश्यत्वात् ।।19।।
ந தத்ஸ்வாபா⁴ஸம்° த்³ரு«ஶ்யத்வாத் || 19||

ந = இல்லை; தத் = அதன்; ஸ்வாபா⁴ஸம்° = சுயமாக ப்ரகாசமாக; த்³ரு«ஶ்யத்வாத் = (நீலம் சிவப்பு போன்ற ரூபங்கள் கோபத்துடன் இருக்கிறேன், சுகமாக இருக்கிறேன் போன்ற) விருத்தி ஞானத்துக்கு விஷயமாக இருப்பதால்;

சித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசமாக இருந்தல் இல்லை. (அதனால் சித்த விருத்தியால் புருஷனை காண இயலாது.)