Pages

Tuesday, March 26, 2013

ப்ரக்ருதியின் விளையாட்டு

 
நொச்சூர் வெங்கட்ராமன் உபன்யாசத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒத்தர் ஒண்ணும் வேண்டாம் சன்னியாசி போறேன்னு போகிறவருக்கு ஒத்தர் வந்து இங்க 5 ஏக்கர் நிலம் தரேன்; ஆஸ்ரமம் கட்டித்தரேன்; இங்கேயே இரு ன்னு சொல்லுவார். இன்னொருத்தரோ தனக்கு வீடு கட்டணும்ன்னு முயற்சி எடுத்து கஷ்டப்பட்டு பணம் சேர்த்து லோன் போட்டு ன்னு சிரமப்படுவாராம்! கடைசில ரிடையர் ஆற காலத்துக்கு வீடு அமையுமாம். ப்ரக்ருதி நாம 'பாலன்ஸ்ட்' ஆ இருக்கணும்ன்னு விரும்பறதாம். அதனால பல சமயம் நாம் எடுக்கற முயற்சிகளுக்கு எதிராவே வேலையை செய்யுமாம்!

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறபோது நமக்கு வேண்டிய பஸ் தவிர மீதி எல்லாம் வருவதும் நமக்கு வேண்டிய பஸ் எதிர் திசையில் போவதும் பலரும் அனுபவித்து இருப்பார்கள்! நான் தில்லியில் படித்துக்கொண்டு இருந்த போது என் அண்ணனின் மாமனார் வீடு (அப்போது) கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. நல்ல தென் இந்திய சாப்பாடு கிடைக்காம காஞ்சு கிடந்தப்ப அப்பப்ப அங்கே போகிறதுண்டு. ஒதுக்குப்புறம் என்பதால சரியான வாகன வசதி கிடையாது. அப்பல்லாம் பொதுவாகவே எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பிச்சு பஸ் எல்லாம் இல்லாம போயிடும். இரவு சாப்பாடு முடிந்து பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்பேன். பஸ் வரவே வராது. இன்னும் 3 ஸ்டாப் தூரம் நடந்தால் இன்னர் ரிங் ரோட். அங்கிருந்து வேற சில பஸ் கிடைக்கும். பஸ்ஸுக்கு காத்திருந்து காத்திருந்து, சரி ஒழியறது விடு. இன்னர் ரிங் ரோடுக்கு போயிடலாம் ன்னு நடக்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்திலேயே அந்த பஸ் நம்ம தாண்டி போகும்!

சிலர் ஏகாந்தமாக இருக்க வேண்டும் ன்னு ஆசை படுவாங்க. உறவினர், அதிதின்னு பலரும் வந்து போயிட்டு இருப்பாங்க! சிலர் பேசறத்துக்கு ஆள் யாரும் அகப்படாதான்னு பாத்துகிட்டு இருப்பாங்க, வரேன்னு சொன்னவங்க கூட வர மாட்டாங்க!

நான் இந்த வயசுக்கு அப்புறம் ரிடையர் ஆகிவிடப்போறேன் என்கிறவங்களுக்கு எக்ஸ்டென்ஷன் கிடைக்கும். ஆபீசில் விட மாட்டார்கள். எக்ஸ்டென்ஷன் வேணும்ன்னு நினைக்கறவங்களுக்கு அது கிடைக்காது. இப்படி பலதும் கேள்விப்பட்டு இருப்போம், பார்த்திருப்போம்.

மரணம். பலரும் பயப்படுகிறது விஷயம்! ஏனோ கோளாறான ஆசாமியாக இருப்பதால் பயம் ஏன் என்று புரிய மாட்டேன் என்கிறது! இருக்கிற வரை மரணமில்லை; அதனால் பயம் தேவையில்லை. போன் பிறகு மரணத்தைப்பத்தி பயப்பட நாம் இருக்க மாட்டோம். எப்படி பார்த்தாலும் லாஜிக் உதைக்கிறது. போகட்டும்!

சிலர் உடல் உபாதையால் "பகவானே, என்னை கொண்டு போக மாட்டாயா" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காலன் அப்படி பேர் வைத்துக்கொண்டு இருந்தாலும் கால் பண்ணுவதில்லை! சிலர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களை திடீரென்று கொண்டு போய் விடுகிறான்.

ஆக மொத்தத்தில நம்ம கையில் பல விஷயங்கள் இல்லை. ப்ளான் பண்ணறதுல ப்ரயோசனம் இல்லைன்னு சொல்ல வரலை. ப்ளான் பண்ணி அப்படி நடக்காம போச்சுன்னா பகவான் நம்ம பாலன்ஸ் பண்ணிகிட்டு இருக்கான்னு புரிஞ்சு கொண்டு கர்ம யோகத்தை நினைவுக்கு கொண்டு வந்து மனசு அல்லாடாம இருப்போம்.

Monday, March 25, 2013

ரமணர் 5 -ஆன்மீக வழி


 ரமணர் என்றால் படித்த பலருக்கு நினைவு வருவது அவருடைய 'நான் யார்?' என்ற விசாரணைதான். ஆனால் இதை அவர் மெத்த படித்து ஞான விசாரம் செய்பவரிடமே கேட்பார். அவர்கள் இதற்கு ப்ரம்மாஸ்திரம் என்று பெயர் வைத்து இருந்தார்கள்! ஏன் என்றால் ஏதேனும் கேள்வி கேட்டால், இதை கேட்கிறவன் யார்? என்று கேட்பார். அதற்கு அவர்களிடம் விடை இருக்காது. காவ்ய கண்ட கணபதி போன்ற அறிஞர்கள் பகவானிடம் கேள்வி கேட்கும்போது நீங்கள் ப்ரம்மாஸ்திரம் போடவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்கிறேன் என்றே ஆரம்பிப்பார்களாம்.

பகவான் பலருக்கும் அவரவர் செய்து வரும் சாதனையையே ஊக்குவிப்பார். பகவானே, நான் தினசரி பூஜை செய்து வருகிறேன் என்றால் ஆஹா, அப்படியே செய்து வாருங்கள் என்பார். நான் தினசரி மந்த்ர ஜபம் செய்து வருகிறேன் என்றால் ரொம்ப சந்தோஷம் அப்படியே செய்யுங்கள் என்பார்.
ஒரு நாள் ஒரு வடக்கத்தியர் ஒர் சீட்டெழுதி பகவானிடம் கொடுத்தார். "ஸ்வாமி, எனக்கு ப்ருந்தாவனத்துக்குப்போய் அங்கே க்ருஷ்ணனின் நிஜ ரூபத்தை தரிசித்தால் என் கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவல்ல சக்தி கிடைக்குமா? அவரை தரிசித்து என் பாரத்தை எல்லாம் அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.” என்றார்
பகவான் "அதெற்கென்ன அப்படியே செய்யலாம். அவரைப் பார்த்த பின்பு நம் பாரமெல்லாம் அவர் பொறுப்புதான். இப்பொழுது மட்டும் அந்த கவலை உங்களுக்கு ஏன்? இப்போதே நம் பாரத்தை எல்லாம் அவர் மீது போட்டுவிட்டால் அவரே கவனித்துக்கொள்வார்" என்றார் பகவான். “நான் இப்போது க்ருஷ்ணரின் நிஜ ரூபத்தை தரிசிக்க வேண்டுமென்றால் ப்ருந்தாவனத்துக்கே போய்தான் த்யானம் செய்ய வேண்டுமா? அல்லது எங்கிருந்து தியானித்தாலும் போதுமா" என்றார் அவர்.
"தன்னைத் தான் அறிந்தால் இருக்கிற இடமே ப்ருந்தாவனமாகும். அது எங்கோ இருக்கிறதென்று தேடியோட வேண்டாம். போகத்தான் வேண்டுமென்று தீவிர முனைப்பு இருக்கிறவர்கள் போகலாம். ஆனால் போகாமலிருந்தால் பிரயோஜனமில்லை என்று நினைக்க வேண்டாம்." என்றார் பகவான்.

தற்காலத்தில் பல 'ஆன்மீக வழிகாட்டிகள்' "இப்படி செய்யுங்கள்; இது மட்டுமே பலன் கொடுக்கும்; இதை மட்டுமே செய்யுங்கள்; என் வழியைத்தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்று சொல்லி பலரும் தம் அன்றாட கடமைகளை விடச்செய்து வருகிறார்கள். ஒரு விஷயம் சொல்வதென்றால் கேட்பவர் அதற்கு தகுதி உடையவரா/ அதற்கு மட்டுமே தகுதி உடையவரா என்று தெரிய வேண்டாமா? இவர்களது சிஷ்யகோடிகள் இன்னும் மேலே பல படிகள் போய், கர்மாக்கள் நடக்கும் இடம் போய் "இதெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள்; நீங்கள் செய்வது தப்பு!” என்று பிரசாரம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் இல்லாமல் குருவித்தலையில் பனங்காயை ஏற்றாமல் அல்லது இருக்கிற நிலையில் இருந்து கீழே பிடித்து இழுக்காமல் கருணையுடன் அவரவர் வழியில் செல்ல ஊக்குவித்தவர் பகவான்.

Wednesday, March 20, 2013

ரமணர் - 4 ஜீவ காருண்யம்

 
சூரி நாகம்மா எழுதுகிறார்:
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நாங்கள் எல்லாரும் பேசிக்கொண்டு இருந்த போது புதிதாக யாரோ ஒருவர் தட்டு நிறைய பழங்களுடன் பகவானிடம் வந்து கொண்டு இருந்தார். வரும் போதே ஒரு வானர வீரன் வந்து தன் பங்கு பழங்களை பிடுங்கிக்கொண்டு எவருக்கும் பிடிபடாமல் ஓடிவிட்டான். ஹா ஹூ என்ற அதட்டல்களை கேட்டு அதை பார்த்த பகவான் "உள்ளே இது வரை வந்துவிட்டால் தனக்குக்கிடைக்காது என்று தன்பங்கை வழியிலேயே எடுத்துக்கொண்டுவிட்டான். இப்போது என்ன செய்வீர் ஐயா?” என்றார் தமாஷாக. எங்கள் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

இந்தக்கலாட்டா சற்று ஓய்ந்த போது பெண் குரங்கு அதன் மார்பை கட்டிக்கொண்டுஇருந்த குட்டியுடன் பழக்கூடையின் அருகில் வந்தது. அங்கிருந்தவர்கள் "போ, போ” என்று அதை விரட்டினார்கள். அதைப்பார்த்த பகவான், “பாவம், தாயாரும் குழந்தையும் ஐயா, ஏதாவது கொடுத்து அனுப்பக்கூடாதா?” என்றார் இரக்கத்துடன். பகவான் சொன்னது அவர்கள் காதில் விழாததால் அவர்கள் அதை மேலும் அதட்ட அது மிரண்டு ஒரு மரத்தின் மேலேறி ஒளிந்து கொண்டது. பகவான் மனமுருகி, “இதுவா நம் தர்மம்? ஸன்யாஸி என்று பெயர் வைத்துக்கொள்வது. உண்மையான ஸன்யாஸி வந்தால் ஒன்றும் கொடுக்காமல் விரட்டுவது, என்ன அநியாயம் பாருங்கள்! நாம் உக்கிராணத்தில் சாமான்களை சேகரித்து வைத்து பூட்டி சாவியை பத்திரப்படுத்துகிறோம். அதெற்கென்ன வீடா, வாசலா! போகட்டும். நாளைக்காவது ஏதாவது மறைத்து வைத்திருக்கிறதா? கிடைத்ததை தின்று ஏதேனும் ஒரு மரத்தின் மேல் படுத்துக்கொள்கிறது. குழந்தையை வயிற்றிலேயே கட்டிக்கொண்டு திரிகிறது. கால் முளைத்தவுடன் அதை விட்டு விடுகிறது. நிஜமான ஸன்யாஸி நாமா அதுவா? அதனால்தான் இதற்கு முன்வந்த அவன் தானே வழியில் எடுத்துக்கொண்டுவிட்டான். இவளோ பெண், என்ன செய்வாள்?” என்று கூறி அதன் பக்கமாக பார்த்து, “வாம்மா, வா” என்றதும் அந்த குரங்கு பகவானது ஸோஃபா பக்கத்தில் வந்து மிகவும் உரிமையோடு நின்றது. அதற்கு வேண்டிய பழங்களை கொடுத்து அனுப்பினார் பகவான்.

Tuesday, March 19, 2013

ரமணர்-3 பரஸ்பர சாபம்.

 
திருச்சுழி போய் வந்த பக்தர் ஒருவர் பகவானைப்பார்த்து கேட்டார்: “திருச்சுழியில் பூமிநாதேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் இருக்கும் சூல தீர்த்தத்தின் கரையில் அரச மரம் ஒன்று இருக்கிறதல்லவா? அதன் அடியில் கௌதமர் தவம் செய்ததாக சொல்கிறார்களே உண்மைதானா? அங்கு அவர் தவம் செய்ய காரணமென்ன?”

அதுவா! நிஜந்தான். சம்ஸ்க்ருதத்தில் இருக்கிற த்ரிசூலபுர மஹாத்மியத்தில் கௌதமர் தவம் செய்ய திருச்சுழிக்கு போனது ஸனகருடைய ப்ரேரணையால் என்று சொல்லி இருக்கிறது. தமிழ் திருச்சுழி புராணத்தில் வேறு விதமாக இருக்கிறது. கௌதமர் இந்திரனையும் அகலிகையையும் சபித்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்திரன் கௌதமர் ரூபம் எடுத்துக்கொண்டு அஹலிகையிடம் போன போது அவள் தன் கணவர் என்று நினைத்து தவறிய விஷயத்தை கௌதமர் தீர விசாரிக்காமல் 'நீ கல்லாகி விடு' என்று கொடும் சாபம் கொடுத்தாராம். உடனே அஹலிகை "புத்தியில்லாத முனிவரே! யதார்த்தத்தை விசாரித்து, செய்த தவற்றுக்கு பரிகாரம் சொல்லாமல், இது போல் சபித்தீரே! எனக்கு சாபவிமோசனம் எப்போது, எவ்வாறு கிடைக்கும் என்றாவது அனுக்ரஹித்து சொல்லக்கூடாதா?” என்றூ கேட்டாளாம். கௌதமர் “ஸ்ரீ ராமாவதாரத்தில் அவருடைய பாத தூளி பட்டவுடன் உனக்கு விமோசனம் உண்டாகும் ” என்று சொன்ன அடுத்த கணமே அவள் கல்லாகிவிட்டாளாம்.

கௌதமர் அங்கிருந்து கிளம்பி அனுஷ்டானத்துக்கு போன போது அவர் புத்தி சஞ்சலித்து பலவிதமாக பிரமிக்கத்தொடங்கியதாம். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததால் அவர் யோசித்து பார்த்தபோது, தன் மனைவி அஹலிகை தவற்றை சரியாக விசாரிக்காமல் சபித்த போது, தன்னை அவள் புத்தியில்லாத முனிவரே என்று அழைத்த விஷயம் நினைவுக்கு வந்ததாம். அவள் மஹா தபஸ்வினியல்லவா? அதனால் அவள் சாதாரணமாகவே சொன்ன இந்த சொற்கள் பலித்து தனக்கு எதிர் சாபமாக ஆகிவிட்டன என்று புரிந்து கொண்டார்.

இதற்கு பரிகாரம் சிவ தாண்டவத்தை காண்பதே என்று நிச்சயித்து சிதம்பரத்துக்கு போனாராம். அங்கு "திரிசூலபுரத்தில் உனக்கு தாண்டவ தரிசனம் தருகிறேன்" என்ற அசரீரி கேட்டு, கௌதமர் அங்கிருந்து திரிசூலபுரம் நோக்கி நடந்தார். அந்தத்தலம் தென்பட்டதுமே அவர் மனது சாந்தி அடைந்ததாம். அங்கே அவர் நீண்ட காலம் தவம் செய்யவே ஈஸ்வரன் மகிழ்ந்து தனுர் மாதத்தில் ஆருத்ரா நக்ஷத்திரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் அருளினாராம். கௌதமர் தாண்டவ தரிசனம் செய்து பின் ஈஸ்வரனை துதித்து, யதாஸ்தானத்துக்கு திரும்பி வழக்கம் போல் அனுஷ்டானங்களில் ஈடு பட்டாராம்.

அதன் பின் அஹலிகை சாப நிவர்த்தி அடைந்து தன் ஸ்வய ரூபத்தை அடைந்து கௌதமரிடம் போன போது, அவரும் மகிழ்ந்து அவளிடம் 'ஈஸ்வரனின் கல்யாண மஹோத்ஸவத்தை கண்டு பின் க்ருஹஸ்த தர்மத்தை ஆரம்பிப்போம்' என்று சொல்லி சதி சமேதராய் ஆவர்த்த க்ஷேத்திரத்துக்கு (திருச்சுழிக்கு) சென்றார். கருணைக்கடலான ஈஸ்வரன் அவர்களுக்கு கல்யாண கோலத்தை அனுக்ரஹித்தாராம். கௌதமரும் ஈஸ்வரனை துதித்து தடைகள் எல்லாம் நீங்கியவராய் முன் போல் மனைவியுடன் தவ வாழ்வில் ஈடுபட்டாராம். இது தமிழ் புராணத்தில் உள்ள கதை.

இந்த பரஸ்பர சாப கதை இதில் மட்டும்தான் இருக்கிறது. ராமாயணத்தில், ஜனகரின் சபையில் புரோஹிதராக இருந்த சதானந்தர் தன் தாயார் அஹலிகை தந்தையின் சாபத்தினால் மனோ தைரியமிழந்து தன் நிலை தெரியாமல் விழுந்து கிடக்க, ராமரின் பாத தூளியினால் சின்மயஸ்பூர்த்தி அடைந்து ராமனை துதித்து தன் தகப்பனரிடம் திரும்பிச்சென்றதை விசுவாமித்திரர் சொல்லக்கேட்டு ஆனந்தப்பட்டார் என்று சொல்லி இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை.

"ஆனால் அஹலிகை கல்லாய் இருந்தாள் என்பது அவளது மனநிலையைத்தான் குறிக்கிறதா?” என்று ஒருவர் கேட்டார்.

ஆமாம். கல்லானாள் என்பது மனதுக்கு இல்லாமல் சரீரத்திற்கா? சரீரம் கல்லாக மாறி காட்டில் கிடந்தது; ராமர் கால் வைத்து ஸ்த்ரீயாக மாற்றினார் என்று சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்களே அன்றி அது நடக்கக்கூடிய காரியமா? மனம் ஆத்ம ஞானத்தை மறந்தது மட்டும் அல்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல் போல் ஜடத்வத்தை அடைந்தது என்று அர்த்தம். மஹா புருஷனின் தரிசனத்தினால் அந்த ஜடத்வம் விலகியது. அவள் மஹா தபஸ்வினியாக இருந்ததால் உடனே சின் மய ஸ்பூர்த்தி அடைந்து ஸ்ரீராமரை தத்வமயனாக அறிந்து துதித்தாள். இந்த சூக்ஷ்மார்த்தம் ராமாயணத்தில் இருக்கிறது. ஸ்ரீராமர் கௌதமாஸ்ரமத்தில் அடி வைத்ததும் அஹலிகையின் மன மலர் விரியலாயிற்றாம்” என்றார் பகவான்.

Monday, March 18, 2013

ரமணர் -2 அர்த்தநாரீ



காசியிலிருந்து புறப்பட்ட தேவி காஞ்சி வந்தடைந்தாள். மணலால் சிவலிங்கம் அமைத்து பூசித்தாள். பாப விமோசனமாயிற்று என்று அவள் திருப்தி அடைந்தவுடன் அங்குள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கே காமாக்ஷியாக ரூபம் கொண்டு ப்ரசித்தமானாள்.  

அதன் பின் வ்ருஷப வாஹனத்தில் ஏறிக்கொண்டு இந்த அருணாசலத்துக்கு புறப்பட்டு வந்தாள். முதலில் இங்கே பவளக்குன்றின் அடிவாரத்தில் இருக்கும் கௌதமர் ஆஸ்ரமத்துக்கு வந்தாள். கௌதமரின் புத்திரரான சதானந்தர் அம்பாளைப்பார்த்து பக்தி பரவசமடைந்து 'அம்மா, வா, வா' என்றழைத்து அர்க்ய பாத்யங்களால் உபசரித்தார். "என் தந்தை தர்பை, சமித்துகள் கொண்டு வரக் காட்டுக்கு போயிருக்கிறார். நான் போய் அழைத்து வருகிறேன். நீ இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்றார்

இதற்குள் கௌதமரே காட்டில் இருந்து புறப்பட்டு நடுவழியில் பிள்ளையை எதிர்கொண்டார். அவரைப்பார்த்ததும் சதானந்தர் பரம ஆனந்தத்துடன் "அம்மா வந்திருக்கிறாள், தேவி வந்திருக்கிறாள்" என்று கூச்சலிட்டார். இமைப்பொழுதில் அங்கிருந்த செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து புஷ்பமும் பழங்களுமாக நிறைந்து சொரிந்தன. கௌதமர் ஆச்சரியப்பட்டு அருகில் வந்து "அம்மா யாரடா?" என்று கேட்டார். சதானந்தர் தழு தழுக்கும் குரலில் "அம்மா பார்வதியே வந்திருக்கிறாள்!” என்றார். கௌதமர் புளகாங்கிதமடைந்து ஆஸ்ரமத்துக்கு ஓடோடி வந்து தேவியை தரிசித்து பூஜித்தார்.  

அதன் பின் கௌதமர் சொன்ன படி அம்பாள் நெடுந்தவம் செய்தாள். மஹாதேவன் ப்ரத்யக்ஷமாகி வரம் கேள் என்றார். தேவி மிக வினயமாக "ஸ்வாமி! தாங்கள் இவ்வளவு ப்ரஸன்னராகி (gracious) இருந்தால் தங்கள் தேகத்தில் பாதிபாகத்தை எனக்குத்தர வேண்டும். இனித் தங்களை விட்டு தனி சரீரத்துடன் என்னால் வாழ முடியாது. வேறு சரீரத்தில் இருந்தால் இதே போல இன்னொரு தவறை செய்து உங்களை பிரிந்து அல்லல் பட வேண்டி இருக்கும். ஆகவே அனுக்ரஹிக்க வேண்டும்" என்று ப்ரார்த்தித்தாள். பரமேஸ்வரரும் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்படி அனுக்ரஹித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். ஜகன் மாதா அர்த்தாங்கினி ஆன கதை இதுதான்.

இப்படி கதை சொல்லும் போது பல இடங்களில் பகவான் கண்களில் நீர் நிறைந்தது; குரலும் கம்மியது; உடல் நடுங்கியது; கதை சொல்லி முடித்த பின் பகவான் ஆழ்ந்த மௌனம் கொண்டார் என்று இதை எழுதிய சூரி நாகம்மா எழுதுகிறார்.
 

Sunday, March 17, 2013

ரமணர் -1 அர்த்தநாரீ



ரமணர் குறித்த சில புத்தகங்கள் படித்து வருகிறேன். ஆச்சரியமான சுவையான தகவல்கள் கிடைக்கின்றன. மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார். ஆங்காங்கே சில மிகவும் பிடித்த விஷயங்களை பதிவாக்கப்போகிறேன். புத்தகங்களை வாங்கிப்படியுங்கள்.

ஒரு நாள் ஜகதீஸ்வர சாஸ்த்ரி என்பவர் பகவானுடன் அருணாசல மகிமை பற்றி பேசிக்கொண்டு இருந்த போது "சிவன் பார்வதிக்கு பாதி சரீரத்தை எதற்காக கொடுத்தார்” என்று கேட்க பகவானும் உற்சாகமாக கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு முறை சிவன் கைலாயத்தில் சுகமாக உட்கார்ந்து இருந்த போது பார்வதி விளையாட்டாக அவர் பின்னாலிருந்து வந்து அவர் கண்களை பொத்தினாள். உடனே ஈஸ்வரனின் இரு கண்களான சூரிய சந்திரர்கள் ஒளி இழக்கவே லோகங்கள் எல்லாம் இருளில் மூழ்கின. ப்ரஜைகள் அல்லற்பட்டார்கள். தேவர்கள் "ஹே ஈஸ்வரா, இதென்ன அகால ப்ரலயம்” என்று முறையிட்டார்கள். உடனே சிவன் சமயோசிதமாக நெற்றிக்கண்ணை திறந்து ப்ரகாசம் உண்டாக்கி ப்ரஜைகளின் கஷ்டத்தை நீக்கினார். பார்வதி பயந்து போய் கைகளை அகற்றினாள். பரமேஸ்வரர் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் தேவி நடுங்கினாள். ஸ்வாமி நயத்துடன், “தேவீ, இது நமக்கு வேடிக்கையே தவிர என் கண்களை மூடினதால் ப்ரஜைகள் எவ்வளவு தவித்துப்போனார்கள் பார்த்தாயா? நமக்கு ஒரு க்ஷணம்தானே என்றாலும் ப்ரஜைகளுக்கு ஒரு யுகமல்லவா? இது என்ன காரியம்?” என்று பிரியத்துடன் கடிந்து கொண்டார். 

பரமேஸ்வரனின் அந்த நயமான கண்டனத்தை கேட்ட பார்வதி தன் அபராதத்தை உணர்ந்து வெட்கி "இந்த பாபத்துக்கு பரிஹாரமாக தவம் செய்ய வேண்டும். அனுமதி கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். “நீ ஜகன்மாதா. உனக்கு பாபமேதுமில்லை. நீ தவம் செய்யத்தேவையில்லை” என்றார் பரமேஸ்வரன். அவளுக்கு த்ருப்தி ஏற்படவில்லை. உலகத்துக்கு வழி காட்டியாய் நான் தவம் செய்கிறேன் என்று ப்ரார்த்தித்து அனுமதி பெற்று தவம் செய்ய தென் முகமாக புறப்பட்டாள்.

அப்போது காசியில் மழையில்லாமல் பஞ்சமேற்பட்டு ஜனங்கள் உணவின்றி கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். அந்த வழியே வந்த தேவி அதைப்பார்த்து கருணை கொண்டு, நினைத்த மாத்திரத்தில் ஒரு மாளிகையை எழுப்பி, அன்ன பூர்ணா என்ற பெயரில் அங்கே அக்ஷய பாத்திரத்துடன் ஆயிரக்கணக்கில் ஜனங்களுக்கு அன்ன தானம் செய்து கொண்டு இருந்தாள். சில நாட்களிலேயே அவர் கீர்த்தி எல்லா திக்குகளிலும் பரவிவிட்டது. காசி ராஜா தன் பண்டாரத்தில் எல்லா தான்யங்களும் தீர்ந்து போன நிலையில் தவித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் இப்படி அன்ன தானம் செய்வது தெரிய வந்தது. நம்மால் முடியாதது எப்படி இந்த பெண்ணால் சாத்தியமாகிறது என்றூ ஆச்சரியப்பட்டு, சோதித்து பார்க்கலாம் என்று ஒரு ஆளை அனுப்பி கொஞ்சம் அரிசி கடனாகத்தர வேண்டும் என்று கேட்கச்சொன்னார். தான்யம் கொடுப்பதற்கில்லை; வந்தால் அன்னமிடுகிறேண் என்று பதில் வந்தது.

சரி நாமே போய் பார்க்கலாம் என்று மந்திரிமார்களுடன் மாறு வேஷத்தில் போய் அவள் மாளிகையில், பந்தியில் உட்கார்ந்தார்கள். எவ்வளவு பறிமாறினாலும் குறையாமல் வளர்ந்துகொண்டிருந்த போஜன வகைகளை பார்த்த ராஜா, விவேகியானதால் இது மனிதர்களால் முடிகிற காரியமில்லை; இவள் ஒரு தேவதையே என்று தீர்மானித்தான். சாப்பாடு முடிந்ததும் அவளை பக்தியுடன் நமஸ்கரித்து, "தாயே நீ எங்களுடனேயே இருந்து எங்களை கடை தேர்த்த வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அம்பாள் அவனது பக்தியை கண்டு மகிழ்ந்து, “அப்பனே உன் பக்திக்கு மகிழ்ந்தேன். நான் இத்தனை நாட்கள் உன் நாட்டில் வசித்ததால் மழை இல்லாத குறை தீர்ந்து போகும். இப்போது மழையும் பெய்யும். இனி இங்கு பஞ்சமிராது. நான் இனியும் இங்கு தாமதிக்க முடியாது. தென் திசை நோக்கிப்போய் தவம் செய்ய வேண்டும். நீ சுகமாக ஜனங்களை பரிபாலித்து வா” என்றாள். ராஜா "எங்கள் பூஜையை ஏற்கத்தக்கவாறு இங்கேயும் அம்பாள் சாந்நித்தியம் கொள்ள வேண்டும்" என்று வேண்டினான். தேவியும் சரி என அனுக்ரஹித்து விட்டுப்போனாள். உடனே மழை பெய்து தேசம் சுபிட்சமானது. அம்பாள் தங்கி இருந்த இடமே இப்போழுதும் அன்னபூர்ணாலயம் என்று சொல்லப்படுகிறது....
(தொடரும்)
 

Tuesday, March 12, 2013

சிவ ராத்திரி அனுபவம்.

 
பல வருஷங்களுக்கு பிறகு சிவராத்திரிக்கு ஏகா தச ருத்ரம் சொல்லவில்லை. ஆரம்பகாலத்தில் எங்கள் பகுதி பிள்ளையார் கோவிலில் செய்து கொண்டு இருந்தோம். குருக்கள் மாறின போது ஜன ரஞ்சகமாக பஜனை வைக்க முடிவு செய்தார்கள். அதற்குள் வேத பாடசாலை செயலுக்கு வந்துவிட்டதால் நிகழ்வை அங்கே மாற்றிவிட்டோம். ஆறேழு வருடங்களாக அங்கேதான் சிவராத்திரி.

கடந்த மூன்று மாதங்களாக சளியால் நுரையீரல் பாதிப்பு திருப்பி திருப்பி வந்து கொண்டு இருந்தது. உடம்பு வேலை செய்ய கஷ்டப்பட்டது. சந்தேகத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பார்த்தால் டபுள் செஞ்சுரி ட்ரிபிள் செஞ்சுரி என்று அது பாட்டுக்கு கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது! அதுதான் இயலாமைக்கும் களைப்புக்கும் காரணம் என்று தெரியவந்தது.

ஆக ஏகாதச ருத்ரம் நிகழ்வுக்கு போகும் நிலையில் இல்லை. இயலாமை ப்ரத்யட்சமாக தெரிந்தாலும் மனசில் ஒரு வருத்தம் இருந்தது போல் இருக்கிறது.

***
நேற்று என் ஜன்ம தினம். ஏனோ வழக்கமாக போகும் மருத்துவ மனையிலும் வேலை இல்லை. காலை எட்டு மணி போல சக ட்ரஸ்டி போன் செய்தார். நண்பர் ஒருவருடன் சிதம்பரம் வந்தேன். இன்று அமாவாசை. தர்பணம் செய்ய வேண்டும். சாப்பாட்டுக்கு அங்கே எங்காவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். எங்காவது என்ன, வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்றேன்

சுமார் 11 மணி போல வந்தார்கள். ட்ரஸ்டி, சிகாகோ கெல்லாக் மேனேஜ்மென்ட் இன்ஸ்ட்யூடில் வேலை பார்க்கும் நண்பர், இன்னும் ஒரு வயதான தம்பதிகள். நாலு அதிதிகளுக்கு உணவு அளித்து மகிழ்ந்தோம். கிளம்பும் முன் சிதம்பத்தில் நேற்று சிவராத்திரிக்கு இருந்தோம்; ப்ரஸாதம் கிடைத்தது என்று ப்ரஸாதம் கொடுத்தார்கள்! விபூதி, குங்குமம், வில்வம், புஷ்பங்கள், ஜாங்கிரி, மைசூர் பாக் என்று ஏகத்துக்கும்....!

இறைவன் கருணை மிக்கவன்!

Sunday, March 10, 2013

சக்யம் - 3

 
சரி சரி என்ன செய்வது, வயசான பிறகே திருமணம் நடந்து இருக்கிறது என்றால், ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், காமத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இந்த மனிதனுடன்தான் என் மீதி வாழ்கையை கழிக்கப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவனை நண்பன் ஆக்கிக்கொள்ளப்போகிறேன் என்று பெண்ணும்; இவள் என்னை நம்பி வீடு மாறி இங்கே வந்துவிட்டாள், இவளுடன்தான் மீதி வாழ்கையை வாழப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவளை சகியாக ஆக்கிக்கொள்வேன் என்று ஆணும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்கை சுகமாகவே கழிய வாய்ப்பு இருக்கிறது.

மாறாக நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற ரீதியில் வாழ ஆரம்பித்தால் குடும்பம் சீராக ஓடாது. இந்த சூழ்நிலையில் குழந்தையும் பிறந்துவிட்டால் ... பாவம் அந்த குழந்தை!
குழந்தைகள் கண்டு, கேட்பதை விட பல விஷயங்களை சூக்ஷ்மமாகவே உணர்கிறார்கள். அதனால் நமக்கும் நம் மனைவி/ கணவன் நடுவில் இருக்கும் டென்ஷன் அவர்களுக்கு தெரியாது என்று ஏமாற வேண்டாம்.
கணவன் மனைவி ஆரம்பத்தில் சண்டை போட்டாலும் ஒவ்வொன்றையும் அன்றுடன் மறந்துவிட பழக வேண்டும். நண்பர்கள் போடாத சண்டையா! போகப்போக அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் ஆகி சௌஜன்யம் வந்துவிடும்.

அப்புறம் ஏன் இதெல்லாம் 'ஆன்மீக' பதிவுகளில் வருகிறது என்று தோன்றலாம். ஆன்மீக ரீதியாக கணவனும் மனைவியும் ஒரு யூனிட் ஆகத்தான் பார்க்கப்படுவார்கள். தனித்தனியாக இல்லை. இவர்களது பந்தம் காலம் காலமாக தொடரும் ஒன்று. இருவரில் ஒருவராவது ஆன்மீகம் பக்கம் திரும்பினால் அது மற்றவரையும் பாதிக்கும். ஒருவரது முன்னேற்றம் மற்றவரையும் முன்னேற்றும்.

சக்யத்தில் கடைசியாக..... சக்யம் மனிதர்களுடன் இருப்பதை விட பகவானுடன் இருப்பது இன்னும் சிறந்தது. மனித சக்யமாவது பல சிக்கல்களுடன் துவங்கி தட்டுத்தடுமாறி முன்னேறலாம். ஆனால் பகவானுடனான சக்யம் சீக்கிரமே பலப்படும் வாய்ப்புகள் அதிகம். பகவானுடனான சக்யம் பக்தியில் ஒரு வகை.
நல்ல உதாரணம் அர்ஜுனன் க்ருஷணனுடன் கொண்டு இருந்த பக்திதான். க்ருஷ்ணனை அவன் நண்பன் போலத்தான் பார்த்தான்.... தன் தங்கை சுபத்ராவை அர்ஜுனன கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்டு கொடுத்ததே க்ருஷ்ணன்தான். இதே போலத்தான் சுந்தரர் சிவ பெருமானிடம் கொண்டு இருந்த பக்தி. கோபிச்சு கொண்டு இருந்த மனைவிகிட்ட தூதாகவே போய் "பிரச்சினையை தீர்த்து வை" ன்னு மிரட்டினார்! என்னவெல்லாம் வேலை வாங்கினார்! இதை எல்லாம் முன்னேயே எழுதி இருக்கிறேன். இங்கே படிக்கலாம்.

எனக்கு என்னவோ பகவானை ஒரு பயத்தோட, மரியாதையோட எல்லாம் பக்தி செய்யறதை விட இப்படி ஃப்ரெண்டா கருதறதுலே அர்த்தம் இருக்கறதா தோணுது! யாரை ஃப்ரெண்டா கருதலைன்னாலும் 'ஆனை உம்மாச்சி' யை ஃப்ரெண்டா கருதறதிலே பிரச்சினையே வராது! அப்படி ஒரு சௌஜன்யமான ரூபம் அவருக்கு!
அந்த ஃப்ரெண்ட் நம்மை எல்லாரையும் காப்பாத்தட்டும்ன்னு வேண்டிகிட்டு சக்யத்தை முடிவுக்கு கொண்டு வரேன்!

Tuesday, March 5, 2013

சக்யம் -விளக்கம் தேவை.


கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது! மனித மனதுதான் எவ்வளவு விசித்திரமானது? ஒரு பதிவில் தான் நினைப்பதை படிக்கிறதே தவிர என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று படிப்பதில்லை.
நான் குறிப்பாக "இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை" என்று எழுதினேன்.
 சின்ன வயதில் சக்யம் சுலபமாக ஏற்படும்; வயதான பிறகு ஈகோ தலை தூக்கி பிரச்சினைகள் ஏற்படுவதாக எழுதினேன்.
 எழுதாத விஷயங்கள் எழுதப்பட்டதாக நினைப்பது... என்ன சொல்ல?

  "சின்ன வயசுல கல்யாணம் ஆனவங்க எல்லாம் மனம் ஒத்துதான் வாழ்ந்தார்கள்"
"பால்யத்தில் மணம் புரிந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் "

இப்படி எல்லாம் எங்காவது எழுதி இருகிறேனா என்று தயை செய்து சொல்லவும்.
(அப்பாடா! இன்னைய பதிவு எழுதியாச்சு!)

 

Monday, March 4, 2013

சக்யம் - 2

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் இன்ன இன்னது வேண்டும் என்று வேண்டுதல் இருக்கிறது. பின் இப்படி ஏழடி ஒன்றாய் நடந்த நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம்! .... என்று இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்வதாய் உறுதி சொல்லப்படுகிறது. எல்லாம் எனக்கு பிடித்த படி நடக்கும் வரை ஒத்துழைப்பேன். எனக்குப்பிடிக்கைவில்லை, கஷ்டகாலம் என்று எனக்கு தோன்றிவிட்டால் டிவோர்ஸ் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவேன் என்பது என்ன நாகரீகம்?

இந்த காரணங்களாலேயே கணவன் மனைவி இடையே "இன்கம்பாடிபிலிடி" என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மாமியார் - நாட்டுபெண் சண்டை, எடுத்தெறிந்து பேசுவது என்று ஒன்றும் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. குழந்தையிலிருந்து அந்த மாமியார்தானே பெண்ணை வளர்க்கிறார்! கண்டிப்புடன் வளர்ப்பதால் அப்போதைக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் பின்னால் அது நன்மையே பயத்தது.


இப்போது நேர் மாறாக எல்லாமே இருக்கிறது. கலிகாலத்தில் கலிகாலத்தில் ஆட்டுக்கல் நிற்க குழவி சுற்றுவதாக  போன மாதிரி, வயதான காலத்திலேயே திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு 'எவ்வளவு செலவு செய்து படிக்க வைத்தோம்! கொஞ்சம் சம்பாதித்து கொடுத்தால் என்ன' என்று கூட தோன்றுகிறது. பெரிய படிப்பு படித்து, வேலைக்குப்போய் நாலு காசும் கையில் பார்த்துவிட்ட பெண்ணுக்கு ஈகோ நிறையவே தலை தூக்கி 'இவன் வேண்டாம் அவன் வேண்டாம்' என்று தட்டிக்கழிப்பதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, "பாவம் நீ, எனக்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்; ஐம் சாரி" ன்னு பீலிங்க்ஸ் வேற விடுகிறார்கள். முதிர் கன்னி ஆகும் காலத்தில் பஸ் மீண்டும் வருகிறது. என் குடும்ப/ நண்பர்கள் வட்டாரத்திலேயே எனக்குத்தெரிந்து மூன்று நான்கு பெண்கள் அவர்களது பெற்றோர்களை இன்னைய தேதிக்கு அழவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!


இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை. அரசு அனுமதிக்கும் வயது வந்தவுடனே திருமணத்தை முடிப்பதில் அர்த்தம் இருக்கிறது. சில கம்யூனிடிகள் பால்ய விவாஹம் செய்வது எங்கள் உரிமை என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வதற்கு மேற்கோள் காட்டக்கூடிய கதை சத்யவான் சாவித்ரி கதை. கதை பலருக்கும் தெரிந்ததுதான்; அதனால் அதை இங்கே சொல்லப்போவதில்லை. சத்யவானின் உயிரை பரித்துக்கொண்டு செல்லும் யமனை சாவித்ரி பின் தொடர்கிறாள். “ஏன் என் பின்னாடி வருகிறாய்?” என்று யமன் கேட்கிறான். இப்படி திரும்பிப்பார்த்து பேச ஆரம்பித்ததுதான் அவன் செய்த பிழை! இதையும் அதையும் பேசிக்கொண்டு கொஞ்ச தூரம் ஒன்றாக நடந்துவிட்டார்கள். பின் யமன் சொல்கிறான், “நீ என்ன சொன்னாலும் பிரயோசனமே இல்லை. இந்த உயிரை திருப்பித்தருவது என்பது நடக்க முடியாத காரியம்.”
“சரிதான். ஆனால் நாம் ஏழடி ஒன்றாக நடந்துவிட்டோமே! இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். ஒரு ஆபத்தில் உதவாத நண்பன் என்ன நண்பன்?”
"எடுத்த உயிரை திருப்பிக் கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், ஏதாவது வரம் கேள் தருகிறேன்" என்றான். சாவித்ரி  ‘என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்று வரம் கேட்டாள். எமன் சற்றும் யோசிக்காமல் "கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்" என்று வரம் தந்து விட்டான். "கருணைக்கு மிக்க நன்றி. வாக்கு பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்" என்று வேண்டினாள் சாவித்ரி!

இந்த ஏழடி ஒன்றாக நடந்தால் நண்பன் என்ற கான்சப்ட்தான் திருமணத்திலும் சொல்லப்பட்டது. திருமணத்தின் நோக்கம் பிரஜைகளை உருவாக்குவதாக இருந்தாலும் அதை தர்ம வழியில் உண்மையான நட்புடைய தம்பதிகளின் மூலம் சாதிப்பதையே விரும்புகிறது!
குறிப்பு:
சப்தபதி பற்றி சற்று விரிவான பதிவுகள் இங்கே, இங்கே. இவையே போதுமென்று நினைக்கிறேன்.

Friday, March 1, 2013

சக்யம்

 
சக்யம்:
நாம் யார் சொன்னால் கேட்போம்? நம் பெற்றோர்? நம் ஆசிரியர்? நம் மனைவி/ கணவன்?
யோசித்து பார்த்தால் சாதாரணமாக நம் நண்பன் சொல்வதைத்தான் கேட்போம். உறவு என்பதில் நம் சாய்ஸ் ஒன்றும் இல்லை. என் அப்பாவின் தம்பிக்கு மகன் பிறந்தால் அவன் என் சித்தப்பா பிள்ளை ஆகிவிடுகிறான். இதில் என் சாய்ஸ் ஏதுமில்லை. ஆனால் நண்பன் என்பது அப்படி இல்லை. நான் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம். சண்டை போடலாம்... உண்மையில் சண்டை போட்டுக்கொண்டு வளரும் நட்பு இன்னும் பலமாக இருக்கிறது. நீடித்து நிலைக்கிறது. சண்டை போட்டதால் நம் ஜன்ம வைரி ஆகிவிடுவதில்லை. பிறகு சமாதானம் செய்து கொள்கிறோம். அல்லது இன்னொரு பரஸ்பர நண்பன் சமாதானம் செய்து வைப்பான். யார் பக்கம் உண்மையில் தவறு என்பது எல்லாம் ஒரு காரணியாக இல்லாது போகும். சாரிடா என்று இருவரும் சொல்லிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதில்தான் நீக்குப்போக்கு ஆரம்பிக்கிறது. இது தொடருமானால் வாழ்கையில் இவர்கள் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகம்.

இன்று சர்வ சகஜமாக பார்க்கக்கிடைப்பது டைவோர்ஸ்.

குழந்தை திருமணம் கூடாது என்று சட்டம் இயற்றிய அரசு, திருமண வயதை கூட்டிக்கொண்டே போகிறது. வயது கூட கூட பெண்ணோ ஆணோ மனசு இறுகி விடுகிறது. நீக்குப்போக்குகள் மறைய ஆரம்பித்துவிடுகிண்றன. எதிர்பார்ப்புகள் பலதும் இருக்கிறன. இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனைவியும் கணவனும் சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலே வாழ்கையை தள்ளிக்கொண்டு போகிறார்கள். தினசரி சண்டை சச்சரவிலேயே போகின்றன நாட்கள். குழந்தை பிறந்தாலும் இவர்கள் உறவில் ஒரு மாற்றமும் வருவதாகக்காணோம்! மாறாக குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஈகோ மோதலுக்கு இன்னொரு சமாசாரம் கிடைக்கிறது போலிருக்கிறது!

இப்போதெல்லாம் திருமணம் வயதான காலத்தில் நடக்கிறது. ஹார்மோன்கள் பீக்கில் இருக்கும் போது நடக்கிறது. உடல் அழகுதான் மனசில் முன் நிற்கிறது. அந்த அழகு காணாமல் போகும்போது மனசு ஏமாறுகிறது! பூங்கொடி என்று பெயருக்கு தகுந்தாற்போல் இருந்த பெண் ஓரிரு வருடங்களில் அந்த பூங்கொடி இருக்கும் ஜாடி போல ஆனபின் .... சிக்ஸ் பேக்ஸ் ஆசாமிக்கு அலுவலக வேலை குடும்ப டென்ஷனில் தொப்பை விழுந்த பின்.... காமத்தில் ஆரம்பிக்கும் உறவு அது விலகும் காலகட்டத்தில் விட்டுச்செல்வது ஏமாற்றமும் வெறுமையுமே!

முன் காலத்தில் இப்படி இல்லை. அதாவது சார்தா சட்டம் வருமுன். குழந்தையிலேயே இவன் இவளுக்கு; இவள் இவனுக்கு என்று நிர்ணயித்து திருமணம் நடத்தி விடுவார்கள். காமம் உட்புகாத காலத்திலேயே ஏற்படும் இந்த உறவு நட்பாகத்தான் மலரும். பலரும் கற்பனை செய்வது போல திருமணம் ஆகிவிட்டதால் இவர்களது தாம்பத்ய உறவு உடனே ஆரம்பிப்பதில்லை. வீட்டு பெரியவர்கள் அதில் கண்டிப்புடன் இருப்பார்கள்.

ஹார்மோன்கள் தம் வேலையில் ஆரம்பிக்கும் காலத்தில் ஆசை வரும். உடல் வளர்ச்சியும் ஏற்படும் காலத்தில்தான் தாம்பத்யம் அனுமதிக்கப்படும். அந்த ஆசை போன பின் மீண்டும் நட்பு தொடரும். வாழ்கை சுகமாகவே செல்லும். எண்பது வயது பாட்டிக்கு காப்பி கொண்டு கொடுத்தால் அந்த கிழத்துக்கு கொடுத்தியா என்று கேட்பார். ஏன்டா இந்த கிழவி லொக்லொக் ன்னு இரும்பிகிட்டு கிடக்கே சுக்கு கஷாயம் போட்டு கொடுக்கச் சொல்லறதுதானே ன்னு கிழவர் கேட்பார். இப்போது கணவன் மனைவி இடையில் உறவு மற்றவருக்கு ஜுரம் அடிக்கிறதா என்று கூடத்தெரியாத அளவுக்கு இருக்கிறது.

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான்..... (தொடரும்...)