Pages

Wednesday, November 21, 2012

விதியா மனித முயற்சியா? -3-

 
ஸ்வாமி: இது தெரியாது என்பதனால் நாம் ஆணியை பிடுங்க முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? அல்லது முயற்சி செய்து தேவையான அளவு பலத்துடன் இழுப்புக்களை அதிகரித்து பிடுங்கப்பார்க்கிறோமா?

சீடன்: நிச்சயமாக யதார்த்தவாதிகளாக நாம் பின்னால் சொன்னதைத்தான் செய்வோம்.

அதேதான். அதே வழியை உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் செய்யுங்கள். முடிந்த வரை செயல் படுங்கள். உங்கள் மனத்திண்மை இறுதியில் வெல்ல வேண்டும்.

முடிந்த வரை முயற்சி செய்தும் அடைய முடியாத பல விஷயங்கள் இருக்கின்றனவே?

அங்கேதான் தவறு செய்கிறீர்கள். எதோ ஒன்று இருக்கிறது என்றால் அதன் இயல்பு அதை அனுபவிக்க முடிவது. உண்மையில் பெற முடியாதது என்று ஒன்றுமே இல்லை. ஆனால், இந்த கால கட்டத்தில் நம் குறைவுள்ள திறன் முதலியவற்றால் இப்போதைக்கு சிலது அடைய முடியாமல் போகலாம். ஒரு விஷயம் கிடைப்பது கிடைக்காதது என்பது அதை சார்ந்தது அல்ல. அது நம் கிடைக்க நாம் செய்யும் முயற்சி, நம் திறனை பொருத்தது.

முயற்சியில் வெற்றியோ தோல்வியோ கிடைப்பது அதன் முடிவில்தான் தெரிகிறது. இப்போதைக்கு நமக்கு இருக்கும் திறனை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அடைய முயற்சி எடுக்கலாமா வேண்டாமா, எடுக்கலாம் எனில் எவ்வித முயற்சி வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

உங்கள் கேள்வி நியாயமானதே! நமது தர்ம சாத்திரங்களின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கு விரிவாக விடை அளிப்பதுதான். அவை நம் திறனை, தகுதி ஆகியவற்றை ஆராய்ந்து இன்னின்ன செயல்களுக்கு உங்களுக்கு அதிகாரம் இருக்க்றது என்று சொல்கின்றன. இந்த செயல்களும் ஏராளமாக இருக்கின்றன. அதே போல மனிதர்களின் தகுதி திறன் ஆகியவையும் மிகவும் வேறுபடுகின்றன. மதத்தின் முக்கிய நோக்கமே மனித முயற்சி என்பதை வரைப்படுத்தி செயல் செய்பவருக்கு குறைந்த தீமையும் அதிக பலனும் கிடைக்கும் வகையில் திருப்பி விடுகிறது. இப்படிப்பட்ட வரை செய்யப்பட்ட செயல் ஸ்வதர்மம் எனப்படுகிறது. மதம் மனிதனின் முயற்சிகளை கட்டிப்போடவில்லை. அவனை சுதந்திரமாக செயல்பட விடுகிறது. அதே சமயம் எது அவனுக்கு நல்லது எது அவனுக்கு கெட்டது என்பதை சொல்லுகிறது. அதன் பின் அவன் எதை செய்வானோ அதற்கு அவனே பொறுப்பு. விதி மேல் பழியை போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. அது அவனே உருவாக்குவது. கடவுள் மீதும் பழி போட்டு தப்பிக்க முடியாது. அவர் செயல்களுக்கு பலனை அளிப்பவர், அவ்வளவுதானே? உங்கள் எதிர்காலத்தை நீங்களேதான் நிர்ணயிக்கிறீர்கள். அதை நல்லதாக அமைத்துக்கொள்வதோ அல்லது வீணாக்குவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது. இதுவே உங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.

இது எனக்குப் புரிகிறது. ஆனால் என்ன செய்வது? நான் என் ஸ்வாதீனத்தில் இல்லை. உதாரணமாக ஒரு செயல் கெட்டது என்பது எனக்குத்தெரிகிறது. அதே சமயம் அதை செய்யும்படி பலமாக தூண்டப்படுகிறேன். அதே போல ஒரு விஷயம் நல்லது என்று புத்திக்குத் தெரிகிறது; ஆனால் அதை செய்ய முடியாதவனாக இருக்கிறேன். ஆகவே ஏதோ ஒரு சக்தி என்னை சுதந்திரமாக என் விதியை நான் நிர்ணயித்துக்கொள்ள செயல் பட விடாமல் தடுப்பதாக தோன்றுகிறது. அது ஊழ் வினையைத்தவிர வேறு ஏதாக இருக்கக்கூடும்?

No comments: