Pages

Friday, February 10, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 3


என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.

இரண்டு வாரங்கள் முன் என் மருத்துவ நண்பர் ஒருவரின் அப்பா இறந்து போனார். வயசு 86. என் மனைவி டாக்டரை பார்த்து அவசியம் விசாரிக்கணும்ன்னு வற்புறுத்தியதால நானும் போனேன். டாக்டர் எங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார். என்ன விஷயம் ன்னு கேட்டார். அப்புறம் அவரே புரிஞ்சு கொண்டு "என்ன? பார்த்து விசாரிக்க வந்தீங்களா"ன்னு சொல்லி அடுத்த ரூமுக்கு அழைத்துப்போனார்.
அடுத்த பத்து நிமிடங்கள் தன் தந்தையைப்பத்தி கதையா சொன்னார். அவர் பல வருஷங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்ன்னு தெரியுமே தவிர நண்பர் சொன்ன விவரங்கள் புதுசு.
நண்பரின் அப்பா பூர்வீகம்  எங்கள் நகரத்துப்பக்கம் ஒரு கிராமம். நகரத்துக்கு வந்து தொழில் ஆரம்பித்தார். கைலி ஏற்றுமதிதான் வியாபாரம்.  முக்கியமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார். தொழிலின் நெளிவு சுளிவுகள் நன்றாக தெரிந்து திறமையாக வியாபாரம் செய்தார். பிள்ளைக்குட்டிகள் அந்த காலத்துக்கு ஏற்றாற்போல நிறைய. எல்லா பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். நண்பர் தவிர மற்ற பிள்ளைகள் படித்து பின் தந்தையின் வியாபாரத்திலேயே இறங்கிவிட்டனர். நண்பர் மருத்துவ படிப்பு முடித்து மேலே எம்டி யும் முடித்து வரும்போது ப்ராக்டீஸ் ஆரம்பிக்க ஆஸ்பத்திரி தயாராக இருந்தது. நண்பரும் சீக்கிரமே செட்டில் ஆகிவிட்டார்.

முதுமையுடன் டயபெடிஸ் முதலிய நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
இவர் வியாபாரத்தை மகன்களிடமே விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு பரலோகம் போனார்.
இவரது நண்பர் ஒருவர் மிகவும் 'சீரியஸா'க ஆஸ்பத்திரியில் இருப்பதாக கேள்விப்பட்டு போய் பார்த்தார். மூக்கில் குழாய் சொருகி திரவ உணவு உள்ளே போய் கொண்டு இருந்தது. மூச்சு விட வென்டிலேடர் மெஷின். பிழைக்க என்ன சான்ஸ் என்று டாக்டரை கேட்டார். டாக்டரோ உதட்டை பிதுக்கினார். நண்பரின் பிள்ளைகளை கூப்பிட்டு இவர் சொன்னார், "உங்க அப்பாவை எனக்கு 60 வருஷமா பழக்கம். இப்படி ஒரு அவஸ்தையை அவர் விரும்ப மாட்டார். பேசாம அவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போற வழியை பாருங்க.”
இவர் உடல் மெதுவாக சீர் கெட்டது. இனி படுக்கைதான் என்பது போன்ற சூழ்நிலை வந்தது.
தன் பினான்சியல் சமாசாரம் எல்லாவற்றையும் நேர் செய்து வைத்தார்.
மருத்துவ பிள்ளையை கூப்பிட்டு "ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு பெட் போடு" என்றார்.
ஏம்பா வீட்டிலேயே இருக்கலாமே?”
" வேண்டாண்டா. அப்படி செய்தா நீ எப்பவாவது வெளியே போகணும் என்கிற போது போகவும் முடியாம, இருக்கவும் முடியாம கஷ்டப்படுவாய். என்ன இப்ப? நீயும் முக்காவாசி நேரம் இங்கேதான் இருக்கே. பாத்துக்க முடியும். இங்கே நர்ஸ்கள் இருக்காங்க. உனக்கும் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்காங்க. அவங்களும் பாத்துப்பாங்க. நீ பாட்டுக்கு கான்ப்ரன்ஸ் போகிறதெல்லாம் போய்க்கொண்டு இரு.”

ஆஸ்பத்திரி போன பின் கண்டிஷன்கள் போட்டார்.
இதோ பார், நீ என்ன மருந்து கொடுப்பியோ வைத்தியம் செய்வாயோ செய். வேறே எங்கேயும் கூப்பிட்டுகிட்டு போகக்கூடாது. நரம்பு வழியா சாப்பாடு போகக்கூடாது. மருந்து போட்டா பரவாயில்லை. வெண்டிலேட்டர் போடக்கூடாது. நான் நிம்மதியா போகணும். எது நடந்தாலும் இங்கேயே நடக்கட்டும்.

நடுவில் ஒரு முறை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டது. டாக்டர் நண்பர் வேறு இடத்துக்கு அழைத்துப்போய் ஸ்கான் செய்ய விரும்பினார். இவர் மறுத்துவிட்டார்.  "ஸ்கான் செய்து என்ன கண்டுபிடிக்கப்போகிறாய்? சரி இன்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு அப்புறம் என்ன செய்யப்போகிறாய்? என்ன நடக்கும். போவதானால் போகிறேன். எப்படியும் போகப்போகிற உயிர் எப்போ போனால் என்ன?”
தலைக்காயம் மெதுவாக ஆறிப்போனது.

பார்க்க வருகிற உறவினர்களை தயார் செய்தார்.
பிறக்கும்போதே சாவது நிச்சயம். முடிந்த வரை குடும்பத்துக்கும் ஜனங்களுக்கும் நல்லது செய்துவிட்டு போகணும். நிறைவான வாழ்கை வாழ்ந்துவிட்டேன். நான் இறந்துபோனால் அழாதீர்கள். அதில் அர்த்தம் இல்லை.
அதே போல அவர் படுக்கையில் விழுந்து ஆறு வருடங்கள் பின் இறந்து போனபோது யாரும் அழவில்லை.
 
Post a Comment