Pages

Wednesday, November 21, 2012

ரொம்பவே கோளாறான எண்ணங்கள்

 
சமீபத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தபோது சில விஷயங்கள் கவனத்துக்கு வந்தன. ஒரு அம்மணி வித்தியாசமான சிகித்சை கொடுக்கிறார். ஒருவரின் ஆழ் மனத்தின் நிலையை அறிய அவரை ஒருவித தூக்கத்தில் ஆழ்த்துகிறார். அதிலிருந்து நபரின் நடப்பு மனம் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். பேட்டியில் அவர் சொன்னது சுவாரசியமாக இருந்தது. அவரிடம் வரும் முக்காலே மூணு வீச நபர்கள் குடும்பத்தில் இறுக்கம் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு என்பதற்கே வருகிறார்கள். ஆழ் மனத்துடன் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது கொஞ்சம் கோளாறான சமாசாரம் தெரிகிறது. இப்போது மனைவியாக இருப்பவர் முந்தைய ஜன்மத்தில் கணவனாக இருந்து இப்போதைய கணவன் மனைவியாக இருந்து அவளை படுத்திய கொடுமைகளை இப்போது கணவன் செய்ய பழி தீர்க்கப்படுகிறது.

ஒண்ணும் புரியலையே?

இப்போதைய மனைவி முந்தைய ஜன்மத்தில் கணவன்.

இப்போதைய கணவன் முன் ஜன்மத்து மனைவி.

முன் ஜன்மத்திலே கணவன் மனைவியை கொடுமை படுத்தினார். கர்மாவை சேர்த்துக்கொண்டார்.

இப்போது அந்த கணவன் மனைவியாக இருந்து அதன் எதிர் வினையை அனுபவிக்கிறார்.

அப்பாடா! புரிஞ்சுதா?

உதாரணத்துக்குத்தான் சொன்னேன். இது மனைவி கணவனை கொடுமை செய்ததாகவும் இருக்கலாம்.

அது சரி, ஏன் போன ஜன்மத்துல அந்த கணவன் மனைவியை கொடுமை படுத்தினார்? அதுக்கும் இதே காரணம்தான். போன ஜன்மத்துக்கு முன் ஜன்மத்தில இவர் மனைவியா இருந்து...புரியுது இல்லே?

இது ஒரு விஷஸ் சைக்கிள்.

ஒத்தர் ஒருவரை கொடுமைப்படுத்துவதும் அவர் திருப்பி அடுத்த ஜன்மத்தில இடம் மாறி கொடுமை படுத்துவதும் அதுக்கு அடுத்த ஜன்மத்தில் இவர் திருப்பி கொடுமை படுத்துவதும்... எங்கேயாவது இது முடியணும்.

அந்த பெண்மணி என்ன சிகித்சை கொடுக்கிறாங்கன்னு தெரியலை!

இதை கேட்ட பிறகு வழக்கம் போல நம்ம மூளை கோளாறா வேலை செய்ய ஆரம்பிச்சது. முன் ஜன்மத்து சமாசாரம் இப்பவும் நம்மை துரத்தறது தெரிஞ்சதுதான். அதை வாசனை என்பாங்க. ஒரு விஷயத்தை செய்ய செய்ய அதுவே பழகிபோய் சும்மாவான அதையே செய்ய தூண்டிக்கொண்டு இருக்கும். ஒத்தரோட சண்டை போட்டுகிட்டே இருக்கிறதும், சும்மா சும்மா குத்தம் கண்டுபிடிக்கிறதும் இந்த வகையை சேர்ந்ததுதான். பழகிப்போன விஷயம். லேசில விடாது. ஜன்ம ஜன்மமா பின் தொடரும். இருந்தாலும் புத்தியை பயன்படுத்தி இதை கட்டுக்கு கொண்டு வரலாம். நம்ம புத்திக்கு தெரிஞ்சேதானே இது நடக்குது? ம்ம்ம்ம் …. மனசு சலனங்களுக்கு இடம் கொடுக்க இது நடக்கும். மாறாக புத்தி என்கிற நிலைக்கு மனசை கொண்டு வர நல்லது கெட்டது ஆராய்ஞ்சு அது செயல்படும். அதனால இதைப்பத்தி யோசிச்சு இது வேண்டாம், நிறுத்தணும்ன்னு முன்னேயே தீர்மானமா முடிவு பண்ணிட்டா புத்தி அந்த செயலை நடக்க விடாது.

இரண்டாவதா கர்மா என்கிற முன் ஜன்ம வினைகளுக்கு எதிர்வினை இப்ப கிடைக்கிறப்ப அந்த அம்பை எய்த ஆசாமியை நொந்து பிரயோசனமில்லை. இப்ப நமக்கு கிடக்கிற பூச்செண்டுகளுக்கும் செங்கற்களுக்கும் நாமேதான் காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா....

இது இரண்டும் புத்தி பூர்வமா புரிஞ்சாச்சுன்னா அடுத்து ஒரு பயிற்சிக்கு போகலாம். அமைதியா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து பயிற்சியை தொடங்கலாம். போன ஜன்ம சமாசாரம் எதுவும் நமக்கு தெரியாது. அதனால அதை ஒட்டு மொத்தமா அப்புறம் பார்க்கலாம். இந்த ஜன்மத்தில நடந்ததை நினைவுக்கு கொண்டு வரலாம். நினைவு இருக்கிற சின்ன வயசிலேந்து... சின்ன வயசுல நம்ம அடிச்ச ஆயாலேந்து.... ஒவ்வொண்ணா முடிந்த வரை ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவுக்கு முழுக்க கொண்டு வருவோம். மறந்திருந்தோம்ன்னா பரவாயில்லை. பலதுக்கும் நாம அப்ப செய்த குறும்புகளோ தவறுகளோதான் காரணம்ன்னு இப்ப தெரியும். சிரிப்பே கூட வரும்! ரைட், ஆனா அந்த சமயத்துல நமக்கு என்ன ஆத்திரம் கோபம் வந்தது? என்ன செய்யறேன் பார் ன்னு சொல்லிட்டு இயலமையோட சும்மா இருந்திருப்போம். அதை நினைவுக்கு கொண்டு வந்த பின்னால இதையும் நினைவுக்கு கொண்டு வரலாம்: “முன்னாலே நான் செய்த செயல்களே - கர்மாவே- அந்த துன்பத்துக்கு காரணம். ஆகவே இந்த நபரை நான் மன்னித்துவிடுகிறேன்.”

மனப்பூர்வமா மன்னிச்சுடுவோம்.

மனப்பூர்வமா செய்தோமா என்கிறது பின்னால இந்த விஷயத்தை நினைவுக்கு கொண்டு வந்தா உணர்ச்சிவசப்படாம "ஆமா, அப்படி நடந்தது" ன்னு சொல்வதில இருக்கும்! இப்படியே ஒவ்வொரு விஷயமா நினைவுக்கு டெலிபரேட்டா கொண்டு வந்து மன்னிச்சு விட்டுடுவோம்.

அதே போல நாம செய்த தவறுகளை நினைவுக்கு கொண்டு வந்து மனசார மன்னிப்பு கேட்டுடுவோம். பாதிக்கப்பட்ட நபர் உயிரோட இல்லைன்னாலும் பரவாயில்லை. அந்த தவறுகளுக்கு எப்படியும் எதிர்வினை வரும். அதை ஏற்றுக் கொள்கிறேன்ன்னு சொல்லி விடுவோம்.

இதெல்லாம் ஒரே செஷன்ல முடியலைன்னாலும் பரவாயில்லை. ஒரே நேரத்தில பல உணர்ச்சி வசப்படற சமாசாரங்கள் தாங்க முடியாம இருக்கலாம். தொடர்ந்து பல செஷன்ஸ்ல முடிக்கலாம்.

அப்படி செய்த பின்னே....

ஸ்லேட்டை துடைச்சாச்சு! இனி மனசு லேசாக இருக்கும்! வாழ்கையை அமைதியா எதிர் கொள்ளலாம்!
Post a Comment