இன்னிக்கு நம் ஃப்ரெண்ட் பிள்ளையாரோட விசேஷ நாளான பிள்ளையார் சதுர்த்தி என்கிறதாலே நம் சிந்தனையை எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டிட்டு அவர் பக்கம் திருப்பலாம்.
அவரை பத்தி தெரியாத ஆன்மீகவாதி இருக்க முடியாது.
அவர் சிவன் பார்வதிக்கு மூத்த பிள்ளை; எப்படி யானை தலை வந்தது; விக்கினங்களை உண்டாக்குகிறது / போக்குகிறது; அச்சர பாக்கம் கதை; உச்சி பிள்ளையார் கதை; ஔவையாருக்கு அருளியது; திருக்கோவிலூரில் ஔவையார் இவருக்கு பூஜை செய்தது; ஔவையாரை அப்படியே கைலாசம் கொண்டு விட்டது ன்னு பல கதைகளும் பலரும் எழுதியும் படித்தும் சலிக்காது!
ஒத்தர் சிவனை கும்பிடலாம் முருகனை கும்பிடலாம், அம்பாளை கும்பிடலாம். எந்த ஹிந்து மத கடவுளை கும்பிடறவங்களும் ஒத்துக்கொள்ளும் தேவர் இவரே. சாதாரணமாக மற்ற தெய்வங்களை ஒப்புக்கொள்ளாத ஸ்ரீ வைஷ்ணவர்களும் விஷ்வக்சேனராக இவரை கும்பிடறாங்க. யாருக்கு பூஜை, ஹோமம் ன்னு ஆரம்பிச்சாலும் முதல் பூஜை பிள்ளையாருக்கே! எவ்வ்வளோ பெரிய யாகம் செய்தாலும் கூட பிள்ளையாருக்கு பூஜை இல்லாம ஆரம்பிக்கறதில்லை.
கொஞ்சம் ஆச்சரியமாக இன்னைக்கு என் நண்பர் ஒத்தர்
பௌத்த பிள்ளையார் பத்தி பதிவு போட்டு இருக்கார்.
பக்தி மார்கத்திலே இருக்கிரவங்க ரொம்ப விரும்பரவர் இவர். சிவனை பாத்து கொஞ்சம் பயப்படணும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசுதோஷியோ அவ்வளவுக்கவ்வளவு கோவக்காரர். விஷ்ணு ஜாலியா தூங்கிட்டு இருந்துடுவார். அவர்கிட்டே காரிய சாதகம் பண்ணிக்க அவரோட வீட்டுகாரம்மாகிட்டே அப்ளிகேஷன் போடணும்! :-)
சாக்தம் சொல்லவே வேண்டாம்; கரணம் தப்பினா....
ஆனா பாருங்க பிள்ளையாரை பாத்து பயப்படறதா கேள்விபட்டு இருக்கீங்களா?
அவர் மேலே ஆழ்ந்த பக்தியும் செலுத்தலாம். மித்ர பாவத்தோட சல்லாபிக்கவும் செய்யலாம்.
மஞ்சள் பிள்ளையார், சாணி பிள்ளையார், களிமண் பிள்ளையார் எல்லாம் பாரம்பரியம். சோனா பத்ரம் என்கிற சோன் நதி கல்- சிவப்பா இருக்கும்- பஞ்சாயதன பூஜை செய்கிறவங்க பயன்படுத்தறது. (இயற்கையா தண்ணீர் அரிச்சதா பாத்து வாங்கணும். பெரிய கல்லை சம்மட்டி வெச்சு உடச்சு விஷயம் தெரியாதவங்களுக்கு வித்துடுவாங்க.) இந்த சிலாவை பாத்தா ஆச்சரியமா பல முண்டு முடிச்சுகள் இருக்கும். கொஞ்சம் கவனமா பார்க்க ஒவ்வொரு கோணத்துலேந்தும் ஒரு பிள்ளையார் உருவம் - தும்பிக்கை, மண்டை தெரியும்.
எத்தனையோ தெய்வங்களோட உரு வரைஞ்சு இருக்காங்க. ஆனா இப்படித்தான் இருக்கணும்ன்னு வரையரை இருக்கும். பிள்ளையாரைப்போல ஆளுக்கு ஆள் கற்பனையை தட்டிவிட்டி வரைஞ்ச தெய்வங்கள் இல்லை.
கல்லால பிள்ளையார், இலையால பிள்ளையார், தேங்காயால பிள்ளையார், டிஜிட்டல் பிள்ளையார்... யப்பாடா எவ்வளோ வகை! இன்னிக்குத்தான்
'நான்' பிள்ளையார் பாத்தேன்.
ஒவ்வொரு வினாயக சதுர்த்தி போதும் மக்கள் கற்பனை பறக்க ஆரம்பிச்சுடுது. வீரப்பன் பிள்ளையார், அன்னா ஹசாரே பிள்ளையார் ன்னு சமயத்துக்கு தகுந்தாப்போல உருவாவார். யாரும் மனக்கஷ்டப்படறதில்லை! பிள்ளையாரும் எல்லாத்தையும் சிரிச்சுகிட்டே ஏத்துகிட்டு நல்லது பண்ணிடறார்.
நாம் ரொம்ப ரொம்ப ப்ரெண்டிலியா நினைக்கலைன்னா இப்படி எல்லாம் இவரை படுத்த முடியுமா?
யாருக்கு எப்படியோ, எனக்கு பிள்ளையார் ஒரு ப்ரெண்டு. அப்படியே வெச்சுக்கலாம்!